– கருணாகரன்
ஈழயுத்தம் முடிந்த பிறகு, 2010 இல்தான் நடேசனுடன் அறிமுகம் கிடைத்தது. புலம்பெயர் சமூகப் பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடந்த சந்திப்பில் பூபதியும் நடேசனும் வேறு சில நண்பர்களும் வந்திருந்தனர். முருகபூபதியே நடேசனை அறிமுகப்படுத்தினார்.
அதற்கு முன்பு அவுஸ்திரேலியாவில் “உதயம்” என்ற பத்திரிகையை நடத்துகிறார். வண்ணாத்திகுளம் என்ற நாவலை எழுதியவர். மெல்பேணில் புலிகளின் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கும் ஆள் என்ற அளவிலேயே நடேசனை அறிந்திருந்தேன். யுத்தம் முடிந்த பிறகு மாறியிருந்த சூழலில் நடேசனும் அவுஸ்திரேலியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வரக் கூடியதாக இருந்தது. நானும் வன்னியிலிருந்து யாழ்பாணம் செல்ல முடிந்தது. முதல் சந்திப்பிலேயே அவருடைய இயல்பையும் நோக்கையும் அடையாளம் கண்டேன். முக்கியமாக போரை முற்றாகவே வெறுத்தார் நடேசன். சனங்களுடைய வாழ்க்கை பாதுகாப்புடையதாக, உயர்வடைந்தாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். நடைமுறைகளின் யதார்த்தத்தைப்பற்றிச் சிந்தித்தார். எத்தகைய உயர்வான விருப்பங்களாக இருந்தாலும் அவை கற்பனையைத் தாண்டி நிஜமாக முடியாதென்றால் அவற்றைப் பற்றிப் பொருட்படுத்தவே வேண்டியதில்லை என்ற நிலைப்பாட்டோடிருந்தார். இவைதான் நடேசனுக்கும் பிற பொதுப்போக்கினருக்குமிடையிலான வேறுபாடுகளாக இருக்கலாம் என்று அந்தச் சந்திப்பிலேயே புரிந்தது. இவ்வாறான நிலைப்பாட்டிலிருப்பது, இவற்றை வலியுறுத்திச் சொல்வது என்பதற்கப்பால் தன்னால் என்ன செய்ய முடியும் என்று சிந்தித்துச் செயற்படுகிறவராகவும் இருந்தார் நடேசன். அதாவது Practicalist ஆக. ஒரு Activist ஆக. இது நடேசன் மீது கவனத்தை உண்டாக்கியது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த சனங்களுக்கு என்ன வழிகளில் உதவலாம்? அவர்களை அந்த நெருக்கடியான வாழ்க்கைச் சூழலிலிருந்தும் மோசமான அரசியல் வீழ்ச்சியிலிருந்தும் எவ்வாறு மீட்டெடுக்கலாம்? என்று அவர் சிந்தித்ததும் முயற்சித்துக் கொண்டிருந்ததும் வித்தியாசமான இருந்தது. இதற்காகத் தன்னுடைய நண்பர்களையும் சக எழுத்தாளர்களையும் அழைத்துக் கொண்டு இலங்கைக்கு இரண்டு மூன்று பயணங்கள் வந்திருந்தார். பாதிக்கப்பட்டிருந்த வன்னிக்கும் வந்து சனங்களைப் பார்த்து உதவிகளை ஆரம்பித்தார். நடேசனுடைய உதவிகளின் மூலமாக அன்று பல குடும்பங்கள் தங்களுடைய அடிப்படைத் தேவைகளை ஓரளவுக்கு நிறைவு செய்தன. பல பிள்ளைகள் தொடர்ந்து படித்தனர். சில பிள்ளைகள் பல்கலைக்கழகப் படிப்பைச் சிரமமில்லாமல் தொடர முடிந்தது. தான் பிறந்த ஊரான எழுவைதீவு என்ற சின்னஞ்சிறிய தீவுக் கிராமத்தில் ஒரு மருத்துவமனையை அங்குள்ள சனங்களுக்கென நிறுவி, அதை அரசாங்கத்திடம் ஒப்படைத்தார். இப்படிப் பல பொதுப்பணிகள் நடந்தன.
இதேவேளை இந்தக் காலப்பகுதியில் நடேசனுடைய புத்தகங்களை வெளியிடும் பணிகளும் ஒரு பக்கத்தில் நடந்து கொண்டிருந்தன. இதில் எனக்கும் நடேசனுக்குமிடையிலான நெருக்கம் மேலும் கூடியது. மகிழ் பதிப்பகத்தின் மூலமாக அவருடைய நூல்களைப் பதிப்பித்தோம். அவரும் நிறைய எழுதிக் கொண்டிருந்தார். ஆனால், அவர் நடத்தி வந்த உதயம் பத்திரிகை நின்று விட்டது. அதற்கான தேவைகள் குறைந்திருக்கலாம். அல்லது நடைமுறைப் பிரச்சினைகள் ஏதாவது உருவாகியிருக்கலாம். உதயத்தில் கொண்டிருந்த கவனத்தையெல்லாம் இலக்கியத்தின்பால் ஈடுபடுத்தியதன் விளைவாகவோ என்னவோ தொடர்ச்சியாக மூன்று நாவல்களையும் (அசோகனின் வைத்தியசாலை, கானல்தேசம், பண்ணையில் ஒரு மிருகம் (இந்த நாவல் இன்னும் வெளியாகவில்லை) மேலும் ஒரு சிறுகதைத் தொகுதியையும் அனுபவக்கதைகளின் பெருந்தொகுதி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார் நடேசன். ஏற்கனவே இரண்டு நாவல்களும் (வண்ணாத்திகுளம், உனையே மயல்கொண்டு) சில கதைகளும் வெளியாகியிருந்தன.
இதை விட நடேசன் ஈழப்போராட்டத்தில் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்ட வரலாற்றுப் பதிவாக (“எக்ஸைல்) வந்தது. இப்படியே எழுத்தும் பிற களச் செயற்பாடுகளுமாக தொடர்ந்து கொண்டிருக்கும் நடேசனின் மேலும் ஒரு கதைத்தொகுதியாக இப்பொழுது “அந்தரங்கம்” வந்திருக்கிறது.
இதையெல்லாம் இங்கே ஏன் சொல்ல வேண்டியிருக்கிறது என்றால், நடேசனின் எழுத்துகளுக்கும் இவற்றுக்கும் உள்ள தொடர்பு அப்படியானது. அவருடைய கதைகள் இரண்டு வகையான அடையாளங்களைப் பிரதானப்படுத்திக் காண்பிக்கின்றன. ஒன்று, அவருடைய சொந்த வாழ்க்கையினுடைய அடையாள நிழல்கள். இது மிருக வைத்தியத்துறை சார்ந்த, அதனோடிணைந்த வாழ்கள அனுபவங்கள். மற்றது அவருடைய கருத்துநிலையின் அடையாளங்கள். நடேசனின் அரசியல் நோக்கு, சமூக நோக்கைச் சார்ந்தவை. இவை இரண்டையும் மையமாக வைத்தே நடேசன் தன்னுடைய புனைவுலகத்தைக் கட்டமைத்திருக்கிறார். இதனால் நடேசனுடைய கதைகளைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு ஒரு சுயசரிதத்தைப் படிப்பதைப்போன்ற உணர்வெழலாம். மிருக வைத்தியத்துறையில் படித்தது, படித்த பின்பு வேலை செய்த இடங்கள், அந்தச் சூழலின் மனிதர்கள், அவர்களுடைய வாழ்க்கை, அந்தந்தக் களத்தின் சமூக, அரசியல் அசைவுகள், இவற்றில் நடேசனின் ஊடாட்டம் என இது அமையும். மேலும் இவற்றோடு இனமுரண்களின் விளைவாக நாட்டை விட்டு இந்தியாவுக்குப் பெயர்ந்தது, பிறகு அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தது, அவுஸ்திரேலியாவில் நிலைகொள்வதற்குப் பட்டபாடுகள், அப்படியே மிருக வைத்தியத்துறையில் படித்து வேலை செய்வது, வாழ்வது வரையில் இந்தச் சரிதம் உள்ளோட்டமாகவும் ஊடுபாவாகவும் கலந்திருக்கிறது. இதற்குள் சமகாலத்தில் (1970 களுக்குப் பிறகான) இலங்கை அரசியல் மற்றும் இலங்கைத் தமிழ்ச்சமூகத்தின் வாழ்க்கையோட்டத்தின் போக்குக் குறித்தும் ஆயுதந்தாக்கிய விடுதலைப் போராட்டத்தின் சிதைவு பற்றியும் நடேசனின் அதிகாரப்போட்டிகள் உண்டாக்கிய சலிப்பு, விரக்தி, கோபம், ஆற்றாமை போன்றனவும் கலந்துள்ளன.
அநேகமான எழுத்தாளர்களுடைய வழிகளும் இப்படித்தான் அமைவது வழமை. ஏதோ ஒரு வகையில் அவர்களுடைய எழுத்துகளில் சொந்த வாழ்வின் அனுபவம் ஊடாடிக் கொண்டிருக்கும். இந்த அனுபவம் பிறகு இன்னொரு நிலையில் பரிமாணமடைந்து அவர்களுடைய சிந்தனை அனுபவமாகும். இதிலேதான் மீறிச் செல்லும் எழுத்துகள் வருவதுண்டு. புதிய களமாகவும் உணர்தலாகவும்.
நடேசன் தன்னுடைய அனுபவங்களோடிணைந்த எழுத்துப் பரப்பிலேயே கூடுலாகப் பயணிக்கிறார். ஆனால் அசாதாரணமானவற்றைப் பார்க்க விளைகிறார். இந்த அசாதாரணமே நடேசனைக் குறித்தும் அவருடைய எழுத்துகளைக் குறித்தும் நம்முடைய கவனத்தை ஈர்ப்பன. இந்தத் தொகுப்பிலுள்ள அநேகமான கதைகள் அசாதாரணங்களின் அடையாளமாகவே உள்ளன. ஆனால், இந்த மாதிரியான அசாதாரணங்களைக் கொண்டதாகவே நம்முடைய (ஈழ) வாழ்க்கை கட்டமைந்திருந்தது என்பதை யாரால் மறுக்கவியலும்? அது எத்தனை வலிமிக்கதாக இருக்கின்றபோதும். உதாரணம், கரும்புலிகள்.
புலிகள் தங்களுடைய அரசியலுக்கான போராட்ட வடிவமாக கரும்புலிகளை உருவாக்கினாலும் தமிழ்ச்சமூகத்தின் சமகால வாழ்க்கையில் அது அசாதாரணமான ஒரு நிகழ்ச்சியே. இதை, இப்படி ஒரு உருவாக்கம் நிகழும் என யாருமே ஒரு போதும் எண்ணிப்பார்த்ததில்லை. ஆனால், யதார்த்தத்தில் நடக்கும் ஒன்றாகியது. மட்டுமல்ல, இதைக் கொண்டாடும் மனநிலையும் உருவாகியது. இன்றும் அந்த மனநிலையில் தளர்வு ஏற்பட்டதென்றில்லை. அதேவேளை இதைக்குறித்த கடுமையான விமர்சனங்களும் இன்னொரு முனையில் உண்டு. இப்படித்தான் இந்தக் கதைகள் ஒவ்வொன்றிலும் உள்ளோடியும் தெறித்துமுள்ள அசாதாரணங்கள் பலவும். ஒரு பக்கத்தில் இராணுவத்தை முற்றாக மறுக்கும் தமிழ்ச்சமூகம். மறுபக்கத்தில் இராணுவத்தோடு உறவைக் கொண்டிருக்கும் தமிழ்க்குடும்பம். ஆனால், இரண்டும் உண்மை.
இதைப்போல இந்தக் கதைகள் பலவற்றில் அதிக தூக்கலாக இருப்பது பாலுணர்வும் பாலுறவும். (Sex) திரைமறைவில் நிகழ்கின்ற பாலுறவுகள் எப்படியெல்லாம் அரசியலிலும் தனி வாழ்விலும் தாக்கம் செலுத்துகின்றன?
செல்வாக்கோடுள்ளன என்று உணர்த்துகின்றன. சில சமயம் அதுவே ஆயுதமாகிறது என்பதையும் உணர்கிறோம். இவையெல்லாம் நடக்குமா? இப்படியும் இருக்குமா? இவற்றை நம்பலாமா? என்ற கேள்விகள் எழுந்தோறும் இவை நடந்தன. நடக்கக் கூடியனவாக இருந்தன, நடக்கின்றன என்ற பதிலும் கூடவே பதிலாக வருகிறது. தமிழ் வாழ்க்கையில் மட்டுமல்ல, சிங்களச் சமூகத்தின் வாழ்க்கையிலும் இதனைக் காணலாம்.
அரசியல் என்பதும் அதிகாரவர்க்கம் என்பதும் எங்கும் எந்தக் காலத்திலும் எந்தச் சமூகத்திலும் ஒன்றாகவே தொழிற்படும் என்பது பல்வேறு நிலைகளில் தொடர்ச்சியாக நிரூபிக்கப்பட்டு வரும் பேருண்மை. இதை இந்தக் கதைகளும் சொல்லிச் செல்கின்றன.
என்னதான் உண்மைகளை எந்தக் கோணத்தில் சொன்னாலும் நடேசனின் கதைகள் இன்றைய தமிழ்ப் பொது மனநிலைக்குச் சவாலானவையே. ஆனால், அதைப்பற்றிய கவலைகள் எதுவும் நடேசனுக்கில்லை. அவரைப் பொறுத்தவரையில் மறுபக்கம் என்ன என்பதைக் காட்டவேண்டிய பொறுப்பும் கடப்பாடும் தனக்குண்டென நம்புகிறார். அந்த நம்பிக்கையே இந்தக் கதைகளை எழுத வைத்துள்ளது. இந்தக் கதைகளுக்கும் வரலாற்று முக்கியத்துவமுண்டு. என்னதானிருந்தாலும் உலகமும் மனித மனமும் எப்போதும் மற்றமைகளைக் குறித்தும் பன்மையைக் குறித்தும் நகர்ந்து கொண்டேயிருக்கும். அந்த நகர்வின் அடையாளத்தில் இந்தக் கதைகள் அமையப்பெறும். ஆனால், நடேசன் அந்தப் பன்மைத்துவத்தை நிராகரிக்கும் விதமாக தன்கோணத்தில் மட்டுமே நின்று நோக்குகிறாரே என்ற வரலாற்றுக் கேள்விக்கும் இந்தக் கதைகளே பதிலளிக்க வேண்டியிருக்கும். அந்தப் பதிலின் தன்மையே வரலாற்றுப் பெறுமதியாகும்.
மறுமொழியொன்றை இடுங்கள்