அவுஸ்திரேலிய கலை இலக்கியச் சங்கத்தில்- தோப்பில் முகம்மது மீரானை நினைவு கூர்ந்தது பேசியது
நான் கொலம்பியா சென்றபோது அதன் தலைநகரான போகட்டாவில் விமான நிலயத்தில்— மாஜிக் ரியலிசம் வரவேற்கிறது— அங்கு வரவேற்று வார்த்தையாக போட்டிருந்தது. கொலம்பியா எழுத்தாளரான கபிரியல் காசே மக்குவசின்Gabriel Garcia Marquez) எழுத்துக்குக் கொடுத்த மரியாதையாகத் தெரிந்தது. அஸ்திரேலியாவிற்கு திரும்புவதற்காக சிலே நகரின் தலைநகரான சந்தியாகோவில் விமான நிலயத்தில் எனது மனைவியுடன் வந்து இறங்கியதும் “நாங்கள் போதைவஸ்து தடைப்பிரிவை சேர்ந்தவர்கள் ” எனக்கூறி இருவர் எங்கள் கடவுச்சீட்டுகளை வாங்கினார்கள் . அப்பொழுது எனது பெயரில் நேருடா என இருந்ததும் “கவிஞர் நேருடா வீட்டுக்குப்போனீர்களா?? ” என்றதும் ” “ஓம்” ” என சொல்லிவிட்டு நானும் எழுத்தாளன் என்றேன். அதன் பின்பு அவர்கள் எங்களிடம் கடவுச்சீட்டைத் திருப்பி தந்துவிட்டு போங்கள் என வழியனுப்பினார்கள்.
எனது மனைவி “ஏன் பரிசோதிக்கவில்லை” ” என்றார்
“எழுத்தாளரை மதித்துப் பரிசோதிக்கவில்லை” என்றபோது எனது மனைவி எதுவும் பேசவில்லை . எழுத்து என்பது எனக்குத் தேவையில்லாது வேலை என்பது அவரது கருத்து.
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டை நண்பர் முருகபூபதி மற்றும் ஞானம் ஆசிரியர் ஞானசேகரன் போன்றவர்கள் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் முன்னின்று 2011ல் கொழும்பில் நடத்தியபோது எழுத்தாளர் எஸ் பொன்னுத்துரை தலைமையில் பல இந்திய இலங்கை எழுத்தாளர்கள் எதிர்த்தார்கள் . தமிழகத்துப் பத்திரிகைகள் எதிர்ப்பிரசாரத்தில் ஈடுபட்டன. விளம்பரங்கள் பிரசுரித்தன. ஆரம்பத்தில் சம்மதித்து ஆலோசனை சொல்லிய பேராசிரியர் சிவத்தம்பி போன்றவர்கள் பின்வாங்கினார்கள். இலங்கை அரசால் நடத்தப்படுவதாகப் பொய் பிரசாரம் செய்ததால் மகாநாட்டிற்கு வரவிருந்த பல முக்கிய எழுத்தாளர்கள் வரப் பயந்தனர். நண்பர்கள்கூட முருகபூபதிக்கு எதிராகப் அவுஸ்திரேலியாவில் பிரசாரம் செய்த வேளையில், அழைப்பை ஏற்று இலங்கைக்கு வந்த இரு முக்கிய எழுத்தாளர்கள்- சின்னப்பா பாரதி , தோப்பில் முகம்மது மீரான் என்பவர்களே .
அவர்களின் துணிவு என்னைக் கவர்ந்தது .
எழுதுபவனுக்கு மொழியை விட முக்கியமானது முதுகெலும்பு எனக் கருதுபவன் நான். அதன் பின்பு தீர்மானமான பார்வை.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.
மொழி என்பது கற்றுக்கொள்வது. 43 வயது வரையும் தமிழில்( காதல்க் கடிதம் தவிர) எதுவும் எழுதாதவன் நான்
நான் பார்த்தபோது தோப்பில் முகம்மது மீரான் கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்திற்கு வெளியே ஒரு கதிரையில் இருந்தார். அவரது தெளிவான முகமும், தீர்க்கமான பார்வையும் என்னைக் கவர்ந்தது . முகத்தைப் பார்த்தபோது துணிவான மனிதர் என்பது தெரிந்தது அதுவரையும் அவரது புத்தகங்களைப் படித்தது இல்லை.ஜெயமோகனது வலையில் அவரைப் பற்றிய சில கட்டுரைகளைப் பார்த்திருந்தேன் .எனது தயக்க சுபாவத்தால் நான் அவரிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை . ஆனால் அடுத்த வருடம் தமிழ்நாடு சென்றபோது அவரது நான்கு நாவல்களை வாங்கி வந்து படித்தேன் . அவரது நால்கள் வித்தியாசமாகவும் காத்திரமான பாத்திரங்களைக் கொண்டதாகவும் இருந்தது
அப்படியான எழுத்தாளர் தோப்பில் மகம்மது மீரானை நினைவு கூறவேண்டியது நமது பொறுப்பு. எழுத்தாளனை அவனது படைப்பால் நினைவு கூர்வதே சாலச் சிறந்தது.
முகம்மது மீரான் தமிழில் மிகவும் முக்கியமானவர். அவரது நாவல்கள் படித்தேன்- சிறப்பானவை .
முகம்மது மீரான் தமிழில் எழுத முடியாதவர். தமிழ்ப் புத்தகங்கள் வாசிக்காதவர்.அவர் வாய் மொழியால் சொல்ல மற்றவர்களால்அவரது நாவல்களும் சிறுகதைகளும் எழுதப்பட்டவை என்றபோது ஆச்சரியத்தை ஏற்படுகிறது.
முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டத்தில், தேங்காப்பட்டினம் என்ற ஊரில் பிறந்தார்
இவரது படைப்புக்கள் தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியக் கலாச்சாரத்தை நமக்குத் தருவதுடன் அந்தக் கலாச்சாரத்தை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்கிறார் .
ஒவ்வொரு சமூகத்திலும் அந்த சமூகத்தின் தவறுகளை எடுத்துரைப்பவனே உண்மையாக சமூகத்தை நேசிப்பவன். காலம் காலமாக சாக்கிரடீசில் இருந்து பலர் இதையே செய்துள்ளார்கள். அந்த விதத்தில் முகம்மது மீரான் இஸ்லாமியர்களுக்கோ, இந்தியத் தமிழர்களுக்கோ மட்டுமல்ல, நம்மைப்போல் கடல் கடந்து வாழும் தமிழர்களும் பேசவேண்டிய எழுத்தாளர்.
அவரது வார்த்தையில்:–
“வாழ்வுக்கும் எழுத்துக்கும் இடையிலே – என்னைப் பொறுத்தவரைக்கும் – நெருக்கம் உண்டு. எங்க ஊருலே எதைப் பார்த்தேனோ அதை அப்படியே நான் எழுதினேன். என்னுடைய வாழ்க்கையிலே நான் அனுபவிச்ச விசயங்களையும் எழுதினேன். எழுத்திலே இருந்து என் வாழ்க்கை அந்நியப்பட்டதல்ல. நான் எந்த கதாபாத்திரத்தையும் உருவாக்கவேயில்லை. எல்லாமே எங்க கிராமத்திலே வாழ்ந்த கதாபாத்திரங்கள். இப்ப சில கதைகள் வந்து.. நான் வாழக்கூடிய திருநெல்வேலி சுற்றுவட்டாரத்திலேர்ந்து எழுதியிருக்கேன். இங்கேயும் வாழ்ந்த கதாபாத்திரத்தைத்தான் எழுதியிருக்கேன். கதாபாத்திரங்களை கற்பனையில் உருவாக்கவே முடியாது. கற்பனையிலே உருவாகிற கதாபாத்திரம் நிலையாக நின்றதே கிடையாது. வாழ்ந்த கதாபாத்திரங்களே மெருகூட்டிருக்கு…”
அவரது நாவல்களில்அவரது எழுத்துக்கள் புனைவு மொழி நடையால் கதாபாத்திரங்கள் சிற்பமாக செதுக்கப்படுவதால் மனத்தில் நிற்க வைக்கும் தன்மையைக் கொண்டவை .
ஜெயமோகன்- தமிழல்லாது வேறு மொழியில் முகம்மது மீரான் எழுதியிருந்தால் உலகப்புகழ் பெற்றிருப்பார் என்கிறார்.
உண்மையான வார்த்தைகள்.
மறுமொழியொன்றை இடுங்கள்