வண்ணாத்திக்குளம்

முன்னுரை

எனது எழுத்துலகத்தின் அரிச்சுவடியே இந் நூலில் பதிவாகியுள்ளது. எதிர்பாராமல் திடீரென நிகழ்ந்த விபத்தினால் பேச முடியாத சிறுவனைப் போன்று நானும், எனது வாழ்வில் நடந்த சம்பவங்களை வெற்றுத்தாள்களில் கிறுக்கி வைத்திருந்தேன். பதினைந்து வருடங்களுக்கு முன்பு எழுதி வைத்தேன்.

அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்த காலத்தில் எனது கல்விசார் பட்டம் அங்கீகரிக்கப்படாதமையால் வேலையும் கிடைக்க வில்லை.
புலம் பெயர்ந்த அங்கலாய்ப்பு அவலம் ஒருபுறம், பல வருடங்களாக பழகிய பல நண்பர்களை வன்முறைக்கு இழந்து விட்ட துயரம் ஒருபுறமாக மனஅமைதியற்றவாறு காலம் ஓடிக்கொண்டிருந்தது.

அத்தகைய காலத்தில் பரணில் கிடந்தன என் எழுத்துக்கள். அதில் ஒரு அங்கம் தான் ‘நடுக்காட்டில் பிரேத பரிசோதனை’ உதயம் இதழிலும் பின்பு குமுதம், யாழ்மணத்திலும் பிரசுரமாகி, எனது வாழும் சுவடுகள் தொகுப்பிலும் இடம் பெற்றது.

இந்த நெடுங்கதையில் நிகழும் சம்பவங்கள் எண்பதிற்கும் எண்பத்தி மூன்றுக்கும் இடைப்பட்ட காலத்தில் நான் தரிசித்தவை.

இம் மூன்று வருட காலமும், இலங்கையின் வரலாற்றை எழுதுபவர்களுக்கு முக்கியமான காலமாகும்.

இந்தக்காலத்தில் தனித்தமிழ் பிரதேசமான வட பகுதியில் வளர்ந்து கண்டியில் உயர்கல்வி பெற்ற பின்னர் ஒரு எல்லைக் கிராமத்தில் சிங்களவர்கள் மத்தியில் வேலை செய்த போது, என்னைப் பாதித்த, நான் சாட்சியாகிய, நான் சம்பந்தப்பட்ட பல சம்பவங்கள் இதில் இடம் பெறுகின்றன.

இலங்கையில் எண்பத்திமூன்றில் நிகழ்ந்த யூலைக் கலவரம் தற்செயலானது அல்ல, அதே சமயம் ஒரு சிலரால் வழி நடத்தப்பட்டதும் அல்ல.

ரஷ்யாவிலும் பிரான்ஸிலும் புரட்சி தோன்றுவதற்கு முன்பு பல சம்பவங்கள் – அதற்கான அத்திவாரத்தை தோற்றுவித்தது போலவே, இலங்கையிலும் எண்பத்திமூன்று யூலைக் கலவரத்திற்கும் பல காரணிகள் விதையிட்டன. இனவிடுதலைப் போராட்டத்திற்கும் மூலகாரணங்கள் நிறைய உண்டு.

இலங்கையில் மூவின மக்களையும் பிரித்தாளும் தந்திரத்தில் அரசியல் வாதிகள் ஈடுபட்டிருந்த வேளையில் – அந்த மூவின மக்களுடன் வாழவேண்டிய – அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டிய தேவை எனக்கு இருந்தது. அந்த வாழ்வின் அனுபவங்களை பதிவு செய்து வைத்திருந்தேன்.

குடாநாட்டுக்கு வெளியே வாழத் தலைப்பட்ட போதுதான் – தமிழினம் தவிர்ந்த, ஏனைய இனமக்களும் எவ்வாறு அரசியல் வாதிகளினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. இன முரண்பாடுகளுக்கு அடிப்படையாக விளங்கியவற்றையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

காதல்-திருமணத்தில் முடிந்தால் தான் வெற்றி என்பதில்லை. காதல், இனம் – மதம் – மொழி – குலம் பார்த்து வருவதில்லை. அதனால் தான் அதற்கு கண்கள் இல்லை என்பர். தமிழ் – சிங்கள காதல் திருமணம் தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கும் என சொல்ல முடியாது. ஆனால் அத்தகைய காதல் திருமணங்கள் – இனவாத வன் செயல்கள் தலை தூக்கிய காலப்பகுதிகளில் இரண்டு தரப்பினாலும் விமரிசிக்கப்படுவதை அவதானித்துள்ளேன். அதுவும் வாழ்வுப் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டதாகவே இருக்கும்.

நோக்கங்கள் வேறாக இருந்த போதிலும் வடக்கிலும், தெற்கிலும் இளைஞர்கள் கிளர்ச்சி செய்வதற்கும் வித்திட்டவர்கள் அரசியல்வாதிகள். சாதாரண மக்களிடமிருந்தே போராளிகள் தோன்றினர். அந்த மக்களிடமிருந்து கனவுகளும் தோன்றின. அந்த கனவுகளை அருகே இருந்து ரசிப்பவன் கலைஞனாகவோ, படைப்பாளியாகவோ இருக்கும் பட்சத்தில் அவற்றை தான் சார்ந்த துறையில் பதிவு செய்து விடுவான்.அத்தகையதொரு முயற்சியே இக்கதை.

இந்த நெடுங்கதையில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள் அனைத்தும் நிஜம். அந்த நிஜம் – நான் புலம் பெயர்ந்தபின்பும் நிழலாக தொடர்ந்தவை. அந்த நிஜத்தினுள் – புகுத்தப்பட்டுள்ள காதல் – கேள்விகளை எழுப்பும். விடைகளைத்தேடும்.

அரசியல் சம்பவங்கள் இடம் பெற்றாலும் கூட இது ஒரு காதல் கதைதான். இரண்டு வௌ;வேறு இனங்களைச் சேர்ந்த ஜீவன்கள் இணையும் போது எதிர் நோக்கப்பட்ட சிக்கல்களின் முடிச்சுக்கள் அவிழ்ப்பதற்கு மார்க்கங்கள் தேடப்பட்டன. வாழ்க்கையும் ஒரு தேடல் தான்.

இதனை புத்தகமாக வெளியிடத் தூண்டியதுடன் பல ஆலோசனைகளை நல்கிய நண்பர் எஸ்.பொ அவர்களுக்கும், எனது தெளிவற்ற எழுத்துக்களை சிரமம் பாராது வாசித்து கணணியில் பதிவு செய்த மேகலா குணரட்னத்துக்கும்;, மேலும் அச்சுப்பிழைகளை திருத்திய நண்பர் டு .முருகபூபதிக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

அன்புடன்

நடேசன்


மதவாச்சி

யாழ்தேவியிலே சனநெரிசல் வவனியாவிலே குறைந்து விட்டது மதவாச்சியில் இருந்து நான் இறங்குவது வசதியாக இருந்தது. இரண்டு கைகளிலும் பெட்டிகள் இருந்தபடியால் மற்றவர்களுக்கு இடிக்காமல் மெதுவாக பிளாட்பாரத்தில் கால் வைத்து இறங்கினேன்.

முன்னும் பின்னும் பார்த்தேன். மதவாச்சி புகையிரத நிலையத்தில் ஐந்துபேர் மட்டுமே இறங்கியிருக்கிறார்;கள். சகலரின் கைகளிலும் பயணத்துணையாக சிறிய தோல்பைகள். அவர்கள் முகங்களில் அவசரமும் தெரிந்தது. அவர்களை அரசாங்க ஊழியர்களாக அடையாளம் காண்பதற்கு அதிக விவேகம் தேவைப்படவில்லை.

ஒவ்வொருத்தரின் முகத்தையும் பார்த்துக் கொண்டு நடந்தபோது, ஒருவர் முகத்தில் மட்டும் புன்னகை தவழ்ந்தது. மற்றவர்களுக்கு வீட்டில் என்ன பிரச்சனையோ, அல்லது சனி, ஞாயிறு விடுமுறை சீக்கிரமாக முடிந்துவிட்டது என்ற ஆதங்கமோ தெரியவில்லை, முகங்களிலே ஒருவித இறுக்கம் நிலைத்திருந்தது.

புன்னகை தவழவிட்டபடி நடந்து வருபவரிடம் பேசுவதற்கு முடிவு செய்து, என்னை அறிமுகம் செய்தேன்.

‘என் பெயர் சூரியன். நான் மிருக வைத்தியராக மதவாச்சிக்கு வந்துள்ளேன்.’

‘சந்தோஷமான விடயம். எனது பெயர் சுப்பையா. தொழிற் கந்தோரில் கிளார்க்காக இருக்;கிறேன். ‘

‘இதுதான் எனது முதல் நியமனம் ‘

‘அப்படியா? ‘

இருவரும் பேசியபடியே பஸ்ஸில் ஏறினோம். ‘மிஸ்டர் சுப்பையா, நான் இங்கு தங்குவதற்கு ஏதாவது இடம் இருந்தால் சொல்ல முடியுமா? ‘

‘அதுக்கென்ன, ஏன் நாங்கள் தங்கும் அரசாங்க விடுதியிலேயே நீங்களும் தங்கலாம். நான் உங்களை மாலையில் சந்திக்கிறேன். அதோ தெரியும் கட்டிடந்தான் மிருக வைத்திய நிலையம். ‘ எனச்சொல்லி தன் கந்தோருக்கு பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்தார்.

எனது கந்தோரின் வாசலிலே ‘கோமத’ என விசாரித்தவாறு வந்தவர், தம்மை ‘சமரசிங்க’ என அறிமுகப்படுத்திக் கொண்டார். நான் புதிதாக நியமனம் பெற்று வந்திருக்கும் மிருக வைத்தியர் என்பதை அவர் சரியாக ஊகித்திருக்க வேண்டும். இருவரும் கந்தோருக்குள் சென்றோம். அங்கு என்னை மெனிக்கா, ஜயவதி என்ற இரண்டு ஊழியர்கள்; வரவேற்றார்கள்.

எனக்குத்தெரிந்த அரைகுறை சிங்களத்தில் அவர்கள் நலனை விசாரித்து விட்டு எனது மேஜைக்கு சென்றேன்.

கடிதங்களையும் கோப்புகளையும் பார்த்துக் கொண்டு இருந்த பொழுது சமரசிங்க ஒரு உணவுப்பார்சலை நீட்டினார். நன்றியுடன் வாங்கிக்கொண்டேன்.

உண்டவுடன் களைப்பு வந்தபோது, கண்களை மூடிக் கொள்வது சுகமாக இருந்தது. அப்போது மனதிலே பல நினைவுகள் அலைமோதலாயின.

யாழ்ப்பாணப்பகுதியிலே பிறந்து வளர்ந்தேன். அங்கேயே படித்தேன். இதனால் பல்கலைக்கழகம் செல்லும் வரை சிங்கள மக்களுடன் பரிச்சயம் இல்லை. கல்லூரியில் படிக்கும் போது நானும் என்னுடன் படித்தவர்களும் மொழி ரீதியான தரப்படுத்தல் மூலம் பல்கலைக்கழகத்திற்கு செல்வது பாதிக்கப்பட்டதும் சிங்களவர்களை வெறுக்கத் தொடங்கினேன். எனது வெறுப்பைப் பல இடங்களில் எதிர்ப்பாகவும் காட்டியுள்ளேன்.

ஆனால் பேராதனை பல்கலைக் கழகம் சென்ற போது சில விடயங்கள் தெளிவாகின. அரசாங்கம்இ அரசியல் நிர்ப்பந்தங்கள் என்பன வேறு வேறு என்பதும் விளங்கின.

மதவாச்சி, சிங்கள விவசாயிகள் மட்டும் வாழும் ஒரு தொகுதி. அங்கு என் முதல் நியமனம் கிடைத்தபோது ‘சிங்களவர்களோடு கவனமாக வேலை செய்.’என்று என் தகப்பனார் கூறிய அறிவுரையை என் நெஞ்சிலே சுமந்தபடிதான் நான் ரயில் ஏறினேன்.

கந்தோரில் வேலை செய்பவர்களைப் பற்றி விசாரித்தேன். மெனிக்கே அநுராதபுரத்தில் இருந்து தினமும் பஸ்ஸில் வருபவள். கண்டிய முறைப்படி சேலை உடுத்துவாள்;. கரையோரச் சிங்கள பெண்கள் சேலை அணிவதிலும் பார்க்க இது எடுப்பானது.

‘ மெனிக்கே உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? ‘
என்று அவளிடம் சகஜமாகவே கேட்டேன்.

‘இல்லை’ என்று முகத்தில் செந்தூரம் படர கூறினாள்.

ஜெயவதிக்கு நாற்பது வயதிருக்கும். இரண்டு குழந்தைகளுக்குத் தான் தாய்; என்று விபரங் கூறினாள்.

சமரசிங்க மிகவும் ஜாலியான ஆள். கலகலப்பாக பேசும் இயல்பினன். சமீபத்தில் திருமணமாகியது என்றும் அறிந்தேன்.

நாலு மணியாகியதும் வெளியே வந்து பார்த்தேன். வெய்யில் இன்னமும் இறங்கவில்லை. தூரத்தில் எனது கந்தோரை நோக்கி சுப்பையா வருவதைக்கண்டேன். எனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு அவரை நோக்கி நடந்தேன்.

சுப்பையா கூறிய அரசாங்க விடுதி. அதிலே பல அறைகள் இருந்தன. விடுதியின் முன் போர்டிக்கோவில் பல செருப்புக்கள் கிடந்தன. என்னை உள்ளே அழைத்து சென்ற சுப்பையா ஒரு அறையைக் காட்டி
‘இதுதான் உங்களது’ என்று கூறினார்.

அவர் காட்டிய அறையில் பெட்டிகளை வைத்துவிட்டு வெளியே வந்த போது மூவர் எதிரில் வருவது தெரிந்தது. பரஸ்பரம் அறிமுகம் நடக்கலாயிற்று. கல்லூரி மாணவர் போல் காட்சியளித்தவர் ‘என் பெயர் ருக்மன்;, இலங்கை போக்குவரத்து சபையில் வேலை செய்கிறேன் ‘ என்றார். குட்டையாக காட்சியளித்தவர் ‘நான் காமினிஇ நீர்ப்பாசன திணைக்களம் ‘ என்றார். நடுத்தர வயதில் உள்ளவர் தனது பெயர் குணதாச, தான் கட்டிட திணைக்களத்தில் வேலை செய்வதாக தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

நாங்கள் பொதுவான விஷயங்களைப் பேசிக்கொண்டு இருக்கும் போது, ருக்மன்; ‘இன்று எனது சமைக்கும் நாள் ‘ என கூறிவிட்டு அடுக்களைப்பக்கம் சென்றான். கல்லூரி மாணவன் மாதிரி தோற்றம் இருந்தாலும் குரலில் ஒருவகை அழுத்தம் பதிந்திருந்தது.

ருக்மன்; எனக்கு மட்டும் சாப்பாடு பரிமாறிவிட்டு மற்றையோரை பார்த்து என்னை ‘இவர் எங்களது விருந்தாளி’ என்று நேச மனப்பான்மையுடன்; கூறினான்.

ருக்மனின் சாப்பாடு உண்மையில் மிகவும் நன்றாக இருந்தது. ருக்மனுக்கு நன்றி கூறினேன்.

அவசரமாக ஒருவன் வந்து ‘ஐயா நான் நெடுந்தீவு’ என்றான். முகத்தில் இருந்த மீசையும், நெற்றித் திறுநீறும் தமிழர் என பறைசாற்றியது. அவனுடைய பெயர் ராகவன். ஆக மொத்தம் என்னைத்தவிர சுப்பையாவும் ராகவனும் தான் அந்த விடுதியிலே தங்கும் தமிழர்கள் என்பதை அறிந்து கொண்டேன்;.


தொடரும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: