நூல் அறிமுகம்
– எஸ்.அர்ஷியா
2009 ஆம் ஆண்டுக்குப் பின் தமிழ் இலக்கிய உலகம் எண்ணற்ற படைப்புகளின் வழியே மேலும் மேலும் வளமையும் செழுமையும் அடைந்து வருகின்றது. புவிமையத்தின் 360 கோணங்களிலிருந்தும் படைப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. காலத்தாலும் சூழலாலும் இலங்கையிலிருந்து விசிறியடிக்கப்பட்ட புலம் பெயர்த்தவர்களின் எழுத்துகள் வலி நிறைந்த கவிதைகளாக, பல்தரவுகள் கொண்ட கட்டுரைகளாக, துன்ப துயரங்களைச் சுமக்கும் சிறுகதைகளாக, விரிவான நாவல்களாக புதிய தளம் நோக்கி நகர்வு கொண்டு வருகின்றன. அவற்றில் சில பேரிலயக்கிங்களாகக் கண்டடையும் சாத்தியங்களைக் கொண்டவை.
இதற்கிடையே, அதே இலங்கையைச் சேர்ந்த அ.முத்துலிங்கம் போன்றவர்கள் பிறநாடுகளில் இருந்து கொண்டு எழுதும் வாழ்வியல் எழுத்துகளும் வந்தபடியே இருக்கின்றன. அந்தவகையில் இலங்கையைப் பிறப்பிடமாகக்கொண்டு தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் நடேசன் வண்ணாத்திக்குளம், உனையே மயல் கொண்டு ஆகிய இரு நாவல்களை தமிழ் எழுத்துலகத்திற்குக் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து மூன்றாவதாக வந்துள்ள அவரது அசோகனின் வைத்தியசாலை புதியதொரு வகைமையைப் பேசுகின்றது.
சினிமாக்களின் வழியாகவும் சினிமா பாடல்களின் வழியாகவும் மட்டுமே உலகை ஒரளவு அறிந்து வைத்திருக்கும் என்னைப் போன்ற சாமானியர்களுக்கு, மெல்போர்ன் என்பது கனவு உலகம். பூகோளப் பாடத்தில் ஆஸ்திரேலியாவின் தலைநகர் கான்பெராவா… மெல்போர்னா… சிட்னியா என்ற குழப்பம், பரீட்சை முடியும் வரை நீடித்தபடியிருந்தது. ஏனென்றால் அங்கே பாராளுமன்றம் உருவாகி முதல் கால் நூற்றாண்டு வரையில் மெல்போர்னே தலைநகராக இருந்திருக்கின்றது. பின்புதான் தலைநகர் மாற்றம் கண்டிருக்கின்றது. பிறகு அதனை வைரமுத்து. இந்தியன் படத்தில் ஏ.ஆர். ரகுமான் வழியாக, மெல்போர்ன் மலர்போல் மெல்லிய உதடா? என்று கேட்டு, மெல்போர்னை மீண்டும் நினைவலைகளுக்குள் திணித்தார். அவ்வளவுதான் மெல்போர்ன் குறித்த நமது ஞானம்.
ஆனால் மெல்போர்ன் என்பது. மதுபானக் கூடங்களும், மேலாடை அவிழ்க்கும் ஆட்ட விடுதிகளும், கீழாடைகளை அவிழ்த்து வீசும் சிறப்பு விடுதிகளும், ஆண்களுக்கான தனி ஆட்டவிடுதிகளும், பெண்களுக்கான கூத்து விடுதிகளும் மட்டுமல்லாமல் தனித் தனியே சுயபாலின விருப்பர்களுக்குமான விடுதிகளைக் கொண்டது என நாவல் திரும்பத் திரும்பப் பேசி, கற்பனையுலகில் நம்மை மிதக்க விடுகின்றது. அவ்விடுதிகளுக்கு இடையில் சுந்தரம்பிள்ளையான கதாதாயகன் பணிபுரியும் இடமான மிருக வைத்தியசாலையும் இருக்கின்றது என்பது, நாவல் காட்டும் டோபோகிராபி வரைபடம்.
ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு நகர உருவாக்கத்துக்கும் ஒரு வரலாறு உண்டு. சிட்னி பெருநகரம் குற்றவாளிகளின் குடியேற்றத்தால் உருவாக்கப்பட்டது. ஆனால் மெல்போர்ன் அப்படியானவர்களின் குடியேற்றத்தால் உருவாகிய நகரமல்ல. மிகவும் வித்தியாசமான சரித்திரத்தைத் தன்னுள் கொண்டது. தங்களைத் தவிர்த்து மற்ற யாரும் மனிதர்கள் அல்ல எனும் கருத்தியல் கொண்ட ஆங்கிலேயக் காலனியினர் ஆஸ்திரேலியாவின் ஆதிவாசிகளையும் மனிதர்களாகக் கருதவில்லை. எனவே மனிதவாசமே இல்லாத நிலப்பரப்பு என்ற தேடலை தங்களது மனநிறைவுக்கான கொள்கைப் பிரகடனமாகக்கொண்டு குடியேறிய போது, ஜோன் பற்மேன் எனும் ஆரம்ப குடியேற்றவாசி ஆதிவாசிகளிடம் பண்டமாற்றாக மெல்போர்னை 1835 ஆம் ஆண்டு வாங்கியதாக ஓர் ஒப்பந்தப் பத்திரம் உள்ளது. இது ஆங்கிலேயக் கவர்னரால் பின்னால் ரத்து செய்யப்பட்டாலும், ஆஸ்திரேலிய சரித்திரத்தில் முதலாவதாக இந்த நிலம் ஆதிவாசிகளுக்குச் சொந்தம் என ஒரு ஆங்கிலேயரால் அங்கீகரிக்கப்பட்ட சரித்திரம் அங்கு உண்டு. சென்னப்பட்டிணத்துக்கும் இதுபோன்ற வரலாறு இங்கும் உண்டு.
அப்படியான நகரத்திலுள்ள மிருக வைத்தியசாலையில் மிருக வைத்தியராகப் பணி புரியும் தமிழனான சுந்தரம்பிள்ளை, அங்கே சொந்தமாக ஒரு வீடு வாங்க, பணம் சேர்ப்பதையும் அதற்காக மிருக வைத்தியசாலையில் ஓவர்டைம் வேலை பார்ப்பதையும் அங்கு பணிபுரியும் ஆண், பெண் ஆகியோருடனான சகவாசத்துக்கு இடையில் வைத்தியசாலையின் செயலருக்கும் தலைமை மருத்துவருக்குமான பனிப்போரில் கதாநாயகன் கத்தரம்பிள்ளை பலிகடா ஆக்கப்பட்டு, பணிநீக்கம் செய்யப்படுவதும் பின்னர் சேர்க்கப்படுவதுமாக கதை நகர்ந்தாலும் வைத்தியசாலையின் செயல்பாடு அந்நகரத்துக்கு மிகவும் தேவையான ஒன்றாக வடிவமைக்கப்படுகின்றது. நகரின் சுவான்தார்கள் தாராளமாக வழங்கிய தானத்தில் இயங்கும் அவ்வைத்தியசாலையில் இருக்கும் பணி அரசியலையும் இனப்பாகுபாட்டு அரசியலையும் நுட்பமாகப் போகின்றது நாவல். தமிழன் அங்கேயும் காயடிக்கப்படுகின்றான். சிலநாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய அரசாங்கம் மதுரைப் பண்பலை வானொலிகளில்கூட அங்கீகரிக்கப்படாதவகையில் ஆஸ்திரேலியாவில் நுழைய முயலும் யாரையும் அனுமதிக்க மாட்டோம், இழப்புகளுக்கு அரசு பொறுப்பேற்காது என ஒரு விளம்பரம் செய்தது. அதேநேரத்தில் இந்தியர்கள் அங்கே அடித்துக்கொல்லப்பட்ட செய்திகளும் நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளிவந்தன.
அப்படியான நாட்டில், பாலுறுப்புச் செயல்பாட்டுத் துணுக்குகள், சிரிப்புகள், பாலினக் கதைகள், மதுபானக் கூடங்கள், ஆடைகள் அவிழ்ப்பு, ஓரினச்சேர்க்கைப் பணியாளப் பெண், மலிந்த மார்புகளைக் கொண்ட பெண் என அவரவர் அவசங்களுடன் பணியாளர்கள் நடந்து கொண்டாலும் வைத்தியசாலை அமைதியாக இயங்குவது மிக முக்கியமான ஒன்று. சிகிச்சைக்கு வரும் பூனைகளும் நாய்களும் அவற்றின் நோய்த் தீர்த்தலும் அதற்கான அறுவைச் சிகிச்சைகளும் கருணைக் கொலைகளும் கிருமிநாசினியின் வாசத்துடன் பக்கம் பக்கமாக எமுகப்பட்ட போதிலும் மனிதர்களைப் போலவே பேசும் பூனையான கொலிங்வூட்டின் இருப்பும் அது பேசும் குத்தலான மொழியும், அதன் நடத்தையும் வாலசைவும் அது கொண்டிருக்கும் அதிகாரமும் அதைக் கைக்கொள்ளும் விதமும் மிக முக்கியமானது. மனிதனால் பேச முடியாதது கனவுகளின் வழியே படைக்கப்படுவதைப் போல, இங்கே மனிதவக்கிரங்கள் யாவும் மனசாட்சியாக கொலிங்வூட் பூனையின் வழியே பேசப்படுவது நாவலின் சுவாரசியம். வைத்தியசாலையின் நீள அகலத்தைக் குறுக்கும் நெடுக்குமாக நுணுக்கமும் நுட்பமுமாக நீட்டி முழக்கி அலசும் அப்பூனைக்கு இடைஞ்சலாக ஒரு காட்டுப்பூனை வருவதும் அதனை டிராமாக்குயின் எனும் பட்டப்பெயர்கொண்ட மருத்துவப் பணியாளப் பெண் ஷரன் தப்பவிட்டுவிடுவதும், கொலிங்வூட்டின் தனிக்காட்டுப் பூனைத்தனம் மட்டுப்படுவதும் சுவாரசியம். மனிதனுக்கான அத்தனை கல்யாணக் குணங்களையும் ராட்சசக் குணங்களையும் கொண்ட கொலிங்வூட் மிக நேர்த்தியாக அதை வெளிப்படுத்துகின்றது.
அது பேசும் கடைசி வாசகம் கூட, கொலிங்வூட், உனது கடைசி ஆசை என்ன? என்று சுந்தரம்பிள்ளை கேட்டதற்கு, டிராமாக்குயினுக்கும் உனக்கும் ஏதாவது தொடர்பு இருந்ததா? என்றுதான் கேட்கின்றது. இருந்தது. அது வைத்தியர் போன்ற தொடர்பு என்று சுந்தரம்பிள்ளை பதிலிறுக்கிறான். அதற்கு அப்பூனை, எனக்குப் புரிந்துவிட்டது. ஒழுங்காக என்னைக் கருணைக்கொலை செய் என்கின்றது.
பூனைகளின் உலகம் ரகசியமானது இணைகூடுவதை பிற விலங்கினம் போல அது வெளிப்படையாக நடத்தாது. எனது, உள்ளிருந்து கேட்கும் குரல் சிறுகதைக்காக அந்தத் தரவை பல நூல்களின் வழியே கண்டறிந்தேன். இங்கே மருத்துவ அறுவை சிகிச்சைக்கு வந்த சயாமிய ஜோடிப்பூனைகளின் பாலுறவு இயக்கம் காட்சிப்படுத்தப்படுகின்றது. அந்த சிறிய கூட்டில் புறச்சூழலை பொருட்படுத்தாது அவை உறவு கொள்ளும் போது பெண்பூனை மெதுவாக முனகியபடி, கண்ணை மூடியபடி இருந்தது. ஆண்பூனை இதுதான் கடைசி சந்தர்ப்பம் என நினைத்து அவசரமாகக் காரியத்தில் இறங்கியிருந்தது. அவற்றின் தனியுலக வாழ்க்கை கவனத்தில் கொள்ளப்பட்டு, இப்போது அறுவை சிகிச்சை செய்தால், கூடுதலாக இரத்தப்போக்கு உண்டாகும் என்று, அறுவை சிகிச்சை தள்ளிப்போடப்படுவது அறிவியல்தனம்.
அதேவேளையில் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு அதன் நோய்குறித்த ஞானம் மருத்துவர்களைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் என்பதைப் பல சிகிச்சைகளின் வழியே எழுதப்பட்டிருப்பது நேர்மையாக இருக்கின்றது. குதிரைகள் குறித்து, தனது அறிவாண்மைக் குறைவால் கந்தரம்பின்ளை மனம் குமையும் காட்சி வலுவானதாக உள்ளது.
நாவல் முழுவதுமே விருப்ப விலங்குகள், அவற்றின் நோய்கள், அதைத் தீர்க்கும் அல்லது கருணைக்கொலை செய்யும் மனிதர்கள் என்று விரிந்தபடி, மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான உறவைப் பேணுகின்றது. அந்தவகையில் புதியபுலத்தில் இந்த நாவல் பயணம் செய்கின்றது. அதேவேளையில் தமிழ்ச்சூழலில் பண்பாட்டு அதிர்வை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது.
ஆஸ்திரேலியா உலக வரைபடத்தில் தனித்துவமாகத் தெரிந்தாலும், அங்கும் பிறநாடுகளில் இருக்கும் அத்தனை அவலங்களும் இருக்கின்றன. அவற்றுக்கு இடையே ஆஸ்திரேலியாவுக்குள் புலம் பெயர்ந்து வாழமுயலும் ஒரு தமிழனின் வாழ்க்கை , இதுவரை தமிழ்ச்சமூகம் பாரம்பரியமாகக் கடைப்பிடித்துவந்த நம்பிக்கைகளையும் சிந்தனைகளையும் தமிழ்ச்சூழல் மறைத்தும் ஒளித்தும் பேசிவந்த பாலியல் வேட்கை, அரசியல் ஆகியவற்றை கங்காருபோல ஒரே தாண்டலில் தாண்டிவிடுகின்றது. இது மிக முக்கியமான ஒன்று.
கணவன் கிறிஸ்டியனால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகும் மனைவி ஷரன், காயங்களிலிருந்து அதன் வலியிலிருந்து மீள கந்தரம்பிள்ளையைக் கையாள அதற்கு இணங்கும் இடம் புலம்பெயர்ந்த இடத்தின் அனுபவத் தொகுதியாகவும் உணர்வாழங்களாகவும் அதற்குக் கைக்கொடுக்கின்றது. அது இயல்பு என ஏற்க மனம் தத்தளிக்கின்றது. அத்துடனே, பல கருணைக்கொலைகளைச் செய்துவந்த சுந்தரம்பிள்ளை, வைத்தியசாலையின் மனசாட்சியாக நடமாடிய கொலிங்வூட்டை கருணைக்கொலை செய்து, மனிதனுக்கு மனசாட்சி தேவையில்லை என்பதை நிரூபிப்பது நாவலை வேறொரு பரிமாணத்துக்கு இட்டுச்செல்கின்றது.
ஜெயமோகன், முருகபூபதி, சுப்ரபாரதிமணியன், கருணாகரன் ஆகியோர் நாவல் குறித்து எடுத்தியம்பும் முஸ்தீபுகளுடன் பயணிக்கும் ஒரு வாசகனுக்கு, மாநகராட்சியின் தண்ணீர் தொட்டியில் குளித்த அனுபவம் மட்டுமே கிட்டும். அவர்களை விலக்கிவிட்டு வாசித்தால்… தெளிந்த நீரோடையொன்று வழிப்பாறைகளில் மோதி விலகி, புதிய தடமிட்டு நடந்து, வேறு எங்கோ ஓரிடத்தில் மீண்டும் கூடுவது இயல்பான முரணைக் காணப்பெறலாம். அதுவே இந்த நாவலின் தனித்தன்மை.
மறுமொழியொன்றை இடுங்கள்