நடேசன்
நல்ல நாவலைப்படிக்கும்போது நமக்குள் ஒரு உருமாற்றம் (Metamorphosis) நடக்கிறது என்பார்கள் . அப்படியான ஒரு மாற்றத்தை சமீபத்தில் தோப்பில் முகம்மது மீரானது சாய்வு நாற்காலியையும் ஷோபா சக்தியின் இச்சா நாவலையும் வாசித்தபோது உணர்ந்தேன்.
இந்த உருமாற்றம் மனதில் நடக்கும் .
எப்படி புரியவைக்கலாம்?
நகரவீதிகளில் நடந்து கொண்டு போகும்போது திடீரென ஒரு பெரிய காட்டுக்குள் இருக்கிறீர்கள் என்றால் அப்பொழுது உங்களது மனதில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்திருக்கிறீர்களா? அதை அனுபவித்திருக்கிறீர்களா?
அதுபோலவே .
கிட்டத்தட்ட 18 மாதங்கள் முன்பு ஷோபாசக்தியிடமிருந்து குறும்செய்தி வந்தது
“அண்ணன் வணக்கம்.
உங்களது ‘தற்கொலைப் போராளி’ கதையில், வெள்ளைக்காரர் இருந்ததால் போராளியை சுவரோடு மோதி வெடிக்க சொன்னது உண்மையில் நடந்ததா அல்லது நீங்கள் கற்பனையில் உருவாக்கிய சம்பவமா?
அன்புடன்
ஷோபா”
நான் பதிலுக்கு தொலைபேசியில் அந்த சம்பவத்தைப் பற்றிப் பேசினேன். மலேசியன் ஏர்லைன் 370 என்ற சிறுகதைத் தொகுப்பில் வந்த சிறுகதை .
பின்பு 6 மாதங்கள் முன்பாக மீண்டும் ஒரு செய்தி வந்தது.
“ வணக்கம் அண்ணன்,
நான் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் நாவலில் உங்களது ‘தற்கொலைப் போராளி’ கதையிலிருந்து ஒரு சம்பவத்தை எடுத்து என் கோணத்தில் அணுகி ஒரு அத்தியாயம் எழுதப்போகிறேன் இதுபற்றி முன்னொருமுறை உங்களோடு நான் தொலைபேசியில் உரையாடியது உங்கள் ஞாபகத்திலிருக்கும். நாவலின் கடைசிப் பக்கத்தில் ”நொயல் நடேசனுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவருடைய கதையொன்றிலிருந்து என் நாவலின் ஒருஅத்தியாயத்தின் முடிச்சவிழ்க்க வழி கிடைக்கப்பெற்றேன்” எனக் குறிப்பிடுவேன். தயவுடன் உங்கள் அனுமதி தேவை.
அன்புடன்
ஷோபா”
எனது சிறுகதையின் கரு ஷோபாசக்தியின் கையால் நாவலின் பகுதியாக வருவது மகிழ்ச்சியாக இருந்தது . தமிழ் இலக்கியவாதிகள் உப்புக் குறைந்த உணவைத் தின்ற கோழிகளாக ஒருவருக்கொருவர் கொத்தி குருதியில் உள்ள உப்பை ருசி பார்க்கும் தமிழ் இலக்கியப் பரப்பில் என்னிடம் அனுமதி கேட்டது மிகவும் நிறைவாக இருந்தது.
இச்சா நாவல் எனது கையில் கிடைத்தது படித்தேன்.
ஒரு சாதாரண பொழுது போக்கு நாவலுக்கும் இலக்கிய நாவலுக்கும் என்ன வித்தியாசம் என்றால், இலக்கிய நாவல் பாத்திரத்தின் குணாதிசயங்களால் பின்னப்படும். அதேவேளையில் பொழுதுபோக்கு நாவல்கள் சம்பவங்களால் தொடரும்.
பல ஈழத்துத் தமிழ் போர் எழுத்தாளர்கள் விடுதலைப் புலிப்பிரபாகரன் உருவாக்கிய சம்பவங்களை ஏணிக் கயிறாக வைத்து இன உணர்வுடன் தொங்குவார்கள் அல்லது சண்டையை எம்ஜி ஆர் ரஜனிகாந்தின் வழியாக மட்டும் பார்த்த இந்தியத் தமிழர்களுக்காக எழுதுவார்கள்.
இவர்களது நாவல்களில் வரும் பாத்திரங்கள் நமது மனதில் நிற்காது . சம்பவங்கள் எமக்குப் புதிதாக இராது . ஆங்கிலத்தில் இக்பால் அத்தாஸ் மற்றும் டி பி எஸ் ஜெயராஜ் இதைவிட அழகாக எழுதியிருப்பார்கள். பாத்திரங்களை உருவாக்கி அந்தப்பாத்திரங்களது அக உணர்வுகளுக்கும் புறச்செயலுக்கும் என்னகாரணமென எழுதுவது நாவலாசிரியனது பொறுப்பு . இது நான் சொல்லவில்லை – ஆங்கில நாவலாசிரியர் இயன் பொஸ்டரின் (A Passage to India) வார்த்தை .
தென் கிழக்கிலங்கையின் அம்பாறை பகுதியில் அப்பாவியான இளம் சிறுமியைப் பாத்திரமாக உருவாக்கி இறுதியில் குழந்தையைப் பெற்றுத் தாயாக, புலம்பெயர்ந்த கணவனால் வஞ்சிக்கப்பட்டுகிறாள். துருவத்திலும், பால்டிக் கடலுக்கும் இடையில் அமைந்திருக்கும் ஐரோப்பிய நாடொன்றில் அவள் மரணிக்கும்வரை, அவளது புறச் செயல்களையும் அகச் சிந்தனைகளையும் கொண்டது இந்த நாவல்.
நாவலைத் தொடர்ந்து படிப்பதற்கு ஷோபா சக்தியின் மொழி வழி நடத்துகிறது . சில இடங்களில் அந்த மொழி இதயத்தில் சுருக்கென ஊசி குத்துவதுபோல் இருந்தாலும், அந்த இருளான இடங்களை இனங்காட்ட உதவுகிறது.
இந்த நாவல் இலங்கை அரசினது மற்றைய குடியேற்றங்களில் உள்ள ஊர்காவல் படையினதும் செயல்களை வெளிக்கொணர்வதுடன் நமது சமூகத்தில் இளம்பெண்களை வன்முறைக்குட்படுத்தும் விடயங்கள் வருகிறது.
நமது சமூகத்தில் உள்ள வன்முறை நாம் பேசவிரும்பாத விடயங்கள். எமது அழுக்கை சுரண்டிக்காட்ட நாம் விரும்புவோமா? என் மனதில் உறுத்தும் விடயம் இது: பாலியல் வன்முறை எங்கும் உள்ளது. காலம் காலமாக நடக்கிறது. ஆனால் எமது சமூகங்களில் மட்டுமே பாவிக்கப்படும் வன்முறையைப் புரிந்து கொள்ளாத அப்பாவிகளாக அந்தச் சிறுமிகள் இருப்பது முக்கியமான விடயம்.
இப்படியான ஒரு நிலை 21 ஆம் ஆண்டிலும் நீடிக்கிறது
சாதி, பெண்ணடிமைத்தனம் போன்றவை, மனிதர்கள் சகமனிதனின்மேல் பாவிக்கப்படும் வன்முறைகள். ஆனால் அந்த வன்முறைகளை அவற்றால் பாதிக்கப்படுபவர்களே புரிந்து விடாமல் பாரம்பரியம், கலாச்சாரம், மதம் என பூப்போட்டு தைத்த தலையணை உறைகளால் மூடிவைத்திருக்கும் வைத்திருக்கும் எமது முன்னோர் பாராட்டப்படவேண்டியவர்கள்!
இந்த நாவலில் சிங்களவர்கள் எல்லோரும் குருதியை உறிஞ்சுபவர்கள் தமிழர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்னும் தன்மையற்று வன்முறையை பொதுவாக வைக்கிறது
ஆனால் ஷோபாசக்தியின் இச்சாவில் வெளிநாட்டில் வாழும் தமிழர்களைக் குறிப்பாக ஊடகம் நடத்துபவர்களை அம்மணமாக்கி இடுப்பில் ஒரு கிளைமோர் குண்டு வைக்கப்பட்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் அவுஸ்திரேலியாவில் தமிழ் வானொலிகளில் இப்படியானவர்கள் இருக்கிறார்கள் . கதை ஐரோப்பாவில் நடப்பதால் அங்குள்ளவர்களை நோக்கியே குறியிருக்கிறது .
நாவல்களது நோக்கம் சமூக சீர்திருத்தம் செய்வதல்ல, என்ற போதிலும் இந்த நாவல் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் தமிழகத்தவருக்கும் மற்றும் எமது அரசியல்வாதிகளுக்கும் பாடத்தை உணர்த்துகிறது. இயக்கத்திலிருந்த போராளிகள் தசையும் இரத்தமும் கொண்டதுடன் அவர்களின் உணர்வுகள் பாசம் ஆசை என்பன எம்மைப் போன்றது. போர் முடிந்து பத்து வருடங்களாகியும் இவர்களது பாதிப்புகளை பலர் உணர்வதில்லை . ஆனால், ஒவ்வொரு வருடமும் கூச்சல் போடுவது மாத்திரம் நிற்பதில்லை
2010 இல் நடந்த ஒருவிடயம் – அக்காலத்தில் புனருத்தாரண வேலைகளின் ஆணையாளர் ஒருவர் ( சிங்கள இராணுவ பிரிகேடியர்) என்னிடம் முன்னாள் போராளிகளைப் பாடசாலைகளில் இணைத்து படிக்கவைப்பதற்கு ஏனைய பிள்ளைகளின் பெற்றோர்கள் எதிர்க்கிறார்கள் . அதனால் அவர்களுக்கு வெளியே ரியூசன் வகுப்புகளை நடத்துவதற்கு ஏதும் ஒழுங்குகள் செய்வதற்கு ஏதேனும் வழிகளில் உதவமுடியுமா.? ” எனக்கேட்டார்.
எப்படியிருக்கிறது எமது சமூக நிலைமை?!
காஃவ்கா சொல்லியது போல் நல்ல புத்தகங்கள் எமது மனதில் இறுகிய பனியாக உறைந்திருக்கும் . அறியாமையை பிளக்க உதவும் .
Franz Kafka – A book must be the axe for the frozen sea inside us
எனது சிறுகதை
https://noelnadesan.com/2012/06/03/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf/
மறுமொழியொன்றை இடுங்கள்