ரெரன்ஸ் அந்தோனிப்பிள்ளை
முல்லைத்தீவு இராணுவமுகாம் தாக்கி அழிக்கப்பட்டதன் களிப்பு அடங்குவதற்க்கு முன்னரே கிளிநொச்சி இடம்பெயரவேண்டிய நிலை ஏற்படுமோ என்ற பீதி மக்களை ஆட்கொள்ளத்தொடங்கிவிட்டது. குண்டுச்சத்தங்களும் துப்பாக்கி வேட்டுகளும் உரத்து ஒலிக்கத் தொடங்கிவிட்டன. கிளிநொச்சி வைத்தியசாலை நோயாளர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. மாலை வேளைகளில் மக்கள் வெளியில் வரத்தயங்கினர். ஒரு சில வியாபாரிகள் தங்கள் பொருட்கனை லொறிகளிலும் ரைக்டர்களிலும் ஏற்றிக்கொண்டு ஏ9 வீதிக்கு கிழக்காகவும் மேற்காகவும் கொண்டு சென்றனர்.
சேர சோழ பாண்டியர்கள் ( புலிகளின் வியாபார நிலையங்கள்) ஏனைய வியாபாரிகளை இவ்விடயத்தில் முந்தி விட்டார்கள். வலிகாமத்தை போலல்லாது மக்கள் தாமாகவே இடம்பெயரத்தொடங்கினர். அத்தியாவசியப்பொருட்களின் விலை மழமழவென ஏறத்தொடங்கியது. புலிகளின் பாஸ் வழங்கும் அலுவலகங்களில் நேர்ந்து விட்ட ஆடுகளைப்போல் மக்கள் மக்கள் தாங்களும் நாட்டுப்பற்றாளர் பட்டியலில் சேர்ந்து விடுவோமோ பதைபதைப்புடனும் திகிலுடனும் காணப்பட்டனர்.
இந்த சூழலில்தான் கிளிநொச்சியில் பணியாற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் அவசர அவசரமாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவலகத்தில் ஒன்று கூடினர். கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து எங்கு தத்தமது காரியாலயங்களை அமைப்பது என்ற விடயமே கலந்துரையாடப்பட்டது. பல வாதப்பிரிவாதங்களின் பின்னர் மல்லாவிக்கு செல்வதென தீர்மானிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட செயலகமும் வேறு பல அரச நிறுவனங்களும் ஸ்கந்தபுரத்தில் இயங்க ஆரம்பித்து விட்டன.
கிளிநகர் இடம்பெயர்ந்து 3 வாரங்களின் பின்னர் ஆனையிறவிலிருந்து தெற்கு நோக்கி முன்னேறிய இராணுவம் அப்பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். அதற்க்கு முன்னரே இடம்பெயர்ந்து செல்லும் மக்களின் சொத்துக்கள் இராணுவத்திடம் சிக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயோ என்னவோ வீடுகளின் கதவுகள் யன்னல்கள் கூரைகள் மலசலகூட மறைப்புகள் என்று ஒன்றையும் மிச்சம் விடாமல் சகலவற்றையும் புலிகள் அள்ளிச்சென்று விட்டனர்.
இடம்பெயர்ந்த மக்களுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியேறுகையில் ஓர் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் தயங்கித்தயங்கி என்னருகில் வந்து பதட்டத்துடன் ‘சேர் உங்கள்டத்தான் ஒர் உதவி கேட்கவேணும்’ மெல்லிய குரலில் யாருக்கும் கேட்காதவாறு கூறினா ஏதாவது நிவாரண உதவிகளைத்தான் கேட்கப்போறா என எண்ணி ‘ என்னம்மா என்ன விஷயம் சொல்லுங்கோ’ என்றேன். ‘என்ட மகன் இயக்கத்துக்குப்போய் 4 வருஷம் ஆகிறது அதற்குப்பிறகு இற்றவரை அவனை நான் காணவில்லை போன கிழமை கிளிநொச்சியில் நடந்த அடிபாட்டில அவன் பிடிபட்டு அவனை TV யில் காட்டியதாக பார்த்தவர்கள் சொன்னாங்கள். அவன் உயிருடன் இருக்கிறானா எண்டு மட்டும் அறிந்து சொல்லுங்கோ’ என்று கண்கலங்கிய என்னிடம் வேண்டினா அந்த தாய். இது
கொஞ்சம் சிக்கலான விடயம். கவனதாகக் கையாள வேண்டும். இல்லாவிட்டால் என்னையும் ஆபத்தில் மாட்டிவிடும். ஆனாலும் அந்த தாயின் வேண்டுகோளை தட்டிக்களிக்கமுடியவில்லை. மகனின் விபரங்களை நின்றநிலையிலேயே அவசரஅவசரமாக எழதி எடுத்து கொண்டு அடுத்தநாள் காலை நான் வந்து சந்திப்பதாகக் கூறி நேரடியாக அலுவலகம் சென்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் குடும்பங்களை மீள்ணைக்கும் பிரிவுக்கு ஓர் கடிதத்தை தயாரித்து விட்டு வீட்டிற்குச்செல்ல இரவு 9மணியாகிவிட்டது. ‘ வருக வருக சமூக சேவையாளரே என எனது 8 வயது மகள் நக்கலாக வரவேற்றது மனதுக்கு இதமாக இருந்தது.
அடுத்த நாள் காலை அந்தப்பெண்ணின் குடியிருப்புக்குச் சென்று அவவின் கையொப்பத்தை பெற்று அதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் குடும்பங்களை மீள்ணைக்கும் பிரிவில் சமர்ப்பித்துவிட்டு திரும்புகையில் ‘ சேர் உங்கள் நிறுவனத்திற்கு கிடுகுகள் தேவையா’ என்ற குரல் கேட்டு திரும்பிப்பார்தேன். வெள்ளை வேட்டி வெள்ளை சாரம் முகத்தை மறைக்கக்கூடியளவுக்கு ஒரு தொப்பி அணிந்த உயரமான சற்று பருமானான நடுத்தர வயதுமிக்க ஒருவர் செயற்கைச்சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தார். கிடுகின் விலை தரம் போன்றவற்றை பேசித்தீர்த்து விட்டு ஒரு 100 மீட்டர் தூரம் செல்வதற்கு முன்னரே எனக்கு அறிமுகமான ஒருவர் ‘சேர் இப்ப உங்களோட கதைத்த ஆளை தெரியுமோ’ எனக்கேட்டு நான் பதிலளிக்கும் முன்னரே ‘ உவன்தான் மோடி முந்தி மாத்தையாவின்ட கையாள் கெட்ட சாமான்’ என்றார் சற்றே கோபத்துடன். இவரும் ஏதோ ஒருவிதத்தில் மோடியால் பாதிக்கப்பட்டவர் என்பதை உடனடியாகவே புரிந்து கொண்டேன். எந்த இயக்கப் போராளிகளும் சமூகத்துடன் மீளிணைக்கப்படவேண்டும் என்பதில் நான் உறுதியானவன். மோடி சொன்ன நேரத்தில் சொன்ன இடத்தில் தரமான கிடுகுளை கொண்டுவந்து சேர்ப்பித்தான். கிடுககளைப் பெற்ற மக்கள் எவ்வித குறைகளையும் கூறவில்லை. தொடர்ந்து அவனிடமிருந்து எமது நிறுவனம் கிடுகுகளை வாங்கியது. எனக்கும் அவனுக்குமிடையே ஒருவித நம்பிக்கையும் நெருக்கமும் ஏற்ப்படத்தொடங்கியது. ஒரு நாள் என்னை அவன் காணவந்த பொழுது தனது சேர்டை உயர்த்தி மடியிலிருந்து எதையோ உருவினான். பிஸ்டல் என்னத்தையோ எடுக்கிறானோ என பயந்துவிட்டேன். அவன் சிரித்த படியே ஒரு மொனிடேர்ஸ் கொப்பியை எடுத்து ‘இதை வாசித்துப்போட்டுத்தாங்கோ’ என்றான் எதுவித சலனமுமி;ன்றி. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. தந்த கொப்பியை பத்திரமாக வாங்கி எனது லாச்சிக்குள் வைத்தேன்.
வீட்டிற்குச்சென்றதும் முதல் வேலையாக அந்த மொனிடேர்ஸ் கொப்பியை புரட்டிப்பார்த்தேன். எல்லாம் பென்சிலால் எழதப்பட்டிருந்தன. PLOT, TELO, EROS, EPRLF போன்ற இயக்கங்களின் ஆரம்ப கால வரலாறு அவற்றின் கொடிகளின் விளக்கங்கள், அவ்வியக்கங்கள் நடாத்திய கொலைகள், கொள்ளைகள் போன்றவை சுருக்கமாக எழதப்பட்டிருந்தன. இந்த கொப்பி என்னிடம் இரண்டே இரண்டு நாட்கள் மாத்திரமே இருந்தது. இதை வாசித்து 20 வருடங்களுக்கு மேலாகின்றது. பல விடயங்களை மறந்து விட்டேன். ஆனால் ஒரே ஒரு விடயம் மாத்திரம் நன்றாக ஞாபகத்தில் உள்ளது. இறைகுமாரன் உமைகுமாரன் கொலைகளில் புளட் இயக்கத்தை சேர்ந்த கண்ணதாசன் பாலமோட்டை சிவம் என்பவர்கள் நேரடியாக ஈடுபட்டார்கள் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மறுமொழியொன்றை இடுங்கள்