

நடேசன்
அந்தி மயங்கிய நேரத்தில் இரண்டு, மங்கிய மஞ்சள் நிறக் கண்கள் இமைக்காது என்னை ஊடுருவியவாறு இருந்தது. இதுவரையில், இவ்வளவு அருகில் காரியல் முதலையை (Gharial Crocodil) அருகில் சென்று பார்த்ததில்லை. இதுவே சந்தனு மகாராஜாவின் மனைவியான கங்காதேவி பயணித்த வாகனமாக சொல்லப்படுகிறது.
மரக்கட்டைபோல் தூரத்தில் தெரிந்தபோதும் அருகே நெருங்கிப்பார்த்தபோதுதான், பிரவுண் நிற வட்டமான கண்கள் நீளமான பலம்வாய்ந்த தாடை பெரிய மூக்கு பகுதி செதில்கொண்ட முதுகாக நாலடி நீளத்தில் அசையாது ஆற்றங்கரையில் கிடந்தது. அதனது பார்வை தொடர்ந்து என்னை குத்துவதுபோல் இருந்தது.
இந்த உலகத்தில் உனது முப்பாட்டன் பிறக்க முன்பே நான் பிறந்தேன். பல மில்லியன் வருடங்கள் முன்பு இந்த உலகத்தையே ஆண்ட டைனோசரின் உறவினன் நான் தெரியுமா?
இப்படியான அலட்சியமான எண்ணம் அதனது மனதில் இருப்பது தவிர்க்கமுடியாது.
ரப்ரி நதி இமயமலையின் சாரலில் இருந்து வரும் சிறிய ஆறு . நாங்கள் தற்போது நிற்கும் காட்டு விடுதிகளுக்கும் சித்துவான் தேசிய வனத்திற்கும் இடையே ஓடுகிறது.
நாங்கள் ஆறு மணித்தியாலங்கள் வீதி மார்க்கப் பிரயாணத்தில் புக்கராவிலிருந்து சித்துவான் தேசியவனம் பார்க்கச் சென்றோம் . இந்தத் தேசிய வனத்தில் வங்காளப்புலிகளும் ஒற்றை கொம்புள்ள காண்டாமிருகம் வாழ்கிறது .
தங்கும் விடுதிக்கு செல்ல மாலை ஐந்து மணியாகிவிட்டது. அறையில் பெட்டிகளை வைத்து விட்டு அருகே இருந்த ஆற்றை நோக்கிச் சென்றோம். அப்பொழுது ஆற்றின் கரையில் இருவர் முழுமரத்தில் கோதி எடுத்த படகோடு நின்றார்கள் . மிகவும் புராதன தொழில்நுட்பம் – எனக்கு இராமாயணத்தில் படகோட்டிய குகனின் ஞாபகம் வந்தது . பேசமொழி தெரியாது. சமிக்ஞைகளில் பேசிய எங்களை, எங்களது பிரயாண வழிகாட்டி ஆற்றில் படகில் போக ஒழுங்கு படுத்தி, தானும் ஏறிக்கொண்டார்
அமைதியான நதியில் மெதுவாக மேலும் சென்றபோது கரையில் முதலைகள் பல நீளங்களில் படுத்துக் கிடந்தன. உள்ளே ஏற்பட்ட பயத்தை வெளிக்காட்டாது, அருகே செலுத்தச் சொன்னேன் . காரியல் முதலை (Gharial Crocodil)
இந்திய உபகண்டத்திற்கு பிரத்தியேகமானது . பாகிஸ்தான் , நேபாளம் மற்றும் இந்தியாவின் ஆறுகளில் முக்கியமா கங்கை – சிந்து நதிகளில் வாழ்கின்றன. இவை சேற்றில் வாழும்( mugger crocodile) முதலையுடன் சேர்ந்து வாழ்கின்றன .இரண்டும் உருவத்தில் மிகுந்த வேறுபாடுள்ளவை.


முதலைகளைக் கடந்து சென்றபோது கொக்குகள், நாரைகள் ,மீன்கொத்திகள் என ஏராளமான பறவைகளை ஆற்றில் காணக்கூடியதாக இருந்தபோதும், என்னைக் கவர்ந்தவை Ruddy Shelducks எனப்படும் நீர்ப்பறவைகள். செம்மண்ணிறத்தில் வாத்துபோல தெரிந்தாலும் அவைகள் வாத்துக் குடும்பங்களல்ல .
இந்தப் பறவைகள் உள்ளூர் வெளியூர் என பயணித்தபோதும் ஆண் – பெண் சோடியாக தங்களது காலம் முழுவதும் ஒன்றாகச் சீவிக்கும். ஒன்று இறந்தால் மற்றது பட்டினி கிடந்து உயிர் விடும் . நேபாளத்தில் காதல் பறவைகள் எனச் சொல்லப்படும் இவை ஐரோப்பா மற்றும் சீனா, மங்கோலியா போன்ற நாடுகளில் இருந்து 22 000 அடி உயரத்தால் பறந்து இமயமலையைத் தாண்டி குளிர்காலத்தில் இங்கு வருபவை . இவைகள் எக்காலத்திலும் நேபாளிகளால் கொல்லப்படுவதில்லை . அந்த மாலை நேரத்தில் இந்தப்பறவைகளின் சத்தமும் இனிமையான சங்கீதமாக இருந்தது.
அடுத்தநாள் காலை ஒன்பது மணிக்கு சித்துவான் வனச் சவாரிக்கு யானையில் செல்வதற்கு மறுத்து, ஜீப்பில் சென்றோம். காடு முழுவதும் முகில் மூடியிருந்ததால் எதுவும் தெரியவில்லை.
கிட்டத்தட்ட 1000 சதுர கிலோமீட்டர் கொண்ட இந்த வனம் இந்தியாவின் வால்மீகி தேசிய வனத்தோடு சேர்ந்து கொள்கிறது .1984 இல் ஆரம்பிக்கப்பட்ட இதன் பாதுகாப்பு நேபாள நாட்டின் இராணுவத்திடமுள்ளது.
முதல் இருமணி நேரமும் அதிகதூரம் பார்க்க முடியவில்லை. வாகனத்திற்கு அருகில் வருபவை புள்ளிமான்கள் மட்டுமே அத்துடன் மயில்கள் பயமின்றித் திரிந்தன .


புலிகளைத் தேடிய பயணத்தில் இறுதியாக ஒரு மரத்தில் கீறப்பட்டிருந்த அடையாளத்துடன் இங்கு புலி வந்த மணமிருப்பதாக எங்கள் வழிகாட்டி கூறினான் . வரும் வழியில் ஆற்றுக்கு ஒரு பக்கத்தில் புலி தண்ணீர் அருந்த வரும் என்று காத்திருந்தோம் . பிரயோசனமில்லை . ஒற்றைக்கொம்பு ரைனேசர் படுத்திருந்தது. எழும்ப மறுத்தது . வாகனத்தை அருகில் செலுத்தவோ நாங்கள் இறங்கவோ முடியாது .
வங்கப்புலிகளை காணாதபோதும் அழகான அடர்த்தியான மழைக்காடு . மறக்க முடியாத நான்கு மணிநேரப் பயணமாக அமைந்தது.
அன்று மாலையில் மீண்டும் ஆற்றில் பயணிக்க முடிந்தது .அரைமணி நேரப் படகுப் பயணத்தில் நாராயணி ரிப்ரி ஆறுகள் அந்தி மயங்கும் நேரத்தில் ஒன்று கூடும் இடத்தைப் பார்க்க முடிந்தது .
—0–
மறுமொழியொன்றை இடுங்கள்