முள்ளுள்ள புதர்களின் மத்தியில்- அத்தியாயம் 2

ரெரன்ஸ் அந்தோனிப்பிள்ளை


வன்னி முழுவதும் கோவில் திருவிழா போல் காட்சியளித்தது. திரும்பிய இடமெல்லாம் சனத்திரள். மிருகங்கள் வாழும் காடுகளையும் சனம் விட்டு வைக்கவில்லை. கடந்த நாலைந்து நாட்களாக வந்திறங்கிய பத்தாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களையே பராமரிக்க வன்னி தடுமாறிக்கொண்டிருக்கும்போது மேலும் ஆயிரக்கணக்கானோர் கிளாலியூடாக வந்திறங்கிக் கொண்டிருந்தார்கள்.


கடற்கரையிலிருந்து கிளிநொச்சி நகருக்கான போக்குவரத்து ஒழுங்குகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் புலிகளின் நிர்வாக சேவையும் மேற்;கொண்டிருந்தனர். பலர் ட்ரக்டர்கள் மூலமும் கொண்டுவரப்பட்டனர்
மழை இலேசாகத் தூறிக்கொண்டிருந்தது. நானும் எனது சகோதரப் பணியாளரும் சனம் வந்திறங்கும் கரையை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தோம.;;;; ட்ரக்டரில் வந்துகொண்டிருக்கும் மக்களின் முகங்களைப் பார்தேன் – பிடிபட்ட தெருநாய்களை கூண்டுக்குள் அடைத்து கொண்டுசெல்லும் காட்சி மனக்கணில் சடாரென ஒருமுறை வந்துபோனது. அவர்களைப் பார்ப்பதற்கு மனதுக்கு மிக கஷ்டமாக இருந்தது.
மக்களை இந்த நிலைக்கு கொண்டுவந்த புலிகள் மீது ஏற்பட்ட ஆத்திரமும் வெறுப்பும் எனது உடலில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும.; மோட்டார்சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு ஒதுக்குப்புறம் தேடினேன.;

‘நான் எப்பவோ சொல்ல நினைத்தனான்… இப்பதான் செய்யிறாய்… எவ்வளவு நேரமாயதான் மனிசன் அடக்கிக்கொண்டிருப்பது….’ என்றார் பின்னாலிருந்த எனது சகோதர உத்தியோகஸ்தர்

‘ஏதோ ஆமி பலாலியிலிருந்து நச்சுப்புகை அடிக்கப்போறாங்களாம்,3 அல்லது 4 நாட்களிலை தாங்கள் எல்லாத்தையும் கிளியர் பண்ணிவிடுவம், அதுவரைக்கும் கொஞ்சம் தள்ளி சாவகச்சேரி பக்கம் போய் நிண்டிட்டு வாங்கோ எண்டெல்லே நாசமாய்போவாங்கள் முதலிலை சொன்னவங்கள், அவங்களின்ட பேச்சைக்கேட்டு ஒண்டையும் எடுக்காமல் எல்லாத்தையும் விட்டுடெல்லை வந்திட்டம்’

‘ நீ உதைச் சொல்லுறாய், நான் மண்மீட்பு நிதியோ மசிர் மீட்பு நிதியையோ எண்டு சுண்டுக்குளியிலை அவங்கட ஒபீசிலை நாலைஞ்சு மணித்தியாலமாய் கியூவிலை நிண்டு கட்டிப்போட்டு வீட்டை வரேக்கை… இடையில மனிசியும் பிள்ளைகளும் தூக்க முடியாதளவு சாமான்களையும உடுப்புக்களையும்; உரப்பைக்குள்ளை அடைஞ்சு தூக்கிக் கொண்டு வந்தவை…

‘என்னணை என்ன நடந்தது?’ என்று கேட்க முன்பே…’ஒருத்தரையும் நிக்க வேண்டாமாம், உடனயே வெளிக்கிடட்டாம்’ என்று இளைய மகன் சொன்னான். யார் சொன்னது?… எங்க போகட்டாம்?; என்று நான் கேட்ட கேள்வி ஒருத்தற்ற காதிலேயும் விழுந்ததாய் எனக்குத் தெரியவில்லை…

‘வட்டியும் போச்சு முதலும் போச்சு’
நகையும் போச்சுநாட்டிய சுந்தரியும் போச்சு’
‘சிரித்து வாழ்ந்த சின்னவீடும் போச்சு’ ….
என்று தங்கள் மனச்சுமைகளை அண்ணா சிலையடியில் கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்த எனது சொந்த ஊர் சினியர் சிட்டிசன்களுடன், வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நானும் இணைந்து கொண்டேன்.

அவர்கள் புலிகளின் மேலுள்ள ஆத்திரத்;தை கொட்டித் திர்த்துக்கொண்டிருந்தனர்.

‘உவங்கள் வீட்டுக் கூரைகளை மட்டுமில்லை, வாசிகசாலை கூரைகளையும் கூட விட்டு வைச்சாங்களே? அவங்களுக்குள்ள போட்டியாம், எந்த குறூப் கூட ஓடு களட்டுறதென்று’
‘யாழ்பாண நூலகம் எரிந்ததைப்பற்றி பெரிசாக கவலைப்படும் எவருமே, ஒவ்வொரு ஊருக்குள்ளையும் இருந்த வாசிகசாலையில எத்தனையாயிhம் புத்தகங்கள் மழைக்கிள்ள கிடந்து நனைஞ்சு அழிஞ்சு போனது எண்டதைப்பற்றி வாய் திறக்கினமில்லை.’

அந்தநேரம் பார்த்து சில கிறிஸ்தவ பாதிரிமார் அங்த வழியால் ஒரு வாகனத்தில் பறந்து கொண்டிருந்தார்கள்.

‘உவையளிண்ட பாடு பறவாய்யில்லை, உவையளிலையும் சிலபேர் ‘நாங்களாய் விரும்பித்தான் வன்னிக்கு வந்தனாங்கள்’ என்று அறிக்கையுமெல்லே விட்டவை. பெடியள் உவயளை நல்லாத்தான் கவனிக்கிறாங்கள். எல்லாத்திலையும் உவைக்குத்தான் முன்னுரிமை. உவையளில சிலர் அவங்களேட சேர்ந்துகொண்டு பிள்ளைகளை பிடிக்கிறதுக்கும் ஓம் எண்டு நிண்டவையெல்லே’

நேரம் போகப்போக அவர்களது உரையாடலின் சுவாரிசயமும் அதிகரித்தது, நானும் அவர்களுடன் இணைந்துகொண்டேன்.

‘அப்ப ஏன் உவங்கள் சனத்தை ஒரேயடியாக இடம்பெயரச் சொன்னவங்கள்’ என்று ஒன்றுமறியாத அப்பாவிமாதிரிக் கேட்டேன்.
உள்ளுர் உற்சாகபானத்தை மிதமாக அருந்திய ஒருவர் மிகவும் தெளிவாகவும் துணிவாகவும் கூறினார.;

‘அவங்களுக்கு நல்லாத்தெரியும் இனி ஆமியோட நிண்டு பிடிக்க ஏலாதென்று, தங்கட ஆயுதங்களையும் தளபாடங்களையும் இஞ்சால கொண்டு வாறதற்கு எங்களை கவசாமாய்யெல்லே பாவிச்சவங்கள். மனிதக் கேடயமென்பதற்கு நாங்கள் தான் மிகச்சிறந்த உதாரணம், ஏன்.. வெங்காயங்கள் என்றும் கூடச் சொல்லலாம்’ என்றார் சற்றே சத்தமாக.

கதைபோறபோக்கு தங்களையும் பிரச்சனைக்குள்ள மாட்டிவிடும் என்று நினைத்த ஒருவர் ‘உந்தக்கதையள விடுவம், எங்கட அலுவலை உந்தத் தம்பியோட கதைப்பம்’ என்று ஒரு நமட்டுச் சிரிப்புடன் என்னைப் பார்த்தார்.

‘சொல்லுங்கோ மாஸ்டர்’ என்றேன் மொட்டையாக.

‘தம்பி… நாங்கள் எல்லாரும் பென்சன் எடுக்கிறனாங்கள் என்று இப்போதைக்கு எங்களுக்கு நிவாரணம் இல்லையென்று விதானையார் சொல்லிப்போட்டார். நீ தான் தம்பி ஏதோ பார்த்து செய்யவேண்டும்’ என்றார் பெரியவர் உரிமையோடு.

நண்பர்கள், ஊரவர்கள், உறவினர்கள் உப்பிடி இக்கட்டான சூழ்நிலையில் தவிக்கும்போது,உந்தச் சட்டதிட்டங்களுக்கு தற்காலிக ஓய்வுகொடுக்கலாம் என்பதுதான் எனது நிலைப்பாடு. இது தவறு என்று தெரிந்தும் எப்படி இவர்களுக்கு உதவலாமென்று யோசித்தேன். வன்னி அனுபவம் என்னை நீண்டநேரம் யோசிக்கவிடவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆறுமுக விதானையார் தனது லிஸ்ட்டில் எட்டுப்பேரின் பெயர்களை சேர்கவேண்டுமென்று கண்சிமிட்டியபடி சொன்னது என் ஞாபகத்திற்கு வந்தது. அவரிடம் இன்னும் ஆறு லிஸ்ட் இருக்கு என்பதும் எனக்குத் தெரியும்.

‘நீங்கள் எல்லாமாய் எத்தனை பேர்’

‘எட்டு’
இவர்களது பெயர்களை விதானையாரின்ட லிஸ்ட்டில் சேர்ப்பது அவ்வளவு வில்லங்கமான காரியமாக இருக்காது என்பதும் எனக்குத் தெரியும்.

விதானைமாரின் ஒவ்வொரு லிஸ்ட்டிலும் AGA அனுப்பும் கொஞ்சப் பெயர்களும் TRO வின் கொஞ்சப் பெயர்களும் மற்றும் போராளிகள் குடும்பம், மாவீரர் குடும்பம் என்று பலரின் பெயர்கள் சேர்க்கப்படுவது ஊர் அறிந்த இரகசியம். ஆனாலும் இந்த பென்சனியர்மார்களுக்கு நிவாரணம் கொடுப்பதில் ஒரு சிக்கல்.

இவர்கள் தங்கி இருக்கும் காம்பில் இவை எல்லாம் பென்சன்காரர்கள் என்று அநேகமாக எல்லாருக்கும் தெரியும். இவைக்கு எப்படி நிவாரணம் கிடைச்சது என்று சனம் கேட்க, நான் வேலை செய்கிற நிறுவனத்தின் பெயரை இவர்கள் சொல்ல, அடுத்த நாள் காலை நான் வேலைக்குப்போக முன்னரே சனம் கந்தோர் வாசலில நிக்க, எல்லாம் பெரிய சிக்கலில போய் முடியும். எனது சந்தேகத்தை அவர்களிடமே கேட்டேன்.

‘நிவாரணம் எடுத்த சனத்திட்ட காசுக்கு வாங்கினனாங்கள் என்று சொல்லுவம் பிள்ளைகளுக்குக் கொடுத்த கொப்பி புத்தகங்களையே வித்துட்டு தண்ணி அடிக்கிற குடிமக்கள் இருக்கும் வரை சனம் நாங்கள் சொல்லுறதை நம்பும்’ என்று திடமாகச்சொன்னார் முன்னாள் கிராமசபை உறுப்பினர். அந்த அனுபவசாலியுடன் முரண்பட அப்போது நான் தயாராக இருக்கவில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: