டிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்த தினம்

சொல்ல மறந்த கதைகள்:

புதுவை இரத்தினதுரை நினைவுகள்

முருகபூபதி

புதுவை இரத்தினதுரை தனது குடும்பத்திற்காக மத்தியகிழக்கு நாடொன்றுக்குச்சென்று உழைத்து திரும்பியபின்னர், விடுதலைப்புலிகளினால் ஈர்க்கப்பட்டு அவர்களின் கலை. பண்பாட்டுக்கழகத்தினை வளர்த்தார். 1986 இல் நான் அவரை இறுதியாகச்சந்தித்தபோது அவருக்கு தனித்தமிழ் ஈழம்தான் கனவு. அவரின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

அவர் ஒருகாலத்தில் மாக்ஸீயம், கம்யூனிஸம் பேசியவர். எழுதியவர். அதிலிருந்து முற்றாக விடுபட்டாரா? என்பது எனக்குத்தெரியாது. ஆனால் விடுதலைப்புலிகளின் தலைமையை விட்டும் அதன் கொள்கைகளை விட்டும் இறுதிவரையில் அவர் விடுபடவில்லை.

‘அதிதீவிரவாதிகள் சந்தர்ப்பவாதிகளாக மாறிவிடுவார்கள்’ என்று மேதை லெனின் சொல்லியிருக்கிறார். இயல்பிலேயே மென்மையான குணமுள்ள எங்கள் புதுவையும் ஒரு கட்டத்தில் வெளியே வரலாம் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது.

1987 இல் நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர் அவருடன் தொடர்புகள் ஏதும் இன்றி மிகுந்த சோர்வுடன் இருந்தேன். எனினும் எதிர்பாராதவிதமாக அவரது இயக்கத்தின் தமிழ்த்தாய் வெளியீடாக வந்த நினைவழியா நாட்கள் கவிதைத்தொகுப்பின் பிரதியொன்றை அவுஸ்திரேலியாவில் நீண்டகாலம் வதியும் நண்பர் சண்முகம் சபேசன் எனக்குத்தந்தார்.

சபேசன் விக்ரோரியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவில் முக்கியஸ்தராக இருந்தவர். அத்துடன் பிரதி புதன் கிழமைதோறும் இங்கு ஒலிபரப்பாகும் 3CR தமிழ்க்குரல் வானொலியின் ஊடகவியலாளராகவும் பிரதான ஒலிபரப்பாளராகவும் பணியிலிருந்தவர். அரசியல் கருத்துக்களுக்கு அப்பால் எனது நல்ல நண்பர்.

அவரிடமும் மற்றும் ஒரு நண்பரான யாதவனிடமும் அவ்வப்போது புதுவை பற்றி கேட்டறிவேன். அவர்களும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக இருந்த ஜெயக்குமாரும் ( இவர் மறைந்துவிட்டார்) அவ்வப்போது மண்ணுக்கு’ சென்று வருபவர்கள்.

அவர்கள் இலங்கை சென்று திரும்பினால், இலங்கை சென்று வந்ததாகச்சொல்ல மாட்டார்கள். ‘மண்ணுக்கு’ சென்று வந்ததாகவே சொல்வார்கள். அந்தளவுக்கு ஈழமண்ணில் அவர்களுக்கு பற்றிருந்தது. ரணிலின் புண்ணியத்தினால் சமாதான காலம் வந்தபோது அவர்கள் தம்முடன் மேலும் பலரையும் அழைத்துக்கொண்டு மண்ணுக்குச்சென்று மீண்டு வந்தனர். பிரபாகரன் நடத்திய உலகப்பிரிசித்தம் பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டையும் கண்டு களித்தனர்.

ஆனால் 2009 மே மாதத்தின் பின்னர் மகிந்தரின் புண்ணியத்தினால் மண்ணுக்குச் செல்லமுடியாத நிலைக்கு ஆளாகிவிட்டனர். ஜெயகுமார் என்ன புண்ணியம் செய்தாரோ, அவர் ஆழமாக நேசித்த மண்ணின் பேரவலத்தை அறியாமலேயே மறைந்துவிட்டார்.

புதுவை இயக்கத்தில் இணைந்த காலப்பகுதியில் அவரது வயதை ஒத்த பலர் ஆயிரக்கணக்கில் புலம்பெயர்ந்துகொண்டிருந்தனர். ஏராளமானவர்கள், மாணவர்கள் என்ற ரீதியில் நோர்வேக்கு படையெடுத்தனர். பலர் ஐரோப்பிய நாடுகளுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் கனடாவுக்கும் புலம்பெயர்ந்தனர். ஐரோப்பிய நாடுகளுக்குச்சென்றவர்கள் நாட்டுக்கு நாடு எல்லை தாண்டி ஓடினர். ஏஜன்ஸிகளை நம்பிப் புறப்பட்டு நிர்க்கதியாக அலைந்தவர்களும் இதில் அடக்கம். புலப்பெயர்வும் ஒருவகையில் கொடுமைதான் என்பதை அனுபவித்தால்தான் புரிந்துகொள்ளமுடியும்.

இவ்வாறு ஓடிக்கொண்டிருந்தவர்களைப்பற்றியும் புதுவை எள்ளிநகையாடி ஒரு கவியரங்குப்பாடல் புனைந்துள்ளார்.

யு.கே.க்குப்போக யூ.ரி.ஏ ஏறாமல்

ஏ.கே. தூக்கி இறந்தவர்கள் எத்தனைபேர்…..

இங்கே பற்பலர் பேசிக்களித்தனர்

எம்நாடு எரிகையில் ஓடிப்பறந்தனர்

சங்கமாடிய தமிழ் எனப்பேசிய

தம்பிமார் எல்லாம் கடலைக்கடந்தனர்

ஆனால் வெளிநாட்டில் வதியும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் தார்மீக ஆதரவும் நிதியுதவியும் அவரது இயக்கத்துக்குத்தேவைப்படும் சூழல் தோன்றியதனால் குறிப்பிட்ட கவிதையை பின்னாட்களில் மறைத்துவிட்டார். அவருடைய எந்தவொரு கவிதைத்தொகுப்பிலும் இது இடம்பெறவில்லை.

மெல்பனில் வதியும் நண்பர் யாதவன் மண்ணுக்குச்சென்றிருந்தவேளையில் புதுவையை சந்தித்து நல்லதொரு நேர்காணலை பதிவுசெய்துகொண்டு வந்து, சபசேன் நடத்தும் தமிழ்குரல் வானொலிக்கு வழங்கியிருந்தார். அதனை செவிமடுத்திருக்கிறேன். புதுவை அதில் புலம்பெயர்ந்த தமிழர்களை வாய் இனிக்க புகழ்ந்துரைக்கின்றார்.

இலங்கையில் நான் பெரிதும் நேசித்த கவிஞர்கள் மூவர். அவர்கள் புதுவை இரத்தினதுரை, சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன். இவர்கள் மூவரும் வேறு இயக்கங்களை சார்ந்து நின்றபோதிலும், ஈழத்து இலக்கியத்திற்கு கிடைத்த கொடைகள் என்று என்னால் கூறமுடியும். இவர்கள் மூவரையும் இலங்கை மண்ணில் ஒன்றாக சந்திக்க முடியாதுபோனாலும் அவுஸ்திரேலியாவில் நான் சம்பந்தப்பட்ட தமிழ் எழுத்தாளர் ஒன்று கூடல் நிகழ்வுகளிற்காவது அழைப்பதற்கு பெரிதும் விரும்பியிருந்தேன். எனது விருப்பத்தை கனடாவில் சேரனிடமும் இலங்கையில் ஜெயபாலனிடமும் நேரடியாகச்சொல்லியிருக்கின்றேன். ஆனால் புதுவையிடம் சொல்லுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. காரணம் வன்னியில் அவரது இருப்பிடம் தெரியாது. தொலைபேசி இலக்கமும் தெரியாது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக எனக்கு புதுவையின் தொலைபேசி இலக்கம் கிடைத்தது.

அவரது உறவினரும் அவுஸ்திரேலியா சிட்னியில் வானொலி ஊடகவியலாளராக பணியிலிருந்தவருமான ரகுராம் என்பவர் என்னுடன் தொடர்புகொண்டு, புதுவையின் புலுனிக்குஞ்சுகளும் பூவரசம் வேலியும் நூலின் வெளியீட்டுவிழா மெல்பனில் நடக்கும்போது உரையாற்றுவதற்கு அழைப்பு விடுத்தார்.

எனக்கு அந்த அழைப்பு ஆச்சரியமாக இருந்தது.

“புதுவையுடன் பேசுங்கள். அவரது நூல் வெளியீட்டில் நீங்களும் உரையாற்றவேண்டும் என்று அவர் விரும்புகிறார்” என்று அழைத்தார் ரகுராம்.

புதுவையுடன் நீண்ட நேரம் பேசினேன். அன்றையதினம் வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாத மறக்கமுடியாத நாள். அவருடைய கணீரென்ற குரலை கவியரங்கு மேடைகளில் கேட்டு இன்புற்றிருக்கின்றேன்.

தொலைபேசியில் அந்த கணீர் குரல் இல்லை. அவரும் என்னைப்போன்று இருதய சத்திர சிகிச்சைக்கு ஆளாகியிருந்தார். பேராசிரியர் மௌனகுருவும் இச்சிகிச்சைக்குட்பட்டிருந்த வேளையில், நான் இலங்கையில் நின்ற வேளையில், அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ளவைத்து பேசச்செய்த இனிய நண்பர் ராஜஸ்ரீகாந்தன் பற்றி நான் எழுதியிருந்த நூலை புதுவையும் படித்திருக்கிறார்.

‘நாங்கள் இருதயசிகிச்சையால் ஒரு வர்க்கத்தினர்களாகிவிட்டோம்’ என்று சிரித்துக்கொண்டு சொன்னார்.

“அவுஸ்திரேலியாவுக்கு ஒரு தடவை வாடாப்பா… பார்க்க ஆசையாக இருக்கிறது. உனக்கு இங்கே எண்ணிறந்த ரசிகர்கள் இருக்கிறார்கள்” என்றேன்.

ஒரு தடவை ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வந்ததாகவும் அதன் பின்னர் அங்கு செல்ல விசா கிடைக்கவில்லை என்றும் சொன்னார்.

“அவுஸ்திரேலியாவில், எதற்கும் ஜெயக்குமாரிடம் சொல்லு. நான் வருவேன்.” என்றார்.

நானும் சொன்னேன். “ ஆகட்டும் பார்க்கலாம்” என்று காமராஜர் பாணியில் ஜெயகுமார் சொன்னார்.

ரகுராம் திட்டமிட்டவாறு மெல்பனில் புதுவையின் புலுனிக்குஞ்சுகளும் பூவரசம் வேலியும் நூல் வெளியீடு வெகு விமரிசையாக நடந்தது. அச்சமயம் யாழ். மாவட்ட எம்.பி.யாக இருந்த கஜேந்திரனும் இந்நிகழ்வில் கலந்து உரையாற்றினார்.

எனக்கு “ அதென்ன புலுனிக்குஞ்சுகள்’’ என்று எதுவும் புரியவில்லை. சிட்னியிலிருக்கும் கவிஞர் அம்பியை தொடர்புகொண்டு கேட்டேன்.

அது குழைக்காட்டுப்பிரதேசத்தில் வாழும் ஒருவகை பறவையினம்” என்றார்.

“அது என்ன குழைக்காட்டுப்பிரதேசம்?” என்று அவரிடமே கேட்டேன்.

“ ஓ…நீ…நீர்கொழும்பு அல்லவா…? தெரிய நியாயமில்லைத்தான்.

அதடாப்பா… தென்மராட்சிப்பக்கங்களைத்தான் குழைக்காட்டு பிரதேசம் என்பர்” என்று விளக்கம் அளித்தார்.

புதுவைக்காக காத்திருப்பது போன்று, அந்த புலுனிக்குஞ்சுகளை பார்ப்பதற்காகவும் காத்திருக்கின்றேன்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் ஆற்றல் மிக்க பல படைப்பாளிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் இருந்தனர். அவர்கள் என்னவானார்களோ என்ற கவலையில் நானிருந்தமையால் அவர்களின் பெயர் பட்டியலை வைத்துக்கொண்டு இலங்கையிலிருக்கும் ஊடகவியலாளர்கள் சிலருடன் தொடர்ச்சியாக தொடர்பிலிருந்தேன்.

நான் கவலையுடன் தேடிக்கொண்டிருந்தவர்களில் புதுவை முதன்மையானவர். புதுவையினதும் எனதும் நல்ல நண்பர் மாத்தளை செல்வா என்ற விக்கிரமசிங்கா அவர் மலையக மக்கள் முன்னணித்தலைவர் முன்னாள் அமைச்சர் சந்திரசேகரனின் பொது மக்கள் தொடர்பாளர் (P.R.O)

அவருடன் தொடர்புகொண்டு சரணடைந்தவர்களில் புதுவையும் இருக்கலாம். அதனால் முடிந்தவரையில் அமைச்சரின் செல்வாக்கை பயன்படுத்தி புதுவையையும் மற்றவர்களையும் விடுவிக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டேன்.

விக்கிரமசிங்கா தனிப்பட்ட விஜயம் மேற்கோண்டு அவுஸ்திரேலியா வந்தபோது எனது இல்லத்தில் ஒருநாள் தங்கினார். அவரிடம் புதுவையின் மனைவியின் தங்கையின் தொலைபேசி இலக்கம் பெற்று உரையாடினேன். அவரை எனக்கு ஏற்கனவே நன்கு தெரியும். அவர்களின் திருநெல்வேலி வீட்டுக்கு அருகில்தான் கவிஞர் ஈழவாணனின் வீடும் அமைந்திருந்தது. 1984 இல் ஈழவாணன் மறைந்தபோது அங்குசென்றிருக்கின்றேன். அதனால் அவர் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர்.

1986 இல் புதுவையின் வீட்டில் அவரது மனைவி எனக்கும் மல்லிகை ஆசிரியருக்கும் பகற்போசன விருந்தளித்தவர். நாம் குடும்ப நண்பர்களாக பழகியவர்கள். அதனால் புதுவை குறித்து நான் அதிகம் கவலைப்பட்டதற்கு காரணங்கள் பல இருந்தன.

புதுவை போரின்போது சரணடைந்திருந்தாலும் அவரது மனைவி ரஞ்சினியும் மகன்மாரும் அகதிகள் முகாமிலிருக்கும் தகவல் கிடைத்தது. பலரும் அடுத்தடுத்து வெளியேறி தமது வாழ்விடங்களுக்கும் இடம்பெயர்ந்து வேறிடங்களுக்கும் சென்றுகொண்டிருந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டிலிருந்து நண்பர் ஜெயமோகன் எதிர்பாராதவிதமாக எனக்கு இலக்கியவாதியும் வெளிச்சம் ஆசிரியருமான கருணாகரனின் தொலைபேசி இலக்கம் தந்தார்.

நெஞ்சத்தை கிள்ளாதே, முள்ளும் மலரும், உட்பட சில நல்ல திரைப்படங்களை இயக்கிய மகேந்திரன், மற்றும் இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் வன்னியில் தலைவரை

சந்திக்கச்சென்றவேளையில் கருணாகரனையும் இவர்கள் சந்தித்துப் பேசியதாக ஒரு தகவலும் உண்டு. மகேந்திரன் வன்னியில் எடுத்த ஒரு குறும்படத்தில் கருணாகரனின் மகனும் நடித்திருக்கிறார். மகேந்திரன் வன்னியில் இருந்த காலத்தில் எழுதிய ”நடிப்பு என்பது’ ‘திரைக்கதை என்பது’ என்ற இரண்டு நூல்களை கருணாகரனே வெளியிட்டுமிருந்தார்.

கருணாகரனுடன் அவர் தங்கியிருந்த கொடிகாமத்திலிருந்து சுன்னாகத்திற்கு இடம் மாறிச் செல்லும் வரையில் அவருடன் தொலைபேசி தொடர்பில் இருந்தேன். அதன் பிறகு, 2010 இல் யாழ்ப்பாணம் சென்று அவரை சந்தித்து தற்போதும் தொடர்பிலிருக்கின்றேன்.

வவுனியா பி.பி.ஸி செய்தியாளர் மாணிக்கவாசகருடன் தொடர்புகொண்டு வவுனியா அரச அதிபரிடம் பேசி புதுவையின் குடும்பத்தினரை முகாமிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரினேன். ஆனால் சில விடயங்கள் எமது சக்திக்கு அப்பாற்பட்டவைதான்.

இந்நிலையில் சில மாதங்களில் எதிர்பாராதவிதமாக புதுவையின் குடும்பத்தினர் இடைத்தங்கல் முகாமிலிருந்து வெளியே வந்தனர். ரஞ்சியுடன் உரையாடினேன். இலங்கை வந்ததும் சந்திக்கின்றேன் எனச்சொன்னேன்.

2010 இல் இலங்கை செல்லுமுன்னர் புதுவையின் தாயார் யாழ்ப்பாணத்தில் காலமான தகவல் புதுவையின் குடும்பத்தாரிடமிருந்து கிடைத்தது. அந்த அம்மா குழாய்நீர் தொட்டி அருகே விழுந்து மயக்கமுற்று மறைந்திருக்கிறார். தாயின் இறுதிச்சடங்கிற்கும் புதுவை இல்லை.

பெற்றெடுத்துப்பேணிப் பேரிட்டு, எத்தனையோ கற்பனைகள் செய்தென்னைக்

கவிபாடித்தாலாட்டி மெத்தையிலே வைத்தமுதமுலை தந்து வளர்த்தவளே…

முத்தத்தாலெந்தனது முகம் சிவக்கச்செய்தவளே…..

என்று தொடங்கும் அவரது ‘அன்னைக்கு இன்னுமொரு கடிதம்’ என்ற நீண்ட கவிதை இன்றும் எங்களிடம் இருக்கிறது.

சந்தமும் ஓசையும் கருத்தாழமும் அவரது கவிதைகளில் தனிச்சிறப்பு. அவரது தாயாரின் மறைவுச்செய்தி அறிந்தவுடனேயே கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இருக்கும் புதுவையின் நண்பர்களுக்கு தகவல்

சொன்னதுடன், யாழ்ப்பாணத்திலிருப்பவர்கள் மரணச்சடங்கிற்கு செல்லுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தேன்.

“ நாம் இலங்கையிலிருக்கின்றோம். நாம் அறியாத தகவல்கள் உனக்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்துவிடுகின்றன…?’ என்று சிலர் கேட்டனர்.

“அதற்கு அங்கு வந்து பதில் சொல்கிறேன். முதலில் மரணச்சடங்கிற்குச்செல்லுங்கள். அத்துடன் அவ்வப்போது புதுவையின் குடும்பத்தினரை சென்று பாருங்கள்.” என்று சொன்னேன்.

எத்தனைபேர் சென்றார்கள்? எத்தனைபேர் தயங்கினார்கள்? என்பது எனக்குத்தெரியாது.

2010 ஜனவரியில் முதல் தடவையாக கருணாகரனை யாழ். பல்கலைக்கழகத்தில் சந்தித்து நண்பர் நடேசனுக்கு அவரை அறிமுகப்படுத்தினேன். புதுவையின் இனிய நண்பரும் மல்லிகை இதழ் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியானபோது அதற்கு நீண்டகாலமாக அச்சுக்கோப்பாளராக பணியிலிருந்தவருமான சந்திரசேகரம் அண்ணரை நான் பார்க்கவிரும்பியபோது அழைத்துச்சென்றவர் கருணாகரன்.

சந்திரசேகரன் அண்ணரும் புதுவை பற்றியே கேட்டுத்தெரிந்துகொள்ளவிரும்பினார். புதுவை எங்கிருந்தாலும் வாழவேண்டும் என்று கண்கள் பனிக்க அவர் சொன்னபோது, அவரது பிரார்த்தனையும் புதுவையின் விடுதலை பற்றியதாகத்தான் இருந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.

அவரிடமிருந்து விடைபெறும்போதும், புதுவையின் குடும்பத்தினரை பார்க்கப்போகிறேன் என்றுசொன்னேன். அவரது முகம் மலர்ந்தது.

ஒரு நாள் புதுவையின் குடும்பத்தினர் வசிக்கும் ஊருக்குச் சென்றேன். இரவு நேரமாகையால் வீட்டைத்தேடிக்கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது. என்னுடன் நண்பர் நடேசனும் வந்தார்.

நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அதாவது 1986 இல் எனக்கும் ஜீவாவுக்கும் விருந்தளித்து உபசரித்தபோது சந்தித்த அந்தச்சகோதரியை 2010 இல் மீண்டும் சந்தித்தேன். 1986 இல் அவர் கருவில் சுமந்திருந்த மகன், அன்று எம்முன்னே இளைஞனாக இன்முகம்காட்டி வரவேற்றார். ஆரத்தழுவிக்கொண்டேன்.

ஆனால் காத்திருப்பு தொடருகிறது.

எதுவுமே அவரவர் சக்திக்குட்பட்டும் சக்திக்கு அப்பாற்பட்டும் நடக்கும் விடயங்கள்.

எனினும் நானும் காத்திருக்கின்றேன்.

தனது அன்னையை நெஞ்சுருகி நினைத்துப்பாடியிருக்கும் கவிஞர், இப்படியும் ஒரு கவிதையை எங்களிடம் விட்டுச்சென்றுள்ளார்:-

முடிவு காண்பேன்

கன்னியர் அழகைப்பாடேன், காதலைப்பாடேன், வானின்

வெண்ணிலா தன்னைப்பாடேன், விசரரைப்பாடேன், ஆனால்…

எண்ணரும் துயரத்தோடு ஏழைகள் வாழும் வாழ்க்கை

இன்னுமா? பொறுக்கமாட்டேன். இதற்கொரு முடிவு காண்பேன்

கற்றவர் என்ற மாயைக் கவிஞர்கள் சிரித்தபோதும்

சற்றுமே நில்லேன், ஏழைச்சனங்களின் துயரம் போக்கச்

சொற்களாற் கவிதை யாப்பேன் துயரிதாற் போகாதென்றால்…

பெற்றதாய் தடுத்தபோதும் போர்க்களம் புகுந்து சாவேன்.

நன்றி அக்கினிக்குஞ்சு

“டிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்த தினம்” மீது ஒரு மறுமொழி

  1. Great poet! Great Socialist! Great visionary! Great Activist! Great Human!Long live his name & fame!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: