
எல்லோரும் போனபின் நான் மட்டும் தனியாக இருந்து கோப்புகளை பார்த்துக்கொண்டு இருந்தேன்.
என்னுடன் வேலை செய்பவர்களின் பேர்சனல் கோப்புகளை அவர்கள் இருக்கும் போது பார்ப்பது நாகரீகம் இல்லை என்பது என் நினைப்பு. ஐந்து மணிக்கு மேலாகி விட்டது. கோப்புகளை அலமாரியுள்ளே வைத்து பூட்டி விட்டு நாற்காலியில் வந்தமர்ந்து எனது இரண்டாம் நாள் வேலையை வெற்றி கரமாக முடித்து விட்டேன் என்கிற ஒருவகை திருப்தியுடன் ரிஜிஸ்டரில் கையெழுத்திட்டேன்.
அப்போது வெளியே ஒரு ஜீப் வந்து நின்றது.
என்னை நோக்கி நான்கு பொலிஸ்காரர்கள் இறங்கி வந்தார்கள்.
அவர்களுள் ஒருவர் ‘நான் தான் பதவியா இன்ஸ்பெக்டர் ‘ என தம்மை அறிமுகப்படுத்தினார். நான் என்ன செய்ய வேண்டும் என்பது போல அவரைப்பார்த்தேன்.
‘பதவியாவில் ஒரு யானைக்கு போஸ்மோட்டம் செய்ய வேண்டும் ‘ என்று பொலிசார் என்னைத்தேடி வந்த முகாந்திரத்தை விளக்கினார்.
எனக்கு தலையில் இடி இறங்கியது. வாயில் எச்சில் காய்ந்தது போன்ற உணர்வு.
யானைகளை கண்டிப் பெரஹராவிலும், தெஹிவளை மிருகக்காட்சிச் சாலையிலும் பார்த்திருக்கிறேன். சாதாரணமாக பொலிசார் மீது எனக்கு எப்போதும் நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. அவருக்கு என்ன பதில் சொல்வது என தெரியவில்லை.
நான் முழிப்பதை அசட்டை செய்து ‘நீங்கள் வந்து போஸ்மோட்டம் செய்யவேண்டும். மேலும் நாங்கள் யானையை சுட்ட சந்தேகநபர் இருவரைப்பிடித்திருக்கிறோம். ‘ பொலிசுக்கே உரிய அதிகார தோரணையில் இன்ஸ்பெக்டர் சொன்னார்..
உடன் வந்த பொலிசாரில் ஒருவன் ‘இரண்டு தந்தங்களையும் மீட்டு விட்டோம்’ என்று இன்ஸ்பெக்டருக்கு ஒத்து ஊதினான்;.
வேறு வழி இpருப்பதாகத்தோன்றவில்லை. ‘சரி எப்படி போவது? ‘
‘ஜீப்பில் ஏறுங்கள். ‘
சாரதிக்கும், இன்ஸ்பெக்டருக்கும் இடையில் முன் சீட்டில் நான் ஏறி அமர்ந்ததும்; ஜீப் புறப்பட்டது.
இன்ஸ்பெக்டர், ‘டாக்டர் யாழ்ப்பாணமா? ‘என்று கேட்டார்.
‘ஆமாம். ‘
‘எப்ப மதவாச்சி வந்தது? ‘
‘நேற்றைய தினம். அது சரி எப்போது யானை சுடப்பட்டது?’ என உரையாடலை திசை திருப்பினேன்.
‘சரியாக ஒருமாதம் இருக்கும். ‘
ஒருமாதத்தின் பின் எப்படி போஸ்மோட்டம் செய்வது என என் நெஞ்சு குறுகுறுத்தாலும்; இதை எப்படி இன்ஸ்பெக்டரிடம் கேட்பது? இன்ஸ்பெக்டர் கல்லுளிமங்கனைப்போல குந்தியிருந்ததால் நான் மௌனம் காத்தேன்.
‘டொக்டர் யாழ்ப்பாணம் பிரச்சனைகள் எப்படி? ‘ என்று வேறு ரூட்டிலே பேச்சை இழுத்தார்.
என்னை ஆழம் பார்க்கிறார் என்பது எனக்கு விளங்கியது. ‘இரண்டு நாள்தான் யாழ்ப்பாணம் இருந்தேன் மற்றப்படி கண்டியில் தான் வாழ்ந்;தேன்.’
இன்ஸ்பெக்டர் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. பட்டும் படாத என்னுடைய பதிலை அவர் ரசிக்கவில்லை என்பது புரிந்தது.
மதவாச்சிக்கும், பதவியாவுக்கும் இடைப்பட்ட பிரதேசம். இது முற்றிலும் விவசாய பிரதேசம். வழி நெடுகிலும் பெரிய மரங்கள் வீதியின் இரண்டு பக்கங்களிலும்; இருந்தன. கண்ணுக்கு பசுமையான வெளிகள். இடையிடையே வைக்கோலால் வேயப்பட்ட குடிசைகள் தெரிந்தன. வேலிகள் எதுவும் கிடையாது. யாழ்ப்பாணத்து ஓட்டுவீடுகளையும் ஆளுயரமான கிடுகு வேலிகளையும் பார்த்த எனக்கு, இது புதிய காட்சியாக இருந்தது.
ஜீப் சொல்லி வைத்தது போல் சிறு கடைகள் இருந்த இடத்தில் நின்றது. ‘ ர்P குடிப்போம் ‘ என கூறி இன்ஸ்பெக்டர் முதலில்; இறங்கினார்.
கடைக்காரன் எல்லோருக்கும் மிக மரியாதை செலுத்தி தேநீர் பரிமாறினான். பொலிஸ்காரரிடம் காட்டிய மரியாதையை எனக்குக்காட்டிய போது உடலில் அட்டை ஊர்வது போல இருந்தது.
யாரும் கேட்காமலே கடைக்காரர் இரண்டு பக்கெற் பிறிஸ்டல் சிகரெட்டை எடுத்து ஒன்றை இன்ஸ்பெக்டரிடமும் மற்றயதை மற்ற பொலிஸ்காரரிடமும் கொடுத்தான்.
என்னைப்பார்த்து ‘மாத்தைய சிகரெட் குடிப்பதா? ‘ என்றான்.
‘இல்லை,’ எனக் கூறியபடி பத்து ரூபா நோட் ஒன்றை எடுத்துக் கொடுத்தேன். கடைக்காரன் அதனை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டான்.
நான் இன்ஸ்பெக்டரை பார்த்தபோது ‘கடைக்காரர் எமக்கு வேண்டியவர் ‘ என்றார்.
பொலிசாருக்கு வேண்டியவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள் என நினைத்தேன்.
மீண்டும் ஜீப் புறப்பட்டு இப்பொழுது பற்றைக்காடுகள் உள்ள பகுதியூடாக, அரைமணி நேரம் சென்றது.
‘ இனிமேல் நடக்க வேண்டும்’ என்று கூறியபடி இன்ஸ்பெக்டர் இறங்கினார்.
நேரம் மாலை ஆறுமணிக்கு மேல் இருக்கும். ஆனாலும் சூரியவெளிச்சம் நன்றாக எறித்தது.
நடக்கத்தொடங்கினோம்.
எம்முடன் கிராமத்தைச்சேர்ந்த இருவர் சேர்ந்து கொண்டார்கள்.
கால்மணி நேர நடைக்கு பின்; ஒரு குளத்தின் அருகே வந்து சேர்ந்தோம்.
குளக்கரையின் வலக்கரைப் பக்கத்தை காட்டி, ‘இதுதான் யானை’ என இன்ஸ்பெக்டர் கூறினார்.
திடுதிப்பென திரும்பிப்பார்த்த எனக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. ஆறு அடி உயரத்தில் எலும்புக் குவியல். அதைச்சுற்றி கொழுப்பு உருகி பாசி போல் படர்ந்து இருந்தது. அதிகமாக மணக்கவில்லை. தசை, குடல் போன்ற பகுதிகள் எதுவும் காணப்படவில்லை. எலும்பும் சிறிது தோலுமே மிஞ்சி இருந்தது.
‘இன்ஸ்பெக்டர் இதில் நான் எப்படி போஸ்மோட்டம் பண்ண முடியும்.? ‘என்று என் இயலாமையை வெளிப்படுத்திக் கேட்டேன்.
‘உங்கள் ரிப்போட் இல்லாமல் நாங்கள் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. ‘ என்னிடம் எப்படியும் ரிப்போட் ஒன்று பெறுவதில் இன்ஸ்பெக்டர் குறியாக இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன். எலும்புக்குவியலின் அருகிலே சென்று பார்த்தேன். தலைமண்டை ஓட்டைத் தவிர்ந்த மற்றைய எலும்புகள் இருந்தன.
‘தலையைக்காணவில்லையே’ என்றேன்?
எனக்குப்பதிலாக இன்ஸ்பெக்டர் திருதிரு என முழித்தார்.
பிரச்சனையை இன்ஸ்பெக்டர் தலையில் போட்டு விட்டதில் எனக்கு மகிழ்ச்சி.
இன்ஸ்பெக்டர் பொலிசுக்கே உரியவிதத்தில் மூன்று பொலிசாரையும் காட்டுக்குள் சென்று தேடும்படி பணித்தார். கிராமத்தவர்களான சில்வாவையும், அப்புகாமியையும் குளத்தில் இறங்கித் தேட உத்தரவிட்டார்.
பத்து நிமிட தேடலின் பின் குளத்தில் இருந்து யானையின் தலை எலும்பு கொண்டு வரப்பட்டது.
தலை எலும்பை உற்றுப்பார்த்த போது, காதுக்கு அருகில் சிறு ஓட்டை இருந்தது தெரிந்தது. சில்வாவால் தலை எலும்பு கோடரியால் பிளக்கப்பட்ட போது அதற்குள் ஓர் ஈயக்குண்டு இருந்தது.
எனக்கும் இன்ஸ்பெக்டருக்கும் அளவிடமுடியாத சந்தோஷம். யானையை கொலை செய்ததற்கான ஆதாரம் கிடைத்துவிட்டதால் என்னால் போஸ்மோட்டம் ரிப்போட் எழுத முடியும். அதேநேரத்தில் வழக்கைத் தாக்கல் செய்யலாம் என இன்ஸ்பெக்டருக்கு சந்தோஷம்.
தொடரும்
அன்று அந்த பொலிஸ் ஜீப்பில் விடுதிக்கு வந்து சேர இரவு எட்டு மணிக்கு மேலாகி விட்டது.
மறுமொழியொன்றை இடுங்கள்