மேசையில் இருந்த கடிதங்களைத் திறந்தேன். முதலாவதாக இருந்த கடிதம் என்னை நீதிமன்றத்துக்கு வரும்படி அழைக்கும் அழைப்பாணை. வைத்தியர் ஒருவரிடம் இருந்து மருத்துவ சான்றிதழ் ஒன்ற எடுத்து அனுப்ப வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.
இரண்டாவது முறையாக நீதிமன்றம் செல்லாமல் உடல் நலக்குறைவு என பொய் சான்று அனுப்புவது மனத்தை உறுத்தியது.
சுமூகத்தில் சட்டமும் நீதிமன்றங்களும் மதிக்கப்பட வேண்டியவை. அதே நேரத்தில் நீதிமன்றம், சட்டம் என்பன சாதாரண மக்களின் உணர்வுகளையும் நியாயங்களையும் பிரதிபலிக்க வேண்டும். இதன் அடிப்படையில் தான் ‘கொமன்லோ’என்ற சட்டம் வழக்கில் உள்ளது. முதன்முறையாக வாழ்க்கையில் நீதிமன்றம் ஏறியபோது எனக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டது. அது அந்தக் கசப்பு மருந்துகள் விழுங்கிய பின்னும் நாக்கை விட்டு அகலாத விதமாக தொடர்கிறது.
மதவாச்சியில் வாழத்தொடங்கிய சில வாரங்களில் சமரசிங்க எனது அறைக்கு ஒருவரை அழைத்து வந்தார்.
‘மாத்தையாஇ உங்களிடம் இவர் பேச வேண்டுமாம்’ என அறிமுகப்படுத்தினார்.
‘எனது பெயர் முகைதீன்;’ என தமிழில் கூறியபோது சமரசிங்க அறைக்கதவை சாத்திக்கொண்டு வெளியே சென்றார்.
‘என்னால் தங்களுக்கு என்ன ஆக வேண்டும்’ என கூறிக்கொண்டு எதிரில் உள்ள நாற்காலியில் அமரும்படி சைகை காட்டினேன்.
தலையில் வெள்ளை லேஞ்சி கட்டி இருந்தார். வெள்ளைச் சட்டையும் கட்டம் போட்ட சாரமும் அணிந்திருந்தார்.
தமிழ் பேசும் முஸ்லிம் என மனதில் நினைத்துக்கொண்டேன்.
‘நான் புல்லெவியாவில் இருக்கிறேன். மாடுகளை வியாபாரம் செய்கிறேன்.
‘
‘ அதென்ன மாடுகளை வியாபாரம் . . . ?’
‘ கொழும்புக்கு மாடுகளை ஏற்றுவது. . .’
இப்பொழுது தெளிவாகப் புரிந்து கொண்டேன்.
விவசாய பிரதேசங்களில் மாடுகளை வாங்கி கொழும்பிலே வாழ்வோருக்கு இறைச்சியாக கிடைக்க கொழும்புக்கு அனுப்பி வைத்தலாகும்.
‘ நான் என்ன செய்ய வேண்டும்.?
‘
‘மாடுகளைப் பார்த்து, அவை நலமாக இருக்கின்றன என மருத்துவ சான்றிதழ் தரவேண்டும். இந்த சான்றிதழைக் காட்டித்தான் லொறிகளில் அவற்றை ஏற்ற அரசாங்க அதிபரிடம் அனுமதி பெற முடியும்.
‘
‘அதற்கென்ன தருகிறேன். ஆனால் மாடுகளை நான் பரிசோதிக்க வேண்டும்.
‘
‘ஒவ்வொரு மாடுகளும் வேறு இடங்களில் உள்ளன.
‘
‘அதுக்கென்ன’ நான் கேட்டேன்.
இதேசமயம் முகைதீன் கையில் வைத்திருந்த தோல் பையில் இருந்து பச்சைநோட்டுக்களை எடுத்து என்னிடம் நீட்டினார்.
‘ஏன்? எதற்கு?’
‘மாடுகளைப் பார்ப்பதற்கு’.
‘அது வேண்டாம் மாடுகளை பார்த்து விட்டு சான்றிதழ் தருகிறேன்.’ என கூறியபடி ஆசனத்தை விட்டு எழுந்தேன்.
என் மனோநிலையை புரிந்து கொண்ட முகைதீன் எழுந்து வெளியே சென்றார்.
சில நிமிட நேரத்தில் சமரசிங்க உள்ளே வந்து, ‘மாத்தையாஇ முன்னால் இருந்தவர்கள் எல்லோரும் காசைப் பெற்றுக் கொண்டு பத்திரம் கொடுப்பார்கள்.’
‘ நான் அப்படி இல்லை. மாடுகளைப் பார்ப்போம்.’
மதவாச்சி டவுனில் இருந்து பழைய காரொன்றை முகைதீன் கொண்டு வந்தார். நானும் சமரசிங்கவுடன் மாடுகளைத் தேடி முகைதீனுடன் புறப்பட்டோம்.
சிலமாடுகள் மதவாச்சிக்கு அருகே உள்ள கிராமங்களில் நின்றன. அவற்றைப் பார்வையிடுவதில் சிரமங்கள் இருக்கவில்லை. ஏனைய மாடுகளைத் தேடிச்சென்ற போது அவை மேயப் போய் விட்டன. சில இடங்களில் மாடுகளை முகைதீன் காட்டியபோது அவற்றின் சொந்தக்காரர்கள் இருக்கவில்லை. பகல் முழுக்க அலைந்து திரிந்து பன்னிரண்டு மாடுகள் பரிசோதிக்க வேண்டிய எனக்கு எட்டு மாடுகளை மட்டுமே பார்க்க முடிந்தது.
‘முகைதீன், நான் மாடுகளைப் பார்க்காமல் அவைகளின் உடல்நலம் குறித்த சான்றிதழை எப்படித்தர முடியும்?’
‘எல்லா மாடுகளுக்கும் பணம் கொடுத்து விட்டேன். ஐயா, போட்ட காசை எடுக்காவிட்டால், குடும்பத்திற்கு கஞ்சி ஊற்ற முடியாது’.
சமரசிங்க, ‘மாத்தையா உடல் நலக்குறைவான மாட்டை ஒருவரும் வாங்க மாட்டார்கள். அப்படி வாங்கினாலும் லொறியில் ஏற்ற மாட்டார்கள். நீங்கள் பயப்படாமல் பத்திரத்தை கொடுங்கோ’ என்று யதார்த்தமாக சொன்னான்.
சமரசிங்கவின் தர்க்கத்தில் உள்ள உண்மை புரிந்தது. ஆனாலும், அரைமனதுடன் பார்க்காத மாடுகளுக்கும் சேர்த்து சான்றிதழ் கொடுத்தேன்.
இதன் பின்னர் பலதடவை பத்திரம் கேட்டபோதும் கொடுத்தேன். முகைதீன் பத்திரத்தை பெற்றுக்கொண்டு போகும் வழியில் சமரசிங்கவிடம் பணம் கொடுத்து விட்டுப் போவார். சமரசிங்க அன்றைய தினம் கந்தோரில் எல்லோருக்கும் விசேடமான சாப்பாடு வாங்கி வருவார். . லஞ்சப்பணத்தில் வந்த சாப்பாடாக இருந்ததால் ஆரம்பத்தில் ஒருமாதிரி இருந்தது. பின்னர் அது பழகி விட்டது.
பசுக்களை மாமிசத்துக்கு கொலை செய்யக்கூடாது என சட்டம் இருந்தது. ஆண்மாடுகளுக்கு மட்டும் நான் கொடுத்த பத்திரத்துடன் பசுக்களையும் சேர்த்து லொறியில் ஏற்றிச் சென்ற போது முகைதீன் பொலிஸில் மாட்டிக் கொண்டார்.
கெப்பித்திக்கெல்லாவை நீதி மன்றத்திலே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அங்கு வந்து சாட்சியம் அளிக்கும்படி பிடி ஆணை எனக்கு வந்தது.
கெப்பித்திக்கெல்லாவை நீதிமன்றத்தின்; அருகே எனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நீதிமன்ற கட்டிடத்தை பார்த்தேன். பழைய கட்டிடம். பல வருடங்களுக்கு முன் காவி அடித்திருக்க வேண்டும். மஞ்சள் கலருக்கு இடையில் வெள்ளை சுண்ணாம்பு சில இடங்களில் ஒரு இடத்தில் செங்கல் நிறமும் தெரிய அந்த சுவர் பல வர்ணமாகத் தெரிந்தது. கட்டிடத்தின் முன்பகுதியில் அரசாங்கப் பாடசாலை போல் அரைச்சுவர் எழுந்து நின்றது. அந்த சுவரிலே காகங்களும் புறாக்களும் தமது எச்சங்களை தாராளமாக தூவி இருந்தன. இந்தக் கட்டிடத்தில் மாதம் ஒரு முறையே நீதி மன்றம் நடைபெறும். இதனால் அரசினர் அந்தக்கட்டடத்திற்குப் பராமரிப்புத் தேவையில்லை என நினைத்து விட்டார்களோ? அல்லது பராமரிப்புக்கு ஒதுக்கப்பட்ட பணம் யாருடைய சட்டையில் உறவாடுகிறதோ?
வாழ்க்கையில் முதன் முறையாக நீதி மன்றம் ஏறும் போது சுத்தமான நீதிமன்றத்தில் ஏறுவதற்கு கொடுப்பனவு இல்லை என நினைத்துக் கொண்டேன்.
‘பசு வைத்தியர் சூரியன்’ என ஒருவன் உள்ளே இருந்து கூவியதும் அவசரமாக உள்ளே சென்றேன்.
நீதிமன்ற ஊழியர் ஒருவர் என்னை கூண்டில் ஏறும்படி கூறினார். கூண்டில் ஏறியதும் நீதிபதியின் முகத்தை ஏறிட்டு பார்த்தேன். அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் உயரமான மேசைக்கு அருகில் உள்ள கதிரை ஒன்றில் அமர்ந்திருந்தார். சினிமாப்படங்களில் மட்டும் நீதிமன்றக்காட்சிகளைப்பார்த்த எனக்கு அவரது தோற்றம் சப்பென்று இருந்தது.
நான் நீதிபதியை பார்த்ததும் உடனே முகத்தை திருப்பிக் கொண்டு நீதி மன்ற ஊழியரை தன்னருகே வரும் படி சைகை செய்தார். பின்னர் ஊழியரின் காதில் ஏதோ மெதுவாகக்கூறினார். ஊழியர் என்னை அணுகி ‘அடுத்தமுறை நீதிமன்றம் வரும் போது உமது சேட்டின் கை நீளமாக இருக்க வேண்டும். இப்போது நீர் கூண்டை விட்டு இறங்கலாம். வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது’ என்றார்.
அப்போது எனது கையைப் பார்த்தேன். மோட்டார் சைக்கிளை ஓட்டுவதற்கு வசதியாக சேட்டின் கை முழங்கை வரையில் மடிக்கப்பட்டிருந்தது.
அவமானத்துடனும் ஆத்திரத்துடனும் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினேன். நீதிமன்றத்தை சுத்தமாக வைத்திருக்க முடியவில்லை. எனது சேட்டின் கை மடிக்கப்பட்டதற்காக, வழக்கை ஒத்தி வைத்து எத்தனையோ பேரின் நேரத்தையும் அரசாங்கப்பணத்தையும் வீணாக்குகிறார்கள். மீண்டும் சாட்சி சொல்ல இங்கு வருவதில்லை என மனதில் நினைத்துக் கொண்டேன்.
இப்போது இரண்டாம் முறையாக மருத்துவ சான்று இதழ் அனுப்ப வேண்டிய சங்கடம் எனக்கு.
மறுமொழியொன்றை இடுங்கள்