
எமது வாகன தொடரணி புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள்வர இருண்டு விட்டது. வழமை போல் உட்பிரவேசிக்கும் வரிசையில் பதிவுசெய்வதற்க்காக காத்துநின்றேன். எனக்கு முன்னால் நின்ற கிறிஸ்தவ பாதிரியார் தனது முறை வர பதிவு செய்பவரிடம் அடையாள அட்டையைக்கொடுத்து விட்டு அவனின் கேள்விகட்கு பதிலளிக்க ஆரம்பித்தார்.
‘ உங்கள் பிரயாணத்தின் நோக்கம்’ ‘தேவ பணி’ என்றார் அந்தப்பாதிரியார்.
கஸ்டப்பட்டு எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டேன். அதற்கிடையில் அந்த பாதிரியார் மறைந்துவிட்டார். என்னையும் வழமையான கேள்விகளை கேட்டுவிட்டு ஒரு துண்டை தந்து ‘அந்த அறையிலுள்ள பொறுப்பாளரை சந்தித்துவிட்டு போங்கோ’ என்றார் எதுவித சலனமுமின்றி;;;;.
அவர் தந்த துண்டைப் பெற்றுக்கொண்டு இறைச்சிக்கு நேர்ந்து விட்ட பலிக்கட போல் பொறுப்பாளரின் அறைக்குள் நுளைந்தேன்.
எவ்வித சீருடையுமின்றி சாரத்துடனும் ரீசேட்டுடனும் ஏதோ கடும் யோசனையிலிருப்பவர் போல் பொறுப்பாளர் காணப்பட்டார். என்னைக்கண்டதும் புன்முறுவலுடன் ‘வாங்கோ ஜயா இருங்கோ’ என்று தன் முன்னாலிருந்த கதிரையைக்காட்டினார். மரக்கட்டைபோல் அமந்தேன். நான் கொடுத்த துண்டை வாசித்து விட்டு கசக்கி தனக்கருகாமையிலிருந்த குப்பைக்கடகத்துள் குறி பார்த்து போளை அடிப்பது போல் ஸ்டைலாக எறிந்தார். குறி தவறி விட்டது. அதை காணதவர் போல் என்னைப்பார்த்தார். இவரால் சரியாக சுடத்தெரியாத படியால்தான் இந்த வேலைக்கு விட்டார்களாக்குமென நினைத்தேன். அதை வெளிக்காட்டாதவாறு அப்பாவி சிரிப்பொன்றை உதிர்த்தேன்.
எமது நிறுவனம் எவ்வாறன வேலைத்திட்டங்களை நடைமுறைப்hடுத்துகின்றுது எதிர்காலத்திட்டங்கள் என்ன போன்ற சில கேள்விகளைக் கேட்டார்.
நானும் சுருக்கமாக பதிலளித்தேன். இந்த இக்கட்டான காலகட்டத்தில் எமது நிறுவனம் செய்யும் சேவைகளை பாரட்டினார். எங்கேயோ உதைத்தது. ஏன் என்னை பப்பாவில் ஏத்துகிறார் என்று விளங்கவில்லை இருந்தாலும் அவரது பாராட்டை செயற்கை புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டேன். வேறு என்னதான் செய்ய முடியும். ‘அப்ப அந்த ஆமிக்காரன் என்னவாம்’ என்று இயல்பாகவே கேட்டார்
அந்தப்பொறுப்பாளர். ‘ நீங்கள் கேட்ட இதே கேள்விகளைத்தான் அவனும் கேட்டான்’ பொறுப்பாளர் பெரிதாகச்rசிரித்தார். ‘ அத்துடன் என்னிடமிருந்த sportsta ஜப்பார்த்துவிட்டு கிரிக்கட் கால்பந்து போன்றவற்றை பற்றியும் கதைத்தோம் அதைப்பற்றித்தான் கனநேரம் கதைத்தோம்’ என்றேன் நானும் இயல்பாகவே. நாக்கு சற்று வரண்டத்தொடங்கியது. இப்போ தண்ணீர் கேட்டால் அவனுக்கு சந்தேகம் ஏற்ர்hடுமென்ற பயத்தால் வெளிக்காட்டாமல் எச்சிலை மாத்திரம் மெதுவாக விழுங்கினேன்.
என்னை அவன் அச்சுறித்தினானா எச்சரித்தானா என கேள்விமேல் கேள்வியால் என்னை துளைத்தெடுத்தான் அந்தப்பொறுப்பாளர். நான் உண்மையைத்தான் கூறினேன். ஆமிக்காறன் என்னை மரியாதையாகவே நடத்தினான் என்றேன். ‘ அதுதான் எங்களுக்கு வேணும் ஜயா’ என்றான் இறுதியாக. என்னையறியாமலேயே நுனிக்கதிரைக்கு வந்து நிமிர்ந்து இருந்தேன். பொறுப்பாளருக்கு முன்னாலிருந்த தண்ணிப்போத்தலை கேட்டுக்கேள்வியின்றி மடக்மடக்கென்று குடித்தேன். இந்தமுறை அவர் மெதுவாக சிரித்தார். சிரிப்பு போலியானது போல் படவில்லை.
எனது மனநிலையை அறிந்தவர் போல் ‘ ஜயா ஒண்டுக்கும் பயப்பாடாதையுங்கோ அவனுடன் நீங்கள் தொடர்பை பேணவேண்டும் நம்பிக்கையை பெறவேண்டும் அது எங்களுக்கு பிற்காலத்தில உதவும். உவன்தான் மணலாத்தில எங்கட பல போராளிகளின் வீரமரணத்திற்கு காரணம். ஊவனை விடக்கூடாது’ என்றான் சற்றே உணர்ச்சி வசப்பட்டவனாக. ‘கிழிஞ்சுது போ இனி உன்ட பாடு அவ்வளவு தான் என்றது மனசு. ‘சரி ஜயா போட்டு வாங்கோ பிறகு சந்திப்பம்’ என்று அவன் கூறி முடிக்கு முன்னறே ஆளைவிட்டால் போதும் என்று எண்ணிய படியே வாகனத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
‘எதிரிகளின் பாசறையை தேடிப்போகிறோம்’ என்ற பாடல் இடம் பொருள் ஏவல் தெரியாமல் என்னை வரவேற்றுக்கொண்டிருந்தது.
தொடரும்
மறுமொழியொன்றை இடுங்கள்