
நடேசன்
நேபாளம், இமயமலையின் தென் பகுதி அடிவாரத்தில் உள்ள நாடு. ஐம்பது மில்லியன் வருடங்கள் முன்பாக புவியின் வடகண்டம் தென்கண்டம் ஆகிய இரண்டும் கண்ட நகர்வினால் ஒன்றுடன் ஒன்று மோதியபோது ஏற்பட்ட அமுக்கத்தால் புவியின் மேற்பகுதி மேலெழுந்து 2900 கிலோ மீட்டர் நீளமான மலைத் தொடர் உருவாகியது.
அந்த மலைத்தொடரின் வடபகுதி திபேத் பீடபூமி. தென்பகுதியில் நேபாளம் மற்றும் இந்தியா உள்ளது. உலகத்தில் 14 மலைச்சிகரங்கள் 8000 மீட்டருக்கு மேற்பட்டவை அதில் எவரெஸ்ட் உட்பட 8 மலைச்சிகரங்கள் நேபாளத்தில் உள்ளன.
விமானத்தில் பறக்கும்போது யன்னல் கண்ணாடியூடாக பார்க்கும்போது, பனிபடர்ந்த அந்தச் சிகரங்கள் தொடர்ச்சியாக பளிங்கில் செதுக்கி வைத்திருப்பதுபோல் அழகான காட்சியாக தென்படும். அந்த மலைத்தொடரின் மேலுள்ள பனிப்படலத்தில் உதயசூரியன் பட்டு கண்ணாடியின் மேல் வைத்த வைரமாலையாக ஒளிரும் காட்சி எக்காலத்திலும் மனதை விட்டு அகலாது .
புவியின் அசைவியக்கத்தால் உருவாகிய பிரதேசமானதால் இங்கு தொடர்ச்சியான கண்ட நகர்வு நடந்து கொண்டிருக்கிறது. அத்துடன் இந்தச் சிகரங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இப்படியான தொடர் மாற்றத்தினால், இந்தப் பிரதேசத்தில் பூகம்பம் வருவது வழக்கம்.
நான் அங்கு சென்றபோது 2015 இல் ஏற்பட்ட பூகம்பத்தின் அழிவுகளை காட்மண்டு நகரத்தினருகிலேயே காணமுடிந்தது.
ஒரு காலத்தில் கடலாக இருந்த பிரதேசமென அறியப்பட்ட இந்நகரத்தில் வாழ்ந்த பல கடல் வாழ் உயிரினங்களது சுவடுகளை மியூசியங்களில் பார்க்கக்கூடியதாக இருந்தது. .அவுஸ்திரேலியாவில் இமய மலையில் இருந்து எடுத்த உப்பு பாளங்களில் இருந்து விளக்கு உருவாக்கப்படுகிறது. அவை காற்றின் மாசுகளை நீங்குமென அறிந்து ஒரு காலத்தில் கட்டிலருகே அத்தகைய ஒரு விளக்கை வைத்திருந்தேன் .

இந்தியாவின் புதுடில்லி ஊடாக இந்தப் பிரயாணமிருந்தது. இந்தப்பயணமிருந்தது. ஏற்கனவே நிரப்பப்பட்ட விசா பத்திரமிருந்ததால் பயணம் இலகுவாக இருந்தது. பலர் பத்திரத்தை நிரப்ப அங்குமிங்கும் அலைந்தார்கள் . நாம் சென்ற நேரத்தில் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் தொடங்கிவிட்டதால், சீனர்கள் மட்டுமல்ல ஐரோப்பியர்களும் குறைந்திருந்தார்கள். இந்தியர்கள் பெரும்பாலும் தரைவழியே வாகனத்தில் வருவார்கள். இந்தியர்களும் சீனர்களுமே பெரும்பான்மையாக நேபாளம் வருபவர்கள்.
ஒரு தேசத்தை பார்ப்பது எப்படி ? எனது 29 வருடங்களில் நான் வாழ்ந்த தேசமான இலங்கையிலே நான் பார்க்காத இடங்கள் பல உள்ளன. அதேபோல் தற்பொழுது 30 வருடத்திற்கு மேலாக வசிக்கும் அவுஸ்திரேலியாவில் பல இடங்களை இன்னமும் பார்க்கவில்லை. மனித வாழ்வு மிகவும் குறுகியது. நாம் வண்டிச் சக்கரத்தில் உள்ள பல்லிபோல்தான் வாழ்கிறோம்.
பத்து இடங்களை நேபாளத்தின் முக்கிய கலாசார முக்கியத்துவமான இடங்களாக யுனெஸ்கோவால் பிரகடனப்படுத்தியுள்ளார்கள். அவற்றில் முக்கியமானவைகளுடாக எமது பத்து நாட்கள் பயணமிருந்தது.
எனது பிரயாணத்தை ஒழுங்கு படுத்தியவர் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு முகவர். அவரிடம் பத்துநாட்களில் முக்கியமான இடங்களை பார்க்க ஒழுங்கு செய்து தரும்படியும், முடிந்தவரை வீதிப் பயணங்களைக் குறைக்கவும் எனவும் அது சாத்தியமில்லாதபோது ஜீப் போன்ற வாகனத்தை ஒழுங்கு படுத்தவும் கேட்டிருந்தேன் . ஏற்கனவே பாதைகளைப் பற்றிய எச்சரிக்கை எனக்குக் கிடைத்திருந்தது.
பல காலமாக உலகத்தின் ஒரே இந்து நாடாக அரச வம்சத்தால் ஆளப்பட்ட நேபாளம் தற்பொழுது மாவோ -கம்மியூனிஸ்டுகளின் வெற்றியின் பின்பு மதச்சார்பற்ற நாடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இடதுசாரிகள் ஏற்படுத்திய சண்டையில் 30000 மக்கள் கொல்லப்பட்டார்கள். அரசகுடும்பத்தில் நடந்த கொலைச் சம்பவத்தின் பின்பு ஆட்சி மாற்றம் நடந்தது . ஆட்சியாளர்கள் மாறியிருந்தாலும் பெரிதான மாற்றம் அங்கு நடக்கவில்லை என்கிறார்கள்.
50000 மேற்பட்ட மாணவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வருகிறார்கள். வயதான ஆணும் பெண்ணும் மத்திய கிழக்கிற்கு வேலைக்கு செல்கிறார்கள் . நேபாளத்தின் தேச வருமானம் முதலாவதாக வெளிநாட்டிலிருந்து வரும் பணத்திலும், இரண்டாவதாக உல்லாசப் பிரயாணிகளின் வருகையிலும் தங்கியுள்ளது. இப்படியான வருமானத்தில் உணவுப்பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள்.
எனது பயணத்தில் நேபாளக் கலாசாரம் இந்து சமயத்தின் பல விடயங்களோடும் தீபேத்திய தாந்திரிய புத்த சமயத்தின் கலவையாகவும் தெரிந்தது. நாட்டின் கலாசாரம் மட்டுமல்ல நாட்டு மக்களிலும் கலவை தெரிந்தது . வட நேபாளத்தில் தீபேத்தியரைப்போல ஆசிய முக அமைப்பு . தெற்குப் பகுதியில் உள்ளவர்கள் இந்தியர்களைப் போல கறுப்பு நிறத்திலும் இடைப்பகுதியில் உள்ளவர்கள் இரண்டிற்கும் இடைப்பட்டு இந்திய முகத்துடனும் மஞ்சள் கலந்த தோல் நிறத்திலும் இருந்தனர். தற்பொழுது நேபாளிய மக்களில் 80 வீதம் இந்துக்களையும் 20 வீதம் புத்த சமயத்தினரையும் கொண்டிருப்பதாக அறிந்தேன் .
காட்மாண்டிற்கு அருகாமையில் உள்ள சுயம்புநாத் (Swayambhunath) என்ற இடமே நாங்கள் முதல் சென்ற பிரதேசம். இந்து மற்றும் புத்த கோயில்கள் பல ஒன்றாக அமைந்த இடம். ஐரோப்பியரின் வாயில் நுழையாத பெயரானதால் வழிகாட்டிகள், இங்கு அதிக குரங்குகள் நிற்பதனால், இதனை மங்கி ரெம்பிள் என்பார்கள் .
இங்குள்ள குரங்குகள் இந்தியா இலங்கையில் நான் பார்த்ததை விட தோற்றத்தில் பெரியனவாக இருந்தன. நிறத்திலும் வேறாகத் தெரிந்தன. இந்த இடம் தாந்திரிய புத்தமதத்தை சேர்ந்தது. புத்த மதமும் இந்து மதமும் பல இடங்களில் இரண்டறக்கலந்து இருப்பதினால் இரு மதத்தினரும் இங்கு வணங்குகிறார்கள். இங்குள்ள புத்த தூபத்தில் கண்களை – புருவங்களை நான்கு பக்கமும் வரைந்துள்ளார்கள் புத்த மதம் இங்கு திபேத்திய லாமா எனப்படும் குருக்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனாவின் ஆக்கிரமிப்பின்போது தீபேத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் இங்கு வசிக்கிறார்கள்.
எந்த வணக்கத் தலத்திற்கும் தொன்மமான கதையொன்றிருக்கும் . அது புனைவா உண்மையா என்பது நமக்குத் தேவையற்றது. அதேபோல் இந்தப் பகுதி நீர் நிறைந்த தீவாக இருந்தது. அப்பொழுது ஒரு தீபம் சுயமாகத் தோன்றியது. பிற்காலத்தில் நீர்வடிந்துவிட்டபின் இந்த இடத்தில் ஆறாம் நூற்றாண்டில் தூபம் ஆரம்பிக்கப்பட்ட இந்த இடத்திற்கு அசோக மன்னன் சென்றதாகச் சொன்னார்கள்.

இங்கிருந்து படிகளில் மேல் சென்றபோது கீழே காட்மாண்டு பள்ளத்தாக்கு அழகாகத் தெரிந்தது.
மூச்சு வாங்கியபடி நூற்றுக்கணக்கான படிகளில் மேலே சென்றபோது வஜ்ஜிர ஆயுதமிருந்தது. இதுவரையில் இந்திரனிடம் மட்டுமே வஜ்ஜிர ஆயுதமிருந்தது என படித்த எனக்கு, அது புதுமையாக இருந்தது. அது வஜ்ராயின புத்த சமயத்தை குறிப்பதாக அறிந்தேன். அதை விட தூபாக்கள் பல ஒன்றாக இருந்தன. அவற்றில் ஒரே உயரமாக பல அடுக்கு கூரைகள் கொண்டிருந்தது நேபாளிய கட்டிடக்கலை என்றார்கள். இதுவே பிற்காலத்தில் சீனா, யப்பான் போன்ற நாடுகளுக்கு சென்றதாக சொன்னார்கள். இந்தியா போன்று பல இனக்குழுக்களால் ஆனது. அதில் காட்மாண்டு பள்ளத்தாக்கில் வசிப்பவர்கள் நேவார் (Newar) என்ற குழுவினரே முக்கியமானவர்கள்.
அதிலிருந்து நேபாளமென வந்திருக்கலாம்.
—00—
மறுமொழியொன்றை இடுங்கள்