நிலத்திற்குக் கீழ் ஒரு குகையில் கும்ப ஈஸ்வரரை ( சிவன்- Gupteshwor Mahadev Cave ) வைத்திருக்கிறார்கள். அங்கு ஈரமான படிகளில் கீழ்நோக்கி குகைக்குள் செல்லவேண்டும். பல இடங்களில் குனிந்தபடி செல்லவேண்டும். சில இடத்தில் கடினமாக இருந்தது. தவழ்ந்து செல்லவேண்டும். மற்றவர்கள் எல்லோரும் பக்தியுடன் செல்கிறார்கள் . மனைவி கூட ஆங்காங்கு புத்த விகாரைகளிலும் ஆலயங்களிலும் வணங்கி வணங்கி புண்ணியத்தைச் சேமித்துள்ளார் . நான் மட்டும் உல்லாசப்பிரயாணியாகச் செல்வதால் நம்மீது கும்ப ஈஸ்வரர் ஏதாவது கல்லையோ பாறையையோ தலையில் தட்டிவிடலாம் என்ற எண்ணம் வந்து போகவும் தவறவில்லை .
அருவியின் பெயர் தேவியின் அருவி . தற்பொழுது டேவிஸ் அருவியாகி உள்ளது ( Devi’ Fall/ Davis Fall) என்ன அழகான பெயர் மாற்றம்?
நிலத்தில் தவழ்ந்து வந்த அருவி இறுதியில் 100 மீட்டர்கள் குகைக்குள் இறங்கி ஆழத்தில் வீழ்ந்து மறைந்துவிடுகிறது. இதயத்தை கையால் இறுக்கிப் பிடித்தபடியான நடைப்பயணம் . விரைவாகச் சென்றால் ஒரு மணித்தியாலத்தில் சென்று திரும்பமுடியும்.
ஜப்பானியர்கள் சுனாமியின் நினைவாக மிகப்பெரிய பகோடாவை இங்கு கட்டியுள்ளார்கள். சுனாமி அழிவு நேர்ந்த முதல் மூன்று நாடுகளாக இந்தோனேசியா இலங்கை மற்றும் இந்தியாவென இருக்க, சுனாமியின் பாதிப்பு வராத நேபாள நாட்டில் புக்காரா நகரத்தில் நாட்டில் கட்டியிருப்பது எனக்கும் புதுமையாகவிருந்தது.
“அங்கு அமைதியாக இருங்கள் “ என ஒரு அறிவிப்பு இருந்தது. இது எப்படி எனக்கேட்டேன். முக்கியமாக இந்தியர்கள் இங்கு கூட்டமாக வருவது பற்றியும் சத்தமாகப் பேசுவது பற்றியும் நேபாளமெங்கும் முறைப்பாடு உள்ளது என்றார். இப்படியான முறைப்பாடு சீனர்கள் மீதும் ஐரோப்பிய நாடுகளில் வைக்கப்படுகிறது. நோர்வேயில் ஒரு உணவகத்தில் எனக்கு அடுத்ததாக காலையுணவுக்கு நின்ற பெண்மணி “இன்னம் சிறிது நேரத்தில் சீனர்கள் இங்கே கூட்டமாக வருவார்கள். அதற்கு முன்பாக நாம் உணவை அருந்தவேண்டும் “ என்றார்.
<br
/>புக்காராவில் மலைகள் சம்பந்தமான கண்காட்சியிருந்தது. அதில் உலகத்தின் 8000 மீட்டாருக்கு உயரமான சிகரங்களில் பெரும்பாலானவை நேபாளத்தில் அமைந்திருக்கின்றன. அவற்றின் பல அமைப்புகளினால், மனிதர்களால் ஏறமுடியாதவை. மனிதர்களால் ஏறப்படும் எவரெஸ்ட் போன்ற சிகரங்கள் அவ்வாறு ஏறுபவர்களால் மாசடைந்து போகிறது என்பதை ஆதாரங்களுடன் காட்டியிருந்தார்கள்.
இம்மலைப்பகுதியில் படர்ந்துள்ள பனிப்படலங்கள் புவி வெப்பமடைவதால் குறைந்துள்ளதையும் பல உதாரணங்களுடன் பார்க்கமுடிந்தது.
இருவர் மலையேறும்போது அவர்களது தேவைகளுக்கான பொருட்களைக் கொண்டு செல்ல 15 செப்பாய்கள் ( காவுபவர்கள்) தேவை.
இந்த செப்பாய்கள் திபெத்திய இனத்தவர்கள். இவர்களது தொகை மொத்த நேபாளிய இனத்தில் ஐந்துவீதத்திலும் குறைவு. மலைப் பிரதேசத்தில் வாழ்ந்து குறைந்த உயரத்துடன் உறுதியான தோள்களுடன் மிகவும் குறைந்த பிராணவாயுவைச் சுவாசித்து வாழ இசைவாக்கமுடையவர்கள். இவர்களற்று எவரும் மலையேறமுடியாது.
பேஸ் காம்ப் எனப்படும் மலையடிவாரத்திற்குச் சென்று வர முயற்சித்தபோது, எவெரெஸ்டிலும் அன்னபூரணாவிலும் பனிச்சரிவு ஏற்பட்டதால் ஹெலிக்கப்டர்கள் எதுவும் பறக்கவில்லை. அருகில் சென்று பார்க்கவும் முடியாது போய்விட்டது . மீண்டும் விமானத்தில் பறந்தபோது யன்னலூடாக பார்த்து எனது ஏமாற்றத்தை போக்கிக் கொண்டேன்.
—0—
மறுமொழியொன்றை இடுங்கள்