பூமி வெப்பம் அடைவதால் ஏற்படும் விபரீதங்கள்


நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

பூமியின் அதி கூடிய வெப்பநிலையே சீரற்ற காலநிலைக்கு காரணம் எனக்கூறப்படுகின்றது. இயற்கையோ எமக்குப் போதிய அளவு கொடுத்தவண்ணமே உள்ளது. பேராசை கொண்ட மனிதனோ இயற்கையின் வளத்தை சீராகப் பயன்படுத்தாது இயற்கையை சீரழிப்பதே இதற்குக் காரணம்.

அபரிதமான உற்பத்தியே இன்றைய எமது பெரும் பிரச்சனை. 70பதுகளில் நான் படித்த நூல் ஒன்று இப்பிரச்சனையை ஆழமாக ஆராய்ந்துள்ளது. அதன் பெயர் Small is Beautiful இதை எழுதியவர் Trever Link இவர் ஒரு பிரபலமான பொருளாதார வல்லுனர். இன்று நாம் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை அவர் ஆராய்ந்துள்ளார்.

‘மனிதன் தனக்குத் தேவையானவற்றை இயற்கையில் இருந்து சுரண்டி எடுத்தாலே போதுமானது. எமது தேவைகளை பூர்த்தி செய்ய கை மண் அளவே போதுமானது. ஆனால் நாமோ இயற்கையை மாபெரும் யந்திரம் கொண்டல்லவா தகர்க்கிறோம். இவ்வாறு செய்வதால் இயற்கையின் செல்வத்தை அழித்துவிடும் ஆபத்தை எதிர் கொள்கிறோம்’ என்றார் Trever Link.

Trever Link ன் கருத்தை நோக்கும் போது இந்திய தேசபிதா மகாத்மா காந்தியின் கருத்தை சிந்திக்காமல் இருக்க முடியாது. இந்தியா 1947 ல் சுதந்திரம் பெற்றபோது காந்தி தனது பொருளாதராக் கொள்கையை முன்வைத்தார். அவரது கருத்தோ மற்றையவர்களின் சிந்தனையில் இருந்து வேறுபட்டதாகவே இருந்தது. சிறுதொழில் வளர்ச்சியே அவரால் விரும்பப்பட்டது. கனரக யந்திரங்களை வெறுத்தார் காந்தி. குடிசைக் கைத்தொழில் மூலம் இந்தியக் கிராமம் சுபீட்சமாக வாழமுடியும் என்பதே அவரது கருத்து. கனரக யந்திரங்களுடன் கூடிய தொழிற்சாலைகளை அமைப்பதால் மக்கள் கிராமங்களை விடுத்து நகரங்களில் குடியேற்றம் ஏற்படும். நாடு சுபீட்சத்தை இழக்க இது காரணமாகிவிடும் என்றார். இதுவும் Small is Beautiful கொள்கையே.

தேவைக்கு அதிகப்படியான நுகர்வே இன்று உலகில் ஒரு நோய்போல வளர்ந்து வருகிறது. தேவையோ இல்லையோ எதையும் வாங்க வேண்டும் என்ற மனோபாவம் மனிதனை ஆட்டிப் படைக்கிறது. இதை ஆங்கிலத்தில் Affluenza என்கிறார்கள். அதிகம் உழைக்க வேண்டும் அதனால் எதையும் பணம் கொடுத்து வாங்கி விடலாம். இந்த சக்தி எமக்கு உண்டு என்பதே இன்றைய சித்தாந்தம். இன்றைய பொருளாதாரக் கொள்கையும் மக்கள் அதிகப்படியான பொருட்களை வாங்க வேண்டும் என்பதே. Small is Beautiful என்பதெல்லாம் வேண்டப்படாத ஒன்று.

வியாபாரம் பெருகுவதற்கு விளம்பரம் உதவுகின்றது. இந்த விளம்பரப் பிசாசோ மக்களை ஆட்டுவிக்கிறது. யாரிடம் அதிகம் உண்டோ அவர்களே உயர்ந்தவர் என்ற சிந்தனைக்கு வழிகோலுகின்றது. தேவைக்கு அதிகமான உற்பத்தி, அதை மக்கள் வாங்கிக் குவிக்க வேண்டும் என்பதற்காக விளம்பரம். விளம்பரங்களை விழுங்கும் மந்தைகள் ஆக்கப்படுகிறார்கள் மக்கள். பூகோள வெப்பத்திற்கு இது ஒரு பெரிய காரணியாகின்றது. தேவையைப் பூர்த்தி செய்யும் அளவு உற்பத்தி செய்தால் பொருளாதாரம் படுத்துவிடும். புலி வாலைப் பிடித்தவன் கதைதான்.

அண்மையில் ஒரு செய்தி. பொருளாதார வீழ்ச்சியால் கார் உற்பத்தி பாதிக்கப்படுகின்றது. இக் காரணத்தால் தொழிற்சாலையில் ஆட்குறைப்பு நடைபெறுகின்றது. தொழிலை பலர் இழப்பதால் அவ்வாறு நடைபெறாமல் தடுப்பதற்கு அரசே கார் உற்பத்தியை நிவர்த்தி செய்வதற்கு பணம் கொடுத்து உதவ முன்வருகின்றது. நாளை அதே கார்கள்தான் தெருக்களிலே ஓடி பெற்றோலைக் குடித்து கரியமில வாயுவைத் தள்ளி சுற்றுப்புறச் சூழலை சீரழித்து பூமியை வெப்பமடையச் செய்யப் போவது. பூமி வெப்பம் அடைதலில் எமது பொருளாதராம் தங்கியுள்ளது. இவற்றை இன்றைய உலகம் நிவர்த்தி செய்ய முடியுமா?

இங்குதான் மனிதன் சீரிய முறையில் சிந்திக்க மத நிறுவனங்களும், சமூக நிறுவனங்களும் உதவ வேண்டும். மனிதப்பண்புகள் போதிக்கபடவேண்டும். வாழ்வு என்பது ஆடம்பரம், படாடோபம் அல்ல, தேவைக்கு அதிகமாக வாங்காது, வாங்கியதை வீணடிக்காது வாழ்வதே இன்று அதிமுக்கியமாக கொள்ளப்பட வேண்டிய தர்மமாகும். தேவைக்கு அதிகமாக இயற்கையில் இருந்து பெறுவது மகா பாவமான செயலாக கொள்வோமானால் அதுவே வருங்காச் சமுதாயத்திற்கு விட்டுச் செல்லும் செல்வமாகும்.

மனிதனால் உண்ணப்படும் மாமிச உணவும் பூமி உஷ்ணப்படுவதற்கு ஒரு காரணமாகின்றது. மனிதன் மாமிசம் உண்ணும் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுகின்றது. நில அரிப்பு, சுத்தமான நீர் பற்றாக்குறை, காற்று மாசடைதல் இப்படிப்பல. இன்று கோடிக்கணக்கான மிருகங்கள் மனித உணவுக்காகக் கொல்லப்படுகின்றன. மாமிச உணவைப் பெறுவதற்காக வளர்க்கப்படும் மிருகங்கள் புல் உண்ண எடுக்கும் நிலப்பரப்போ, தாவர உணவை வளர்ப்பதற்கு எடுக்கும் நிலப்பரப்பிலிருந்து 10 மடங்கு அதிகமானதாகும். மோட்டார் வாகனங்களால் சூழல் மாசு படுவதிலும்விட 15 வீதம் அதிகமாக மாமிசத்திற்காக வளர்க்கப்படும் மிருகங்களால் சூழல் மாசு படுத்தப்படுகிறது.

நாளாந்தம் மாமிச உணவை உண்பதால் ஏற்படும் உடல் உபாதைகள் பல. Harvard Medical School ஆய்வின்படி மாமிசத்தை அதிகமாக உண்பதால் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு உண்டு என்கிறார்கள். எம்மவர்கள் சொந்த ஊரில் வாழ்ந்த போது இறைச்சி உண்பது வாரம் ஒரு முறையே. வாரத்தில் இரண்டு நாட்கள் மீன் மற்றைய நாட்கள் பல விரதங்கள். ஆசாரம் கருதி மாமிச உணவு சமைக்கப்பட மாட்டாது. இந்தப் பண்பாடே எமது உடலைப் பாதுகாக்கும் விந்தையாக உள்ளதையும் நாம் உணர வேண்டும்.

சிந்தித்து செயல்படுவோமானால் எமது வருங்காலச் சந்ததியினருக்கு வாழ்வதற்கு வளமான பூமியை விட்டுச் செல்வோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: