பவுத்தநாத் தூபி திபெத்திய அரசனால் கட்டுப்பட்டது . உலகத்திலே பெரிய துபா என்கிறார்கள் .வெள்ளை நிறத்தில் பிரமாண்டமானது சுற்றிபார்பதற்கு முன்பாக எங்களுக்கு அதற்கு எதிரே உள்ள உணவகத்தில் இருந்து பார்ப்பதற்கு இடம் கிடைத்தது . நான்கு பக்கத்திலும் தூபியில் வரைந்துள்ள கண்கள் எங்கள் கண்ணைக் கொள்ளையிடும்
தூபிக்குள் சித்தார்த்த புத்தரின் எலும்புகள் இருப்பதாகவும் அதைவிட சாக்கிய முனி பிறப்பதற்குப் பலகாலங்கள் முன்பு வாழ்ந்த காசியப்பா என்ற புத்தரின் எலும்புகள் உள்ளதாகவும் தொனமக்கதையுள்ளது . இங்கு புத்தர் என்பது ஞானம் பெற்றவர் என்று அர்த்தமாகும்.
மக்களுக்கு நீரற்றுப்போனபோது அரச குலத்தவரை பலியிடும்படி சோதிடர் சொன்னார் .அதனால் மன்னன், தனது தந்தையைக் கொன்றதால் ஏற்பட்ட குற்ற உணர்வில் உருவாக்கியது இந்தத் தூபி எனவும் தொன்மக் கதையுள்ளது
2015ல் பூகம்பத்தில் உடைந்து மீண்டும் திருத்தப்பட்டுள்ளது
நாகர்கோட்(Nagarkot)
நாகர்கோட், காட்மாண்டிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் மலைமேல் பாதை முழுவதும் கிடங்கும் பள்ளமும் குலுங்கியபடி வாகனத்தில் சென்றோம். இடைவெளியில் திரும்பி வருவோமா என நினைத்தபடி இருந்தேன். பாதையோரத்து மரங்கள் புழுதி மூடி மரங்கள் பச்சைத் தன்மையற்று இருந்தன . மலை பகுதியெங்கும் வீடுகள் கட்டப்பட்டிருந்தது. புதிதாகக் கிராமங்கள் உருவாகின்றன.அதற்கேற்ப அரசாங்கத்தால் பாதைகள் அமைக்க முடியவில்லை அங்கு சென்றபோது மிகவும் குளிராக இருந்தது.
நாங்கள் தங்கிய இடம் விடுதிபோல் சிறிய கட்டிடம் . ஏராளமான மாணவர்கள் மாணவிகள் கல்வி சுற்றுலாவுக்கு வந்திருந்தார்கள்.
இரவில் வெளியில் அதிகம் தெரியவில்லை .இம்மலைத்தொடரும் அதனது சிகரங்களான எவரஸ்ட் – அன்னபூரணா- மனசு எல்லாம் பனி மூடியபடியிருந்தது. காட்மாண்டுவில் இருந்து வருபவர்களுக்கு இது கோடை வாசஸ்தலம் போன்றது
காலையில் ஆறரைமணியளவில் எழுந்து சூரியோதயம் பார்த்தபோது இமயமலைத் தொடர்மேல் சிறிதாக சுண்ணாம்பு தடவி கொழுந்து வெற்றிலை போட்ட பெண்ணின் உதடாகச் சிவந்திருந்தது.
பனிபடர்ந்த அந்த சிகரங்களில் அழகை பார்த்துக்கொண்டிரும்போது மெதுவாகச் சிவப்பு சூரியன் எட்டிப் பார்த்து பார்த்தது. ஒரு நிமிடத்தில் காலால் அடித்த பந்தாக சூரியன் மேலெழுப்பியது. இப்படியான ஒரு வேகமாக உதயமாகியதை இதுவரை நான் பார்த்ததில்லை.
மூன்றுமணிநேரம் இடுப்புவலி ஏற்படச் சென்றதற்கு அந்த கணமே பெறுமதியானது என நினைத்தேன் .திரும்பி வரும்போது கொஞ்சம் பரவாயில்லை. ஜீப்பை அனுப்பியிருந்தார்கள் .
மறுமொழியொன்றை இடுங்கள்