“Our decision (to support Sajith Premadasa) was made, based on who should be defeated and who should not win. Not for any other reasons.”
– M. A. Sumanthiran, in Mannar, to the media, on November 4th.
நடேசன்
இராமாயணத்தில் வரும் பரதன் 14 வருடங்கள் இராமன் அமரவேண்டிய சிம்மாசனத்தில் அண்ணன் இராமனின் பாதுகையை வைத்து அரசாண்டான். அங்கும் ஆலோசகராக சுமந்திரன் என்ற மதியூகி இருந்ததாகக் கம்பன் கூறுகின்றான். அதைத் தெரிந்து கொண்டுதான் இலங்கை அரசியலில் நீங்கள் ஒரு மதியூகியாக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் உங்கள் பெற்றோர் உங்களுக்கு அந்தப் பெயரிட்டிருக்கிறார்கள் – என நினைக்கின்றேன்.
நீங்கள் நீடித்த ஈழப்போரின் பின்னர்தான் அரசியலுக்கு வந்தவர். எந்த இரத்தக் கறையும் படியாதவர் என்பது முக்கியமான இலட்சணம்.!
உங்களது அரசியல் பிரவேச ஆரம்ப காலங்களில் ஒரு நாள் இலங்கை பாராளுமன்றத்தில் நீங்கள் பேசியதைப் பார்த்தபோது, “ தமிழ் மக்களுக்கு நல்லதோர் பாராளுமன்ற உறுப்பினர் கிடைத்துள்ளார் “ என்ற நம்பிக்கை எனக்கு பிறந்தது.
நீங்கள் தாய்மொழியோடு ஆங்கிலமும் சிங்களமும் சரளமாகத் பேசத் தெரிந்த ஒருவர் என்பதோடு மெல்பனில் படித்தவரும் என்பதால் “ சரக்குள்ள “ விஷயம் தெரிந்த மனிதர் என நினைத்தேன். மெல்பனில் உங்களை சந்தித்துப் பேசியபோது, “ இலங்கை அரசாங்கத்தின் நிலை புரிந்தவராக இருக்கும் நீங்கள் சார்ந்துள்ள கட்சி ஏன் இப்படி நடந்துகொள்கிறது..? “ எனக்கேட்டபோது “ மக்களை விட்டு விட்டு நாம் ஒரு முடிவும் எடுக்க முடியாது. அவர்களையும் சேர்த்துக் கொண்டுதான் செல்லவேண்டும். “ என்றீர்கள்.
அப்பொழுதும் உங்களை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத்தான் பார்த்தேன் . அத்துடன், விடுதலைப்புலிகளும் பல மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருக்கிறர்கள் எனவும் பகிரங்கமாகக் கூறினீர்கள் .
அதற்கப்பால், வடபகுதியிலிருந்து இஸ்லாமியர்கள் வெளியேற்றப்பட்டதற்கு ஒரு தமிழனாக மன்னிப்பும் கேட்டீர்கள் .
நீங்கள் சொல்லியிருக்கும் இந்த விடயங்கள் யாவும் முன்னர் எனது இதயத்தையும் நெருடிக்கொண்டிருந்தவை.
அதனால், உங்கள் கூற்றுக்களினால் நான் மகிழ்ந்திருக்கின்றேன். .
ஒருவர் பாராளுமன்ற அங்கத்தினராகவோ அல்லது சமூகத் தலைவராகவோ மக்கள் முன்னிலையில் வரலாம். பேசலாம், சிறை செல்லலாம், ஏன் பிரபாகரன் போன்று போர்க்களத்தில் உயிரும் துறக்கலாம் ! ஆனால், அவர் சமூகத்திற்காக எதனைப் பெற்றுத்தந்தார்…? என்பது மாத்திரமே வரலாற்றில் பேசப்படும் .
விவசாயி ஏர்கொண்டு நிலத்தை ஆழமாக உழுவதனாலோ அல்லது அவனது தோட்டத்தில் கிணறை ஆழமாக கிண்டுவதாலோ அவனது குடும்பம் நிறைவடைவதில்லை . பட்டினியிலிருந்து வெளிவருவதில்லை. காந்தி , மண்டேலா போன்றவர்கள் முறையே சத்தியாக்கிரகம் செய்ததாலோ அல்லது அதிக காலம் சிறையிலிருந்ததாலோ பேசப்படவில்லை . அவர்கள் மக்களுக்கு ஏதோ ஒன்றைப் பெற்றுத்தந்தார்கள். மார்ட்டீன் லூதரால் கறுப்பு அமெரிக்கர்களுக்கு சம உரிமை கிடைத்தது .இவர்களை விட எத்தனையோ பேர் இப்படியான முயற்சிகளில் உயிர் இழந்தோ அல்லது சிறை சென்றோ இருப்பார்கள். அவர்களையும் கூட எவரும் நினைப்பதில்லை .
போரின் விளைவுகளைச் சந்தித்த ஒரு சமூகம் உங்களையும் உங்கள் கட்சியையும் நம்பி பேராதரவு கொடுத்து பாராளுமன்ற கதிரைகளைக் தந்தார்கள் . உங்களது புகழ் மற்றும் சிறப்புகள் அவர்களால்தான் உங்களுக்கு கிடைத்தன. ஆனால், அவர்களுக்கு நீங்களோ, உங்களது கட்சியோ எதுவும் பெற்றுக் கொடுக்கவில்லை என்பதும் உங்களுக்குத் தெரியும் .
உங்களால் மக்களுக்கு லாபமில்லை என்பது ஒரு புறமிருக்க, அதற்குப்பதிலாக நம்பிக்கைத் துரோகங்களைத்தான் அவர்களுக்கு பரிசாக்கியிருக்கிறீர்கள் .
“ நான் எனது கட்சிக்குத் தலைவரில்லை! ஏன் என் மீது குற்றம் சுமத்துகிறீர்கள் ..? “ என நீங்கள் கேட்கலாம்.. ! இராஜவரோதயம் சம்பந்தன் என்பவர் முகமூடியாக மாத்திரமிருக்கிறார். அவர் சார்பில் நீங்களே முடிவெடுக்கிறீர்கள் என்பது எல்லோருக்கும் நன்கு தெரிந்த விடயம். அதனால் உண்மையைப் பேசிவிடுவோம் .
கடந்த இரண்டு தடவைகளும் பாராளுமன்ற உறுப்பினராக நீங்கள் இருந்து செய்த சாதனைகளை நீங்களே சீர்தூக்கிப் பார்த்திருக்கிறீர்களா..?
நீங்கள் செய்த மூன்று விடயங்கள் மிகவும் பாரதூரமானவை. அதில் கொடுமையானது நீங்கள் சம்பந்தனோடு சேர்ந்து எந்த தகுதியுமில்லாத ஒருவரை கொண்டு வந்து வடமாகாண சபையின் அரியணையில் ஏற்றியது!? அவர் அதில் அமர்ந்து தமிழ் மக்களுக்கு செய்தது என்ன?
அவருக்குப் பதிலாக வடமாகாணத்தில் விளையும் பனங்கொட்டையொன்றை முதல்வராக்கியிருந்தால் அதிகாரிகள் தங்கள் வேலையைச் செய்திருப்பார்கள். அரசாங்கம் அபிவிருத்திக்காக அனுப்பிய பணம் திரும்பியிராது ! அந்தப் பணத்தில் எத்தனை வடமாகாணத்தவர்கள் வேலை வாய்ப்பு பெற்றிருப்பார்கள் ? ஏன், ஊழல் நடந்திருந்தால்கூட அந்தப்பணம் யாழ்ப்பணத்திலே தங்கியிருக்கும்.
இரண்டாவதாகக் கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராக முடிந்தவரையில் மக்களுக்கு நல்ல காரியம் செய்த பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தனை சிறையில் அடைப்பித்தீர்கள். இவ்விடத்தில், ஒரு கேள்வி உங்கள் கட்சியில் கொலை செய்தவர்கள் எவருமில்லையா? உண்மையில் ஆலால சுந்தரம் , தர்மலிங்கம் போன்றவர்களை கொலை செய்தவர்கள் யார்? அதை விடப் பலர் உங்கள் பக்கத்திலே இருக்கிறார்கள்!
இறுதியாக மற்றும் ஒரு விடயம்: கடந்த பத்து வருடங்களாக ஜெனிவாவில் தமிழர்களுக்கு ஏதோ நடக்குமென மக்களை ஏமாற்றிவந்தீர்கள் . வெளிநாட்டுத் தமிழர்கள் பலர் சுயநலமாகச் சேர்த்த பணத்தை கணக்குக் காட்டவும், மேலும் அகதி அந்தஸ்துக்காகவும் செய்த இந்த களியாட்டத்தில் நீங்களும் பங்கு பற்றினீர்கள். தற்பொழுது நடந்தது என்ன?
தற்போதைய அரசியலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பது ? என முடிவு செய்வதற்கே தலையை பிய்த்திருக்கிறீகள் . இறுதியில் சஜீத் பிரேமதாசவிற்கு ஆதரவு கொடுப்பதற்கு முன்வந்திருக்கிறீர்கள் . அதை வரவேற்கின்றேன் . காரணம் அதனால் சிங்கள மக்களின் வாக்குகள் எதிர் பக்கத்திற்குச் செல்லலாம்.
தமிழர்கள் இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளை ஆதரித்து, தமிழ் மக்களுக்குப் பலவற்றைப் பெற்றுக்கொடுக்கவேண்டு மென்பதே எனது அவா. கடந்த முறை இன்றைய அரசை ஆதரித்த நீங்கள் கடந்த வருடங்களில் எதுவும் பெறவில்லை. அதற்கு முன்னர் மகிந்த அரசை எதிர்த்தும் எதுவும் பெறவில்லை .
சரத்பொன்சேகாவை ஆதரித்து என்ன பெற்றீர்கள்?
போரில் ஈடுபட்ட மகிந்த ராஜபக்க்ஷவை எதிர்த்தது கொள்கை ரீதியானது என்றால், இராணுவத்தளபதியாக யுத்த களத்தில் இருந்த சரத்பொன்சேக்கா எப்படி தூய்மையான மனிதராகின்றார்?
மனித உரிமைமீறல் கடைசி யுத்தத்தில் மட்டுமா நடந்தது?
சமகால, தற்போதைய அரசை உருவாக்கி ஆதரித்த சந்திரிகா அம்மையார் பதவியிலிருந்த காலத்தில் யுத்தக்குற்றங்கள் நடக்கவில்லையா…? முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாச மற்றும் ஜெயவர்தனா காலத்தில் தர்மப்போரா நடந்தது..?
இதிலிருந்து என்ன தெரிகிறது..? கொள்கைக்காக நீங்கள் ஆதரிக்கவில்லை என்பது புரிகிறது. நானும் கொள்கைகளில் தொங்குபவனில்லை. யதார்த்தவாதி .
கடந்த அரசாங்கத்தை ஆதரித்து சில அமைச்சர் பதவிகளை பெற்று, மக்களுக்கு ஏதாவது செய்திருந்தால் கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும் . கற்புடன் இருப்பதாக வெளியே காண்பித்தவாறு மறுபக்கத்திற்கு மட்டும் சிவப்பு விளக்கெரித்தீர்கள் என்பதே உண்மை.
என்னைப் பொறுத்தவரையில் சஜீத் பிரேமதாச வந்தாலும் நீங்கள் கோரிக்கைகளிலும் அறிக்கைகளிலும்தான் நாட்களைக் கடத்துவீர்கள். கோத்தபாய இராஜபக்ஷ பதவிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் ? மீண்டும் உங்கள் இந்தியப் பயணம் – ஜெனீவா பயணம் தொடரும் .
தமிழர்களுக்கு தற்போது நீங்கள் செய்யக்கூடியது : “ தற்போதைய நிலையில் நீங்களே உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். யாரை ஆதரித்தால் மக்களுக்கு நன்மை உண்டு என்பதை அவர்களே தீர்மானிக்கட்டும் “ என விட்டு விட்டு உங்களது தொழிலைப் பாருங்கள் .
பாவப்பட்ட மக்கள் முப்பது வருடப்போரில் உயிர்தப்பி வாழ்ந்தார்கள். அப்பொழுது அவர்களுக்காக எவருமிருக்கவில்லை. அதேபோன்று வாழ்ந்துவிட்டுப் போவார்கள். அவர்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் நல்ல மேய்ப்பன் ஒருவன் கிடைப்பான்.
“ இலங்கைத் தமிழர்கள் முதலில் அகிம்சைப்போர் நடத்தினார்கள். பின்னர் ஆயுதப்போர் நடத்தினார்கள். தற்போது இராஜதந்திரப்போர் நடத்துகிறார்கள். “ என்று நீங்கள் மெல்பன் நகரில் சில வருடங்களுக்கு முன்னர் நடந்த கூட்டமொன்றில், உங்களை வரவேற்றவர்கள் முன்னிலையில் பேசினீர்கள். நினைவிருக்கிறதா..?
இப்போது, புதிய அதிபருக்கான தேர்தல் வரும்வேளையில், யாரை ஆதரிப்பது என்பதைவிட, யாரை தோற்கடிக்கவேண்டும் என்பதைபற்றி பேசுகிறீர்கள்.
இதுதான் நீங்கள் சொல்லவரும் இராஜதந்திரப்போருக்கான வழிமுறையா..? சொல்லுங்கள் மதியூகி சுமந்திரன் அவர்களே..?
—0—
மறுமொழியொன்றை இடுங்கள்