இலங்கைத் தேர்தலில் வெளிப்பட்ட அச்சம்


நடேசன்

“ இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளைப்பற்றி என்ன நினைக்கிறாய் நடேசன் ?” எனக்கேட்டாள் பிரீதி

அவளது கேள்விக்கு, “ இந்த முடிவையே நானும் எதிர்பார்த்தேன். அங்கு மாற்றம் வருதையே விரும்பினேன் “ என்றேன்.

“ அப்படியா ? “

“ நாங்களும் கோத்தாவிற்கே ஆதரவு. நாடு பாதுகாப்பாக இருக்கும். மக்களும் பாதுகாப்பபாக இருப்பார்கள் “ என்றார் என்னுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்த டொக்டர் பிரீதி கருணாரத்தின.

அதேபோல்; எனது நண்பி புஸ்பா மாத்தறையில் வசிப்பவள். அவளும் எனது கோத்தபாயவை ஆதரித்த முகநூல் பதிவுகளை பகிர்ந்து கொண்டாள்

இவளுக்கு இலங்கையில் தேயிலைத்தோட்டமும் இருக்கிறது. இவள் கடந்த அதிபர் தேர்தலில் யூ. என். பி. ஆதரித்து நின்ற வேட்பாளருக்கு வாக்களித்தவள். இம்முறை தேர்தலில் கோத்தபாயவை ஆதரித்தவள். வசதியானவள். எந்தவொரு பொருளாதராப் பிரச்சினையும் புஸ்பாவுக்கு இல்லை என்பதும் தெரியும். தற்போது, அவள் ஓய்வுபெற்றுவிட்டாள்.

டொக்டர் பிரீதி கருணாரத்தின தற்பொழுது, நான் கிழமையில் ஓரிரு நாட்கள் மட்டும் வேலை செய்யும் மிருக வைத்தியசாலையில் இருவரும் வேலை செய்கிறோம் 1975 ஆம் ஆண்டுமுதல் இருவரும் ஒன்றாக பேராதனையில் மிருகவைத்தியம் படித்ததுடன், இருவரும் மெல்பனில் வசிப்பதால் கிட்டத்தட்ட 45 வருடகால நட்பு.

பிரீதி, மத்திய வகுப்பைச் சேர்ந்தவர். பிறப்பு வளர்ப்பு எல்லாம் கொழும்பு. சகோதரர்கள் எல்லோரும் படித்தவர்கள் . அமெரிக்கா, அவுஸ்திரேலியா என வசிக்கிறார்கள். அதேபோன்று புஸ்பா எங்களுடன் படித்துவிட்டு, இலங்கையில் மிருக வைத்தியத்துறையில் பதில் இயக்குநராக பணியாற்றி இளைப்பாறியவர். அத்துடன் தேயிலைத் தோட்டத்தின் சொந்தக்காரி .

இவர்களை 45 வருடங்களாகத் தெரியும் . எந்த இன மத பாகுபாடுமில்லாத அறிவுஜீவிகள். இவர்கள் இம்முறை கோத்தபயா ராஜபக்சாவை தமது வர்க்க உணர்வில் இருந்து வெளியே வந்து ஆதரிக்கிறார்கள் . கோத்தாவை ஆதரித்த ஏழு மில்லியன் மக்களைப் போன்றவர்கள்.

இவர்களுக்கு இலங்கை அரசிடமிருந்து எந்தவொரு எதிர்பார்ப்போ, தேவையோ இல்லை. என்னால் இவர்களை இனவாதிகள் எனச் சொல்ல முடியாதவர்கள்.

இவர்களின் அச்ச உணர்வே எனக்குப் புரிந்தது.

இலங்கையில் 30 வருடகாலப் போர் நடந்து முடிந்தது என எல்லோரும் அமைதியாக இருந்த நிலையிலே கொழும்பிலும் மட்டக்களப்பிலும் நீர்கொழும்பிலும் குண்டுகள் வெடித்தன. 250 உயிர்களைப் பலி எடுத்ததுடன் இலங்கையில் ஒரு மில்லியன் மக்களது பொருளாதாரத்தைத் தட்டிப்பறித்துவிட்டது .

இலங்கையின் உல்லாசப் பயணத்துறையில் சம்பந்தப்பட்டவர்கள் 90 வீதமானவர்கள் சிங்கள மக்களே. இந்த வெடிகுண்டுகள் உயிர்ப் பயத்திற்கப்பால் பலரது வாழ்வாதரத்தை பறித்து வறுமையில் நிறுத்தியது. ஒவ்வொருவரதும் ஈரக்குலைகளைப் பிடித்து இழுத்ததுபோன்ற நிலையை உருவாக்கிவிட்டது.

தமிழர்களது போரில் நேரடியாகத் எதிரியைக் கண்டார்கள் . எதற்கு விடுதலைப்புலிகள் குண்டுவைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளமுடிந்தது.

ஆனால், உயிர்த்த ஞாயிறுக் கொலைகளுக்கு உள்ளுர் இஸ்லாமிய மக்கள் பொறுப்பல்ல என்பது தெரிந்ததும், கண்ணுக்குத் தெரியாத எதிரி இருட்டில் நின்று அடிப்பதுபோன்ற பதற்ற நிலை. அப்படி நடந்தால் நாம் என்ன செய்வோம்?

அத்தகைய எதிரியிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு, இதுவரையில் திறமையாகச் செயலாற்றியதாக நம்பப்படும் மனிதர் ஒருவரையே தங்கள் புதிய தெரிவாக நினைக்கிறார்கள் . அத்தகைய ஒருவர் வந்தால் மட்டுமே நமக்குப் பாதுகாப்பு என்று நம்புகிறார்கள்.

இதை நான் சொன்னால், பலருக்கும் நம்புவது கடினமானது. காரணம் சிறுபான்மை சமூகம் தமிழராகவோ அல்லது முஸ்லீமாகவோ மட்டுமே பார்க்கிறது. மற்றத்தளத்தில நின்றுபார்க்கும் வரை அடுத்தவரைப் புரிந்து கொள்ளமுடியாது .

நான் சொல்லும் ஒரு விடயத்தை சிந்தித்துப் பாருங்கள். இலங்கையில் சிங்களம் பேசும் கத்தோலிக்க மக்கள் இதுவரை காலமும் யு. என். பியின் தொடர்ச்சியான ஆதரவாளர்கள் . அவர்களும்கூட கோத்தபாய இராஜபக்ச இருந்தால் தமக்கு பாதிப்பு வராது என நம்புகிறார்கள் . இதனாலேதான் கொழும்பு கத்தோலிக்க பேராயர், இராஜபச்சவுக்கு ஆதரவு தெரிவித்தார் . கத்தோலிக்க தலைமைப்பீடத்தில் பல குறைகள் இருந்தாலும், வேதாகமத்திலிருந்து இக்காலம் வரையும் தமது மக்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு நல்ல மேய்ப்பர்களாக உலகெங்கும் இயங்குவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே .ஆக மொத்தம், சிங்கள பௌத்தர்கள் மட்டுமல்ல ஐந்துவீதமான கத்தோலிக்கர்களும் தங்களைக் காப்பாற்றக்கூடியவராக கோதபாய ராஜபக்சவையே நம்பினார்கள் என்பதை தென் மாவட்டங்களில் இந்தத்தேர்தல் முடிவு உறுதிப்படுத்துகிறது.

இஸ்லாமியர்களது நிலை

குண்டுவெடிப்பின் பின்னர், அப்பாவி இஸ்லாமியர்கள் துன்புறுத்தப்பட்டார்கள் . சிறையில் அடைக்கப்பட்டார்கள் . அவர்களது சொத்துகள் காடையர்களால் எரிக்கப்பட்டன. சூறையாடப்பட்டன. இதனால் இஸ்லாமிய சமூகத்தில் சகலரும் பயந்தனர்.

இந்த அசம்பாவிதங்கள் நடந்தகாலத்தில் பதவியில் இருந்தது யு. என். பி. அரசே . முன்பு மகிந்த ராஜபக்ச இருந்த காலத்தில் சில வன்முறைகள் நடந்தபோதும் ஒப்பீட்டளவில் அவை மிகச் சிறியன . அப்படியிருந்தும், இஸ்லாமியர்கள் ஏன் யு. என். பி. யை ஆதரித்தார்கள்..?

இங்கேதான் மக்களது பயத்தை இஸ்லாமிய அரசியல்வாதிகள் தங்களுக்குச் சார்பாகப் பாவித்தார்கள் என்பது புரிகிறது.

இலங்கையைப் பொறுத்தவரை எல்லா தமிழ் – சிங்கள – முஸ்லீம் அரசியல்வாதிகளும் ஊழல் பேர்வழிகள் . ஆனால், முஸ்லீம் அரசியல்வாதிகள் இதில் மற்றவர்களை முந்திக்கொண்டு முதல்பரிசைப் பெறுவார்கள். அத்துடன் நடந்த போர் இவர்களுக்கு ஐந்து நாள் கிரிக்கட் பந்தயம்போல் அதிக ஓட்டங்களைக் கொடுத்தது.

இந்த அரசியல்வாதிகளுக்கு யு. என். பி. நிறுத்தியவரை அதிபர் பதவியில் ஏற்றினால் தங்களது வியாபாரத்திற்கு வசதிகூட எனநம்பி, மொத்தமாக யு . என். பி. யை ஆதரித்ததுடன், கோத்தபாயாவை சிங்கள கடும்போக்காளராக மக்களிடம் காட்டுவதில் வெற்றிபெற்றார்கள்.

இங்கேயும் சாதாரண முஸ்லீம்களின் பயமே இவர்களது வர்த்தகத்தின் மூலதனமாகியது.

வட-கிழக்குத் தமிழர்கள்

வட – கிழக்குத் தமிழர்கள் விடயம் கொஞ்சம் வித்தியாசமானது. இறுதிப்போரை நடத்திய பாதுகாப்பு செயலாளர் மீது தமிழர்களுக்கு பயமிருப்பது நியாயமே. அதிலும் விடுதலைப் புலிசார்பாக நடப்பவர்கள் பயங்கொள்வது தவிர்க்க முடியாதது . ஆனால், போரைத் தலைமையேற்று நடத்திய இராணுவத்தளபதி ஃபீல்ட் மார்சல் சரத்பொன்சேக்காவுக்கு 2010 இல் நடந்த அதிபர் தேர்தலில் வாக்குகளை அள்ளிப் போட்டார்கள் . தமிழ்த் தலைவர்கள் சொல்லியே போட்டார்கள் என வைத்துக்கொள்வோம்.ஆனால், மகிந்த ராஜபக்சவிற்கு 2015 இல் விழுந்த வாக்குகளோ அல்லது வடக்கில் டக்ளஸ் தேவானந்தா – கிழக்கில் பிள்ளையான் என்ற சிவநேசத்துரைக்கு முன்னர் விழுந்த வாக்குகள் கூட ஏன் கோத்தபாயாவுக்கு கிடைக்கவில்லை..? என்பது இங்கு கேள்வியாகும்.

வடமாகாணத்தில், எப்பொழுதும் விடுலைப்புலி எதிர்ப்பாளர் இடதுசாரிகள் மற்றும் சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் என 25 வீதத்திற்கு மேல் இருக்கிறார்கள். அவர்கள் ஒற்றுமையாகாமல் சிதறுவது உண்மை. அப்படியிருந்தும் ஏன்அந்தளவாவது கோதபாய ராஜபக்சவிற்கு கிடைக்கவில்லை..?

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சொன்னதனால், அவர்கள் தங்களது வாக்குகளை சஜித் பிரமதாசாவிற்கு போட்டிருப்பார்கள் என நான் நம்பத்தயாரில்லை . சம்பந்தனுக்கோ சுமந்திரனுக்கோ அந்தளவு செல்வாக்கு அங்கு எப்பொழுதும் இருந்ததில்லை. முன்பு இருந்ததைவிட தற்பொழுது குறைந்திருக்கிறது.

அவ்வாறாயின் என்ன காரணம்.. ?

மீண்டும் பயம்!

ஆனால், அந்தப்பயத்தை இம்முறை விதைத்தவர்கள் தமிழ் அரசியல்வாதிகளல்ல . தமிழ் ஊடகங்களே!

வடமாகாண தமிழ்மக்கள் நீடித்த போரினால் கல்வியில் மட்டுமல்ல பல விடயங்களிலும் பின்தங்கிவிட்டவர்கள் . இலங்கையின் எந்தப்பகுதியிலும் இந்தளவு மனிதர்கள் அன்னத்திற்கும் கழுகிற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள் .
தமிழைத்தவிர, மற்ற மொழிகள் தெரியாது. இதனால் இங்குள்ள அச்சு ஊடகங்களும் வெளிநாட்டில் இருந்து வெளியாகும் இணைய ஊடகங்களுமாகச் சேர்ந்து மக்களுக்கு வெள்ளைவேனையும் கோத்தபாய ராஜபக்சாவையும் ஒன்றாக இணைத்துக்காட்டுவதில் வெற்றி பெற்றுவிட்டார்கள் .

இதனால் தமிழர்களும் பயந்துவிட்டார்கள். இவர்கள் மற்றைய தேர்தல்களில் டக்ளஸ் தேவானந்தாவை ஆதரிப்பவர்களாக இருக்கலாம். கிளிநொச்சியில் வேறு ஒருவரையோ, அங்கஜன் இராமநாதனையோ ஆதரிப்பவர்களாக இருந்தாலும், தங்களைத் தேடியும் வெள்ளைவேன் வருமென பயந்தார்கள். அவர்களது பயம் யாருக்குப் போட்டாலும் கோத்தபாயாவிற்கு போடக்கூடதென்பதில்தான் தங்கியிருந்தது.

மூன்று இனத்தினதும் அப்பாவி மக்களின் அச்சம் இந்த அதிபர் தேர்தலில் வாக்குகளாக வெளிவந்திருக்கிறது. 75 வீதமானவர்கள் சிங்களமக்கள் என்பதால் அவர்கள் விரும்பியவர் வெற்றிபெறுவார் என்பது ஜனநாயகம்.
—-0—

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: