நடேசன்
“Happy families are all alike, every unhappy family is unhappy in its own way. “ ( குதூகலமான குடும்பங்கள் ஒன்றே போல் இருக்கும் . ஆனால் சந்தோசமற்றவர்களது குடும்பங்கள் ஒவ்வொன்றும் தனியானது “https://youtu.be/D1l2OgeFq9cதனது அன்னா கரீனினா நாவல் எதைப் பற்றியது என டால்ஸ்டாய் முதல் பந்தியிலேயே இவ்வாறு சொல்லிவிட்டார்.
கடலோரக் கிராமத்தின் கதை – தோப்பில் முகம்மது மீரானின் முதல் நாவல் என்றபோதும் மூன்றாவது பந்தியிலேயே கதையின் கரு வந்துவிட்டது.
“ வாப்பு என்ற ஐம்பது வயதான கூலித்தொழிலாளி வடுகன் அகம்மது கண்ணு , முதலாளியின் ஐந்து வயது மருமகனை இங்கே வா என்று மதிப்புக் குறைவாக கூப்பிட்டதை யாரோ கேட்டு முதலாளியிடம் முறையிட்டனர். முதலாளிக்குக் கோபம் வந்தது. வாப்புவைக் கூப்பிட ஆள் அனுப்பினார் . வாப்பு வந்து முதலாளியின் முன்பு நடுக்கத்தோடு பணிந்து நின்றான்
வெள்ளிக்கிழமை ஜும் ஆவுக்கு பின் கொத்துபா பள்ளியின் முன்னால் நிற்கும் விளக்கக்கல்லில் அவனைக் கட்டி வைத்து இருபத்தியொரு அடி கொடுக்க உத்தரவிட்டார் . “
அகமது கண்ணு முதலாளியின் கதையே கடலோரக் கிராமத்தின் கதையாகிறது . பிற்காலத்தில் மீரான் எழுதிய சாய்வு நாற்காலியில் காம உணர்வுக்கு தீனிபோட முஸ்தபா கண்ணு செய்யும் வேலைகளை இங்கு அகம்மது கண்ணு தனது அதிகாரத்தை அந்தக் கிராமத்தில் வைத்திருக்க கொலை மற்றும் பாடசாலைக்கு தீ வைத்தல் முதலான அக்கிரமங்களை செய்கிறார்.
வெறுக்கத்தக்க ஒரு கதாபாத்திரத்தை தனது முதல் நாவலிலே உருவாக்கியதுடன், முடிவை வாசகர்களுக்கு நியாயமாக தெரியும்படி தீர்மானித்திருக்கிறார் . அக்கிரமங்கள் செய்தவர்களை சித்திரிக்கும்போது, மனநிலை தவறியவர்களாக காண்பித்தல் பரவலாக ஏற்கக்கூடியதாக இருந்தபோதிலும், இலகுவான தண்டனையாகத்தான் அது தெரிகிறது.
ஆயிஷா , அவரது மகள். இறுதியில் அவள் தற்கொலை செய்வதன் மூலம் துன்பியல் தரும் நாவலாக முடிக்கப்பட்டுள்ளது .
தங்கள் என்ற சமய அறிஞர் பாத்திரம் இந்நாவலில் வருகிறது. சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்கள் வாழ்வின் துன்பங்களுக்கு ஷைத்தானை காரணமாக்கி அதனை அடக்குவதும் , வரம் கொடுப்பதும் அவரது வேலை. மிகவும் சுவாரசியமான பாத்திரம்.
ஒரு கிழவி , தனது பேரன் சோறுக்கும் மீனுக்கும் சண்டை போடுகிறான் என்று அவனைத் திருத்துவதற்காக தங்களிடம் கொண்டு வருகிறாள்
தங்கள், “ இது ஷைத்தானின் வேல . தண்ணி ஓதித்தாரோன். மூணு தரம் குடித்தாபோதும் . எல்லாம் சரியாகிவிடும் “ என்கிறார்.
கிழவி கையில் கொண்டு வந்த தண்ணீரைக் கொடுத்தாள் . அவர் ஊதியபோது அவரது எச்சில் சோப்பு நுரையாக அதில் மிதந்தது.
அதனை விரலால் கரைத்துவிட்டு பேரனைக் குடிக்கச்சொல்ல, அவன் எச்சில் என மறுக்கிறான்.
அப்போது கிழவி “ தங்கள் சுட்டகோழியை பறக்க வைப்பார் “ என்கிறாள்
அப்பொழுது பேரன்,
“அப்ப உம்மாவைப் பதினேளு வயதுக்காரியாக்குவாரா ? “ என்கிறன்
வாய்விட்டுச் சிரிக்காது மேலே செல்ல முடியாது .
தங்கள் , பிள்ளையில்லாத பாத்துமாவின காலில் நூலைக்கட்டி சாவித் துவாரத்துக்குள்ளாள் செலுத்தி , பரீது என்ற
இளைஞனிடம் கொடுத்து விட்டு, இருண்ட அறையில் குப்பி விளக்கு வெளிச்சத்தில் அந்தப் பெண்ணில் உடலில் உள்ள ரூகானியத்தை தங்கள் பிடிப்பதை மிகவும் அழகாக சித்திரிப்பது சுவாரசியமாக இருக்கிறது.
கடலோரத்து கிராமத்தின் பெண்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.
மாமியான பாத்திமா, திருமணத்தையெண்ணி அழும் மருமகள் ஆயிஷாவுக்கு சொல்லுவது: “எனக்கெல்லாம் புரியுது. நாம் வீட்டு மிருகம். ஊமைப்பிராணி நமக்கென்ன சுதந்திரமிருக்கு? ஒரு குஷ்டரோகியின் கையிலிருக்கும் தாலிக்கு கழுத்தை நீட்டிக் கொடுக்க சொன்னா நீட்டிக் கொடுக்கவும் அவர் படுக்கை அறையில் அவரோடு படுத்துக்கத்தான் ஜென்மங்களைப் பாழ்படுத்த விதிக்கப்பட்டஅனுசரணையுள்ள மிருகம் . என்னைப் பார்க்கல்லையா நீ! “
பாடசாலை ஒன்று அந்தக்கிராமத்திற்கு வரும்பொழுது அதை ஹறாமாக நினைத்து, ஊர் ஜனங்கள் அதை வெறுக்கிறார்கள் . அகம்மதுகண்ணு முதலாளி அதற்குத் தீவைக்க அவருக்காகக் கொலைகளைச் செய்த கையாளாகிய கறுப்பனை அழைத்து பாடசாலைக்குத் தீ வைக்கும்படி கேட்கிறார்
“நான் வெவரம் கெட்டவன் , கொடூரமானவன் . எல்லாம் எனக்குத் தெரியும். ஆனா நம்ம புள்ளைகளுக்குக் கண்ணைத் திறக்குற அந்த சரசுவதிக் கோவிலை நான தீவைக்கமாட்டேன் “
எனத் தீர்மானமாக மறுத்துவிடுகிறான். அதன்பின்பு ஒருவரையும் நம்பியிராத முதலாளி, தானே இறங்கி பாடசாலைக்கு நெருப்பு வைக்கிறார் .
முதலாளியின் மதநம்பிக்கை குறைவற்றதல்ல என்பதை மிகவும் துல்லியமாக நாவலாசிரியர் காட்டுகிறார்.
“தொழாத எவனும் வடக்கு ஊட்டிலே ஏறக்கூடாது “
முதலாளியிடம் ஏதாவது உதவி தேடிச் செல்பவர்கள் . இரண்டு மூன்று வாரங்கள் முன்னயே தொழுதுவிடுவார்கள் . முதலாளி காண்பதற்காகத் தொழுவார்கள் . சிலர் நெற்றியை தரையில் ஊன்றி அடையாளம் பண்ணுவார்கள்.
இப்படி படைக்கப்பட்ட பாத்திரம் அகம்மதுகண்ணு முதலாளியுடன் அதற்கு எதிர்மாறாக வரும் பாத்திரம் சிறா செட்டை விற்கும் மஹ்மூது.
அகம்மது கண்ணு முதலாளி போகும் பாதையோரத்தில் மூத்திரம் பெய்ததால் உருவாகிய கோபம் பள்ளிவாசல் – பாடசாலை – மகளின் கல்யாணத்தின் ஆடு வெட்டுவது எனத் தொடர்கிறது.
கரையோரக்கிராமத்தில் மஹ்மூது மற்றும் பாடசாலை ஆசிரியர் மஹ்பூப்கானைத் தவிர மற்றைய பாத்திரங்கள் எதிர்மறையானவை. முதலாளிக்கு அறியாமையாலும் , தெரிந்தும் துணை போகின்றன.
எதிர்காலத்தை எதிரியெனக் குரலெழுப்பியபடி, தன்னையும் தனது குடும்பத்தையும் சிதைக்கும் ஒரு பாத்திரத்தைக் கதாநாயகனாக்கி தனது முதல் நாவலாக வெளிக்கொண்டு வருவதற்கு முகம்மது மீரானுக்கு அசாத்திய துணிவு வேண்டும் . அதற்காக நாம் அவரை ஆதர்சமாகக் கொள்ளலாம்.
மறுமொழியொன்றை இடுங்கள்