காட்டுத் தீ (2009)

ஆஸ்திரேலியா என் ஆஸ்திரேலியா!

– நடேசன் –

எந்தக்காலத்திலும் இல்லாமல் இந்த கோடைகாலம் எப்பொழுது முடியும் என காத்திருந்தேன். விக்ரோரியாவில் இந்தக் காலத்தில் பற்றிய காட்டுத் தீ 210 மனித உயிர்களை பறித்து விட்டது. இரண்டாயிரத்துக்கு(2029) மேற்பட்ட வீடுகள், இதைவிட தொழிற்சாலைகள், விவசாயப் பண்ணைகள் மற்றும் வளர்ப்பு மிருகங்களுடன் காட்டு விலங்குளும் ஆயிரக்கணக்கில் கருகிவிட்டன. ஆஸ்திரேலியாவில் சமீப காலத்தில் இவ்வளவு அதிகமானவர்கள் ஓரே நேரத்தில் இறந்தது இல்லை. மனித உயிர்களுக்கு பெருமதிபபு அளிக்கும் இந்த நாட்டின் மனசாட்சியை உலுக்கிவிட்டது. ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட்டும் விக்ரோரியன் பிரீமியர் ஜோன் பிரம்பி ஆகியோர் கண்ணீர் விட்டது பார்ப்பவர் மனதை நெகிழவைத்தது.

நான் ஆஸ்திரேலியாவுக்கு வந்த காலம் தொட்டு மெல்பேனில் சனல் 9 இல் செய்தி வாசித்த பிரயன் நெயிலரும் அவரது மனைவியும் நெருப்பில் ஓன்றாக கருவிட்டார்கள். பிரயன் நெயிலரது முகமும் தெளிவான உச்சரிப்போடு இவர் செய்தி வாசிக்கும் தோரணையும் இன்னும் மனதில் வந்து போய்கொண்டிருக்கிறது. இதே வேளை எனக்கு அறிமுகமான ஒரு மிருக வைத்தியரும் இறந்து விட்டார். இப்படி தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என இந்தத் தீயில் கருவிட்டார்கள்.

மனதுக்கு மிகவும் சங்கடமாக இருக்கும் விடயம் மிகவும் பாதிக்கப்பட்ட இடமான மரிஸ்வில் (Marysville) கடந்த ஈஸ்டர் விடுமுறையின் போது இரண்டு நாட்கள் அங்கு தங்கி அந்தப் பகுதியின் அழகை இரசித்துள்ளேன். ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் தெற்கு வடக்காக மலைத்தொடர் விக்ரோரியாவில் இருந்து குயின்ஸ்லாண்டு வரை செல்கிறது. இந்தப்பகுதியில்தான் ஆஸ்திரேலியாவின் பெரிய ஆறுகள் பாய்கின்றன. இந்தப்பிரதேசத்தில் மேற்குப் பகுதி கோடைகாலத்தில் காய்ந்துவிடும். சாதாரணமாக 40 சென்ரிகிரேட் வெப்பம் இந்த மலைப்பகுதிகளில் கிட்டத்தட்ட 45 சென்ரிகிரேட்டுக்கு போய்விடும்.

யூக்கலப்ட்ஸ் மரத்தை முதன்மையாக கொண்டகாடுகள் பலவிதத்தில் நெருப்பு பற்றும் தன்மை கொண்டவை. மரங்களில் உள்ள எண்ணையும் காடுகளுக்கு அடிப்புறத்தில் சேர்ந்துள்ள சருகுகள் இலகுவாக தீ பற்றும் எரிபொருளாகிறது. இத்துடன் கோடைவெப்பமும் வேகமான காற்றும் தீயை பல மடங்கு வேகத்துடன் பரவச் செய்கிறது.

இந்த நிலையில் ஆட்கள் எறியும் சிகரட் துண்டுகளும் அல்லது வேண்டுமென தங்களது திரில் உணர்வுகளுக்காக நெருப்பை கொளுத்துபவர்களும் இந்த காட்டுத் தீயின் காரண கர்த்தாவாகிறார்கள். இவர்கள் நெருப்பு பற்றி எரிவதை பார்த்து சந்தோசமும் உயிர்கள் உடைமைகள் அழிவதில் ஒரு திருப்தியும் காணும் ஒரு மனநோயாளர்கள் போல் இருக்கிறார்கள். இவர்களை ஆரம்பத்திலேயே இனம்கண்டு அறிந்து கொள்வதே தீயைத்தடுக்க ஒரே வழியாகும்

தற்போது மறிஸ்விலில் முப்பத்தி எட்டுப்பேரை கருக்கிய தீயை கொளுத்திய நபரை விக்ரோரியா பொலிஸ் அடையாளம் கண்டு விட்டது. இதேபோல் பதினொருவரை பலிகொண்டு முப்பது வீடுகளும் அழிந்த சேர்ச்ஹில் காட்டுத்தீ சம்பவத்துக்கு பொறுப்பான ஒருவரின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

வழமையான காட்டுத் தீயில் காடுகள் எரிந்தாலும் ஆஸ்திரேலிய காடுகளில் உள்ள மரங்கள் முற்றாக அழிவதில்லை. ஓரு சில வருடத்தில் மீண்டும் அடையாளம் தெரியாது துளிர்த்து விடும்.இது ஒருவிதத்தில் காடுகள் இயற்கையாக தங்களை
புதுப்பித்து கொள்ளுதல் போன்றது.

கடந்த இருநாறு வருடங்களாக காடுகளை அழித்து விவசாயம், மிருக வளர்ப்புகளில் ஈடுபட்டு வந்த ஆஸ்திரேலிய குடியேற்றவாசிகள் ஒரு புறமாக இருக்கும் போது அறுபதுக்குப் பின் வந்த இயற்கைத்தன்மையையும் வனங்களையும் விரும்பும் மேல்தட்டு மத்திய வர்க்கத்தினர் காட்டுப்பிரதேசங்களை வாங்கியும் அதன் மத்தியில் வீடுகட்டிக்கொண்டு தாங்கள் இயற்கையோடு வாழ்பவர்கள் என்று தங்களை தாங்களே காதலிக்கும் மன நிலையில் வாழத் தொடங்கியதால் ஆஸ்திரேலியாவில் காடுகள் மத்தியில் பலர் வாழத் தொடங்கினார்கள். இவர்கள் வீடுகளை சுற்றியுள்ள காடுகளை சுத்தமாக வைக்கவோ அங்கு உள்ள மரங்களை வெட்டவோ இவர்களுக்கு அதிகாரம் கிடையாது. வெப்பமான கோடைகாலத்தில் இவர்களின் நிலைமை வீட்டருகே பெற்றோல் நிரப்பிய டாங்கரோடு வாழும் நிலை போன்றது.

இந்தக் காட்டுத் தீயில் தப்பியவர்களை சந்தித்தேன் அவர்களது அனுபவங்கள் கேட்பது மனத்தில் அதிர்வுகளை உருவாக்கும். ஓரு இலங்கை பறங்கியர் கூறினார் தனது கர்ப்பிணி மகள் பிரசவவேதனையில் ஆஸ்பத்திரிக்கு ஐந்து நிமிடம் முந்தி சென்றதால் தீயில் இருந்து தப்பக் கூடியதாக இருந்தது என்றார். ஆஸ்திரேலியர் ஒருவர் தனது தோட்டத்தில் நின்றபோது ஒரு கூட்டம் பறவைகள் பறந்து வந்து தனக்கு முன்பாக விழுந்து துடிதுடித்து இறந்தன என்றும், அத்துடன் தீ இராசட்சத பந்து போல் மலையடிவாரத்தில் இருந்து மலை உச்சியை நோக்கி சென்றதை தான் பார்த்ததாகவும் கூறினார்.

இந்தத் தீயில் இறந்தவர்களது இறுதிக்கணக்கு நிட்சயமாக சொல்லுவதில் அரசாங்கத்திற்கு பிரச்சினை உள்ளது. இறந்தவர்களில் சிலர் முற்றாக சாம்பராகிவிட்டதால் அடையாளம் காண்பது கஷ்டம். அடையாளம் காணாமல் இறந்தவர்கள் எண்ணிக்கையை உடனடியாகச் சொல்லமுடியாது. இதனால் இறுதி எண்ணிக்கையை சொல்வதற்கு பலகாலம் தேவைப்பட்டது.இந்த விடயம் என்னை ஆச்சரியத்துடன் பெருமைப்படவைத்தது. ஓவ்வொரு மனிதன் உயிருடன் இருக்கும்போது மட்டுமல்ல அவன் இறந்த பின்பும் அவனது தனித்தன்மை அவன் இருக்கும் நாடு மதிக்கும் போது அவன் பெருமை அடைகின்றான். இது ஒருவனை அந்த நாட்டுக்காக இரத்தம் சிந்தி உயிர்த்தியாகம் பண்ணவைக்கிறது. ஆஸ்திரேலியாவில் நான் கொண்டிருந்த மதிப்பை இந்த ஒரு விடயம் பலமடங்காக உயர்த்தியது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: