
நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்
வியாபாரம் செய்வதற்காக இந்தியா என்ற பெரும் கண்டத்துள் கால் பதித்த ஆங்கிலேயர் பின் இந்தியாவையே ஆண்ட கதை நாம் யாவரும் அறிந்ததே. அவ்வாறு வந்தவர்கள் இந்திய கலாசாரத்திலும் மோகம் கொண்டனர். கிழக்கிந்திய கொம்பனியர் பலர் இந்தியர் போலவே உடையணிந்தும் மகிழ்ந்தனர். சூரியன் அஸ்தனமாகாத பிரித்தானிய அரசை ஆண்ட விக்டோரியா மகாராணியார் அத்துடன் திருப்திப்படவில்லை. அவர் தனது ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் சக்கரவர்த்தினி என தனக்கு பட்டமும் சூட்டிக்கொண்டார். அவர் தலையில் அணிந்து கொள்ளும் மெல்லிய துணி இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டது. இவ்வாறு இந்தியாவில் இருந்து துணிகளை இறக்குமதி செய்தவர்கள் பின்பு இந்தியாவில் இருந்து பருத்திப் பஞ்சை மட்டுமே இறக்குமதி செய்து லங்காவுயர் மில்களில் துணிகளை நெய்து இந்தியாவுக்கே ஏற்றமதி செய்து லாபம் சம்பாதித்தனர். இதனால் இந்திய சுதந்திர போராட்ட காலகட்டத்தில் பிரித்தானியத் துணிகளை பகிஷ்கரிப்பு செய்து அவர்கள் தணிகளை சந்திகளில் குவித்து எரித்ததும் வரலாறாகிவிட்டது.
இந்திய சிப்பாய்களே ஆங்கிலேயர் படைகளில் முதலாவது இரண்டாவது உலக மகாயுத்தங்களிலும் போராடினார்கள். பட்டாளத்தார் காவல் துறையினர் பாவிக்கும் புளியங்கோது போன்ற நிறத் துணிக்கு காக்கி என்பது இந்திமொழிச் சொல். அதேபோன்று கோழிக்கூடு என்ற இந்திய நகரத்தை ஆங்கிலேயர் Calicut என்றனர். அங்கிருந்து வருவிக்கப்பட்ட துணியே Calico Cloth ஆனது. இவை எல்லாம் பழம் கதை.
தற்காலத்தில் வேறு பல இந்திய வார்த்தைகள் ஆங்கிலத்திலே பிரயோகப்படுகின்றன. Yoga, Guru, Sari, Pandit, Dharma இவை யாவும் ஆங்கில வார்த்தைகளாகியுள்ளன. இந்திய உணவு அகில உலகிலும் பிரபலமாகிவிட்டது. இதை ருசிப்பவர்களுக்கு சரக்குத் தூளின் பெயர் மசாலா என்பது தெரியும். அது மட்டுமா சட்னி, கறி, பசுமதி அத்தனையும் சமையல் உலகில் பிரபலமாகிவிட்ட இந்திய மொழிச் சொற்களாகும். இந்திய மாதா செப்பு மொழி 18 உடையாள். இந்த 18 மொழிகளில் இருந்தும் தாராளமாகவே சொற்களைப் பெற்று அவற்றை ஆங்கிலமாகப் பயன் படுத்தியும் வருகிறார்கள்.
இந்திய மொழியில் இருந்து 700 சொற்கள் Oxford Dictionary இல் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியான அரிசி Rice ஆகவும் கட்டுமரம் Katumarak ஆனதும் நாம் அறிந்ததே. முளகு தண்ணி Mulagu Tanni இப்படிப் பல.
நந்தனார் ஒரு பறையன். ஆமாம் பறையன் என்றால் என்ன? எமது பண்டைய சமுதாய வழக்கில் தீண்த்தகாதவன், ஒதுக்கி வைக்கப்பட்டவன் எனப் பொருள்படும். இவ்வாறு சாதி குலம் பேசுவதெல்லாம் பழைங்கதையாகிப் போய்க் கொண்டிருக்கும் காலம் இது. இந்த வார்த்தையைப் பாவிப்பதும் அநாகரீகமாகிவிட்டதும் அல்ல. அதைப் பாவிப்பது முறையற்றது எனவும் எமது சமுதாயம் எண்ணுகிறது. ஆனால் எம்மை வந்து ஆண்ட ஆங்கிலேயர் எம்மிடம் இருந்து சில விடயங்களைக் கற்றுக் கொண்டனர். அதில் ஒன்றுதான் இந்தப் பறையர் என்ற சொல். Oxford Dictionary இல் இந்தச் சொல் இடம்பெற்றுள்ளது. சொல்லின் மூலம் என்ன என்பதற்கு அதில் விளக்கம் உண்டு. தமிழ்மொழி மூலம் பொருள் ஒதுக்கி வைக்கப்படுபவன் என்பதே.
BBC ஒலிபரப்பிலே பரவலாக ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு தேசத் தலைவனைப்பற்றி பேசும்போது அவரை பறைய எனக் குறிப்பிட்டார்கள். இந்தப் பறைய இன்றும் ஆங்கில அறிவாளிகளின் பேச்சு வழக்கில் வரும் பதம்தான்.
பாரதியும் தனது விடுதலை என்ற பாடலிலே பறையருக்கும் இங்கு தீய புலயனுக்கும் விடுதலை என்று பாடினான். அது மட்டுமல்ல பாரதி எதிர்பார்த்த சுதந்திர இந்தியாவிலே “பார்ப்பானை ஐயன் என்ற காலமும் போச்சே வெள்ளைப் பறங்கியை துரை என்ற காலமும் போச்சே” எனப் பாடினான். பிற்பட்ட காலத்திலே “விடுதலை விடுதலை” என்ற பாடலை ஒலிப்பதிவு பண்ணப்பட்ட போது அதைப் பதிவு செய்தவர்கள் “பறையனுக்கும் இங்கு தீய புலயனுக்கும் விடுதலை” எனப் பாடினார்கள். ஆனால் பார்ப்பானை ஐயன் என்ற காலமும் போச்சே வெள்ளைப் பறங்கியை துரை என்ற காலமும் போச்சே எனப் பாடவில்லை. பாரதிதான் இல்லையே பாரதியின் பாடலோ தேசச் சொத்தும் ஆகிவிட்டது. தேசச் சொத்தை எப்படியும் பயன் படுத்தலாம் என்ற எண்ணமா?
மறுமொழியொன்றை இடுங்கள்