நடேசன்
பாக்மதி ஆறு காட்மாண்டில் இருந்து கங்கைக்கு வந்து சேருகிறது. நேபாள நாகரீகம் இந்த நதிக் கரையிலே தொடங்குகிறதென்கிறார்கள். இதன் ஒரு கரையில் கங்கை ஆற்றில் இடம் பெறுவது போன்று இறந்தவர்களின் உடல்கள் கொண்டு வந்து எரிக்கப்படுகின்றன.
மறுகரையில் எப்பொழுது இறப்பு வரும் என ஜோதிடம் சொல்பவர்கள் நிறைந்துள்ளார்கள். ஆற்றம் கரையிலிருந்து பொசுங்கும் மனித உடலில் இருந்து வரும் மணமும் புகையும் என் மனைவியை அங்கிருந்து விரட்டியது . எனக்கு அருவருப்பை ஏற்படுத்திய போதும், வாழ்வின் நிரந்தரமற்ற தன்மையைக் கண்ணுக்கும் தெரிய வைத்து, சுவாசத்திலும் கலக்க வைத்ததனால் மனிதவாழ்வின் தாற்பரியத்தை புரிந்துகொள்ள முடிகிறது.
வாழ்வு நிரந்தரமற்றது என்பதை மயிர்குட்டிபோல் இலைக்கு இலை தாவும் என்பதை யாக்னவல்லியர் உபநிஷடத்திலும்(SAMSARA) புத்தபெருமான் நிலையற்றது என்று சொல்லியிருந்தார்கள்.
எரி வாயுவில் எரிப்பதற்கு வசதியாக அரசு தகனியை (incinerator) உருவாக்கியிருந்தாலும் ஆற்றங்கரையில் வைத்து மரக்கட்டைகளில் தகனம் செய்வது தொடர்கிறது. இது விடயத்தில் அரசாங்கத்தைத் தவறு சொல்லமுடியாது
இமயமலையின் பனிபாளங்களில் (Melting glaciers) தங்கியிராது மலையில் பெய்யும் மழையில் தங்கியிருப்பதால் . ஆற்றில் அதிக நீரற்று இருப்பதால் ஓடும். நீர் மனித சாம்பல் கலந்து பால் நிறத்தில் தெரிந்தது. நீரற்ற காலமானதால் ஆறு ஓடவில்லை. குட்டையாகத் தேங்கி நிற்கிறது. பிளாஸ்ரிக் கழிவுகளும் மற்றைய சாக்கடைகளும் ஆற்றை மேலும் புனிதமாக்கியது? . நான் பார்த்தபோது மூன்று பிரேதங்கள் எரிந்துகொண்டும் மற்றும் மூன்று கிரிகைகளுக்காகவும் காத்திருந்தன.
“ பிரேதங்களும் கியூவில் காத்திருக்கிறன “ என்ற நகைச்சுவை எனது மனைவிக்குப் பிடிக்கவில்லை.
எரிக்குமிடத்தில் உயர்சாதியினருக்கு ஒரு இடம் மற்றவர்களுக்கு வேறு இடமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அங்கும் பிராமணர்களுக்குத் தனியான இடம். இறந்த பின்பும் சாதிப்பிரிவுகள் தொடர்கின்றன. அதைவிடப் புதினமாகத் தெரிந்தது ஒரு சாதிப்பிரிவினர் கட்டாயமாக ஓலமிட்டு அழவேண்டும் என்பது. அதை நான் நேரில் பார்த்தேன். வெள்ளை உடை உடுத்தவரகள் சத்தமாக அழுதார்கள்
இங்கு வந்து இறந்தால் மீண்டும் மனிதர்களாகப் பிறப்பார்கள் என்ற நம்பிக்கையினாலும் , இங்குள்ள ஜோதிடர்கள் எப்பொழுது இறப்பது என்பதைச் சொல்வார்கள் என்பதனாலும் ஏராளமான முதியவர்கள் இங்கு வருகிறாரகள்.
பாக்மதி ஆற்றின் அருகே இந்து மதத்தின் முக்கியமான சிவன்கோவில் – பல கோவில்களின் கலவையான பசுபதிநாத் கோவிலும் உள்ளது. . இந்தக் கோவிலில் லிங்கம் தானாகத் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது . அதற்காக ஒரு தொன்மமான கதையுமுள்ளது.
இடையனிடம் இருந்த பசு ஒன்று வெளியே மேய்ச்சலுக்குப் போய்வரும். தொடர்ச்சியாக அதனது மடியில் பாலிருக்கவில்லை. ஒரு நாள் மர்மத்தை அறிய இடையன் பசுவைத் தொடர்ந்தபோது அந்தப் பசு இங்கு வந்து பால் சொரிந்த படியிருந்தது. நிலத்தைத் தோண்டியபோது அங்கு ஒரு லிங்கமிருந்தது.
இந்தியாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள் . 518 ஆலயங்கள் உள்ளன. பிரதான ஆலயம் காவலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமே உள்ளே செல்லமுடியும். நான் இந்துவென உட்சென்றேன். கோவிலின் முன்பாக மிகப் பெரிய நந்தி செப்பால் செய்யப்பட்டிருந்தது.
இங்கு படமெடுக்க அனுமதியில்லை. எனக்குக் காலில் கடித்தபோது தொலைபேசியை எடுத்துவிட்டு, காலை சொறிந்த போது ஒருவர் வந்து இந்தியில் பேசியதுடன், எனது தொலைபேசியை வாங்கி அதில் நான் பட மெடுத்திருக்கிறேனா..? எனப்பார்த்தார். எரிச்சலாக இருந்தாலும் பொறுத்துக்கொண்டேன். நேபாளியிலோ இந்தியிலோ திருப்பி பேசத் தெரியாது.
தமிழர்களுக்கு முக்கியமான விடயம் ஒன்று சொல்லவேண்டும். எமது நேபாளிய வழிகாட்டியிடமிருந்து பெற்ற தகவல் இது. இப்பொழுது தமிழ்ப் படங்களை நேபாளிகள் விரும்பி பார்க்கிறார்கள். இந்திப்படங்களில் உள்ள அக்க்ஷனிலும் பார்க்க வேகமாகவும் விறுவிறுப்பாகவும் தமிழ்ப்படங்கள் இருக்கின்றன என்று அவர்கள் சொன்னபோது எனக்குப் புல்லரித்தது. இமயமலைக்கருகே எமது புகழ் எட்டியிருக்கிறதே..?
மறுமொழியொன்றை இடுங்கள்