நடேசன்
“இது எமது சிவப்பு விளக்குப்பகுதி “ என்றான் எனது வழிகாட்டியாக வந்த டாக்சி சாரதி . முழுநாளும் அவனது டாக்சியை வாடகைக்கு எடுத்துக் கொண்டதால் எனது மொழிபெயர்ப்பாளர் , வழிகாட்டி மற்றும் பாதுகாப்பாளர் முதலான பல தொழில்கள் அவனுக்கிருந்தது. முப்பது வயதான இளைஞன். அமெரிக்காவில் ஏற்கனவே பலகாலம் வாழ்ந்ததால் ஆங்கிலம் சரளமாக வந்தது.
“அப்படியா ? “ எனக்கேட்டு, என் கண்களால் அந்தத் தெருவை அளந்தேன்
“இப்பொழுது அல்ல , ஒருகாலத்தில் விலைமாதர்கள் நிற்கும் தெருவாக இருந்தது” என்றான் .
தேவாலயத்துக்கு மிக அருகில் அது சிறிய கடைவீதியாகி அங்கு அமைதி கொடுங்கோலோச்சியது . ஒரு நாய் மாத்திரம் முழு வீதியையும் சொந்தங்கொண்டாடியது .
“ சமீபத்தில் இந்தப்பகுதியில் அவர்களை அகற்றி விட்டு விபசாரத்திற்காக தேவால முன்றிலில் மட்டும் நிற்க ( Soliciting customers ) அரசு அனுமதித்துள்ளது.”
தேவாலயத்தின் உள்ளே மட்டும் பார்த்த நான், அதன் முன்பகுதியை அதிகம் கவனிக்கவில்லை . நாங்கள் மீண்டும் தேவாலயத்தை நோக்கிச் சென்றபோது “அதோ அந்தப் பெண் “ எனக்காட்டினான்.
“இங்கே இவர்களது ரேட் என்ன..? “ஐம்பது டொலர் இருக்குமா? “ என்றேன் சிரித்தபடி.
“இல்லை பத்து அல்லது பதினைந்து டொலர்கள் “
“ ஏன்? இவ்வளவு மலிவு..? “
“இப்பொழுது வெனிசுவேலாவில் இருந்து பலர் இங்கே வருவதால் “ என்றான்.
பம்பாய் வெங்காயத்திலிருந்து விலைமாதர்வரை சந்தைதான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது. நானும் பல வெனிசுவேலா குடும்பங்களைப் பார்த்தேன் .
“இவர்களுக்குப் பாதுகாப்பு மருத்துவ வசதிகள் உள்ளதா? “
“மருத்துவர்களிடம் மாதமொருமுறை பரிசோதிக்கவேண்டும்“
தடுக்க முடியாத விடயத்தை சட்டப்படி நடத்தும்போது நன்மைகள் ஏற்படுகிறது . நம்மட நாட்டில் இதைச் சொன்ன பெண்ணொருவரை அந்தச் சமூகம் ஓட ஓட ஊரை விட்டே விரட்டியது நினைவுக்கு வந்தது.
95 வீதமான கத்தோலிக்க மக்கள் வாழும் நாட்டில் கன்னி மரியாளின் தேவாலயத்தின் முன்றலை இதற்கான இடமாகப் பாவிப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது . அதே நேரத்தில், இந்தக் காலத்தில் உள்ளே மட்டும் புனிதமாக இருக்கிறதா..? என்ற நினைப்பில் “ வயிறும், இடுப்பும் – இனமோ, மதமோ, புனிதமோ அற்றவை ” என்று எனது நண்பர் ஒருவர் சொல்லியதும் கலந்து நினைவுக்கு வரத்தவறவில்லை.
கர்ப்பிணிப் பெண்ணைப் பாவித்து இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவின் மீது குண்டுத்தாக்குதல் செய்த விடயத்தை எனது கானல் தேசம் நாவலில் எழுதியதைப் பொய் எனக்கூறியதைப்போல் இதையும் கற்பனை என்று யாரும் சொல்லக்கூடாது என்பதற்காக அங்கு நின்ற ஒரு பெண்ணைப் படம் எடுத்தேன்.
அந்தப் பெண்ணின் பிரைவசியை (Privacy ) நான் மதிக்கவில்லை என்ற உணர்வு உறுத்திய போதிலும் என்னையறியாமல் எனது கெமரா மெதுவாக மேலெழுந்து எனது விரலை அழுத்தியது. அந்தப் பெண்ணும் கெமராவைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டதும் தெரிந்தது.
கீற்றோ நகரில் பல தேவாலயங்கள் இருந்தாலும், அதில் முக்கியமானதும் அழகானதும் சென் பிரான்சிஸ் தேவாலயம்தான். 1550 ஆம் ஆண்டில் தொடங்கி 150 வருடங்களாகக் கட்டப்பட்டது . நான் சென்ற போது உள்ளே வழிபாடுகள் நடந்தன.
பொன்னால் சித்திர வேலைப்பாடுகள் கொண்ட உட்பகுதி மிகவும் அழகானது. தென்னமெரிக்காவிலேயே அழகான இந்தத் தேவாலயம் கன்னி மரியாளுக்குரியது. இந்த இடத்தில்தான் இன்கா அரசின் ( Last Inca ruler- Atahualpa) மாளிகையிருந்தது .
பிற்காலத்தில் இந்தத் தேவாலயத்தின் முன்றல் ஆதிகுடிமக்கள் தங்களது பொருட்களை கொண்டுவந்து நகரத்தினருக்கு விற்பதற்குச் சந்தையாக இருந்தது. இப்பொழுதும் அது ஒருவித சந்தையாக இருக்கிறது. அதைக்கடந்து நடந்து வந்தபோது லத்தீன் அமெரிக்க நடனம் அடுத்த தெருவில் நடந்தது.
எங்கு போனாலும் அங்குள்ள மியூசியங்களுக்கு போவது எனது வழக்கம் . நான் அதை நினைக்காதபோதே, எனது மனைவி அதை நினைவூட்டுவார் . அதற்குக் காரணம் அதை முடித்துவிட்டால் கடை வீதிக்கு இருவரும் ஒன்றாகப் போகலாம் என்பதே அதன் சூக்குமம்.
நியூயோர்க் , லண்டன், பாரிஸ் மற்றும் மட்ரிட் போன்ற நகரங்களில் மியூசியங்களுக்குச் சென்று அங்க பல பிரபலமான ஓவியங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் என்னை அதிரவைத்த மியூசியம் கீற்றோவில் ஈகுவடோரியன் ஓவியர் சிற்பியால் உருவாக்கப்பட்டது . இவரது பெயர் ஒஸ்வால்டோ கயாசமின் (OSWALDO GUAYASAMÍN).
இவர் ஐரோப்பிய மற்றும் ஈகுவடோர் பழங்குடி இனத்தின் கலப்பினையுடையவர் . இவரது ஓவியங்கள் சிற்பங்களுக்கு மட்டுமே தனியான மியூசியம் கீற்றோவில் யுஉள்ளது . இந்த மியூசியத்தின் பெயர் மனிதனின் தேவாலயம்.அங்கு இவரது படங்கள் நவீன ஐரோப்பிய ஓவியர்களிலின் படங்களிலிருந்து வித்தியாசமானவை. வறுமை, சமூக ஏற்ற தாழ்வு மற்றும் அகதிகள் என தற்போதைய சமூகத்தின் தரிசனங்கள் ஓவியமாகவும் சிற்பமாகவும் இங்கு காட்சிதருகிறது. பார்க்கும்போது ஒவ்வொரு ஓவியங்களும் நமது இதயத்தில் தற்காலிகமாகவேனும் ஒரு மாற்றத்தை உருவாக்கும். இவரது ஓவியங்கள் அமெரிக்காவில் பிரபலமடைந்து அதனால் பணம் சம்பாதித்தார்.
ஆரம்பத்தில் ஏழையாக வாழ்ந்து பிற்காலத்தில் சொந்தமாக பல கண்காட்சியகங்களை உருவாக்கினார் . முக்கியமாகப் பழங்குடி மக்களது கலாச்சார சின்னங்களைப் பாதுகாத்தார். இவரே ஈகுவடோரின் தேசிய ஓவியர் எனலாம். ஃபிடல் காஸ்ட்ரோவின் வாழ்நாள் நண்பராகவும் கியூபா புரட்சியின் தொடர்ச்சியான ஆதரவாளராகவும் திகழ்ந்தார் .
மறுநாள் அங்குள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றேன். ஒரு இடத்தில் காட்டுக்கு மேலாக கேபிள் காரில் செல்வதற்கு அனுமதிச்சீட்டு வாங்கச் சென்றபோது, அதன் பிரேக்கை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார்கள் . அப்பொழுது பத்து டொலர் போனாலும் காட்டின் அந்தரத்தில் தொங்கும் அளவுக்கு எனக்கு வயதில்லை எனத் திரும்பிவிட்டேன் .
ஆறு நாட்கள் தனிமையில் செய்த பிரயாணம் முடிவடைந்தபோது பார்க்காத இடங்கள் பல. மீண்டும் வாழ்வில் ஒரு சந்தர்ப்பம் வருமா என நினைத்தபடி கனடா பயணித்தேன் .
—0—
மறுமொழியொன்றை இடுங்கள்