சித்திரா வவனியாவுக்கு போவதாக சொன்ன வெள்ளிக்கிழமை காலையில் நான் சுறுசுறுப்பாக இயங்கினேன். அலுவலகத்தில் மெனிக்கவிடமும் சமரசிங்கவிடமும் அன்று செய்யவேண்டிய வேலைகளைக்கூறி நான் யாழ்ப்பாணம் நோக்கிய பயணத்தைத்துவங்கினேன்.
நடந்து வரும் வழியில் ஒருவர் தன் நாய்குட்டிக்கு புழு கண்டிருப்பதாகவும் அதற்கு மருந்து வேண்டும் என கேட்டார்.
‘நல்லவேளை நான் பஸ்ஸில் ஏற முதல் கேட்டீர்கள்’!
சிறு துண்டில் புழுவுக்கான மருந்தை எழுதிக் கொடுத்து விட்டு மனதுக்குள் ஆத்திரம் வந்தாலும் சிரித்தபடியே அந்த மனிதருக்கு விடை கொடுத்தனுப்பி பஸ் நிலையத்தை நோக்கி வேகமாக நடந்தேன். நல்லவேளையாக பத்து மணிக்கு வரும் பஸ் வராதது ஆறுதலாக இருந்தது. பஸ்கள் பிந்தி ஓடுவது சில வேளைகளில் உதவியாக இருக்கிறது.
பத்துமணி கழிந்து பத்து நிமிடம் ஆகியும் பஸ் வராததால் பரபரப்புடன் சுற்றி சுற்றி நடந்தேன். பஸ்நிலையத்துக்கு அருகில் உள்ள கடைக்குத் தேநீர் அருந்துவதற்குச்சென்றபோது, பதவியாவிலிருந்து அநுராதபுரம் செல்லும் பஸ் வருவது கண்டு மீண்டும் திரும்பி வந்தேன்.
பஸ்ஸின் கம்பிகளுக்கூடாக சித்ராவின் முகம் கண்டும் மனம் ஆறுதல் அடைந்தாலும், இதயத்தின் துடிப்பு கூடியது. பதவியா பாடசாலையில் அணிந்திருந்த அதே சிவப்பு சேலையும் சட்டையும் அணிந்திருந்தாள். அவள் சேலையை கண்டிச் சிங்களப் பெண்களின் மோஸ்தரிலே அணியாது யாழ்ப்பாணப் பெண்களின் பாணியில் அணிந்திருந்தாள்.
‘சித்ரா, சிவப்பு சேலை அணிந்து வந்ததற்கு நன்றி’
பதில் சொல்லாமல் சிரித்தாள்.
அப்போது வவனியாவுக்கு செல்லும் பஸ் ஒன்று பஸ் நிலையத்தில் வந்து நின்றது. அதில் இருவரும் ஏறினோம்.
பஸ்ஸில் இருவர் இருக்கும் சீட் ஒன்றில்; யன்னல்கரையில் சித்ராவை அமரச்செய்து அடுத்தாற் போல் நான் அமர்ந்;தேன்.
‘சித்ரா பாடசாலை மாணவர்களுக்கு நான் கூறியது புரிந்ததா?’.
‘ஏன் அப்படி கேட்கிறீர்கள்?’
‘சிறு சந்தேகம். அதுசரி, நீ அடிக்கடி வவனியா போவாயா?’
‘அடிக்கடி இல்லை. எப்பவாவது நல்ல சாரி வாங்க வேண்டுமென்றால் செல்வேன். அநுராதபுரத்தில் நல்ல துணிக் கடைகள் கிடையாது.’
‘இந்த சாரியும் வவனியாவில் வாங்கியதா?’
‘ஆம்’.
‘வவனியாவுக்கு வரும் போது மட்டுந் தான் இப்படி சாரி கட்டுவாய். அநுராதபுரத்துக்கு போகும் போது சிங்களப்பெண் போல் சாரி கட்டுவாயா?’ என சிரித்தபடி அவளை சிறிது சீண்டினேன்.
ஆத்திரத்துடன் ஒரு முறைப்பு. பின் யன்னல் வழியாக வெளியே பார்த்தாள்.
எனக்கு ஒரு மாதிரி போய் விட்டது. எப்படி சமாதானப் படுத்துவது எனத் தெரியவில்லை.
‘ பிளீஸ் ‘
என்னை திரும்பிப் பார்க்கவில்லை. கண் இமைகள் படபடப்பிலும், முகம் சிவந்திருப்பதிலும் கோபம் உண்மையானதென்று தெரிந்தது.
‘என்னை மன்னித்துக்கொள். விளையாட்டுக்குச் சொன்னேன்.’
இப்போது திரும்பிப்பார்த்தாள். கோபம் தணியவில்லை.
‘பிளீஸ் சித்ரா!’
கரகரத்த குரலில் ‘இதுதான் முதன்முறையாக நான் இப்படி சாரி கட்டினது. அதுவும் பக்கத்து வீட்டு நந்தாவிடம் கேட்டு தெரிந்து கட்டியது.. நான் இதை உடுத்த பட்ட பாடு’ சிறிது தணிந்தாள்.
இப்போது இடது கண்ணின் கரையோரத்தில் ஒரு கண்ணீர்த் துளி விழுந்து விடவா, வேண்டாமா என என்னைப் பார்த்துக் கேட்டது போல் இருந்தது.
எனது லேஞ்சியை எடுத்து ‘கண்ணை துடைத்துக் கொள். மற்றவர்கள் பார்த்து விடுவார்கள்’ என கூறினேன். அவள் என் லேஞ்சியை பெற்றுக் கண்களை துடைத்துக் கொண்டாள். ‘விளையாட்டுக்காக கூறியதை இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்வாய் என நான் கனவிலும் நினைக்க வில்லை.’என உண்மையில் மனம் நெகிழ கூறினேன்.
அவள் முகம் பழைய நிலைக்கு வந்தது. பஸ்சும் வவனியா பஸ் நிலையத்தை வந்தடைந்து விட்டதற்கு அடையாளமாக புழுதிப்படலம் எழும்பி கண்ணை மறைத்தது.
பஸ்ஸால் இறங்கிய போது சித்ரா எனது லேஞ்சியை திருப்பித் தந்தாள். லேஞ்சியை நான் விரித்து வட்டமாக நனைந்த பகுதியை காட்டி ‘கோபத்தின் அடையாளச்சின்னம்’ என்றேன்.
அவள் களுக்கென்று சிரித்தாள்.
‘அப்பாடி இப்பொழுதுதான் பழைய சித்ராவைப் பார்க்கிறேன்’ என்றபடி கடிகாரக் கடைக்குள் சென்றோம்.
கடிகாரத்தை மாற்றிக்கொண்டு வரும் போது துணிக்கடை அருகில் சித்ராவின் நடையின் வேகம் குறைந்தது.
‘என்ன சாரி பார்க்க வேணுமா’? என்றபடி துணிக் கடைக்குள் ஏறிய போது ஒரு துப்பாக்கிச்சூட்டுச் சத்தமும் பின்பு அதைத் தொடர்ந்து பல துப்பாக்கிச்சூட்டு சத்தங்களும் கேட்டன.
வெளியே வந்து பார்த்தோம். சிறிது தூரத்தில் வவனியா பொலிஸ் நிலையம் தெரிந்தது. அங்கு எதுவித நடமாட்டமும் தெரியவில்லை.
‘ஏதோ பிரச்சனை போலிருக்கு’
துணிக்கடைக்காரர் எங்களை வெளியே செல்லும்;படி கை காட்டிவிட்டு வாசலின் இரும்புக்கதவை இழுத்து மூடினார்.
கார்களும் மற்றைய வாகனங்களும் பல்வேறு திசையில் தெறித்து சென்று கொண்டு இருந்தன. அவசரத்தில் சைக்கிளை ஓட்டிய ஒருவர் விழுந்து விட்டார். ஆனால், சைக்கிளை மீண்டும் நிமிர்த்தி ஏற முயற்சிக்காமல் சைக்கிளை இழுத்தபடியே ஓடினார்.
நான் சித்ராவைக் கூட்டிக்கொண்டு பஸ்நிலையம் நோக்கிச் சென்றேன்.
பெண்கள் சிங்களத்திலும், தமிழிலும் கத்தியபடி பிள்ளைகளை ஒருகையிலும், மூடைகளை தலையிலும் சுமந்தபடி ஓடினார்கள்.
வழியில் ஓடி வந்த ஒருவரிடம் ‘என்ன நடந்தது என வினவினோம்.’
‘விமானப்படை ஜீப்பை பொடியன்கள் தாக்கியதில் இரண்டு பேர் இறந்து விட்டார்கள்’ என்று கூறியபடியே ஓடினார்.
சித்ராவிடம் ‘எதுக்கும் பஸ் நிலையத்துக்கு சீக்கிரமாக போவோம் .’ என்று கூறினேன்.
நாங்கள் பஸ் நிலையத்துக்கு வந்து சேர்ந்த போது சகல பஸ்களும் வெவ்வேறு திசைகளில் ஓடின. மக்களும் திகில் அடைந்து ஓடிய பஸ்களிலும் வான்களிலும் ஏறினார்கள். மதவாச்சி பஸ் இல்லாத படியாலும், நான் யாழ்ப்பாணம் செல்ல விரும்பியதாலும் நாங்கள் இருவரும் பஸ் நிலையத்தில் நின்றோம்.
ஐந்து நிமிடங்களில் இரண்டு ஜீப்பிலும் இரு பெரிய டிரக்குகளிலும் தடதட என ஆகாயப்படையினர் வந்து இறங்கினர். வவனியா மெயின் கடைப்பகுதி கண்டி ரோட்டும், ஹொரவப்பத்தான ரோட்டும் சந்திக்கும் இடத்தில் அமைந்திருப்பதால் பெரிய அளவிலான ஆயுதப் படையினராலேயே முற்றுகையிட முடியும். அத்தகைய முற்றுகை ஒன்று உருவாகியது.ஆகாயப் படையினர் வந்து இறங்கின பின்புதான் பொலிசார் வந்து இறங்கி சேர்ந்து கொண்டார்கள்;.
ஒரு அம்புலன்ஸ் சத்தமிட்டபடியே சென்று காய்கறி மார்க்கட்டை நோக்கிச்சென்று மறைந்தது. சம்பவம் நடந்த இடம் அதுவாக இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் மீண்டும் அம்புலன்ஸ் சத்தமிட்டபடி அநுராதபுரத்தை நோக்கிச் சென்றது.
இதுவரை நேரமும் கண்ணியமாகவும், கட்டுப்பாடாகவும் நடந்துகொண்ட ஆகாயப்படை வீரர்களில் ஒருவர் பொலிஸ் வேனுக்கு எதிரில் இருந்த பெற்றோல் பங்கில் இருந்து பெற்றோலை ஒரு தகரத்தில் நிரப்பினான். பெற்றோல் பங்கில் எவருமே இருக்கவில்லை. எங்களுக்கு எதிரிலுள்ள துணிக்கடைக்கும் மற்றைய கடைகளுக்கும் பெற்றோலை ஊற்றி சிகரெட்டைப் பற்ற வைப்பது போல தீ வைத்தான். வேறு ஒருவன் எதிரில் நின்ற கார்களுக்கு நெருப்பு வைத்தான். இந்த நேரத்தில் காய்கறி மாக்கெற் இருந்த பக்கத்தில் இருந்து வானளாவிய புகை வந்தது. பொதுமக்கள் அதிக அளவில் இல்லாதபடியால் பொதுமக்களுக்கு கண் எதிரில் எதுவும் நடக்கவில்லை. ஆனாலும் ஐயோ, என்கிற அலறல் சத்தங்களுடன்; குரல் கேட்டதால் சிலர்
தாக்குதலுக்குள்ளாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை ஊகிக்க கூடியதாக இருந்தது.
இவ்வளவு நடந்தும் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கு எதுவும் நடக்கவில்லை. மேலும் பஸ் நிலையத்தில் எங்களை விட பத்து பதினைந்து பேர் நின்றார்கள். எல்லோரும் மதவாச்சியை சேர்ந்த சிங்களவர்கள் என நினைத்தேன்.
நானும் சித்ராவும் எதுவும் பேசவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்தபடியும் சுற்றி நடக்கும் அக்கினித் தகனங்களை பார்த்துக் கொண்டும் பயத்துடன் நின்றோம்.
இரண்டு ஆகாயப்படையினர் எம்மை நோக்கி வந்தனர். நாங்கள் பின்னால் சில அடிகள் வைத்து மற்றையோரின் பின்னே சென்றோம். அவர்களை நோக்கி வந்தவர்களில் இருவர் கைகளில் இயந்திர துப்பாக்கி இருந்தது. முன்பாக நின்றவர்களை பார்த்து எங்கு போக நிற்கிறியள் என சிங்களத்தில் ஒரு படைவீரன் கேட்டபோது சகலரும் ஒரே குரலில் மதவாச்சி என கூறினார்கள்.
அவர்களது உடைகளிலும் முகங்களிலும் அவர்களை சிங்கள விவசாயிகளாக காட்டியது. அத்துடன் ஒவ்வொருவரும் பெரிய உரமூட்டையோ அல்லது நெல்லுக்கு அடிக்கும் பூச்சி மருந்துப் பொதியோ வைத்திருந்தார்கள்.
மற்றைய படைவீரர் எங்களை நோக்கி வந்தபடி’எங்கே போகிறாய்?’
‘யாழ்ப்பாணம் ‘
‘தெமலயோ’ என்றபடி நெஞ்சில் சப்மெசின் துப்பாக்கி அழுத்தப்பட்டது.
அப்போது நான் எதிர் பார்க்காமல் சப்மெசின் துப்பாக்கியை கையால் பிடித்தபடி, ‘மகே சுவாமி புருஷய’ என கூறினாள் சித்ரா.
இந்தக்குரல்; விமானப் படைவீரனை அதிரச் செய்திருக்க வேண்டும்.
பக்கத்தில் இருந்த ஒருவர் சித்ராவிடம் சிங்களத்தியா? என கேட்டபோது சித்ரா ‘நான் பதவியா, இவர் என் கணவன் ‘ என சிங்களத்தில் கூறினாள்.
இப்போது சித்ரா எனக்கும் விமானப்படை வீரனுக்கும் நடுவில் நின்றாள். ஆனால் கை சப்மெசின் துப்பாக்கியில் இருந்தது.
தனது துப்பாக்கியை அவளுடைய கைபடாது இழுத்தபடி கெட்ட வார்த்தையால் ஏசியபடி விலகினான்;. செல்லும் போது ‘இந்த இடத்தை விட்டு ஓடிப்போங்கள் ‘ என எச்சரித்துக்கொண்டே சென்றான்.
‘சித்ரா’ என்றேன்.
என்னைப் பார்த்த அவளின் கண்களிலே இருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது.
அவளுடைய தோளைப் பற்றி என்னை நோக்கி இழுத்தேன்.
என்னை அணைத்தபடி விக்கி விக்கி அழுதாள்;.
தாங்கமுடியாத உணர்ச்சிப்பெருக்கில் நானும் அழுது விட்டேன்.
சுற்றி நின்றவர்கள் எங்களை பாhர்த்துக்கொண்டு நின்றார்கள். எவரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. மௌனமான மொழியால் கோபம், அதிர்ச்சி உணர்வுகள் எம்மிடையே பர்pமாறப்பட்டன.சிறிது நேரத்தில் மதவாச்சியில் இருந்து வந்த பஸ்ஸில் ஏறி மீண்டும் மதவாச்சி சென்றோம். பஸ்ஸில் இருந்து வவனியாவை பார்த்தபோது வவனியா தீப்பிளம்பாகத் தெரிந்தது.
அந்தக் காலத்தில் ஒரு குரங்கு லங்காதகனம் செய்ததாக ஓர் இதிகாசம் சொல்கிறது. இப்போது எத்தனை மனிதவானரங்கள் தீ வைப்பதற்கு அலைந்து திரிகின்றன?
சித்ராவின் அழுகைச்சத்தம் நின்று விட்டாலும் கண்ணீர் நிற்கவில்லை. பஸ்ஸில் இறுக்கமாக அணைத்துக் கொள்வதைத் தவிர வேறுவிதத்தில் என்னால் அவளுடன் பேச இயலவில்லை.
மதவாச்சியில் இறங்கிய கையோடு கடையில் ஒரு பக்கெட் சிகரெட் வாங்கினேன். ஓரு சிகரெட்டை பற்ற வைத்த பின்னரே அமைதியாக யோசிக்க முடிந்தது.
‘சித்ரா நாம் விடுதிக்கு போவோம். ‘
சித்ராவும் என்னை பின்தொடர்ந்தாள்.
விடுதியில் என்னையும் சித்ராவையும் பார்த்துவிட்டு ருக்மனும், காமினியும் வெளியே வந்தார்கள்.
‘ருக்மன் சித்ராவை நான் வவனியாவில் தற்செயலாக சந்தித்தேன் ‘ என்று கூறிவிட்டு வவனியாவில் நடந்த சம்பவத்தைக் கூறினேன். ‘உனது தங்கையால்தான் உயிர் தப்பினேன். ஆனாலும் இது அவளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. என்னால் தனியாக பதவியாவுக்கு அனுப்ப முடியவில்லை. அதனால் இங்கே கூட்டி வந்தேன். ‘
‘நான் தனியே போவேன் ‘ என்றாள் சித்ரா.
‘ருக்மன், நீ புறப்பட்டு சித்ராவுடன் பதவியாவுக்கு போ. நான் டாக்டரை ரயில்வே ஸ்ரேசனுக்கு கொண்டு போகிறேன். இரயிலில் யாழ்ப்பாணம் போவது பிரச்சனையில்லை’, என்றான் காமினி.
காமினி எதுவும் பேசாமல் மோட்டார் சைக்கிளில் இரயில்வே ஸ்ரேசனில் இறக்கி விட்டான்.
ரயில் வரும் போது ‘கவலைப்படாமல் போய் வாருங்கள் ‘ என்றான் காமினி.
நான் கவலைப்படவில்லை. ஆனால் இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை.
‘இவை நடக்கின்றன என்பது தான் உண்மை. ‘
‘நாட்டில் நடக்கும் அரசியல் பிரச்சனையிலிருந்தோ, இப்படியான சம்பவங்களில் இருந்தோ நாம் தப்ப முடியாது. ஆனாலும் எமக்கு நடக்கும் போது அதிர்ச்சியளிக்கிறது’ என்று கூறியபடி இரயிலில் ஏறினேன்.
சனிக்கிழமை எழும்ப பத்து மணியாகி விட்டது அம்மா தந்த முட்டைக்கோப்பியை குடித்து காலைக் கடன்களை முடித்து சைக்கிளில் வெளியே போகப் புறப்பட்டேன்.
‘புட்டை சாப்பிட்டு விட்டு போ’ என்றார் அம்மா.
‘பசியில்லை. சங்கர் வீட்டை போய்விட்டு வருகிறேன் ‘
‘ஆமிக்காரன்கள் அலைகிறான்கள். கவனமாய் போ’.
தலையாட்டிவிட்டு குச்சு ஒழுங்கைகள் வழியாக சங்கரின் வீட்டை அடைந்தேன்.
பின்னர் சங்கரும் நானுமாக ஆனைக்கோட்டைக்குச் சென்றோம். ஒன்றாக படித்தவர்களில் சங்கர் மட்டுந்தான் யாழ்ப்பாணத்தில் இருக்கிறான். மற்றவர்கள் வேலைக்காகவோ, படிப்புக்காகவோ என வெளியேறிவிட்டார்கள். யாழ்ப்பாணத்தின் பிரதான ஏற்றுமதிப் பொருள் என்ன என்று கேட்டால் ‘மனிதர்கள்’ என்று தான் பதில் சொல்ல வேண்டும். காலம் காலமாக இலங்கையின் மற்ற பகுதிக்கு ஏற்றுமதி செய்வோம் பின் கலவரங்கள் ஆரம்பித்தபின் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி என்று ஏற்றுமதி செய்கிறோம்.
சங்கரும் நானும் பாடசாலை காலங்களிலிருந்து ஆனைக் கோட்டை முத்தண்ணனின் கள்ளை ருசி பார்த்திருக்கிறோம். அவருடைய கள்ளுக்கு எப்போதும் தனி ருசி. முத்தண்ணையின் பிள்ளைகள் நல்லா இருந்தாலும் தொழிலை மட்டும் விடவேயில்லை.
வாசலில் எங்களை கண்டவுடன் ‘தம்பி எப்ப வந்தது.’ என்று அன்புடன் கேட்டார்.
‘நேற்றுதான் அண்ணை. ‘
‘எப்படி தம்பி சிங்கள ஊர் புதினம் ‘ என்று கேட்டவாறு சிவப்பு முட்டி நிறையக் கள்ளுடன் எங்களிடம் வந்தார்.
‘எல்லாம் அப்படித்தான். எங்கே மகன் ராசா? ‘
‘அவன் ஜேர்மனிக்கு போய் விட்டான் ‘என்று கூறிய முத்தண்ணை தன் மனைவியிடம், ‘அந்த மீன்பொரியலை இங்கு கொண்டு வந்து வையெணை’ என்றார்.
‘என்ன, சூரியன் வந்தால் மட்டும் விசேசமாக இருக்குது,’ என்று சங்கர் கேட்டான்.
‘அதில்லை; தம்பி எப்பவாவது இருந்து விட்டுத்தானே வருகிறது. ‘ என்று சமாதானம் கூறினார்.
முத்தண்ணையின் மனைவி வைத்த மீன் பொரியலுடன் கள்ளை குடித்து முடித்தோம்.
முத்தண்ணர் வீட்டை விட்டு வெளியே வரும் போது சிறிது போதையும் ஏறியிருந்தது. வரும் வழியிலே சித்திராவுடன் ஏற்பட்ட தொடர்புகளை முழுமையாகச் சங்கரிடம் கூறினேன். அத்துடன் என் நெஞ்சில் அரும்பியுள்ள காதலை நான் மறைக்கவும் இல்லை.
‘சிங்களத்தியை கல்யாணம் முடிக்கப் போகிறாயா? ‘ என ஆத்திரமாகக் கேட்டான் சங்கர்.
‘மற்ற எல்லாம் சரி. இனம்தான் பிரச்சனை என்று நினைக்கிறாயா? ‘ என்று அப்பாவித்தனமாக கேட்டேன்.
‘உன் மூளையில் சுகமில்லை தம்பி! நீ யாழ்ப்பாணத்திலும் இருக்க ஏலாது. மதவாச்சியிலும் இருக்க இயலாது ‘ சங்கரின் எச்சரிக்கையில்; உண்மையிருந்ததால் மௌனமாகினேன்.
‘ஏய் உனக்கு மட்டும் தான் சொன்னேன். சித்ராவுக்கு கூட நான் இப்படி நினைப்பது தெரியாது. ‘
‘ஏதோ மூளையை பாவிச்சு நட. ‘ என்று சொல்லித் தனது வீடு நோக்கிச் சென்றான்.
நான் வீடு நோக்கி ஓட்டுமடவீதியால் வந்து கொண்டிருந்த போது ஒரு பச்சை ஜீப்பை கண்டு சிறிய ஒரு ஒழுங்கைக்குள் சைக்கிளை விட்டேன். திரும்பி ஜீப்பை பார்த்தபோது விவசாயத் திணைக்களம் என எழுதப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்தில் மாற்றம் தெளிவாகத் தெரிந்தது. எழுபதாம் ஆண்டுகளிலே இரவு நேரங்களில் சுதந்திரமாக எங்கும் திரியமுடியும். இரண்டாம் இரவு சினிமா ஷோ பார்த்து விட்டு ஒரு மணிக்கு யாழ்ப்பாண ரோட்டுகளால் ஏராளமான வண்டிகள் போகும். எண்பதுகளில் இரண்டாவது சினிமாக்காட்சி இல்லாமல் போய் விட்டது. தேர்தல் காலங்களில் மட்டுமே பேசப்பட்ட அரசியல் இப்பொழுது எல்லா நாள்களிலும் பேசப்பட்டது. எங்கும் பதற்ற நிலை உருவாகியது. இப்படியான நிலை உருவாகியதற்கு தொடர்ச்சியாக ஆட்சி புரிந்த அரசாங்கங்களே காரணமாகும். இளைஞர்கள் பொதுவாக வன்முறைப் போராட்டத்தை விட வேறு வழியில்லை என்றார்கள். இவர்களிடம் அரசியல் போராட்டத்திற்கு மக்கள் பலத்தை விட சக்தி வாய்ந்த ஆயுதங்களில் அதிகம் நம்பிக்கை வைத்து பேசினார்கள். எதிர்க்கருத்துகள் எதுவும் இருக்கக் கூடாது. அவை ஒற்றுமையை குலைக்கும் என்று ஆணித்தரமாக கூறப்பட்டது. இவை எனக்கு கவலையைத் தந்தது.
செவ்வாய் கிழமையன்று பதவியா விவசாயத் திணைக்களத்தில் வேலை இருந்த காரணத்தால், அதை முடித்துக் கொண்டு சிரிபுர சென்றேன்.
வாசலில் இறங்கியபோதே சித்ராவின் தந்தை வந்து ‘எப்படி மாத்தையா’ என்றார்.
‘நல்ல சுகம் ‘.
‘யாழ்ப்பாணத்தில் பிரச்சனை எப்படி? ‘
‘பிரச்சனைகள் தான.; சித்ரா எங்கே?’
‘ குளிக்கப் போய்விட்டாள். இப்போது வரும் நேரந்தான் ‘.
‘வெள்ளிக்கிழமை நடந்த விஷயத்தை மகள் உங்களிடம் கூறினாளா? ‘
‘ஆம், நல்ல வேளை கடவுள் தான் உங்களை காப்பாற்றினார். ‘
எதிரில் சித்ரா சிரித்தபடியே வருவது தெரிந்தது. ஈரமான கூந்தல் நாலுமணி வெய்யிலில் பளிச்சிட்டது. ‘உடுப்பு மாற்றிவிட்டு வருகிறேன.;’
என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.
தந்தையார் வயலில் கட்டப்பட்டிருக்கும் காளை மாட்டை நோக்கிச் சென்றார்.
சிறிது நேரம் காத்திருந்த எனக்கு அவள் அவசரக்கோலத்தில் தரிசனம் தந்தாள். அள்ளி முடிந்த கொண்டையில் ஒரு துணியும் சேர்ந்து இருந்தது. சேலையையும் அவள் அள்ளிச்சொருகியபடி வந்தாள்.
‘சித்ரா நான் திரும்ப மதவாச்சி போகவேண்டும். அதற்கு முதல் அவசரமாக உன்னிடம் ஒரு விஷயம் பேச வந்தேன்;. ‘
‘என்ன விஷயம் ‘.
‘எங்கே உன் அம்மா’.
‘பதவியா போய் இருக்கிறார். ‘
அவள் தந்தை இப்போது காளையை வயலின் மறுகரைக்கு ஓட்டிச் செல்வது தெரிந்தது.
மோட்டார் சைக்கிளில் சாய்ந்தபடியே ‘கிட்ட வா’ என்றேன்.
‘ஏன் டொக்டர் ‘
‘டொக்டர் எனக் கூற வேண்டாம் ‘ என்றேன் அழுத்தமாக.
‘அப்படி சொல்லாவிடில் எப்படி சொல்வது.இதைச் சொல்லவா, அம்மா எங்கே என வினவினீர்கள் ‘
‘நான் ஒன்று சொல்ல நினைக்கிறேன். உனக்கு பிடிக்குமோ தெரியாது. ஆனால் என்னால் சொல்லாமல் இருக்கவும் முடியாது. ‘
‘அப்படி என்ன விஷயம் ‘
‘சுவாமி புருஷயா என்றால் சிங்களத்தில் என்ன அர்த்தம்?. ‘
முகம் சிவந்து தலைகுனிந்தபடி இரண்டு எட்டு நகர்ந்தாள்.
‘சித்ரா எனக்கு அதன் அர்த்தம் தெரியும். நீ என்னை காப்பாற்றுவதற்கு சொன்னது. உனக்கு சம்மதமானால் அதற்கு உண்மையான அர்த்தத்தை அளிக்க விரும்புகிறேன். ‘
என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
‘உனக்கு சம்மதமானால் இன்றே உன் தாய் தந்தையுடன் பேசுகிறேன். ‘
அதற்கும் மீண்டும் மௌனமே பதிலாக வந்தது.
‘உன் கைகளை நீட்டு’.
இரண்டு கைகளையும் நீட்டினாள்.
எனது இரண்டு கைகளால் பிடித்தபடி ‘என்னை நம்பு’ என்றேன். என் குரல் தளதளத்ததை நானே உணர்ந்தேன்.
அரும்பிய கண்ணீருடன் ஆம் என தலையசைத்தாள்.
‘உன் தாய்தந்தையருடன் நான் பேசவா? அல்லது நீ பேசுகிறாயா? ‘
‘நான் பேசுகிறேன் ‘
சித்ராவின் கை இப்போது என் கைகளை இறுக்கமாக பிடித்தது. பூப்போன்ற கைகளுக்கு எப்படி இவ்வளவு பலம் வந்தது என நினைத்தபடி என் கன்னத்தில் வைத்தேன். சித்ராவின் தந்தையார்; வருவது தெரிந்ததும், ‘நான் பிறகு சந்திக்கிறேன் ‘ என கூறிவிட்டு அவள் தந்தைக்கு கை அசைத்து விட்டு புறப்பட்டேன்.
பண்டார அன்று மதியம் ஒருவன் மூலமாக எனக்கு கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். திறந்து பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. ரோகண விஜயவீர அநுராதபுரம் வருவதாகவும் விருப்பமானால் காமினியுடன் அநுராதபுரத்துக்கு வரும்படியும் அந்தக் கடிதம் செய்தி சொன்னது.
எனக்குப் புது அனுபவமாக இருந்தது. எந்தக்காலத்திலும் நான் அரசியல்வாதிகளை சந்தித்ததோ, பேசியதோ கிடையாது. பேராதனை பல்கலைக்கழகத்தில் சக மாணவர்களிடம் பேசிய அரசியல் மட்டும் தான். யாழ்ப்பாணத்தில் அரசியல் கூட்டங்களுக்கு சிறுவயதில் சென்ற போது அவர்கள் பேச்சுக்களை கேட்டு இருக்கிறேன். வயது வந்ததும் அந்த பேச்சுக்களின் போலித் தனங்கள், சந்தர்ப்பவாதங்களும் புரிந்தபின் நல்ல அபிப்பிராயம் ஏற்படவில்லை. ஆனால் என்னால் அரசியலை வெறுக்க முடியவில்லை. இதைவிட மிகவும் கவனமாக உள்நாட்டு, வெளிநாட்டு அரசியலை கவனித்து வந்தேன். என்னோடு படித்த பலருக்கு இலங்கை எந்த வருடம் சுதந்திரம் அடைந்தது என்று கூட சரியாகத் தெரியாது.
மாலை ஆறு மணிக்கு பகிரங்கக் கூட்டம். ஆனபடியால் நானும் காமினியும் ஐந்து மணிக்கே அநுராதபுரம் போய்ச் சேர்ந்து விட்டோம். கூட்டம் அநுராதபுர கச்சேரிக்கு அருகில் உள்ள வெளியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் போன போதே பெருமளவில் மக்கள் கூடியிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் இளைஞர்களும் இளம்பெண்களும் ஆவர். பெரும்பாலானவர்கள் தலைகளில் சிவப்புத் துணி கட்டியிருந்தார்கள். சிவப்புத்துணி கட்டியவர்கள் ஜனதா விமுக்திப் பெரமுனை அங்கத்தவர்கள் என காமினி மூலம் அறிந்து கொண்டேன். கூட்டம் நடக்கும் இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள மரத்தடியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வந்த போது ‘டொக்டர்’ என குரல் கேட்டது. திரும்பிப்பார்த்த போது ருக்மன்; தலையில் சிவப்புத் துண்டு கட்டியபடியே எம்மைப் பார்த்து சிரித்தான்.
எனக்கு சிறு அதிர்ச்சியாக இருந்தது. ருக்மன்; ஜே.வி.பி யில் அங்கத்தவர் ஆக இருப்பான் என நினைக்க வில்லை. என் வியப்பைக் காட்டாமல்
‘ருக்மன் எப்போது கூட்டம் ?’ என கேட்டேன்.
‘இப்போது துவங்கும். ‘
மணிக்கூட்டைப் பார்த்தபோது மணி ஆறு காட்டியது.
‘நான் யாழ்ப்பாணம் கூட்டம் தான் இப்படி தாமதம் ஆகும் என இதுவரை காலமும் நினைத்திருந்தேன். ‘
‘இல்லை, தோழர் விஜயவீர இன்னமும் வரவில்லை’ கவலை தோய்ந்த முகத்தோடு ருக்மன்; மேடையை பார்த்தபோது மேடைக்கு அருகில் ஒரு கார் வந்து நின்றது. காரில் இருந்து இருவர் இறங்கினர். அதில் உயரமாகத் தாடியுடன் இருந்தவர் பண்டார என என்னால் அடையாளம் காண முடிந்தது.
காமினி என் கைகளைப் பிடித்து ‘அவர்தான் விஜயவீர’ என்றான்.
சராசரி உடலும் குறைவான உயரத்தோடும் கண்ணாடி அணிந்து தாடியுடன் இருந்தார். கறுப்பு காற்சட்டையும், சிவப்பு சேட்டும் அணிந்திருந்தார்.
விஜயவீர மேடைக்குச் சென்று அமரும் போது ‘விஜயவீரவுக்கு ஜெயவேவ ‘ என மக்கள் கோஷம் எழுப்பினர்.
பண்டார கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கூட்டத்தில் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் பேசியபின் விஜயவீர பேசினார்.
விஜயவீரவின் பேச்சு பெருமளவில் எனக்கு புரியாவிட்டாலும் அதில் மயக்கும் தொனி இருந்தது. பேச்சில் சரித்திர கால துட்ட கைமுனுவை நினைவு படுத்திப் பேசிய போது இளைஞர்களை ஆவேசம் கொள்ள வைத்து மேலும் அரசாங்கம் இலங்கையை வெளிநாட்டுக்கு அடைவு வைப்பதாகப் பேசிய போது கரகோசம் எழும்பியது. விஜயவீர தன்னை சிங்கள விவசாயிகளில் ஒருவராக காட்டிக்கொண்டு பண்டைய மன்னர்களின் மேன்மையை எடுத்துக் கூறினார். நான் இடைக்கிடை ருக்மனை பார்த்தபோது முகத்தில் இருந்த தீவிரமும் கண்கள் இமைகளை அசைக்காமல் மேடையை பார்த்தபடி இருக்கும் உணர்ச்சிகரமான இளைஞன் விஜயவீராவால் ஆட்கொள்ளப்பட்டிருப்பது புரிந்தது. கூட்டம் இரவு பத்து மணியளவில் முடிந்த போது ருக்மன்; வேறு திசையில் செல்ல நானும் காமினியும் பண்டார வீட்டை நோக்கிச் சென்றோம்.
சைக்கிளில் செல்லும் போது, ஏன் நான் விஜயவீரவை சந்திக்க விரும்பினேன் என என்னை பலமுறை கேட்டுக்கொண்டேன். மேலும் இந்த சந்திப்பு மதவாச்சியில் யாருக்கும் தெரிந்தால், விசேடமாக பொலிசாருக்கு தெரிந்தால் வீண் பிரச்சனை என நினைத்தேன். ஜே.வி.பி அந்தக் காலத்தில் சட்டபூர்வமாக இயங்கினாலும் அரசாங்கத்தினதும் காவல் துறையினதும் கண்கள் அவர்கள் மேலேயே இருந்தது. தலைமயிர் வெட்டும்போது ஆறுமுகம் அண்ணை கூறியது நினைவுக்கு வந்தது.
மனதில் பல கேள்விகளுடன் மோட்டார் சைக்கிளை பண்டாராவின் வீட்டுக்கு முன் நிறுத்தி விட்டு இறங்கினோம்.
‘சகோதரயா’ என்றான் காமினி.
பண்டார சிவப்பு சேட்டுடன் வருவது தெரிந்தது. ‘வாங்கோ’ என உள்ளே அழைத்துச் சென்றான்.
பெரும்பாலும் இருட்டாக இருந்த இடத்தில் ஒரு மண்ணெண்;ணை விளக்கு எரிந்தது. மேசைக்கு பக்கத்தில் விஜேவீர இருப்பது தெரிந்தது.
சிவப்பு சட்டையும் பளிச்சென்ற கண்கள் கண்ணாடியையும் மீறி என்னை துளாவியது.
பண்டார என்னை அறிமுகப்படுத்தி நாற்காலியில் அமருமாறு கூறினான்.
‘எப்படி கூட்டம் இருந்தது ‘ என்றார் விஜயவீர.
‘நன்றாக இருந்தது. ‘
‘உங்களுக்கு எதாவது கேள்வி இருந்தால் தோழரிடம் கேளுங்கள் ‘ என்றான் பண்டார.
நான் சிரித்தபடி ‘என்னை பிரச்சனையில் மாட்டுவது என்ற திட்டமோ?’ என்று கேட்டு என்னை சுதாகரித்துக் கொண்டேன்.
‘ அப்படி பிரச்சனை ஒன்றுமில்லை. கேளுங்கள் ‘ என்றார் விஜயவீர.
‘தமிழர்களின் இனப்பிரச்சனை பற்றி ஜே.வி.பி என்ன நினைக்கிறது.’?
‘தமிழர்கள் பிரச்சனை ஐக்கிய தேசியக்கட்சிக்கு பின்பு சுதந்திர கட்சியால் உருவாக்கப்பட்டது. சாதாரண சிங்களவர்களுக்கும் சாதாரண தமிழர்களுக்கும் பிரச்சனைகள் ஒன்றே. அது இலங்கையில் வர்க்க பேதமற்ற அரசாங்கம் வரும் போது இல்லாமல் போய்விடும். இதற்காகவே ஜே.வி.பி பாடுபடுகிறது. ‘
‘ நீங்கள் இந்திய எதிர்ப்பு வாதத்தையும் பேசி சிங்கள தேசிய வாதத்தையும் பேசிய போது நீங்கள் ஒரு இனவாத இயக்கம் என தமிழர்களை நம்ப வைக்கும். ‘
இந்தப் பேச்சை விஜயவீர எதிர்பார்க்கவில்லை. சிரிப்புடன் இருந்த முகத்தில் கடுமை தெரிந்தது.
‘நாங்கள் இந்திய எகாதிபத்திய எதிரியை பற்றி பேசும் போது இலங்கை தமிழர்கள் தங்களை எதிர்ப்பதாக ஏன் கருத வேண்டும்?’
இலங்கையின் பண்டைய கால இராஜதானியான ராஜரட்டைதான் இந்திய மன்னர்கள் படை எடுத்து கைப்பற்றும் போது சிங்கள மன்னர்கள் இயற்கையில் மலைகளும் குகைகளும் நிறைந்த தென் இலங்கையில் தமது இராசதானியை அமைப்பார்கள். இந்த பிரதேசம் ரோகண எனப்படும். தென் இலங்கையில் பிறந்ததால் ரோகண என தன் புனைபெயரை சூடிக்கொண்டார். விஜயவீரவின் இயற்பெயர் டொன் நந்தசிறி விஜயவீரவாகும். மார்க்சீக கொள்கைளை ஏற்று கொண்டு இயக்கத்தை வழி நடத்தும் விஜயவீர அந்தக்கால சிங்கள மன்னர்களின் கீர்த்தனைகளை உயர்த்தி பேசியது அவரது அரசியல் தன்மையை காட்டியது.
‘பெரும்பான்மை இனத்தை சிறுபான்மை இனம் சந்தேகத்துடன் பார்ப்பது தவிர்க்க முடியாது. ‘
‘அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். மேலும் நாங்கள் முடிந்தவரை தமிழர்களுக்கு புரிய வைக்க முயல்கிறோம். ‘
இத்துடன் இந்த சம்பாஷனையை முடிக்க எண்ணி ‘நான் உங்களை சந்திக்க வேண்டும் என காமினியிடம் கேட்ட போது உண்மையில் சந்திப்பேன் என எதிர்பார்க்கவில்லை. இந்த சந்திப்பு எனக்கு என்றுமே மறக்கமுடியாதது’ எனக் கூறி விஜேவீரவிடம் விடைபெற்றேன்.
பண்டார வெளியே வந்து வழியனுப்பிய போது பண்டாரவிற்கு நன்றி சொன்னேன்.
மோட்டார் சைக்கிளில் வரும் போது காமினியிடம் சொன்னேன்,
‘இன்னும் பல கேள்விகள் உண்டு. ஆனால் விஜேவீரவிடம் இளைஞர்களுக்கு ஏன் இவ்வளவு பற்று என புரிந்தது. ‘
மறுமொழியொன்றை இடுங்கள்