“ஏமாற்றத்துடன் விடைபெற்றிருக்கும் செங்கை ஆழியான் “

தகவலை பதிவுசெய்கிறது யாழ்ப்பாணம் ஜீவநதி
மறைந்தவரிடத்தில் மறைந்தவர் தேடும் ஈழத்து நாவல்க ள்
தாயகம் கடந்தும் வாழும் படைப்பாளி செங்கை ஆழியான்

முருகபூபதி
” தொகுப்புகள் பெறுமதிவாய்ந்தவை என்பதை யாவரும் ஒப்புக்கொள்கிறார்கள். சற்றுநேரம் சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வொரு தொகுப்பிற்குப் பலமணிநேரத்தை செலவிடவில்லை. வருடக்கணக்கில் செலவிட்டம். உதாரணமாக பழைய பத்திரிகைகள், சஞ்சிகைகளைத் தேடிப்பெற்று அதனைப்பிரதி எடுத்து அவற்றில் சிறந்ததை தெரிவுசெய்து பின்னர், பதிப்பித்தல், பதிப்புச்செலவு, அதனை விற்பனை செய்தல், களஞ்சியப்படுத்தல் அப்படிப்பல இடர்களைக் கூறலாம்.
குடும்பத்தில் பிள்ளைகள், ஏன் நான் கூடக்கூறியுள்ளேன். இதற்கு செலவிடும் நேரத்தில் பல நாவல்கள் எழுதியிருக்கலாம். செலவிடும் பணத்தை உங்கள் பல நாவல்களை மீளவும் பதிப்பிக்கலாமென கூறியுள்ளோம்.

அவர் கூறும் வார்த்தை: ” இதை யாரும் செய்யவில்லை. ஈழத்தமிழரின் இலக்கிய வளர்ச்சியை ஆவணப்படுத்தினால்தான் ஏனைய நாட்டவரும் எமது வருங்காலச்சந்ததியும் அறியும். அதை என்னைத்தவிர எவரும் செய்யமாட்டார்கள். என்னை என் வழியில் விடுங்கள்.” என்பார். நாங்களும் சமாதானமடைந்தோம்.
எஸ்.பொ. (எஸ்.பொன்னுத்துரை) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை எழுத்தாளர்களின் 40 சிறந்த நாவல்களை தேர்ந்தெடுத்து – சிலரிடமிருந்து இத்துப்போன நாவல்களைப்பெற்று பிரதி எடுத்து, அவற்றைப்பெற பலரது வீடுகளுக்கு நேரடியாகச்சென்று பெற்றுள்ளார். நானும் உடன் சென்றிருக்கிறேன். இதற்கு செலவழித்த காலம் 2 வருடங்கள்.
இதில் எந்தவித மிகைப்படுத்தலும் கிடையாது. முற்றிலும் உண்மை. நானும் எனது கணவரும் இந்தியா சென்று எஸ்.பொ.விடம் கொடுத்தோம். நான் அதற்கு சாட்சி. மாதம் ஒரு நாவலாக வெளிவரும் என வாக்களித்தவர். எதையும் நடைமுறையில் செய்யவில்லை. கடிதம் பல எழுதியும் பதில் இல்லை. முடிவில் அவரும் இறையடி சேர்ந்துவிட்டார். நாவல்களுக்கு என்ன நடந்தது என்பது எமக்குத்தெரியாது. நாவலைத்தந்தவர்கள் பலர் இதுபற்றி என் கணவரிடம் கேட்டார்கள். இவரால் பதில் கூறமுடியவில்லை.
தான் பெருந்தவறு செய்துவிட்டேன். நாவலைத்தந்தவர்களது ஏமாற்றம் மிகவும் வேதனையாகவுள்ளது என அடிக்கடி கூறினார். இது அவரது உழைப்பிற்கு கிடைத்த தோல்வி.”
— இது கடந்த 28-02-2016 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தமது இல்லத்தில் கலாநிதி குணராசா செங்கைஆழியான் மறைந்தபின்னர் அவரின் அன்புத்துணைவியார் திருமதி கமலாம்பிகை குணராசா செங்கைஆழியான் அளித்திருக்கும் நேர்காணலில் ஒரு பகுதி.
இதனை அவருடைய வாக்குமூலம் எனவும் ஏற்கலாம்.
யாழ்ப்பாணத்திலிருந்து கலாமணி பரணீதரன் ஆசிரியராக இருந்து வெளியிடும் ஜீவநதி வைகாசி 2016 செங்கை ஆழியான் சிறப்பிதழில் இந்த நேர்காணல் வெளியாகியிருக்கிறது. செங்கைஆழியான் மறைந்து, மூன்று மாதங்களின் பின்னர் இந்த சிறப்பிதழ் வெளிவந்திருக்கிறது.

செங்கைஆழியானுக்காக ஜீவநதி சிறப்பிதழ் வெளியிடுவதற்கு தீர்மானித்து, அவரை கடந்த பெப்ரவரி மாதம் சந்திக்கிறார் பரணீதரன். சந்தித்து இரண்டு நாள் கழித்து செங்கைஆழியான் நிரந்தரமாக விடைபெறுகிறார்.
அதன்பின்னர், அவர் மறைந்து சரியாக ஒருமாதம் கடந்த நிலையில் அன்னாரின் குடும்பத்தினர் செங்கைஆழியான் நினைவலைகள் என்ற நூலை அந்தியேட்டிக்கிரியையடுத்து வெளியிடுகின்றனர்.
அவருடைய நூல்களின் முகப்புகளுக்கு முன்னால் அவர் அமர்ந்திருப்பதுபோன்று வடிவமைக்கப்பட்ட அட்டைப்படம் . ஆனால், அவரது படைப்புகள் பற்றிய திறனாய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது, வாழ்க்கைக் குறிப்புகளுடனும் சில முக்கியமான ஒளிப்படங்களுடனும், குடும்ப உறுப்பினர்களின் அனுதாப வார்த்தைக்குறிப்புகளுடனும் வம்சபெருவிட்சத்துடனும் (Family Tree) பஞ்சபுராணம், உட்பட அவரை நன்கு தெரிந்தவர்களின் நினைவுக்குறிப்புகளுடனும் வெளியாகியிருந்தது. சுருக்கமாக ஒரு கல்வெட்டுப்பாங்கில் வெளிவந்துள்ளது.
செங்கை ஆழியான் மகள் ரேணுகா என்னிடமிருந்தும் ஒரு கட்டுரை கேட்டு , அனுப்பியிருந்தேன். அதன் முழுவடிவமும் நினைவலைகள் நூலின் பக்கநெருக்கடியினால் பதிவு செய்யப்படவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
எனினும் செங்கைஆழியான் மறைவுக்குப் பின்னர் ஜீவநதி ஆசிரியர் பரணீதரன், ஆக்கபூர்வமான ஒரு சிறப்பிதழை செங்கைஆழியான் படைப்புகள் பற்றிய விரிவான திறனாய்வுகளுடன் வெளியிட்டுள்ளார்.
இதற்காக செங்கைஆழியான் குடும்பத்தினர் மட்டுமல்ல முழுத்தமிழ் இலக்கிய உலகும் பரணீதரனுக்கு பாராட்டுத் தெரிவிக்கவேண்டும்.
இந்த சிறப்பிதழ் பற்றிய மதிப்பீட்டை பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதலாம். செங்கைஆழியான் பற்றிய முழுமையான பார்வையை வெளிக்கொணர்ந்துள்ளது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்திருக்கும் ஜீவநதி.
இதில் திருமதி கமலாம்பிகை செங்கைஆழியானின் ஆதங்கத்தைத்தான் இந்தப்பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
அதனை ஒரு நேர்காணல் கருத்தாக ஏற்காமல் சத்திய வாக்குமூலமாகவே ஏற்கவேண்டியுள்ளது.

உழைப்பு பெறுமதியானது. அதன் பலன் பலருக்கும் பயன்படல் வேண்டும் என்பதற்காகவே செங்கைஆழியான் இரண்டுவருடகாலமாக ஈழத்தில் வெளிவந்த 40 சிறந்த நாவல்களைத் தேடி எடுத்துள்ளார். சிலவற்றை மீண்டும் தட்டச்சிலோ கணினியிலோ பதிவுசெய்துள்ளார். இந்த உழைப்பிற்கு சென்னையிலிருந்து மித்ர பதிப்பகம் நடத்திய எஸ்.பொ. அவர்கள்தான் ஆலோனையும் வழங்கியிருக்கிறார்.
செங்கைஆழியானின் சிறப்பியல்பு அர்ப்பணிப்பான உழைப்பு. அந்த அர்ப்பணிப்பு இறுதியில் வீணாகிவிட்டதே என்ற ஆழ்ந்த கவலையுடன்தான் அவர் கண்களை நிரந்தரமாக மூடியுள்ளார்.
பிரதிகளை தேடித்தொகுத்தவரும் இல்லை. வெளியிடுவதாக வாக்குறுதி அளித்தவரும் இல்லை. ஆனால், அந்தப்பிரதிகள் எங்கே என்பதைத்தான் திருமதி கமலாம்பிகை செங்கைஆழியானின் வாக்குமூலம் கேட்கிறது.
மறைந்த எஸ்.பொன்னுத்துரை நினைவாக சர்வதேச ரீதியில் சிறுகதைப்போட்டி, குறுநாவல்போட்டி நடத்துவதற்கு முன்வந்துள்ள அவருடைய நெருங்கிய அன்பர்களிடத்தில் இந்தப்பதிவின் ஊடாக அந்த பெறுமதியான நேர்காணல் வாக்குமூலத்தை சமர்ப்பிக்கின்றேன்.
இவர்களாவது சென்னையில் அந்தப்பிரதிகளைத்தேடி எடுப்பார்கள் என நம்புவோமாக.
நினைவலைகள் நூலில் முழுமையாக இடம்பெறாத எனது கட்டுரையை இனிப்பார்க்கலாம்.
தாயகம் கடந்தும் வாழும் படைப்பாளி செங்கைஆழியான்
மரணத்தின் பின்னரும் பலமுள்ளவராக எமது நினைவுகளில் ஒருவர் வலம்வருவாராயின் அவரது மரணத்தை நிச்சயம் கொண்டாடமுடியும்.
மகாகவி பாரதியிடமிருந்தே ஆளுமைகளின் மரணம் குறித்த கொண்டாட்டம் பேசுபொருளாகிவிட்டது. எட்டயபுரத்தில் பிறந்த பாரதி சென்னையில் மறைந்தவேளையில் அவருடைய இறுதி ஊர்வலத்தில் விரல் விட்டு எண்ணத்தக்க அவருடைய நண்பர்கள்தான் பின்தொடர்ந்தனர்.
பாரதியின் வலிமையை அதன்பின்னரே உலகம் கண்டு வியந்தது. உலகமொழிகளுக்கும் பாரதி சென்றார். நண்பர் செங்கைஆழியான் வாழும் காலத்திலிருந்தே வலிமை பொருந்தியவராக எழுத்தூழியத்தில் தனது பன்முக ஆளுமைகளை பதிந்துவிட்டு, அந்திம காலத்தில் மௌனமாக ஓய்வெடுத்தவர்.
மௌனமே ஒரு மொழியாக இறுதிக்காலத்தை கடந்தவர். குறிப்பிட்ட இறுதிக்காலத்தில் அவர் மௌனத்தை ஊடறுத்துக்கொண்டு அவர் பற்றிய பதிவுகளை எழுதியிருக்கின்றேன் என்ற மனநிறைவுடன் அவருடைய மறைவின் பின்னரும் எழுதினேன்.
அந்த வரிசையில் இந்த ஆக்கம் மற்றும் ஒரு பதிவு.
செங்கைஆழியான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் அவருடைய எழுத்துகள் தமிழ்நாடு உட்பட ஈழத்தமிழர்கள் புகலிடம் பெற்ற நாடுகளிலெல்லாம் வெளியாகிக்கொண்டுதான் இருந்தன. அத்துடன் அவருடைய நேர்காணல்களும் புலம்பெயர்ந்தவர்கள் நடத்திய வானொலிகளில் ஒலிபரப்பப்பட்டன.
நான் வசிக்கும் அவுஸ்திரேலியாவில் அரச வானொலியான SBS இலும் மற்றும் இன்பத்தமிழ் ஒலி, அவுஸ்திரேலியா ஒலிபரப்புக்கூட்டுத்தாபன வானொலி (ATBC) முதலானவற்றிலும் அவருடைய குரலை நாம் கேட்டோம்.
அவருடைய நாவல்கள் புகலிடத்தில் வெளியான இதழ்களில் தொடர்கதைகளாகவும் பிரசுரிக்கப்பட்டன. ஆனால், அவருக்கு இந்தத்தகவல் தாமதமாகத்தான் தெரியவந்தது.
எழுதியவருடைய அனுமதியில்லாமல் மறு பிரசுரம் செய்து தங்கள் இதழியல் தர்மத்தைப் பேணிக்கொண்டவர்கள், அவை வெளியான இதழ்களின் பிரதிகளைக்கூட அவருக்கு தபாலில் அனுப்பிவைக்காமல் தமது தர்மத்தை (?) மேலும் தக்கவைத்துக்கொண்டனர்.
இவ்வாறு அவருக்குத்தெரியாமலேயே அவர் வாழும் காலத்திலேயே வெளிநாடுகளில் கொண்டாடப்பட்டவர். மறைந்தபின்னரும் அவருக்குத்தெரியாமலேயே அவர் கொண்டாடப்படுகிறார். இதுதான் செங்கைஆழியானின் பலம்.
வேறு வேறு காலகட்டத்தில் இதுவரையில் எட்டுத்தடவைகள் இலங்கையின் தேசிய சாகித்திய விருதை வெற்றிகொண்ட செங்கை ஆழியான், இறுதியில் சாகித்திய ரத்னா விருதுப்பட்டத்தையும் தனதாக்கிக்கொண்டே விடைபெற்றிருக்கிறார்.
அவர் மறைந்த பின்னர் அவுஸ்திரேலியா சிட்னியிலிருந்து மூன்று வானொலிகள் என்னுடன் தொடர்புகொண்டன. அவை தாயகம் வானொலி, தமிழ் முழக்கம், அவுஸ்திரேலிய ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்.
முறையே எழில்வேந்தன் ( இலங்கையின் புகழ்பூத்த கவிஞர் நீலாவணனின் மகன்) கவிஞர் செல்லையா பாஸ்கரன், எழுத்தாளர் கானா பிரபா. ஆகிய மூவரும் செங்கைஆழியான் எழுத்துக்களில் ஆகர்சிக்கப்பட்டவர்கள். அதனால் அவரின் மறைவு இவர்களையும் பாதித்ததன் விளைவே இந்த வானொலிகளின் அஞ்சலிகள். அத்துடன் SBS வானொலி பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒலிபரப்பிய செங்கை ஆழியான் நேர்காணலின் இரண்டு பாகங்களையும் அடுத்தடுத்து மறு ஒலிபரப்பு செய்ததுடன் இணையத்தின் ஊடாக உலகெங்கும் எடுத்துச்சென்றது. SBS வானொலிக்காக நேர்கண்டவர் திரு. றைசெல்.
கான பிரபாவும் தாம் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் முன்னர் செங்கைஆழியானிடம் பெற்றுக்கொண்ட நேர்காணலை மறுஒலிபரப்புச்செய்தார்.
மீண்டும் ஒரு சந்தர்பத்தில் தாம் பேசவிரும்புவதாக இந்த நேர்காணலில் சொல்லியிருக்கும் செங்கை ஆழியான், அந்த சந்தர்ப்பம் கிட்டாமலேயே நேயர்களிடம் தமது குரலை ஒப்படைத்து கொண்டாடவிட்டு விட்டு விடைபெற்றிருக்கிறார்.
இதுவரையில் நான் குறிப்பிட்டது புகலிடத்தில் கொண்டாடப்பட்ட, வாழும் செங்கைஆழியான் பற்றியது.
அவர் தென்னிலங்கையில் சிங்கள மக்களிடமும் கொண்டாடப்பட்டவர் என்பது பற்றித்தான் இனிச்சொல்லப்போகின்றேன்.

———
செங்கை ஆழியானின் வாடைக்காற்று வெளிவந்த காலத்தில் படித்தவுடன் அவருக்கு ஒரு கடிதம் எழுதி, அவரும் பதில் எழுதி அன்று முதல் நண்பர்களானோம். வாடைக்காற்று நாவலை என்னிடம் தமிழ் கற்ற தென்னிலங்கையில் கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை என்ற ஊருக்கு சமீபமாக இருந்த உடுகம்பொல – கொரஸ ஸ்ரீ சுதர்மானந்த விகாரதிபதி வண. ரத்தனவன்ஸ தேரோ அவர்கள் அதனை சிங்களத்தில் மொழிபெயர்த்தார்.
அவர் தமிழ் அபிமானி. எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பில் நடத்திய தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டிலும் உரையாற்றியவர். இலங்கை வானொலி சங்கநாதம் நிகழ்ச்சியிலும் உரையாற்றியவர். மல்லிகையிலும் அட்டைப்படத்தில் தோன்றி கௌரவம் பெற்றவர். பசுமை நிறைந்த தமது கிராமத்துக்கு தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களை அழைத்து தேசிய ஒருமைப்பாடு கருத்தரங்கும் நடத்தியதுடன், கம்பஹா பிரதேசத்தில் சிங்கள ஆசிரியர்களுக்கும் பௌத்த பிக்குகளுக்கும் தமிழ்வகுப்புகள் நடத்தியவர்.
வாடைக்காற்று நாவலை குறிப்பிட்ட தமிழ் கற்றவர்களிடமும் சேர்ப்பித்து படிக்கச்செய்தார்.
வாடைக்காற்று திரைப்படமாகிவிட்ட செய்தியை அவரிடம் சொன்னபொழுது தாம் துறவியாக இருப்பதனால் திரையரங்கு சென்று அந்தப்படத்தை பார்க்க முடியவில்லை என்று வருந்தினார். ஆனால், பின்னாளில் அத்திரைப்படத்தின் ஒரு ரீல் அழிந்துவிட்ட நிலையில் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட வேளையில் நான் அவுஸ்திரேலியாவிலிருந்தேன். வண. ரத்னவன்ஸ தேரோ அவர்களின் விஹாரையில் தொலைக்காட்சி இருந்தும் குறிப்பிட்ட நாளில் வாடைக்காற்று ஒளிபரப்பாகும் தகவலை அவருக்கு யாரும் சொல்லவில்லை. சொல்லியிருந்தாலும் அவரால் அதனைப்பார்த்திருக்க முடியாது.
காரணம் அவர் நீரிழிவுநோயினால் கண்பார்வை யை இழந்து அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். இதுபற்றி மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவிடம் நான் தொலைபேசியில் தகவல் தெரிவித்ததையடுத்து அவர் தாமதமின்றி செங்கைஆழியானுக்கும் அறிவித்தார்.
இதுஇவ்விதமிருக்க — வாடைக்காற்று நாவலின் சிங்கள மொழிபெயர்ப்பை படித்துவிட்டுத்தருவதாக வாங்கிச்சென்றவரும் மாயமாகிவிட்டதனால் அந்த இழப்பின் சோகத்திலும் தேரோ அவர்கள் ஆழ்ந்திருந்தார்.
எதிர்பாராத வேளையில் 1983 கலவரம் நாட்டையே சீர்குலைத்தது. தமது இலக்கிய நண்பர்கள் திசைகள் பல சென்ற செய்தி அறிந்தும் அவர் மனமுடைந்துபோயிருந்தார்.
1997 ஆம் ஆண்டு நான் அவரை பார்க்கவந்திருந்தபொழுது அவர் தனது கண்பார்வையை முற்றாக இழந்திருந்தார்.
அவர் பற்றிய விரிவான கட்டுரையை தினகரன் வாரமஞ்சரியில் எழுதிவிட்டு , மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டேன்.
அதனைப்பார்த்த செங்கை ஆழியான் இனியும் தாமதிக்கக்கூடாது என எண்ணியிருக்கவேண்டும்.
இந்நிலையில் செங்கைஆழியானின் சிறுகதைகள் சில சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. அதனை வண. ரத்னவன்ஸ தேரோ அவர்களுக்கே சமர்ப்பணம் செய்து, பிரதியுடன் மல்லிகைஜீவாவையும் அழைத்துக்கொண்டு அந்த சிங்களக்கிராமத்துக்கு செங்கை ஆழியான் சென்றுள்ளார்.
ஆனால், இவர்களின் வருகை அந்தக்கிராமத்துக்குத்தெரியாது.
செங்கைஆழியான் தேரோவிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டபோது அவர் கண்கலங்கியிருக்கிறார்.
” உங்கள் வாடைக்காற்றை படித்தேன். மொழிபெயர்த்தேன். பிரதியும் என்னிடம் இல்லை. கண்பார்வையும் இல்லை. உங்கள் எழுத்தைப்படித்த நான், உங்களை நேரில் பார்க்க முடியாமல் கண்பார்வை இழந்திருக்கின்றேன் ” என்று அழுதழுது சொல்லியிருக்கிறார்.
துறவிகள் அழுது பார்த்திருக்கின்றோமா….?

செங்கைஆழியான் தமது கதைகளின் சிங்கள மொழிபெயர்ப்புத்தொகுப்பையும் அவரிடம் கையாளித்து, அதில் அவருடைய படத்துடன் சமர்ப்பணம் வெளியாகியிருக்கிறது என்ற தகவலையும் சொல்லிவிட்டு, தேரோ அவர்களின் மருத்துவச்செலவுக்கும் பணம் கொடுத்து விட்டு விடைபெற்றார்.
இன்று அந்த பௌத்த பிக்குவும் இல்லை. எங்கள் செங்கை ஆழியானும் இல்லை. வாடைக்காற்று சிங்கள மொழிபெயர்ப்பும் காணமல்போய்விட்டது.
ஆனால் – செங்கைஆழியானின் சிங்கள மொழிபெயர்ப்புக்கதைத்தொகுதி இன்றும் அந்த விஹாரையில் இருக்கிறது.
இவ்வாறு செங்கைஆழியான் இலங்கையில் மட்டுமல்லாமல் தாயகம் கடந்தும் – அதேவேளை தென்னிலங்கையில் சிங்கள மக்களிடமும் கொண்டாடப்படுகிறார்.
——0—-

““ஏமாற்றத்துடன் விடைபெற்றிருக்கும் செங்கை ஆழியான் “” மீது ஒரு மறுமொழி

  1. A valuable information. Thanks

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: