விக்டோரியா, மேற்குக் கனடாவில் சில நாட்கள்

நடேசன்

கனடாவில் வதியும் எனது சகோதரங்களைப் பார்ப்பதற்காக இதுவரையில் மூன்று தடவைகள் குளிர் காலத்தில் சென்று திரும்பியிருக்கின்றேன். விமானம் முதலில் தரிக்கும் நகரமான வன்கூவரில் இறங்காது, மீண்டும் விமானத்திலேயே ரொண்ரோவிற்குச் சென்று தங்கிவிட்டு மீண்டும் அதேவழியால் ஆஸ்திரேலியா திரும்பிவிடுவேன்.

கனடா என்ற பரந்த தேசத்தின் அழகான பகுதி மேற்கில் இருப்பதை அறிவேன். விமானத்திலிருந்து கீழே பார்க்கும்போது நீலக்கடலில் திட்டி திட்டியாக பல தீவுகளை தன்னகத்தே கொண்ட பிரதேசங்களை தரிசிக்க முடியும். இறங்கி பார்த்துவிட்டுபோவோமா என்ற ஆவலை அடக்கிக் கொண்டு மரங்களில் இலைகளற்ற பொட்டல் வெளிபோல் தெரியும் ரொரண்ரோவில் இறங்குவேன் .

நான்காவது தடவை வன்கூவரில் மிருகவைத்தியர்களின் மகாநாடு நடப்பதால் அங்கு செல்வதற்கு ரொரண்ரோ வழியாக செல்ல முயன்றபோது, அங்கே இடியும் மின்னலுமாக இயற்கை தாண்டவமாடியது. அதனால் பல மணிநேரம் விமானம் நிலையத்தில் தாமதமாகியது. காத்திருந்து இரவாகிவிட்டது. அந்த இரவுப்பொழுதை ரொரண்ரோவில் கழித்துவிட்டுப் போவோம் எனத் தீர்மானித்து விமான நிலையத்தை விட்டு வெளியேவந்தால் அதிர்ச்சி காத்திருந்தது. எனது பொதிகள் விமானத்தில் ஏற்கனவே வன்கூவர் செல்வதற்காக ஏற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டது .

இரவு பத்து மணியாகிவிட்டது .

விமானநிலையத்தருகே ஒரு ஹோட்டலில் தங்கிவிட்டு அடுத்த நாள் சகோதரத்தின் வீடு சென்றேன். அதன் பின்பு இரண்டு நாட்களில் எனது பொதியைக் கொண்டு வந்து அங்கு தந்தார்கள். மகாநாடும் வன்கூவரும் ஊமையின் கனவாகியது.


நான்காவது முறையாக புறப்பட்டபோது, வான்கூவரில் எனது நண்பன் ஒருவன் இருப்பதால் அவனிடம் சென்றேன். மூன்று நாள் மட்டும் தங்கியிருந்து ஒரு நாள் விக்ரோரியா நகரத்தைப் பார்ப்பதென்றும் அடுத்த நாட்களில் விசிலர் என்ற மலை சார்ந்த நகரமொன்றையும் பார்ப்பதென முடிவு செய்தேன் .

முதல்நாள் காலையில் எழுந்ததும் எனது நண்பனின் நண்பனுடன் பேசி, அன்றைய மதியத்தில் ஒரு காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு மலைப்பாதைகளின் ஊடாக விசிலர் சென்றடைவதற்கு இரவாகிவிட்டது.

எதிரே இருளடைந்து கருமையாகத் தெரிந்த மலைகளை திருதராட்டினன் குருஷேத்திரத்தை பார்த்ததுபோல் பார்த்தேன் . அதன் பின்பு நிலத்திலுள்ள பனிக் குவியல்களைத் தாண்டி அங்குள்ள ரிம் ஹோட்டலில் வெற்றிகரமாக காப்பி குடித்து விட்டு விசிலரைப் பார்த்த களைப்பிலும் களிப்பிலும் நண்பனது வீடு திரும்பினோம்.

அடுத்த நாள் வன்கூவரில் இருந்து கப்பலேறி, தலைநகர் விக்ரோரியா நகர் சென்ற போதும் அங்கும் இரவு எம்மை நிழலாகத் தொடர்ந்தது. மின்னொளியில் அங்குள்ள பாராளுமன்ற கட்டிடத்தை மட்டும் பார்த்துவிட்டு மீண்டும் கப்பலில் திரும்பினோம் . சிறிய பெரிய தீவுகளாக பசுபிக்கின் கரை எங்கும் இருந்ததைக் காணமுடிந்தது.

நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்து ஊர் பார்க்க முடியாது என்பது எனக்கு ஏற்கனவே தெரிந்த உண்மை. காலை உணவை முடித்துப் புறப்படுவதற்கே அரைநாள் முடிந்துவிடும். விருந்தோம்பல் எமது கலாசாரக் கூறானதால் அதை ஒரு சடங்காக்கி விடுவார்கள். முக்கியமாக கனடா சென்றால் விருந்தோம்பலை நினைத்து எனது இதயம் தாலிகட்டும் நேரத்து மேளமாக அடித்துக்கொள்ளும்.

உணவருந்தாதபோது அதனையும் அந்த உறவுகள் குறையாக நினைப்பதையும் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன் . சிலரது வீடுகளிலிருந்து எழுந்து வெளியாகிடவே அரை நாளாகிவிடும். நம்மவர் மத்தியில் பயணிப்பது என்பது தலயாத்திரைக்கானது எனவும் கோயிலை நோக்கிய பயணமாகவே காலம் காலமாக அர்த்தப்படுத்தப்பட்டிருக்கிறது.

பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்த ஊரில் கோயில் கொடியேற்றம் வந்துவிட்டால் அதற்காக விடுமுறை எடுத்துப்போய்வருவார்கள். அதைக்கூட “ ஒருக்கா கோயிலுக்கு தலை கறுப்பைக் காட்டவேண்டும் “ என்றுதான் சொல்லியபடி அதனையும் ஒரு வேலையாக நினைத்துச் செய்பவர்கள் நம்மவர்கள்.

முன்னைய இரண்டு அனுபவங்களினாலும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக இம்முறை மேற்கு கனடாவைப் பார்க்கச் சென்றேன் . எனது மனைவி செயற்கை இடுப்பைப் பெற்றதன் பின்னர் தொடங்கிய நீண்ட பயணம். நோய்களுக்கு நாம் சரணாகதியுடையத் தேவையில்லை என்ற நினைப்பில் புறப்பட்ட பயணம்.

விக்டோரியா என்ற நகரத்தை நான் கேள்விப்பட்டது அங்கு காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி நடந்தபோதுதான். பிரிட்டிஷ் கொலம்பியா என்ற கனடிய மாகாணத்தில் மேற்கு கனடாவில் உள்ள வன்கூவர்த்தீவின் தென்கரையில் உள்ள அழகிய சிறிய நகரமே விக்டோரியா . சிறிய நகரமான போதிலும் நெருக்கமாக மக்களையும் மின்னணுத்தொழில் துறை சார்ந்த உற்பத்திகளையும் கொண்ட நகரம்.

அங்கு மூன்று நாட்கள் நிற்க முடிந்தது . கால் நடையாக பல இடங்களைப் பார்க்க முடிந்தாலும், என்னை மிகவும் கவர்ந்த இடம் அங்குள்ள தனியார் ஒருவரால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் மலர்வனம் ஆகும். அதுதான் The Butchart Gardens. மிகவும் அழகான இடம். மேலும் நாங்கள் அங்கே சென்ற நேரம் ஜூலை மாதமானதால் சூரிய ஒளியில் சிலிர்த்தபடியே பூக்கள் மலர்ந்திருந்தன. உலகத்தின் சகலவிதமான மலர்களும் ஒரு இடத்தில் பூத்து சிரித்தன.

இந்த மலர்வனம் அமைந்த இடம் ஆரம்பத்தில் சிமெந்து தயாரிப்பதற்காக சுண்ணாம்புக்கற்கள் தோண்டப்பட்ட இடம் என்பதை அறிந்தபோது ஆச்சரியமளித்தது . பள்ளமான இடங்களுக்கேற்ப நிலத்தை செம்மைப்படுத்தி உலகத்தின் அழகிய மலர்வனத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு நாள் முழுவதும் அங்கு உலாவிப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

சீன மக்கள் தங்களுக்காக உருவாக்கிய சைனா டவுன் பெரிதாக இங்குள்ளது. அவ்விடத்தை அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோவிற்கு அடுத்தது என வர்ணிக்கிறார்கள் .

1867 இல் கனடாவும் ஒரு நாடாக அமைந்தாலும், நான்கு வருடங்களின் பின்பு, 1871 இல் கனேடிய சமஷ்டியில் கொலம்பியா சேர்ந்ததற்கான முக்கிய காரணம் கிழக்கையும் மேற்கையும் இணைத்து இரயில்வே பாதை போடப்படும் என்ற வாக்குறுதிதான்.

இப்படிக் கேட்டதற்கான காரணம் அமெரிக்கர்களுக்குப் பயந்தே என்பதும் ஒரு செய்தி. ஏற்கனவே 1812 இல் அமெரிக்கர்கள் ரொரண்டோவை எரித்து விட்டுச் சென்றார்கள். அதற்குப் பதிலாக வெள்ளை மாளிகையை பிரித்தானியர்கள் எரித்தார்கள். பிரித்தானியர்களின் பாதுகாப்பு பிரிட்டிஸ் கொலம்பியாவிற்கு இல்லாது போய்விட்டது .

இதைவிட 1858 இல் தங்கம் தேடுவதற்காக கலிபோஃர்ணியா வந்தவர்கள் , மேற்கு கனடாவில்வந்து மதுபானம் விற்பதைத் தடுப்பதற்கே 1873 இல் அங்கு பொலிஸ் துறை (The North West Mounted Police) உருவாகியது .

கனடாவின் இரு பகுதிகளையும் இரும்புச்சங்கிலியால் பிணைத்து அமெரிக்கர்களிடமிருந்து பாதுகாக்கும் நோக்கமாக இந்த ரயில் பாதை உருவானது. ஆனால், ரொக்கி மலையூடாக பாதை போடுவதற்கான ஆள்பலமில்லாதபடியால், மேற்கு கனடாவில் ரயில் பாதை போடுவதற்காகச் சீனர்களை கூலிகளாக அழைத்தார்கள்.

குறைந்த வேதனத்தில் (ஒரு நாள் கூலி 7 சதம் ) ரொக்கி மலைப்பகுதியைக் குடைந்து பாதை அமைத்தார்கள். பெரும்பாலான வேலைகள் மனித உடலுழைப்பால் செய்யப்பட்டன. குதிரைவண்டிகள் மற்றும் நீராவி இயந்திரங்கள் மட்டுமே இந்த கடின வேலைக்குப் பாவிக்கப்பட்டன . ஒப்பந்த வேலைக்கு வந்தவர்கள் பலர் இறந்தனர். மிகுதியானவர்களில் சிலர் சீனா திரும்பினாலும் பலர் கனடாவிலேயே தங்கிவிட்டனர் . தற்பொழுது அவர்களின் சந்ததியினர்தான் பிரிட்டிஷ் கொலம்பியாவில் முக்கிய மக்கள் தொகையினர்.


பிரிட்டிஷ் கொலம்பியாவின் சட்டசபை மிகவும் அழகான கட்டிடம். கடல் அதற்கு எதிரில் ஓசை எழுப்புகிறது. அருகே கனடா ரயில்வேயால் கட்டப்பட்ட எம்பரஸ் ஹோட்டல் உள்ளது. இந்த இரண்டு கட்டிடங்களும் அக்காலத்தின் ஐரோப்பியக் கட்டிடக் கலை வடிவத்தைக் கொண்டவை. இரண்டு நாட்கள் இந்த இரு கட்டிடங்களின் உள்ளே இலவசமாகச் சென்று பார்க்க முடிந்தது . கெமராவால் படம்பிடிப்பதற்கே உருவாக்கிய நகரமாக விக்டோரியா எனக்குத் தோற்றமளித்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: