7 கரையில் மோதும் நினைவலைகள்: கோழிகூவும்பருவம்

கரையில் மோதும் நினைவலைகள் 7

நடேசன்
எனது அப்பு (தந்தை ) 1969 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு சனிக்கிழமை காலை நேரத்தில், ஊரில் இருந்து எனக்காகக் கொண்டு வந்த மதிய உணவை எனது படுக்கைக்கு அருகில் உள்ள சிறிய அலுமாரியைத் திறந்து வைத்துவிட்டு , வேகமாக அதன் கதவை அடித்து மூடினார். பின்னர் , என் பக்கம் திரும்பிப்பார்த்தார். அவரது முகம் மாறியிருந்ததை கவனித்தேன். ஏதும் கோபமோ அல்லது ஏமாற்றமோ எனச் சரியாகத் தெரியவில்லை.

எனது அலுமாரியின் உட்பக்க கதவில் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகையின் நீச்சல் உடை அணிந்த வண்ணப் படமிருந்தது. அந்தப் படமே அவரது முகமாற்றத்திற்கான காரணம் என அப்பொழுது நினைத்தேன்.

ஒவ்வொரு கிழமையும் எழுவைதீவுக்கு வெள்ளிக்கிழமை சென்று, மீண்டும் ஞாயிற்றுக்கிழமை யாழ். இந்துக்கல்லூரி விடுதிக்கு வருவேன். யாழ்ப்பாணம் வந்து சேர்ந்ததும் கடிதமெழுதவேண்டும் என்பது அம்மாவின் கட்டளை .ஆனால், நான் சோம்பேறி: கடிதமெழுதுவதில்லை.

அம்மா ஊரில் அக்காலத்து தபாலதிபராக இருந்தவர் . கடிதங்களுடன் வாழ்பவர் . இறுதியில் தானே ஒரு அஞ்சல் அட்டையில் வீட்டு விலாசமெழுதி, “ நலமே வந்து சேர்ந்தேன் “ என்று ஒரு வரியும் எழுதி எனது பொக்கெட்டில் வைத்து வழியனுப்பிவிடுவார் . விடுதிக்கு வந்து சேர்ந்ததும் அந்த அஞ்சல் அட்டையை கல்லூரியில் உள்ள தபால் பெட்டியில் போடவேண்டும் . அவ்வாறு போட மறந்த நாட்களும் உண்டு.

வாரவிடுமுறை நாட்களில் நான் ஊருக்குச் செல்லாதபோது, அப்பு, யாழ்ப்பாணத்திற்கு என்னைத்தேடி வந்துவிடுவார். அவ்வாறு அவர் வந்த ஒரு நாளிலேதான் அச்சம்பவம் நடந்தது.

இந்துக் கல்லூரியில் 9 ஆவது தரத்தில் படித்த காலத்திலே எனக்கு கூவும் பருவம் வந்தது. சாதாரணமாகப் பருவம் அடைந்த பெண்பிள்ளைகளுக்கு ஊரைக்கூட்டிக் கொண்டாடும் நமது சமூகம் பையன்களைப் பொருட்படுத்துவதில்லை . சமூகத்திற்குள் ஆபத்தான ஒருவன் வந்துவிட்டான் என்ற எச்சரிக்கையுடன் அவனது உடலில் தோன்றும் இயற்கையான பருவமாற்றத்தை அடக்கி வைக்கிறது. பெண்களிடமிருந்து ஒதுக்கியும் பிரித்தும் வைக்கிறது. பெற்றோர் கூட தங்களது காமத்தின் விளைவுதான் இந்தக் குழந்தை என்பதை நினைப்பதுமில்லை. அவன் பருவமடைந்து வயதுக்கு வருகிறான் என்ற உண்மையைப் பல காலம் மறந்து விடுகிறார்கள். இதனால் அப்பருவத்துப் பையன்கள், மனநிலையில் குடும்பத்திலும் சமூகத்திலுமிருந்து அந்நியப்படுகிறார்கள். அவர்களது நடவடிக்கைகளை பெற்றோர், முக்கியமாக தந்தையர் கண்டிக்கும்போது அவர்களே பையன்களின் நம்பியார்களாக வெறுக்கப்படுகிறர்கள். இந்தப்பருவமே பிற்காலத்தில் அவனை ஆக்கத்திற்கு அல்லது அழிப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்குகிறது.

எனது ஒன்பதாம் வகுப்பில் என்னோடு படித்த ஒருவன், இரவில் அவனது பெற்றோர் கலவியில் ஈடுபட்டதைக் கண்டு விட்டு, அந்தக்காட்சியை எமது வகுப்பில் எங்களுக்கு நாடகமாக விபரித்தான். அதனை அங்கிருந்த நாற்பது பேரும் ஆவலோடு வாய் மூடாது கேட்டோம். பிற்காலத்தில் அதை நினைத்து வெட்கப்பட்டேன். பாடசாலையோ சமூகமோ தெளிவான அறிவைக் கொடுக்கத் தவறும்போது எனது வகுப்பிலிருந்த நண்பன் மட்டுமல்ல , அவன் சொல்வதை ஆவலுடன் கேட்ட என் போன்ற மனநிலை கொண்டவர்களை உருவாகுவது தவிர்க்க முடியாது.

அக்காலத்தில் எனது உடலில் உற்பத்தியாகிய ஹோமோன்களால் பருவமாற்றங்கள் ஏற்பட்டபோது, கற்பதில் என் சிந்தனை குறைந்தது . அதுவரையும் முதலாவது தரத்திலிருந்த நான், பின் தள்ளப்பட்டேன். ஆண்கள்- பெண்கள் சேர்ந்து படிக்கும் கலவன் பாடசாலையில் இலவச இணைப்பாகப் பெண்களைக் காணமுடியும். பழக முடியும். கெட்டித்தனம் இருந்தால் தொடவும் முடியும். ஆனால், இந்துக்கல்லூரி போன்ற ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரியிலும், தங்கியிருந்த விடுதியிலும் இருபத்தினான்கு மணிநேரமும் ஆண்களையே பார்த்தபடி இருக்கும் வாழ்வு கடினமானது. அந்த விடலைப்பருவத்தின் ஹோர்மோன் இரத்தத்தில் பொங்கிப் பாய்ந்தபோது பல மாணவர்கள் பல விதமாக நடந்தார்கள்.

என்னிலும் இரண்டு வயது மூத்தவர் பாடசாலை முடிந்ததும், இந்துகல்லுரியின் ஜன்னலின் கம்பிகளிடையே கால்களை வைத்தவாறு அமர்ந்தபடி வீதிக்கு எதிரே தெரியும் வீட்டுப் பெண் பிள்ளையைப் பார்ப்பார். மாலைச் சூரியன் மறைந்து இருளாகும்வரை அவ்வாறு பார்த்துக்கொண்டிருப்பார்.

ஒவ்வொரு நாளும் குறைந்தது இருமணி நேரத்தவமாக அது அமையும். புராண , இதிகாசகாலமானால் அவருக்கு வரமோ , அஸ்திரமோ கிடைத்திருக்கும். இந்துக்கல்லுரி ஆசிரியர் ஒருவரின் மகனாகிய அவருக்கு இறுதிவரையில் அந்தப் பெண்ணின் கடைக்கண் பார்வை கூடக் கிடைக்கவில்லை என்பது கவலையான விடயம்.

விடுதியின் கீழே உள்ள வீதியில் பாடசாலை முடிந்து பெண்பிள்ளைகள் சென்றால் , கூச்சலும் விசிலுமாக இருக்கும் . சிலர் ஆண்களைத் தேடுபவர்கள். அவர்களில் சிலர் காதலர்கள்போல் ஒன்றாகத் திரிவதும் , பணம் கொடுப்பதையும் , தமக்குள் சண்டை பிடிப்பதையும் பார்த்தபோது எனக்கு வினோதமாக இருக்கும்.

என்னைப் பொறுத்தரை சினிமா விடலைப் பருவத்துக்கு வடிகாலாக இருந்தது. சிலகாலத்தின் பின்பு அந்தக்காலத்து தமிழ்ப்படங்கள், பாலைவனத்தைப் பகலில் தாண்டி வந்தவனுக்கு தாகசாந்தி செய்ய தீர்த்தம் கொடுப்பது போலிருந்தது. அதனால் ஆங்கிலப்படங்களைப் பார்க்கத் தொடங்கினேன் . அக்கால யாழ்ப்பாணத்தில் மனோகரா – ரீகல் என இரண்டு திரையரங்கங்களில் ஆங்கிலப் படங்கள் ஓடிக்கொண்டிருக்கும். பல படங்களை பல முறை பார்த்தேன் . அந்தப்படங்களில் பேசுவது புரியாது . திரைப்படத்தின் மற்றைய தரங்கள் அறியாது எப்பொழுது பெண்கள் வருவார்கள் ? குளிப்பார்கள் ?அல்லது நீச்சலடிப்பார்கள்? எப்பொழுது நமக்கு ரசிக்கக்கூடிய காட்சி வரும் என்ற எதிர்பார்ப்புகளோடு முன்வரிசையில் கழுத்தை நிமிர்த்தியபடியிருப்பேன்.

எங்கள் காலத்தில் எவனாவது இது தவிர வேறெதர்க்காகவேனும் ஆங்கிலப்படம் பார்த்தானென்றால், அவன் அரிச்சந்திரனுக்கு அடுத்த வீடென நினைக்கவேண்டும் . பல தடவைகள் பகல் காட்சிகளை நண்பர்களுடனும் , சில தடவைகள் தனியாகவும் பார்த்திருக்கிறேன் .
ஹோர்மோன்களின் கொடுங்கோலாட்சி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் நீடித்தது. இக்காலத்தில் கல்வி மட்டும் சுமையாக இருக்கவில்லை. வகுப்பில் படிப்பித்த ஆசிரியர்களது , உடன் படித்த நண்பர்களது நினைவுகள் கூட மனதில் இருக்க மறுத்து, செட்டைகட்டி பறந்தகாலம். இக்காலத்திலேதான் பத்தாவது தரத்திற்கான பொதுப் பரீட்சை வந்தது. எனது தலைக்குள் சரக்கில்லை. ஆனால், பரீட்சை எழுதவேண்டும் .

எப்படி எழுதமுடியும் ? அதுவும் மூன்று விதமான கணித பாடம் மற்றும் ஆங்கிலம் உட்பட எட்டுப்பாடங்கள் எழுதவேண்டும் .

1970 ஆம் வருடம் மார்கழியில் யாரோ ஒரு புண்ணியவானது முயற்சியால் பல பாடங்களதும் வினாத்தாள்கள் முதல் நாள் இரவு எங்கள் இந்துக்கல்லூரி விடுதிக்கு வந்து கண் சிமிட்டின

இந்தியா

இரண்டு நாட்கள் ஹோட்டலில் இருந்துவிட்டு கோடம்பாக்கத்தில் ஆர்காடு ரோட்டில் அமைந்த பழைய கட்டிடத்தில் மேலே உள்ள சிறிய அறையை மாத வாடகைக்கு பெற்றுக்கொண்டேன்.

அந்த அறையில் யன்னலையும் கதவையும் விட பெரிய இரும்புக்கட்டில்; – சந்தமிட்டபடி சுழலும் ஒரு பழைய கறள் பிடித்த காற்றாடி மற்றும் அதோடு ஓட்டிய ஒரு லைட் மட்டுமே எனக்குத் துணையாக இருந்தன. தனிமை அந்த அறையில் கோடை வெப்பத்தை விட மோசமாக வாட்டியது. அந்தப் பெரிய சென்னைப்பட்டணத்தில் தனிமையாக இருப்பதாக உணர்ந்தேன். குடும்பம், சுற்றம் நண்பர்களது அருமையை உணர்வதற்கு அந்தக் காலம் தேவையாக இருந்தது.

தேவையில்லாமல் இலங்கையை விட்டு வெளிக்கிட்டுவிட்டேனோ என்ற சிந்தனை தொடர்ச்சியாக – கடல் அலை பாறையில் மோதுவது போல் மோதிக்கொண்டிருந்தது. இலங்கையில் சிறிதளவு இருந்த சிகரட் புகைக்கும் பழக்கம் ஊதிய பலூனாக பெரிதாகியது. ஆர்காடு ரோட்டில் அருகே இருந்த லெண்டிங் லைபிரரியில் இருந்த சுஜாதா – ராஜேந்திரகுமார் மற்றும் புஷ்பா தங்கத்துரை போன்றவர்களது புத்தகங்கள் உற்ற துணையாக உதவி செய்தன.

ஒருநாள் இரவு – எனது மனைவி இலங்கையில் தான் வேலை செய்யும் குருநகரில் உள்ள ஹோலி குறோஸ் வைத்தியசாலையின் மீது குண்டுகள் விழுவதாகவும் அங்குள்ளவர்கள் உயிர்தப்ப சிதறி ஓடுவதாகவும் கனவு கண்டு எழுந்து அழுதேன். கனவுகள் கண்ணீர் என்பது எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் மிகவும் அருமையாக இருந்தது . மத்தியதர குடும்பத்தில் மூத்த பிள்ளையாக பிறந்தது ஒருவித அதிஷ்டமே.

மனதில் நினைத்தவுடன் இந்தக்காலம் போன்று பேசுவதற்கு தொலைபேசியில்லை. வேறு வழியுமில்லை. கனவுகள் நடக்காது என்பதில் நம்பிக்கை வைத்து, அன்று நடுஇரவில் எழுந்து ஒரு வில்ஸ் சிகரட்டை புகைத்தபோது ஜுலை 83 நினைவுக்கு வந்தது.

மதவாச்சியில் வேலை செய்த நான், கொழும்பில் ஜுலை 21 ஆம் திகதி அனுராதபுர மாவட்டத்தில் உள்ள மிருகவைத்தியர்களுடன் கிராமியதொழில்துறை அமைச்சர் தொண்டமானின் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கு பற்றினேன். அக்காலத்தில் பல அபிவிருத்தித் திட்டங்கள் அனுராதபுரத்தில் நடந்தபோது ஐக்கியதேசியகட்சி ஆட்சியில் இருந்ததால் – மதவாச்சி மைத்திரிபால சேனநாயக்கவின் தொகுதியானதால் புறக்கணிக்கப்பட்டது. இவர் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச்சேர்ந்தவர்.

இலங்கையில் தமிழர்கள் மட்டும் புறக்கணிப்பதாக குறை கூறினாலும் உண்மையில் எந்த அரசாங்கமும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களையும் அவர்களது தொகுதியையும் கண்டுகொள்வதில்லை. சிங்களவர்கள் இதற்கு அரசியல் சாயம் பூசும்போது தமிழர்கள் நித்தமும் அரசாங்கங்களுக்கு எதிராக இருப்பதால் இனச்சாயம் பூசுவதுதான் உண்மை.

எனது காலத்தில் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் மதவாச்சி – பதவிய ஆகிய இரண்டு இடத்திலும் பால் சேகரிக்கும் நிலையமும் புதிதாக மதவாச்சியில மிருக வைத்தியசாலையும் எனது முயற்சியால் திறக்கப்பட்டன. அனுராதபுர மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களில் மைத்திரிபால சேனநாயக்கா கலந்து கொள்வதில்லை.

மிருகவைத்திய , கால்நடை அபிவிருத்தி விடயங்களில் மதவாச்சி மக்கள் பிரதிநிதி நீதான் என அக்கால மாவட்ட அமைச்சர் சந்திரபண்டார ஒரு நாள் எனது கையை பிடித்தபடி சொன்னார். ஒருவிதத்தில் இருபத்தைந்து வயதான என்னை மதித்து அவர் பேசியது எனக்கு உற்சாகத்தைக் கொடுத்ததுடன் – எக்காலத்திலும் அரசியல்வாதிகளுடன் நேரடியாக பேசக்கூடிய தைரியத்தையும் அளித்தது அந்தக் கூட்டங்களே.

கொழும்பில் இப்படியான கூட்டமொன்றில் கலந்துகொண்ட பின்னர் – வெள்ளிக்கிழமை நின்று வார இறுதி நாட்களில் கொழும்பில் தங்கியிருக்க விரும்பினார்கள். என்னோடு வந்த மற்றைய அனுராதபுர மாவட்ட வைத்தியர்கள் என்னையும் தங்களுடன் நிற்கும்படி வலியுறுத்தினார்கள். உண்மையில் அனுராதபுரம் போன்ற இடத்தில் இருந்து கொழும்பு சென்றால் நகரவாழ்வை அனுபவிக்க விரும்புவது இயற்கை.

எனக்கு, எனது மகனது முதலாவது பிறந்த நாள் ஜுலை 25ஆம் திகதி வருவதால் யாழ்ப்பாணம் செல்லவேண்டும் என்று 21 ஆம் திகதி மாலையே வெளிக்கிட்டபோது – சக மிருகவைத்தியர்- களுஆராய்ச்சியின் அனுராதபுர வீட்டின் ஒரு சாவியை பெற்றுக்கொண்டேன். ‘இரவு நடுச்சாமத்தில் அனுராதபுரத்தில் தங்கியிருந்து பின்னர் யாழ்ப்பாணம் செல்ல விரும்புகிறேன். எனவே உனது வீட்டில் தங்கிச்செல்கிறேன் ” என்றபோது அவனும் தந்தான்.

நான் நேரடியாக கொழும்பில் அல்லது கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதில்லை என்ற விடயத்தை பாதுகாப்பு நடவடிக்கையாக பலகாலமாக கடைப்பிடித்து வருகிறேன். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்பவர்கள் – இராணுவத்தால் பரிசோதிக்கப்படுவதும் விசாரிப்பதும் அக்காலத்தில் நடக்கும் வழமையான விடயங்கள்.

நான் கொழும்பில் அல்லது கண்டியில் இருந்து அனுராதபுரம் அல்லது மதவாச்சி செல்லும்போது அந்த மார்க்கத்தில் பெரும்பாலும் சிங்கள மக்களே பிரயாணம் செய்வார்கள். மேலும் அங்கிருந்து வவுனியாவிற்கு செல்லும்போது வாகனங்கள் நிறுத்தப்படுவதோ சோதிக்கப்படுவதோ இல்லை. பயணநேரம் கொஞ்சம்கூட எடுத்தாலும் இது வசதியானது.

மீசையில்லாமல் ஆங்கிலப்பத்திரிகையோடு பிரயாணம் செய்யும்போது பலரும் சிங்களவராக நினைத்து பேசியபடி வருவார்கள். அதிகம் பேசாமல் ஓரிரு வார்த்தைகளில் பத்திரிகையில் என்னைப் புதைத்துக் கொள்வேன். மீசையற்ற முகம், நல்லெண்ணை வைக்காத தலை, சிங்கள மொழியில் கொஞ்சம் பரிச்சயம் என்பன எனது பாதுகாப்பு கவசங்கள் என எனக்குள் ஒரு நினைப்பு அக்காலத்தில் இருந்தது.
81ஆம் ஆண்டு என நினைக்கிறேன் – கண்டியில் இருந்து வாகனத்தில் அநுராதபுரம் செல்லும்போது, மாத்தளையருகில் வரும்போது மாலை 6 மணி சிங்களச் செய்தியில் இரண்டு பொலிசார் கொலை செய்யப்பட்டதாக சொன்னபோது, அந்த வாகனத்தில் இருந்த சில சிங்கள இளைஞர்கள் எழுந்து கோபத்தில் தமிழர்களை கொல்லவேண்டும்’ எனச் சொல்லியவாறு சுற்றி சுற்றிப் பார்த்தார்கள் . நான் சாரதிக்கு பின்புறமாக இருந்தேன். இதைக்கேட்டதும் சன் ஆங்கிலப்பத்திரிகையை தூக்கியபடி “ஏக்கத்தமாய்” என்ற ஒரு வார்த்தையை மட்டும் சொல்லிக்கொண்டு எழும்பினேன். அவர்களும் “ஏக்கனே மாத்தயா” என்றார்கள். அந்தச் செய்தி முடிந்ததும் அந்த இளைஞர்களது கோபம் திறந்த ஷம்பேயின் போத்தலின் சத்தமாக அடங்கியது. நானும் தொடர்ச்சியாக சன் பத்திரிகையை படித்தபடி பிரயாணத்தை அனுராதபுரம்வரை தொடர்ந்தேன்.

அன்று இரவு அனுராதபுரத்தில் உறங்கிவிட்டு, மறுநாள் அருகில் இருந்த களுவாராய்ச்சியின் உறவினர்கள் எனக்கு ஏற்கனவே பழக்கமானதால் அவர்களுடன் காலையுணவை அருந்திவிட்டு மதவாச்சி சென்று, எனது வைத்தியசாலையில் சில விடயங்களை முடித்து விட்டு, எனது அலுவலக மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணம் புறப்பட்டேன். அங்கு சென்றடைவதற்கு இரவு எட்டுமணியாகிவிட்டது. வீட்டில் இரண்டு நாளில் பிறந்த தினம் கொண்டாட இருந்த மகனுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தபோது வைத்தியசாலையில் இருந்து வந்த மனைவி ‘யாழ்ப்பாணம் ரவுணில் கேக்கிற்காக ஓடர் கொடுத்திருக்கு’ என்றாள்.
மறுநாள் காலை எழுந்ததும் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வேலை செய்யும் அவளை அங்கு விட்டு விட்டு, கேக்கை எடுத்துவருது எனது வேலையாகியது.

அந்த இரவு என்னை பொறுத்தவரை சந்தோசமாக இருந்தது. கிழமைக்கு ஒரு முறை மனைவியையும் குழந்தையையும் பார்க்கும் அரசாங்க உத்தியோகத்தனது வாரவிடுறைகள் வேறு எப்படி இருக்கும்?

எந்த ஒரு கவலையும் இல்லாது எதிர்காலம் நிகழ்காலம் என்று எதைப்பற்றிய சிந்தனையும் அற்ற வாழ்க்கை. இரண்டு வருமானம். யாழ்ப்பாணம் வந்தால் ஓடுவதற்கு மாமாவின் கார். வசதியான வீடு. அப்படியே கொக்குவிலில் எங்கள் வீட்டிற்குச் சென்றுவிட்டு, அதற்குப் பின்னர் ஆனைக்கோட்டைக்கு நண்பனுடன் சென்று கள்ளு அருந்திவிட்டு வரும்போது அந்த இரண்டு நாட்களும் எப்படிப் போகும் எனத் தெரியாமல் வாழ்ந்தகாலம் வசந்தகாலம்தான்.

சனிக்கிழமை மனைவியை வேலைக்கு அழைத்துச் செல்வதற்காக எழுந்து காலை எட்டு மணியளவில் யாழ்ப்பாணம் ரவுணுக்கு புறப்பட்டேன். எனது மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் பிரதானவீதியால் சென்று ஆஸ்பத்திரி வீதியை அடையும் வரை எல்லாமே வழமைபோல் இருந்தது. வைத்தியசாலைக்கு முன்பாக சென்றபோது அனுராதபுரத்தில் எனது மேலதிகாரியான டொக்டர் பத்மநாதன்- அவரது வீட்டின் முன்பாக நின்றவாறு எனக்கு கையை காட்டினார். நான் அவருக்கு கையை அசைத்தபடி வைத்தியசாலை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தினேன். எனது மனைவி வைத்தியசாலையுள்ளே நூழைந்து விட்டாள்.

சுற்று வட்டாரத்தில் ஏதோ மாற்றம் தெரிந்தது. வைத்தியசாலைக்கு முன்பாக இரண்டு பக்கமாகச் செல்லும் வீதியின் நடுவே வாடகைக்கார்கள் மினி பஸ் வண்டிகள் என குறைந்தது அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நிறுத்தியிருப்பார்கள். அதாவது வேம்படி வீதியில் இருந்து காங்கேசன்துறை வீதிவரையும் உள்ள இந்த இடம் வாகனங்கள் நிறுத்தும் பிரதேசமாகவிருந்தது. ஆனால், அன்று எந்த வாகனமும் எனது கண்ணுக்குத் தெரியவில்லை கண்ணுக்கெட்டியவரை வெளியாக இருந்தது. மேலும் கண்ணாடித் துண்டுகள் சிதறி எனக்குப் பக்கத்தில் நிலமெங்கும் கிடந்தது. ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த என்னை யாரோ பெயர் சொல்லிக் கூப்பிட்டார்கள் . மேலே பார்த்தபோது என்னுடன் படித்த டொக்டர் ஜெயச்சந்திரன் நண்பர்களுடன் டொக்டர்கள் விடுதி பல்கனியில் நின்றபடி ‘உள்ளுக்கு வாடா. இல்லையேல் உடனே வீடு செல்’என்றான்.

அவனது வார்த்தைகள் கேட்டாலும் அர்த்தம் புரியாமல் சிரித்தபடி நின்றபோது–

‘மீண்டும் ஆமிட்ட அடிவாங்கப் போகிறாய் உடனே போ’ – என்றான்

சுற்றிவர எவரும் இல்லை ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என நினைத்துக்கொண்டு எனது மோட்டார் சைக்கிளை திருப்பிக்கொண்டு
டொக்டர் பத்மநாதன் வீடு சென்றேன்.

‘உனக்கு விடயம் சொல்லத்தான் மறித்தேன். இரவு பெடியங்கள் சில ஆமிக்காரரைக் கொன்று விட்டார்கள் என்ற ஆத்திரத்தில் ஆமி வந்து இங்குள்ள பல கார்களை அடித்து நொருக்கியது பிள்ளையார் விலாஸக்குச் சொந்தமான வேனும் நொருக்கப்பட்டது. மீண்டும் வருவார்கள் என்பதால் வீதிகள் எங்கும் வெறிச்சோடிக்கிடக்கிறது. இன்று எந்தக் கடையும் திறக்கமாட்டார்கள்.’ என்றார் பத்மநாதன்.
மகனுடைய பிறந்தநாள் கேக்கை மறந்து விட்டு குறுக்குவழியால் சுண்டிக்குழி சென்று விடயத்தை மாமா மாமியிடம் சொன்னேன்.
இப்பொழுது மனைவி மாலையில் வேலை முடித்து எப்படி வீட்டுக்கு வருவாள் என்ற கவலை மனதில் படிந்து கொண்டது. வைத்தியசாலையில் இருக்கும்வரையும் பாதகமில்லை. வரும் வழியில் ஏதாவது நடக்காமல் இருக்கவேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தோம்.

மாலையில் எனது மனைவி வந்ததுமல்லாமல் அந்த கேக்கையும் கொண்டு வந்தாள்.

‘எப்படி வந்தாய்?” எனக்கேட்டேன்.

‘நடந்துதான்.’ என்றாள்.

பல விதத்தில் பெண்கள் ஆண்களைவிட தைரியசாலிகள் என புரிந்து கொண்டேன். இராணுவத்திற்குப் பயந்து நான் கேக்கை விட்டுவிட்டு வந்தாலும் – தனது மகனுக்காக கேக்கை எடுத்துக்கொண்டு குறைந்தது மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்ததன் காரணம் தாய்மையா? அல்லது பெண்களுக்குரிய அசாத்திய துணிவா?அல்லது யதார்த்த நிலைமையை புரிந்துகொள்ளாத அறியாமையா?
எனது மகனின் பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமையன்று இரண்டு குடும்பங்களுடன் நடந்தது.

24 ஆம் திகதி இரவு கொழும்பில் நடந்த எந்தச் சம்பவங்களும் தெரியாமல் – நான் திங்கட்கிழமை காலை வழமைபோல் எழுந்து – அரசாங்க மோட்டார் சைக்கிளில் மதவாச்சி சென்றேன். வழி எங்கும் எதுவித தடைகளும் இருக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கந்தசாமி என்ற பிரமுகர் – பருத்தித்துறைத் தமிழர் அந்தப்பிரதேசத்தில் இருந்ததால் அங்கு பாரதூரமான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.

எனது மகனின் பிறந்தநாள் இல்லாமல் இருந்திருந்தால் – நான் நிச்சயமாக கொழும்பில்தான் நின்றிருப்பேன். வானுலத்தில் இருந்துதான் இந்த சுய வரலாறு எழுதியிருக்க வேண்டியிருக்கும்.

அடுத்தநாள் என்னிடம் இருந்த ஒரே ஒரு விலாசத்தில் இருந்தவர்களிடம் சென்று உதவி கேட்பது என நினைத்தேன். எனது மனைவியின் சகோதரன் தந்த முகவரியில் உள்ளவர்கள் ஏற்கனவே எனக்கும் தெரிந்தவர்கள். என்னோடு இந்துக்கல்லூரியில் படித்து, பேராதனை பல்கலைக்கழகம் சென்று என்ஜினியராக தற்பொழுது அமெரிக்காவில் வசிக்கும் செல்வகுமாரின் தந்தையான காசி விஸ்வநாதன் மாஸ்டரின் வீடு அமைந்தகரையில் இருந்தது. ஓட்டோவில் மாஸ்டரின் வீட்டைத் தேடிப் பிடித்துக் கொண்டு சென்றபோது அங்கு என்னுடன் இந்துக்கல்லூரியில் படித்த சாவகச்சேரியை சேர்ந்த பரந்தாமன் இருந்தார்.

அவுஸ்திரேலியா

எனது வேலை பல்கலைக்கழகத்தில் 89 மார்கழியில் முடிந்துவிட்டது. வேலையற்று முதுமாணிப் பட்டதாரியாக நின்ற எனக்கு, சில கிழமைகளில் புத்தருக்குப்போல் ஒரே நாளில் வராது ஞானம் படிப்படியாக வந்தது. நான் படித்த விஞ்ஞான மேல்படிப்பு நமக்கு அதிக தூரம் வராது. நான் நிழலாகத் தொடரவேண்டியது எனது மிருக வைத்திய துறையே. அதுவே எனக்கும் குடும்பத்திற்கும் சோறு போடும் என்பதே அந்த ஞானமாகும்

மிருக வைத்தியத்தேர்வு இலகுவானதல்ல . இலங்கையில் படித்தது இங்கு காணாது. இலங்கையில் ஒரு சில நாட்கள் குதிரையைத் தடவியது மட்டுமே . மிகுதி புத்தகத்திலே . அங்கு தெருவில் நிற்கும் நாய்களுக்கு அதிக வியாதிகளில்லை. ஆனால், இங்கு படுக்யைறையில் வாழ்பவற்றிற்கு மனிதர்கள்போல் பல நோய்களுண்டு. அத்துடன் பத்து வருடத்தில் கலவரங்கள்- அதில் உயிர் தப்ப ஓடியது அதன்பின் வேலையற்ற காலங்கள் எனப் பல பிரச்சினைகளினால் மூளையில் இருந்த பல விடயங்கள் கரைந்து போய்விட்டன.
கால அவகாசமெடுத்து மிருக வைத்தியத்திற்கான செய்முறைப் பரீட்சைக்குப் படிக்கவேண்டும். அரசாங்கத்தின் உதவிப் பணத்தில் உயிர்வாழ முடியும். ஆனால், அதற்குமேல் வீட்டு வாடகை – குழந்தைகள் சம்பந்தமான செலவு எனப் பல இருக்கின்றன. இந்தச் செலவுகளும் குழந்தைகள்போல் எமக்கு முன்பாக வளர்ந்து கொண்டிருந்தன. நானும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம்

இந்தக்காலத்தில் இலங்கையில் எனக்கு மிகவும் வேண்டிய ஒருவர் -எல்லோராலும் TRRO கந்தசாமி என அழைக்கப்படுபவர் . தமிழகத்தில், இலங்கை அகதிகளுடன் நான் மருத்துவ பணிகளில் ஈடுபட்டபோது எனக்கு உதவியவர்.

பலகாலமாக ஈழ அகதிகள் விடயங்களில் தனது வாழ்வை அர்ப்பணித்தவர். இங்கிலாந்தில் வசதியாக வாழ்ந்த சட்டத்தரணி அவர். இலங்கை- இந்திய உடன்படிக்கையின் பின்பாக மக்களுக்கு உதவி செய்வதற்காகத் தனதும் நண்பர்களினதும் பணத்துடன் யாழ்ப்பாணம் வந்தவரை அக்காலப்பகுதியில் இனம் தெரியாத சிலர் கொலை செய்துவிட்டனர்.

அவரைக்கொன்றது ஈரோஸ் என்ற இயக்கமென பின்னர்தான் அறிந்தோம். அவரது கொலை எம்மை அதிரவைத்தது . TRRO கந்தசாமி அவர்களது வாழ்வையும் சமூகப்பணிகளையும் நினைவுகூரும் அஞ்சலிக்கூட்டங்கள் மெல்பனிலும் சிட்னியிலும் நடைபெற்றன.
மெல்பன் கூட்டத்தில் பேசுவதற்காக நான் சிட்னியிலிருந்து அழைக்கப்பட்டிருந்தேன். பின்னர் சிட்னியில் தமிழ் மனித உரிமைகள் அமைப்பினாராலும் அக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் கலந்துகொள்வதற்காக மெல்பனிலிருந்து நண்பர் எழுத்தாளர் முருகபூபதி வந்தார் .
அன்று எனது வீட்டுக்கு வந்த அவரே எனது இரண்டு பிள்ளைகளையும் முதல் முதலாக மக்டொனால்ட்ஸ்க்கு கூட்டிச் சென்றவர் . இந்தச் சம்பவத்தை நான் மறந்துவிட்டேன். ஆனால் எனது மனைவியின் மனதில் பலகாலமாக இருந்த சம்பவமிது.. இதை இங்கு ஏன் சொல்கிறேன் என்றால் ஆண்கள் பல விடயங்களை இலகுவாக மறந்துவிடுவார்கள் . பெண்கள் தங்களுக்கோ அல்லது தங்கள் குழந்தைகள் சார்ந்தோ நடந்த சிறு விடயங்களையோ கூட மறக்கமாட்டார்கள்.

இன்னுமொரு ஒரு சுவாரசியமான சம்பவத்தையும் சொல்லாது விடமுடியாது . இலங்கை – இந்திய ஒப்பந்தத்தால் உருவாகிய மாகாணசபையை நான் ஆதரித்ததால், இங்குள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என்மீது ஆத்திரம் கொண்டார்கள். மற்ற நாடுகள் போல் அவுஸ்திரேலியாவில் வன்முறை செய்யமுடியாது. இங்குள்ளவர்கள் இந்த நாட்டின் சட்டத்தை மதித்து நடக்கவேண்டுமென்ற நல்லெண்ணம் கொண்டவர்கள் என நீங்கள் நினைத்தால் அது தவறு . ஐரோப்பாவைப்போல் அல்லாது அவுஸ்திரேலியா கடல் சூழ்ந்த கண்டமாகும். அதனால் எதனையும் செய்துவிட்டு மற்ற நாடுகளுக்குப் பாயமுடியாது.

என்மீது இவர்கள் புதிதான சித்திரவதை முறையை இங்கு கையாண்டார்கள். இரவு பன்னிரண்டு அல்லது ஒரு மணியளவில் எங்கள் வீட்டுக்குத் தொலைபேசி எடுத்து, ஒவ்வொரு நாளும் என்னைத் தூசண வார்த்தைகளால் திட்டுவார்கள் . பின்னாளில் தொலைபேசியை நாங்கள் எடுக்காது விட்டாலும், அழைப்பு தொடர்ந்து வரும். இதனால் நடந்த முக்கிய நன்மை என்னவென்றால், முன்னிரவில் குழந்தைகளுடன் உறங்கிய எனது மனைவி, பன்னிரண்டு ஒரு மணிக்கு எழுந்து படிப்பார். இவர்களது இந்த தொலைபேசி ( தொல்லைபேசி ) சேவையே எனது மனைவியை மருத்துவத்துறையில் எழுத்து மூலமான பரீட்சையில் சித்தியடைய வைத்தது.
இப்படியாகச் சித்தியடைந்தவுடன் விக்ரோரிய மாநிலத்தின் தென்மேற்கே உள்ள வார்ணம்பூல் என்ற சிறிய நகரத்தின் வைத்தியசாலையிலிருந்து எனது மனைவிக்கு வேலைக்கு வருமாற அழைப்பு வந்தது .

சிட்னி வாழ் விடுதலைப்புலி ஆதரவாளர்களுக்கு நன்றி கூறியபடி, அவர்களினது உதவியால் கிடைத்த வேலைக்காக இரண்டு வருட கால சிட்னியின் வாசத்தையும் அங்கு நான்கு வீடுகள் மாறி மாறி அலைந்த வாழ்வையும் துறந்து எங்களது ஹோண்டா வாகனத்தில் வார்ணம்பூலை நோக்கிப் பயணமானோம்.

ஹோண்டா ஸ்ரேசன் வாகனத்தின் பின் பகுதியில் தொலைக்காட்சி பெட்டியையும் மற்றும் துணிமணி பெட்டிகளையும் அடைந்து கொண்டு வார்ணம்பூல் நோக்கி புறப்பட்டோம் .

கிட்டத்தட்ட 1100 கிலோமீட்டர்கள் பயணம் செய்யவேண்டும். அந்தக்காரில் வானோலி மட்டுமே உள்ளது. ஒலி நாடா போடமுடியாது . எனது சீட்டின் பின்பகுதியில் ஒரு ஒலிநாடா உள்ள வானொலியை வைத்து தமிழ்ப்பாடல்களைக் கேட்டபடி பிரயாணித்தோம்.
மெல்பனில் தங்கி ஓய்வெடுத்து, மேற்கு நோக்கிய தொடர்ச்சியான பயணத்தில் நானே சாரதி . மனைவிக்கு அப்போது வாகனம் ஓடத்தெரியாது . இது முப்பது வருடத்திற்கு முன்பான நிலைமை. இப்பொழுது நான் வாகனம் ஓட்டும்போது எனது மனைவி , மகள், மகன் எல்லோரும் எனக்கு வாகனம் எவ்வாறு செலுத்தவேண்டும் எனக்கற்றுக்கொடுக்கிறார்கள்.

1990 ஆண்டு தைமாத இறுதியில், வெம்மையான கோடைக்காலம். சூரியன் ஓசோனது ஓட்டைக்குள் நுளைந்து நிலத்தை வறுத்தபடியிருந்தான். கண் திறந்து பார்க்கக் கூசும் அளவுக்கு வெளிச்சம். காருக்கு ஏர் கண்டிஷனும் இல்லை .
இப்படி வார்ணம்பூலுக்கு மாலையில் பயணித்தபோது நள்ளிரவுத் திருடனாக ஒரு நோய் வந்து பிடித்துக்கொண்டது. சிறு வயதில் என்னை வாட்டி எடுத்த ஆஸ்த்மா எனக்கு பன்னிரண்டு வயதாகியதும் அற்றுப் போயிருந்தது. மீண்டும் இருபது வருடங்களின் பின்னர் வந்தது.

நல்ல வெய்யில் நாளில் அவுஸ்திரேலியாவில் வளரும் புற்கள் மற்றும் சிறிய தாவரங்களின் பூக்களின் மகரந்தங்கள் வெடித்துச் சிதறி, பெண்பூக்களைத் கருக்கட்டலுக்கு தேடும்போது, அந்த பருவகால மாற்றம் எமது மூக்கின் சுவாசக்குழாய்களில் மூக்கரிப்பையும் பின்பு மார்பில் ஆஸ்த்மாவையும் உருவாக்குகின்றன.

வார்ணம்பூல் போகும் பாதையில், அவுஸ்திரேலியத் தென்கரையின் சமுத்திரத்தின் அலைகள் பாறைகளை செதுக்கி சிற்பங்களை உருவாக்கியிருக்கும் காட்சிகளைக் காணலாம். இங்குதான் பிரசித்தி பெற்ற பன்னிரண்டு சீடர்கள் என்ற கற்பாறைகள் உள்ளன . வீதியின் ஒரு பக்கம் பாறைகளில் மோதி இசையெழுப்பும் சமுத்திரம். மறுபக்கம் பச்சைப்பசேலன நறுமணம் வீசும் யூகலிகப்ரஸ் காடு. அதனிடையே கொண்டை ஊசியாக வளைந்து ஏறி இறங்கும் பாதை . ரம்மியமாகத்தான் இருக்கும்

ஆஸ்த்துமாவுடன் தும்மலும் இணையும். இருமியவாறு, காற்றை நுரையீரலுக்குள் இழுத்தபடி செல்பவனுக்கு இயற்கையின் சுந்தரத்தை எப்படி ஆராதிக்க முடியும் ?
நன்றி அம்ருதா
—0—
–>

“7 கரையில் மோதும் நினைவலைகள்: கோழிகூவும்பருவம்” மீது ஒரு மறுமொழி

  1. அருமை! பெருமை! இனிமை! உங்கள் துணைவியாரையும் எழுத ஊக்குவிக்கவும்!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.