நடேசன்
யாழ்ப்பாணம்
“நீ தீவான். ஆர்ட்ஸ் படித்து என்ன செய்யப்போகிறாய்? இந்துக்கல்லுரிக்கு எஞ்ஜினியரிங் படிப்பதற்கு எல்லோரும் வருகிறார்கள் “ என்று பொன்னம்பலம் மாஸ்டர் முகம் சிவந்த கோபத்துடன் எனது இடக் காதை பிடித்துத் திருகியபடி 9 ஆவது வகுப்பில் கலைப்பிரிவில் இருந்த என்னை பாடசாலை வராந்தாவில் இழுத்துக்கொண்டு போய் இரண்டு வகுப்பறைகள் தள்ளியிருந்த கணிதப்பிரிவில் இருக்கும்படி கட்டளையிட்டார்.
உயரமானவர். எனது எட்டாம் வகுப்பில் தமிழாசிரியர். எனது தந்தையைத் தெரிந்த ஆசிரியர் அத்துடன் எங்கள் குடும்பத்தில் கொண்டும் கொடுத்த பக்கத்தூரான அனலைதீவைச் சேர்ந்தவர். அவரிடமே என்னை பார்த்துக்கொள்ளும்படி தந்தை சொல்லியிருந்தார் எஞ்ஜினியராக வரவேண்டுமென்ற அவரது ஆசைக்காக நான் கணிதத்தோடு இரண்டு வருடங்கள் போர் நடத்தினேன். சிரியப் போர் மாதிரி உள்நாட்டுப்போர். ஆனால் வெளிசக்திகளின் தேவைக்காக.
பிற்காலத்தில் என்னைக் கணிதத்திற்கு பொன்னம்பலம் மாஸ்டர் மாற்றியது தவறு. எனது உண்மையான ஊக்கசக்தி அவரால் மழுங்கடிக்கப்பட்டதே என பல தடவைகள் புழுங்கினேன்.
இக்காலத்திலும் கூட இலங்கை இந்தியா மட்டுமல்ல பெரும்பாலான கீழைத்தேச நாடுகளில் பெற்றோர்கள் மற்றோர்களது விருப்பங்களை பிள்ளைகளில் திணிக்கும்போது எவ்வளவு குழந்தைகளது ஆக்கபூர்வமான ஊக்கசக்தி வீணாகிறது என்பது நமக்குப் புரிவதில்லை . ஆனால் நான் கற்ற வரலாற்றுப்பாடம் எனது பிள்ளைகள் விடயத்தில் உதவியது.
இன்று நான் நினைப்பதுண்டு. பிள்ளைகளை அவர்களது பிடித்த துறையில் விடாததால்தான் நமது நாடுகள் வளராமல் தள்ளாடுவதன் முக்கிய காரணமாக இருக்கலாமா? பிள்ளைகளிடம் ஏற்கனவே சுமத்தப்பட்ட சுமைகளான மொழி மதம் சாதி கலாசாரம் என்பதற்கு மேலாக எமக்கு விருப்பமான கல்வித்துறைகளையும் அவர்கள் தொண்டையில் பலாப்பழமாகத் திணிக்கிறோம்.
‘
அதேநேரத்தில் நானும் சட்டம் படித்து கறுப்புச் சட்டைபோடும் சட்டத்தொழில் செய்திருந்தால் தற்போதைய இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்போல் மக்களை உச்சும் அரசியலோ இல்லை, திருடன்- கொலைகாரன்- கஞ்சாக் கடத்துபவனுக்காக வாதிட்டிருப்பேன். சூரனைக்கொலை செய்தபோது அவனை சேவல் கொடியாக்கிய முருகன்போல் இப்படியான செயல்களிலிருந்து பொன்னம்பலம் மாஸ்டர் காத்து அருளினாரே என்ற எண்ணம் மழை இருட்டில் மின்னலாக இன்றுவரை வந்துபோகத் தவறுவதில்லை .
யாழ் இந்துக்கல்லுரியில் எனது முதல் வருடம், திருவிழா கொண்டாட்டத்துக்குள் புகுந்த சிறுவனின் நிலையில் இருந்தது. அதுவரையும் ஒரு சில தடவைகள் வைத்தியர்களைச் சந்திப்பதற்காகச் சென்று வந்த யாழ்ப்பாணம் என்னை பொறுத்தவரையில் புது உலகமாக விரிந்தது.. பெற்றோர் உறவினரது மேற்பார்வைகள் , கண்டிப்பு மற்றும் அச்சுறுத்தலற்ற சுதந்திரக் காற்றை சுவாசித்தேன் .
எனது கல்வி மூன்றாமிடத்திற்கு தள்ளப் பட்டது .கல்லூரி விடுதிக்கு வந்த முதல் மாதத்தில் எனது தந்தை வந்து எனது ஊர் நண்பனுடன் காவல்காரன் சினிமாப்படத்திற்கு அழைத்துச் சென்றார். அன்றிலிருந்து என்னால் எம்ஜிஆரை நடிகராக ரசிக்க முடியவில்லை.
சிவாஜி கணேசனின் ரசிகனாகியதுடன் அவரது படங்களை முதலாவது நாளில் பார்க்கும் நண்பர்களின் அணியில் சேர்ந்தேன் . அக்காலத்தில் எனது மனதில் சினிமாத் திரையரங்கத்தில் வேலைபார்ப்பதே பிற்காலத்தில் செய்யவிரும்பிய தொழில் விருப்பமாக உருவாகியது.
இரவில் இந்துக்கல்லூரியில் இருந்து கிணற்றருகே தண்ணீர்க்குழாய் அமைந்த மதிலின்மேல் ஏறி, கண்ணாடி துண்டுகள் பதியப்பட்ட மதிலுக்கு மேலால் பாய்ந்து செல்லும் பயிற்சியும் பெற்றேன். பகலில்; மதியம், மாலை என கிரிக்கட் விளையாடுவதே அக்காலத்தின் இலட்சியமாகியது
எட்டாவது வகுப்பின் இறுதியில் கலைப்படங்களில் நான் பெற்ற புள்ளிகள் இமயமலையாகவும் கணிதத்தில் பெற்றது கீரிமலையாகவும் தோன்றியது .
அதனால்தான் நான் கலைப்பட்டதாரியாகி சட்டம் படிக்கவேண்டுமெனத் தீர்மானித்துச் சென்றபோது பொன்னம்பவாணரால் தடுத்தாட்கொள்ளப்பட்டேன்.
இதைவிட மற்றும் ஒரு முறை பொன்னம்பலம் மாஸ்டர் எனது வாழ்வில் வந்ததை நன்றியுடன் நினைவு கூரவேண்டும் .
யாழ் இந்துகல்லூரி விடுதி மட்டுமல்ல பாடசாலையே ஆண்குருவானவர்களது செமினறி போன்றதுதான். பிற்காலத்தில் பெண் லைபிரரேரியன் வந்தபோது நாங்கள் அடைந்த இன்பம் சொல்லி மாளாது. எப்பொழுது கையைத் தூக்குவார் எப்பொழுது குனிவார். என்பதற்காகவே லைபிரறி சென்றோம். இந்துக்கல்லுரியில் எதிர்பாலுடன் எப்படி பழகுவது எனத் தெரியாமல் வளர்தோம். கூட்டுக்கல்வி எவ்வளவு முக்கியமானது என்ற விடயம் பல்கலைக்கழம் சென்ற பின்பே உறைத்தது
எனது காலத்தில் நியுபோடிங் என்ற விடுதி ஆறிலிருந்து எட்டாம் வகுப்பு வரையான பையன்கள் தங்குமிடம். அதன் கீழ் எங்களது உணவுக்கூடம். நியுபோடிங் அடுத்ததாக ஒல்ட்போடிங் என்ற மரத்திலான தரையுள்ள விடுதி இரண்டிற்கும் பொதுவான மாடிப்படிகள் உள்ளன. அங்கே ஒன்பதிலிருந்து பத்தாம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்கள் தங்கினார்கள். அதற்குக் கீழே புதினொன்று மற்றும் பன்னிரண்டில் படிக்கும் உயர்தர மாணவர்கள் இருப்பார்கள் . நிர்வாகம் நல்ல நோக்கில்தான் வயதடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்தது. ஆனால் இரவில் நல்ல நோக்கம் பிசுபிசுத்து விடுகிறது. இரவு பன்னிரெண்டு மணிக்குப் பின்பு ஓல்ட்போடிங்கில் உள்ள சிலர் நீயு போடிங்கை தங்களது சிவப்பு விளக்கு பகுதியாக நடத்த விரும்பினார்கள்.
இரவுகளில் மரத்தரையான ஓல்ட் போடிங்கில் அதிக ஓசையுடன் ஒலிக்கும் காலடியோசைகள், நியூபோடிங் சிமெண்ட் தளத்தில் தேய்ந்து ஒலிக்கும். அது இருட்டில் பேய்கள் அசைவதைத் தெரிவிக்கும். எங்களுக்கு இதயத் துடிப்பு அதிகமாகி காகித உறையின் முத்திரையாகக் கட்டிலில் ஒட்டிக்கொள்வோம்.
பெரும்பாலான நியுபோடிங் பையன்கள் வயதுக்கு வராத நான்கு மாத புரலைர் குஞ்சுகள் மாதிரி . ஆனால் ஓல்ட் போடிங்கில் உள்ளவர்கள் சேவலாக புதிதாகக் கூவியவர்கள்.
என்னை ஒரு பேய் இருட்டில் தேடிவரும் அந்தப்பேயைத் தவிர்க்க பலதடவை ஓடி ஒளிப்பதும், இறுதியில் அந்த வயதிலே கடவுளைக்கும்பிடாத நான் அண்ணே ஆளைவிடுங்கள் எனக் கும்பிட்டுப் பார்த்தேன். எனது தொழுகையில் மனம் மாறி இரக்கமடைந்து அந்தப்பேய் என்னைவிட்டுவிட்டது.
ஆனால் மற்றொரு பேய் விடுதியில் வசிப்பதில்லை. ஆனால் என்னைப் பாடசாலை மைதானங்களில் துரத்தியபோது இறுதியாக என்னைக் காப்பாற்ற வழி தெரியாமல் பொன்னம்பலம் மாஸ்டரிடம் போய் பாஞ்சாலியாக சரணடைந்தேன்.
அவருக்கு கிருஷ்ணன் போன்று சக்தியற்றதால் அவர் அந்தப்பேயின் வகுப்பசிரியரும் எழுத்தாளருமான சொக்கன் எனப்படும் சொக்கலிங்கம் மாஸ்டரிடம் சென்றார் . அடுத்த நாள் சொக்கன் இருவரையும் இந்துக்கல்லூரி பிரார்த்தனை மண்டபத்திற்கு அழைத்து அந்தப் பேயிடம் “டேய் உனக்கு வேண்டுமென்றால் உன்னை விரும்பும் ஒருவனைப் பாரடா ஏன்டா விரும்பாதவனை கஸ்டப்படுத்துகிறாய் “ என்றார்
அந்த உருவம் அன்றைய அவமானத்திற்கு எப்பொழுதும் என்னைப் பழிவாங்கலாம் என்ற பயம் பலகாலமிருந்தது பின்பு அந்த உருவத்தைத் துணிவுடன் பார்ப்பதற்கு இரண்டு வருடங்கள் எடுத்தது. பாலுணர்வு மனிதர்களை எவ்வளவு கீழ்த்தள்ளும் என்பதை உணர்த்திய இந்த சம்பவம் எனக்கு பிற்காலத்தில் ஒரு படிப்பினையாக இருந்தது.
இந்தியா.
அடுத்த நாள் மாலையில்தான் சென்னைக்கு ரயிலில் பிரயாணம் செய்ய முடியும் என்பதால் இரவு இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும். பத்து ரூபாய்க்கு ஒரு ஹோட்டல் அறை அந்த இரவு தங்குவதற்கு கிடைத்தது மிகவும் ஆச்சரியமானது.
இலங்கையில் சாமானியர்கள் தங்குவதற்கு வசதியான இது போன்ற ஹோட்டல்கள் இல்லை. எங்கள் காலத்தில் யாழ்ப்பாணத்தில் தங்கும் வசதியுள்ள ஹோட்டல்கள் இருந்ததாகத் தெரியாது. இராமேஸ்வரத்தில் அன்று எனக்குக் கிடைத்த அந்த அறை குளியல் அறையுடன் சுத்தமானதாக இருந்தது. படுப்பதற்கு சிறிய கட்டிலும் எனது தேவைக்கேற்றபடியாக இருந்தது.
காலையில் எழுந்தபோது எப்படியும் பன்னிரண்டு மணிநேரமாவது இங்கு தங்கவேண்டும். இந்த ஊருக்கு வந்தோம், குறைந்த பட்சம் இராமாயணத்தில் இடம்பெற்ற கோயிலையாவது பார்ப்போம் என நடந்து சென்றேன். அதிக தூரமில்லை. அப்படி ஒரு பெரிய கோயிலை அதற்கு முன்னர் வாழ்க்கையில் பார்த்ததில்லை.
இராமேஸ்வரத்தில் கோயிலின் மண்டபங்கள், தூண்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது உடல் பருத்த கருமையான மனிதர் ஒருவர் அரையில் கட்டிய அழுக்கான வேட்டியுடன் கறுத்தநிற பானை வண்டியுடன் என் முன்தோன்றி, கங்கா தீர்த்தம் எனச்சொல்லி சிறிய செம்பில் தண்ணீர் தந்தார்.
இதுபோன்ற தீர்த்தத்தில் நம்பிக்கை இல்லாதபோதும் தந்தவர் மனம் கோணாமல் இருக்கவேண்டும் என்பதால் அதைக் குடித்ததும், மீண்டும் ஒரு கிணற்றில் இருந்து செம்பு நிறைந்த தண்ணீரை எடுத்துத்தந்து, சரஸ்வதி தீர்த்தம் என்றார். அதனையும் மறுக்க முடியவில்லை. தொடர்ச்சியாக இப்படி கிட்டத்தட்ட இருபத்தைந்து தீர்த்தங்கள் குடித்தேன்.
அந்த மனிதர் கோயிலை தரிசிப்பதற்கு எனக்கு இடம் தரவில்லை. உடல்மொழியால் மற்றும் உதாசீனத்தால் அந்த மனிதரைப் புறந்தள்ள முடியவில்லை. துணியில் பட்ட மசாலா குழம்பின் மஞ்சள் கறையாக என்மீது அவர் ஒட்டிக் கொண்டார்.
முதல்நாளே புதியநாட்டில் ஒருவருடன் கடுமையாகப் பேசி முகம் முறிக்க முடியவில்லை. முகத்தை முறிக்காத பெண்ணுக்கு காலம் முழுவதும் வயிற்றிலே குழந்தை என்பதுபோல் எனக்கு தண்ணீர் குடித்தே வயிறு நிரம்பிவிட்டது. அந்த மனிதருக்கும் மூச்சு வாங்கியும் விடவில்லை. மனிதர் கடைசியில் கோயிலின் வெளியே வந்துதான் ஓய்ந்தார். மனதில் அவரை பலதடவை கொலை செய்துவிட்டேன்.
இலங்கையில் நுவரெலியா பொலிஸிடம் அகப்பட்டிருந்தால் பரவாயில்லை என அன்றைய சம்பவம் நினைக்க வைத்தது. கடைசியில் அவர் என்னிடம் இருபத்தைந்து ரூபாய் கேட்டபோது கொடுக்க மறுத்தேன். தந்த தண்ணீருக்கு விலையா? நான் தண்ணீர் கேட்கவில்லையே என்று கூறியும் பிரயோசனம் இல்லை. அந்த விடாக்கண்டனுக்கு பத்து ரூபாயைக் கொடுத்து விட்டு இனிமேல் கோயில்களுக்கே செல்வதில்லை என எச்சரிக்கையாக இருந்தேன். இந்தக் கொள்கையை பிற்காலத்தில் இந்தியாவில் இருந்த மூன்று வருடங்களும் கடைப்பிடித்தேன். சிதம்பரம் மதுரை திருச்சி என சென்ற போதெல்லாம் கோயில்களைத் தவிர்த்தேன்.மனைவி பிள்ளைகள் உள்ளே சென்றால் நான் அவர்களது காலணிகளுக்கு காவல்காரனாகினேன்.
இலங்கையில் எந்தக் கோயில்களிலும், எனக்கு நம்பிக்கையில்லாவிடிலும் அங்கு செல்லும் பழக்க உள்ள நான், இந்தியாவில் கோயில்களை தவிர்த்தேன்.
அன்றைய தினம் இராமேஸ்வரத்தில் விரைவாகவே அறைக்குத் திரும்பி வந்து படுத்தவாறு பழைய விடயங்களையும் அரசியல் புதினங்களையும்; அசைபோட்டேன். தனிமையில் இருக்கும்போது நினைவுகள் மட்டும்தானே நம்மோடு வரும்.
காங்கேசன்துறை வீதியில்தான் இந்துக்கல்லுரி உள்ளது. மேல் மாடியில் நின்றால் எங்களுக்கு நேர் கீழே வீதி தெரியும். எழுபதுகளில் ஒரு நாள் மாணவர் பேரவையின் ஊர்வலம் போவதாக கேள்விப்பட்டேன். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் தாவரவியல் பரிசோதனைச்சாலை சென்றபோது எனது சகவகுப்பு மாணவர்கள் உடன் வந்தார்கள். வீதியிலே ஏனைய பாடசாலைகளின் சிரேஷ்ட மாணவர்கள் கொடும்பாவிகள் சகிதம் தாரை தப்பட்டைகளுடன் ஊர்வலம் போனார்கள். ஊர்வலத்திற்கு பொலிஸ் அனுமதியில்லை. எப்படியம் ஊர்வலத்தில் போனவர்களுக்கு பொலிசால் அடிவிழும் எனப் பலரும் பேசிக்கொண்டார்கள் .
பரிசோதனைச்சாலையில் நாங்கள் நின்று யன்னல் வழியே ஊர்வலத்தில் எமது பாடசாலையைச் சேர்ந்தவர்கள் யாராவது போகிறார்களா என பார்த்தேன். அப்போதைய கல்வி அமைச்சர் பதியுதீன் முகமத்தை போன்று வைக்கோலினால் செய்யப்பட்ட கொடும்பாவியை சிலர் தூக்கிக் கொண்டு சென்றார்கள்.
எனக்கு ஆச்சரியம் தரும்வகையில் எனது சக மாணவனாகிய செல்வவடிவேல் கையில் ஒரு உடுக்கையை தட்டியபடி மாடியில் நிற்கும் எம்மைப் பார்த்து சிரித்தபடி அந்த கொடும்பாவியின் பின்னால் போய்க் கொண்டிருந்தான். அவன்மீது எனக்கு அப்போது பரிதாபம்தான் தோன்றியது.
தம்பி பொலிசிடம் நல்ல அடி வேண்டப்போறான் என்று கவலைப்பட்டேன்.
மறு நாள் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் காயங்கள் இன்றி நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையுடன் அவன் என்னைச் சந்தித்தபோதுதான் எனது கவலை தீர்ந்தது.
எங்கள் வகுப்பில் பெரும்பலானவர்களுக்கு எந்த மாதிரியான தரப்படுத்தல் வந்தாலும் நாம் பல்கலைக்கழகம் போக முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. மற்றைய சிலர் இலங்கையில் பல்கலைக்கழகம் போக முடியாவிடில் இந்தியா அல்லது இங்கிலாந்து சென்று படிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன், வசதியுடன் இருப்பவர்கள். இந்த மன நிலையில் ஊர்வலம், போராட்டம் குறித்து எமக்கு நம்பிக்கை இருக்கவில்லை. மேலும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் சென்று அடிவாங்கும் அளவுக்கு உடம்பிலும் பலமும் மனதில் தைரியமும் இருக்கவில்லை. இந்த நிலையில் சக மாணவ நண்பன் செல்வவடிவேலை அந்த ஊர்வலத்தில் கண்டது மிகவும் ஆச்சரியத்தைத் தந்தது.
செல்வவடிவேல் வித்தியாசமாக சிந்தித்து ஊர்வலம் போனான் என்பதுடன் அவனது அன்றைய சிரிப்பு இன்றளவும் எனது மனதில் நினைவாக தங்கியிருக்கிறது. எப்பொழுதும் வித்தியாசமானவர்கள் மாறுபட்டநிகழ்வுகள் மனதில் அழுத்தமாக படியும். சாதாரணமான விடயங்களும் நாளாந்தம் சந்திப்பவர்களின் நினைவுகளும் மனஓடையில் ஓடும் நீர்போல் கடந்து போய்விடும் என்பதும் நியதிதானே.
போராட்டம் எனவரும்போது ஏராளமானவர்கள் அதை தவிர்க்கத்தான் விரும்புகிறார்கள். ஓடி தப்பிவிட முயலுகிறார்கள். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அவர்களை அதில் இழுத்து விட்டுவிடுகிறது. எமது வகுப்பில் இருபது பேரில் அன்று ஒருவன் ஊர்வலத்துக்கு சென்றதுபோல் 95 வீதமானவர்கள் அன்று அந்த ஊர்வல போராட்டத்தை முடிந்தவரை தவிர்க்கவே விரும்பினார்கள். காரணம் பலருக்கு வாழ்க்கையே போராட்டமாக இருந்தது.
இதே வேளையில் போராட்டத்தின் வாடையே தம்மீது படியாமல் வாய்சொல்லால்; உசுப்பேற்றியவர்கள் அக்காலத்திலும் இருந்தார்கள். எனக்குத் தெரிய வண்ணை ஆனந்தனின் பொறிபறக்கும் பேச்சுகள், காசிஆனந்தனின் இரத்தத்திலகங்கள் அன்றைய காலகட்டத்தில் எப்படி உறைந்த இரத்தங்களை கொதிக்க வைத்தது என்பது எனது வயதுக்காரருக்குத் தெரியும். ஆனால் இப்போதைய இணையத்தில் ஆயிரக்கணக்கில், இலட்சக் கணக்கில் ஆனந்தன்கள் இருக்கிறார்கள். அக்காலத்தில் குறைந்தபட்சம் மக்கள் மத்தியில் வந்துபேசவேண்டும். சிறைவாசமும் அனுபவிக்கவேண்டும்.
நான் சொல்லும் 70 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அரசியல் என்பது நிழலாக எம்மைத் தொடர்ந்தது. நிழலுக்கு ஓடி மறைய முடியாது என்பதுபோல் இடைவிடாமல் துரத்தியது.
குடியரசு தினங்களில் பாடசாலைக்கு செல்லாதது மட்டுமல்ல மற்றவர்களையும் அப்படி செய்யத் தூண்டுவது எமது ஆரம்ப செயலாக தொடர்ந்து நடந்தது.
இதில் இரண்டு சம்பவங்கள் மனதில் நிற்பவை.
ஓன்று எனது நண்பன் சொன்னது. நான் நேரடியாக சம்பந்தப்படாதது.
‘முதலாவது குடியரசு தினத்தில் வைத்தீஸ்வரா பாடசாலையில் மாணவர்கள் பாடசாலையை பகிஷ்கரித்தபோது தலைமை ஆசிரியர் மணவர்களை அமைதியாக உள்ளே வரும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் பகீஷ்கரிப்பை ஒழுங்குபடுத்தியவர்கள் பாடசாலைக்கு கல்லெறிந்தபோது அந்த வழியால் சைக்கிளில் வந்த முதியவர் ஒருவர் ‘தம்பிமாரே படிக்கிற பாடசாலைக்கு ஏன் கல்லெறிகிறீர்கள் ? அப்படி கல்லெறிய வேண்டுமானால் இந்தா போகிறதே அரசின் இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டி. அதற்கு எறியுங்கள்’ என்றார்.
இது எப்படி இருக்கிறது?
யாவோ(Yehovah) கொடுத்த அருள்வாக்கின் பிரகாரம் இஸ்ரேலியர்களை எகிப்தில் இருந்து வெளியேற்றும் மோசஸே (Moses) வெளியேற்றினார்.
அதுபோல் அன்று பெரியவரின் அருள்வாக்குப் பிரகாரம் பாடசாலையை பதம்பார்த்த அந்தக் கல்லுகள், போக்குவரத்துச்சபை பஸ் வண்டிகளை நோக்கி எறியப்பட்டது. நானறிந்தமட்டில் அரசியல் காரணங்களுக்காக அதுதான் யாழ்ப்பாணத்தில் நடந்த முதலாவது கல்வீச்சு சம்பவம் என நினைக்கின்றேன். அதன்பின்பு யாழ்ப்பாணம் குடாநாடெங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகள் சேவையில் இல்லாமல் போகும் வரையும் கல்லெறந்து உடைத்து, எரித்தது எமது வரலாறு.
இரண்டாவது சம்பவம், 75 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரி மாணவர்கள் குடியரசுதினத்தில் கல்லுரியை பகிஷ்கரித்தார்கள்.அது எங்களுக்கு இலகுவாக வரும் போராட்ட முறையாகும். நாங்கள் ஒழுங்காகப் படிப்பது வெளியே ரீயுசனில்தான். எங்கள் காலத்தில் ஓழுங்காக பாடசாலையில் படிப்பித்த பிரான்சிஸ் மாஸ்டர் வெளியே டியூட்டரி வைத்து எங்களைப் படிப்பித்தார். ஆனால் சென்ஜோன்ஸ் கல்லுரரி மாணவர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு விரும்பமாட்டார்கள். காரணம் அங்கு அவர்களுக்கு கல்லுாரியில் ஒழுங்காக படிப்பித்தார்கள்.
இந்துக்கல்லூரி மாணவர்கள் முற்றாக பகிஷ்கரித்ததால் ஒருவித வெற்றிப் பெருமிதத்துடன் சென்ஜோன்ஸ் பக்கம் நடப்பதைப் பார்பதற்காக ஒரு நண்பன் சுந்தரேசனோடு சைக்கிளில் சென்றேன். சுந்தரேசன் சிறிது குள்ளமானவான். சைக்கிளை நிறுத்திவிட்டு மதில்மேல் ஏறி எட்டிப் பார்த்தான். அவனது கெட்டகாலம் பின்னால் பொலிஸ் ஜீப் வந்து நின்றது. இருவரையும் நாலு பொலிஸ் கான்ஸ்ரபிள்களும் ஒரு இன்ஸ்பெக்ரரும் சுற்றி வளைத்தார்கள்.
நாங்கள் பயந்தபடி, விறைத்துப் போனோம்.
மதிலோடு நின்ற சுந்தரேசனை’ என்னடா எழுதினாய்’? என்று தலைமயிரில் பிடித்தபடி அரை குறைத்தமிழில் கேட்டார் அந்த இன்ஸ்பெக்ரர்.
அந்த மதிலில் “குடியரசு தினத்தை பகிஷ்கரிப்போம்” என சிவப்பு மையால் ஆங்கிலத்தில் ஏற்கனவே கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது
‘ஐயா, நான் எழுதவில்லை’ என்றான் சுந்தரேசன்.
பொலிஸ் இன்ஸ்பெக்ரர் அவனை அடிக்க கையை ஓங்கிய போது ‘ஐயா இது சரியில்லை’ என்றான். அவனது முகத்தில் தோன்றிய உணர்வை வர்ணிக்க முடியாது. சுருக்கமாக சொல்வதானால் அவனது முகம் பயத்தில் பேயறைந்தவன் போலாகியது. வாழ்க்கையில் அந்தமாதிரியான பயத்தை முகத்தில் தேக்கியவாறு ஒருவர் அடியை தவிர்க்க குனிந்தால் கொதிக்க வைத்த இறாலின் கூனல்தான் ஞாபகத்துக்கு வரும். நண்பன் அவ்வாறு கூனிக் குறுகியதைப் பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்து தொலைத்துவிட்டது.
வள்ளுவர் சொன்ன இடுக்கண் வருங்கால் நகுக என்பதுபோல் அன்று நான் சிரித்தது இலங்கை அரசின் நகர்காவலர்களுக்கு பிடிக்கவில்லை.
அவர்களுக்கு மட்டுமா சுந்தரேசனுக்கும் பிடிக்கவில்லை என்பது பிறகுதான் தெரிந்தது. அவன் பின்னர் தனக்குத் தெரிந்த சகல தூசண வார்த்தைகளாலும் என்னைத்திட்டியபோதுதான் அவனது கோபம் பொலிஸை விட என்னிடம்தான் அதிகம் என்பதை புரிந்துகொண்டேன்.
இன்ஸ்பெக்டர் அவனை கண்டிக்க முனைந்தவிதம் எனக்கு நகைச்சுவையாகியது. எனது சிரிப்பு அவருக்கும் பிடிக்கவில்லை. என்னிடம் திரும்பி முகத்தை கடுமையாக்கிக் கொண்டு,
‘எந்தப் பாடசாலை ?’எனக்கேட்டார்.
‘இந்துக்கல்லூரி’
‘அப்ப ஏன் இங்கு வந்தீர்கள்’
‘எனது உறவினரது வீட்டுக்கு’
‘விலாசம் என்ன?’
எனது வருங்கால மனைவியின் வீடு சென்ஜோன்ஸ் கல்லூரிப் பக்கம்தான்; இருந்தது. அந்த வீட்டின் விலாசத்தைக் கொடுத்தேன்.
‘ஓடுங்கடா’ என இருவரையும் துரத்தினார்கள் பொலிஸார்.
அந்தச்சம்பவத்திற்குப் பிறகு பல நண்பர்கள் சுந்தரேசனை எங்காவது கண்டால் “ஐயா இது சரியில்லை” என்பார்கள்.
இனி யாழ்குடாநாட்டிலிருந்து இராமேஸ்வரத்துக்கு வருகிறேன்.
அன்று மாலையில் சென்னை செல்வதற்கு ரயில் ஏறினேன். அது எனக்கு நீண்ட பயணமாக இருந்தது. முகங்களையும் மனிதர்களையும் துருவிப்பார்ப்பது எனக்கு மிகவும் விருப்பமான பொழுது போக்கு. எழுதுவதற்கான உந்துதலும் இதிலிருந்துதான் வந்திருக்கவேண்டும்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரி விடுதியில் இருந்த காலத்தில் சினிமா கருப்பு வெள்ளையில் இருந்து வர்ணப்படங்களாக வெளிவந்த காலம். அந்தக்காலத்தில் சினிமா எனக்கு போதையாகவே இருந்தது. ஆரம்பத்தில் சினிமாத் தியேட்டரில் வேலை செய்யவேண்டும் என்பதே எதிர்கால கனவாகவும் இருந்தது. அந்த அளவு நிழலாக இருந்தவற்றை நேசித்தேன். இந்துக் கல்லூரி விடுமுறைக்குப்பின்னர் தொடங்கும் முதல்நாளில் விடுதியில் இருந்த எங்களுக்கு எதுவித நேரக் கட்டுப்பாடும் இல்லை. எந்த நேரத்திலும் வரலாம் போகலாம் என்பதால் ஒரே நாளில் மூன்று படங்களைக் கூடப் பார்த்திருக்கிறேன்.
இப்படி தென்னிந்திய சினிமாவைப் பார்த்ததால் எங்களது மனதில் இந்தியா ஒரு வர்ணமயான தோற்றத்தைக் கொடுத்தது. வண்ணக்கோட்டு சூட்டுகள் மட்டுமல்ல சிவப்பு, வெள்ளை என சப்பாத்து போடும் எம்ஜியார், சிவாஜி என திரையில் பார்த்திருந்தோம். இது மட்டுமா பெண்கள் எல்லோரும் அப்பிள் முகத்தில் அலைந்து திரியும் காட்சிகள் மனதில் இருந்தன. நாங்கள் படித்ததமிழ் கதைப்புத்தகங்களிலும் கருப்பானவர்களை மாநிறமானவர்கள் என்றுதான் சொல்வார்கள். எனக்கு மாநிறமென்றால் அரிசிமா கோதுமை மாவுதான் நினைவுக்கு வரும். அது எப்படி மனிதர்கள் மா நிறத்தில் இருக்கமுடியும்? என்ற கேள்வியும் நீண்ட நாட்களாக இருந்தது.
இப்படி சொல்கிறாய் ஜெயகாந்தனின் கதைகளைப் படிக்கவில்லையா? அவரது சித்தரிப்புகளில் புரிந்திருக்குமே? சேரிமக்கள்தானே அவரது கதை மாந்தர்கள். என்று இதனைப்படிப்பவர்கள் கேட்கக்கூடும். ஆனால் எனக்கோ இந்தியாவில் மாந்தர்கள் நான் பார்த்த சினிமாவிலும் படித்த கதைகளிலும் வந்தவர்கள் போல்தான் இருப்பார்கள் என்ற எண்ணம்தான் இருந்தது.
அன்றைய பயணத்தில் முழு ரயிலிலும் கோட் சூட் போட்ட மனிதர்களை காணமுடியவில்லை. இதை ஒரு சிரிப்பிற்காக எழுதவில்லை. தென் இந்திய கலாச்சாரத்தின் யதார்த்தத்தை தமிழ் சினிமாவும் கதைப்புத்தகங்களும் வெளியே இருப்பவர்களிடம் அக்காலகட்டத்தில் எவ்வாறு கொண்டு சேர்த்தன, எவ்வாறு நாம் உள்வாங்கிக் கொண்டோம் என்பதற்கு நானும் ஒரு சாட்சியாகிறேன்.
அவுஸ்திரேலியா
புதிதாக அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டம் கிடைத்தது என மகிழ்ந்தாலும் பட்டம் சோறு போடாது .குடும்பத்தைப் பராமரிக்க முடியாது என்ற உண்மை, படியாத காளையாக வயிற்றில் உதைத்தது.
படிக்கு வரையும் குடும்பம், மனைவியின் சகோதரனோடு ஒட்டுண்ணியாக வாழ்வதை அனுமதிக்க எனது தன்மானம் படித்து முடித்தபின் தடுத்தது. எனது ஈகோவிற்கப்பால் அவனுக்குத் திருமணம் பேசினார்கள். புதிதாக ஒரு இடத்தைத் தேட என நினைத்தபோது இலங்கைத் தமிழர்கள் வாழும் பகுதியான கோம்புஸ் என்ற சிட்னியின் மேற்கு ப் புறநகரில் குடியிருப்பைத் தேடினோம்.
அங்குள்ள பாடசாலை நல்லதென்பதால் அந்த பகுதியை தெரிவு செய்தோம் .அந்த ஃபிளட்டின் வாடகைக்கு அரச உதவிப்பணத்தில் 60 வீதம் போய்விடும் . எனது வேலைக்கு ஆய்வுக்கூடங்கள் பல்கலைக்கழகங்கள் என அனுப்பிய விண்ணப்பங்கள் சுவரில் எறிந்த பந்தாக பதிலுடன் வந்தன .
நம்மவர்கள் கடிதங்களை மற்றும் பதவி விண்ணப்பங்களை செய்தித்தாள் புதினமாகப் பார்த்துக் கடந்து விடுவார்கள் அவுஸ்த்திரேலியர்கள் அப்படியல்ல. உடனுக்குடன் மிகவும் கனிவாக நன்றி தெரிவித்து பதில் போடுவார்கள். இப்படி நிராகரிக்கப்பட்டு 50 கடிதங்கள் வரையும் சேர்ந்ததும் இது சரி வராது என நினைத்து நேரடியாக சிட்னியின் தொழிற்சாலைகளுக்குப் பாதயாத்திரையாக இறங்கினேன். எனது அதிர்ஸ்டம் அப்படிச் சென்ற முதலாவது இடம் பிரித்தானிய பெயின்ட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை. நேரடியாக ஆட்களை நிர்வகிக்கும் மனேஜரின் அறைக்கு அனுப்பினார்கள். யாரோ வயதான ஒரு மனிதரிடம் எப்படிப் பேசுவது?
என்ன கேட்பார்கள் ?
எப்படி பதில் தரவேண்டும்? என மனதில் உருப்போட்டபடி சென்றேன்.
எதிர்பார்க்காத மாதிரி நெருப்பின் நிறத்தலையுடன் நீலக்கண்ணுடன் இருந்த பெண் எனது கோப்புகளைக் கையில் வாங்கி ஆனால் விரித்துப்பார்க்காமல் “ இன்றே இணைந்துகொள்ள முடியுமா ? என்றாள் .
ஒரு தேவதை எனக்காக அந்த அறையில் எழுந்தருளி வரம் தந்தது போன்ற புளகாங்கிதத்துடன் மயிர்கூச்செறிய நான் உடனே சம்மதித்ததும், அவளே என்னை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று மடிப்புக்குலையாத காக்கி ஓவரோலைத் தந்தாள். இதுவரை வெள்ளை கோட்டை அணிந்தவன் புதிதாகக் காக்கி அணந்தேன். ஓவரோலை நான் போடுவதற்காக வெளியே சென்றவள் வரும்போது எனது நியமன கடிதத்தோடு காத்திருந்தாள்.
எனது வேலை பெயின்ட்டுகளின் நிறங்களைக் கலக்குவதற்கான இரசாயனக் கூழை தயாரிக்கும் இயந்திரங்களில் தூளான இரசாயனங்களைக் கொட்டி அனுப்புவதும், அவற்றின் வெப்ப அமுக்கத்தை மேற்பார்வை பார்ப்பதும் வெளிவரும் கூழைத் தகரப் பீப்பாய்களில் நிரப்புவதுமாகும் .
உடல் முறியும் வேலையில்லை. எனது எட்டுமணிநேர சிஃப்ட் மாலை வேளையில் வரும். என்னுடன் ஒரு ஆங்கிலேயர் மற்றவர் போலந்து நாட்டவர் வேலை செய்தார்கள். பல்கலைக்கழகத்தில் படித்தவன் என்பதால் கண்ணியமாக நடத்தினார்கள். தொழில்கற்று தந்தார்கள். என்ன ஒவ்வொரு முறையும் துசண வார்தையுடன் சேர்த்தே எனது பெயரை அழைப்பார்கள் . ஆரம்பத்தில் கேட்பதற்குக் கடினமாக இருந்தது. பின்பு அதுவே சங்கீதமாகியது. அதிலும் ஆங்கிலேயனான மார்க் தனது யோக்சயர் கடினத் தொனியோடு அழைப்பது கிரிகெட் விளையாட்டுக்காரர் ஜெவ்ரி போய்க்கெட்டின் வர்ணனையைக் ( Geoffrey Boycott) கேட்பதுபோல் இருக்கும்
எமது தமிழர்கள் அரசியலும் சினிமாவும்போல அவர்கள் வாழ்விலும் இரண்டு விடயம் முக்கிய பேசுபொருளாகிறது ஒன்று கார் பற்றியது விதம் விதமான கார்களைப்பற்றி பேசுவர்கள் அதைவிட பெண்கள் . இளமையில் அவர்களது சாகசங்கள் காற்றில் தவழும்
என்னால் பெண்களைப் பற்றிய பேச்சுகளை ரசிக்க முடிந்தது. ஆனால் கார்கள் பற்றிய தொழில்நுட்ப விடயம் புரியவில்லை.
என்னிடம் கார் இருக்கவில்லை பஸ்சிலும் வேலைக்குப்போவேன் . போலந்துகாரர் என்னை வீட்டில் விடுவர் .
ஐந்து நாட்கள் வேலையை விட ஞாயிற்றுக்கிழமைகளில்; ஓவர்ட்ரைம் கிடைக்கும். அந்தக்காலங்களில் என்னை ஒரு பணக்காரனாக நினைக்க வைத்த ஊதியம். ஆவஸ்திரேலியவில் சுரங்க தொழிலாளிகளுக்கு அடுத்ததாக வேதனம் கொடுப்பது .இரசாயன தொழிலாளர்களுக்கே. இரண்டு பிரிவினரும் அதிகம் வாழ்வதில்லை எனக்கு ஒரு தொழிலாளி தனக்கு வேர்க்கும்போது அந்த வேர்வை மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்றார்
கொதித்தபடி வரும் அந்த இராசாயனக் கூழை பீப்பாய்களில் அடைத்து அவற்றை மூடும்போது வரும் ஆவி முகமூடியைக் கடந்து எனது சுவாசத்தில் புகுந்து விஸ்கியாக கிக்கேற்றும். முகத்தைத் திருப்பியபடி வேலை செய்யப் பழகிக்கொண்டேன்.
மூன்று மாதங்கள் வேலை செய்துகொண்டிருந்தேன். எப்பொழுதோ போட்ட விண்ணப்பத்திற்கு சிட்னியின் மேற்கு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி வேலைக்கு தெரிவு செய்திருப்பதாக கடிதம் வந்தது.
அதில் குறிப்பிட்டிருந்த எனது வேதனம் தொழிற்சாலையின் எனக்குக் கிடைப்பதில் அரைவாசியாக இருந்தது. என்ன செய்வது? மத்தியதர வர்க்கத்தின் மனப்பான்மையுடன் வேலை தந்த தேவதைக்கும் எனது சகாவான மார்க்கிற்கும் போலந்து ரெவ்வானுக்கும் நன்றி சொல்லிய பின்பு அந்த தொழிற்சாலையை திரும்பிப் பார்த்தபடி வெளியே வந்தேன்.
நன்றி -அம்ருதா
மறுமொழியொன்றை இடுங்கள்