



அசோகனுக்கு தூரத்தில் பாலைவனம் தண்ணீராகத் தெரிந்தது. இதுதான் கானல்நீரா? . பாலை நிலத்தில் மட்டுமா யாழ்ப்பாணத் தெருவிலும் கூட பாடசாலை விட்டு வரும்போது இந்தக் கானல் நீரை பார்த்திருக்கிறேனே!. தார் வீதியில் தெளிவாகத் தெரியுமே. நாமும் கானல் தேசத்து மனிதர்கள்தானோ?
மேகமற்ற வெளிர் நீலவானம், ராஜஸ்தான் தார்ப் பாலைவனத்தில் மேல் குடைவிரித்திருந்தது. பத்துமணிக்கே ஆக்ரோஷமாக சூரியக்கதிர்கள் தரையை நோக்கிப் பாய்ந்தன. போட்டிருந்த பேஸ்போல் தொப்பியின் கீழ் தலை வியர்த்தது. அணிந்திருந்த சேட் வியர்வையில் நனைந்து முதுகோடு ஒட்டியது.
மற்றவர்களுடன் அசோகன் சேர்ந்து நடந்தபோது மணல் காலடி ஓசைகளை மௌனமாக்கியது. ஆனால், நைக்கி காலணியை போட்டுவந்ததால் மணல் காலணிக்குள் சென்று பாதத்தை அரித்தது. இந்த அரிப்பு தொடர்ந்து இருக்கப்போகிறதே என அங்கலாய்த்தபடி மற்றவர்களைப் பார்த்தான். அவர்கள் செருப்பு அணிந்து வந்திருந்தார்கள்.
பெரிய விடயங்களைத் திட்டமிடும் நான் இதை நினைக்கவில்லை எனக் கவலைப்பட்டான். அசோகனோடு இருபத்தைந்து பேர் கொண்ட அந்த குழு ஜெய்சல்மீர் கோட்டைக்கு முன்பாக நின்றது.
போர் வீரர்களை நடத்திச் செல்லும் கம்பீரத்தோடு வழிகாட்டி முன்னே சென்று, தொடர்ந்து வந்த உல்லாசப் பிரயாணிகளை அணிவகுப்பில் திரும்பும் தளபதி போலத் திரும்பிப்பார்த்தான். மஞ்சள் சூரிய ஒளியில் எதிரில் இருந்த கோட்டை கண்ணுக்கு உறுத்தியது. வழிகாட்டி ஆங்கிலத்தில் கோட்டை வரலாற்றைச் சொல்லத் தொடங்கினான்.
“இந்த கோட்டை மற்ற கோட்டைகள் போல் அல்ல. மக்கள் இன்னும் இங்கு தொடர்ச்சியாக வாழ்கிறார்கள். பரம்பரையாக இவர்கள் மன்னனுக்கு நெருங்கி இருப்பவர்கள். சத்திரியர்களும் பிராமணர்களும் உள்ளே வசிக்கிறார்கள். மற்றவர்கள் கோட்டைக்கு வெளியே. அவர்களது சாதி அந்தஸ்த்துக்கு ஏற்ப…”
“நாட்டியம் ஆடும் பெண்களைக் கொண்ட சாதியினர் எங்கு இருப்பார்கள்?“ என ஆங்கிலத்தில் – பழக்கமான அவுஸ்திரேலிய தொனியில் – ஒரு குரல் வந்தது. திரும்பிப் பார்த்தான்.
“அவர்கள் சாதியில் குறைந்தவர்கள். கோட்டைக்கு வெளியேதான் குடி இருப்பார்கள். அவர்களின் சாதியில் இருந்து தான் தாசிப் பெண்களும்…” அந்த வழிகாட்டி வார்த்தையை முடிக்கவில்லை.
“அவர்கள் தாசிகள் அல்ல. கலைஞர்கள்…… ஜிப்சிகளாக இந்த பகுதியில் இருந்து ஆயிரம் வருடங்களுக்கு முன்பு விலகிச் சென்றவர்கள்.”
வார்த்தைகளுக்கு உரியவளைப் பார்க்க எல்லோரும் திரும்பியபோது ஐம்பது வயதானவர்கள் மத்தியில் முப்பது வயதுக்கு கீழ் ஒரு பெண் நிற்பது தெரிந்தது. பார்வைக்கு துருக்கிய அல்லது ஈரானிய சாயலுடனான உயரமான தோற்றம். கரிய கேசத்தை உயர்த்தி தலையில் கிளிப் பண்ணியிருந்தாள். மை இடாத அகலவிழிகள் முகத்தில் பெரிய பகுதியை தனதாக்கியிருந்தன. சிவப்பு சாயம் பூசிய அவளது உதடுகள் நடு இரவில் மொட்டவிழும் மலராக விரிந்திருந்தன. பஞ்சாபி சல்வார் உடுத்து தலையை துப்பட்டாவால் சுற்றி கழுத்துவரை மறைத்திருந்தாள். அவளது அழகான பின்பகுதியை எந்த உடைகளாலும் மறைக்கமுடியவில்லை. உருண்டு திரண்ட கணுக்கால்களில் மலிவான சிவப்பு பிளாஸ்டிக் பாதணி அணிந்திருந்தாள். தொழில்முறை நாட்டிய பெண்போல் இடை சுருங்கி கீழே பருத்து உருவ அமைப்பு இருந்தது.
ஆத்திரத்தில் வார்த்தைகளை எரிகணைகளாக்கி, ஏற்கனவே வெப்பமான அந்த இடத்தை கொதி நிலைக்கு ஏற்றிவிட்டு விலகிச் சென்றபோது இவளது பாதம்பட்டு சுழல்காற்று மணலை வீசுவதுபோல அள்ளிவீசி அங்கு சிறிய மணற்புயல் அங்கு உருவாகியது.
அவளது கோபம் தோய்ந்த வார்த்தைகள் அசோகனுக்கு மட்டும் அல்ல சகலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தன. பிரான்சுக்காரர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். வழிகாட்டிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நிலைகுலைந்து போய் ஆச்சரியத்துடனும் அவமானத்துடன் திரும்பி அவள் போகும் திசையை பார்த்து “மேடம் பிளீஸ்” என்றான். இதுவரை இராணுவத் தளபதியைப்போல் நிமிர்ந்து நின்றவனின் தோள்கள் தளர்ந்து, முதுகு குனிந்தபடி அடிமைபோல அவளை சிறிது தூரம் பின்தொடர்ந்தான். அவள் பட்டத்து இளவரசிபோல அவனை ஒருகணம் தலையை மட்டும் திரும்பிப் பார்த்துவிட்டு முன்னே வேகமாகச் சென்றாள்
அவளது அழகான பிருஸ்டம் மேகக் கூட்டத்திடையே தூரத்து பவுர்ணமி நிலவாக கோட்டைத் தூண்கள் இடையில் மறைந்தது.
அவளது பின்புறத்தை இரசித்தபடி நின்றவனுக்கு வழிகாட்டியின், “இந்த கோட்டையின் தலைவாசல் ஒரு தாசியால் கட்டப்பட்டது..” என்ற சொல் மட்டும் தூரத்தில் கேட்டது.
பிரான்சிய கூட்டம் வழிகாட்டியோடு தூரமாக சென்று தொலைந்து விட்டது. அவுஸ்திரேலிய அழகியும் கண்பார்வையில் இருந்து மறைந்து விட்டாள். அவள் உருவம் கண்களை நிறைத்ததால் மற்றவைகளை மறந்து நிலைகுலைந்து அசோகன் தனித்து விடப்பட்டான். அவளைத் தேடுவோமா என்று ஒரு நினைப்பு நிழலாக வந்து போனது.
தன்னை மெதுவாக சுதாரித்து ஒரு நிலைக்கு வந்து தனியாக கோட்டையை சுற்றிப் பார்த்தான். சிறிது நேரம் அங்குள்ள சிறிய குளத்தில் உள்ள மீன்களுக்கு கடலைப்பொரி எறிந்து தனது காலை நேரத்தைக் செலவழித்ததவன், மதியத்தின் பின் ஹோட்டலில் இருந்து புறப்பட்டு வாடகைக் காரில் தார்ப்பாலைவனத்தை அடைந்தான். அங்கு பாலைவனத்துக்கு மத்தியில் ஏராளம் கூடாரங்கள் சுற்றுலா பயணிகளுக்கென அமைக்கப்பட்டிருந்தன.
ஒருபகுதியில் மண் சுவரால் ஆன குடிசைகளும் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றையும் சுற்றுலாப்பயணிகள் பாவித்தார்கள். கூடாரங்களின் தரையில் சீமெந்தால் அமைத்த பெரும் பகுதி படுக்கை அறையாகவும் சிறு பகுதி பிரிக்கப்பட்டு குளியலறையாகவும் மாற்றப்பட்டிருந்தது. அங்கேயே மலகூடமும் இருந்தது.
அடிப்படை வசதிகளில் திருப்தி அடைந்த அசோகன் இரண்டு மணித்தியாலங்கள் அந்தக் கூடாரத்தில் இளைப்பாறிவிட்டு, மாலை நாலுமணியளவில் ஒட்டகச் சவாரிக்குச் சென்றான். கூடாரத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஏராளமான ஒட்டகங்களுடன்; அவற்றின் காப்பாளர்களும் நின்றார்கள்.
—-
பாலைவனம் என்றதும் மனதில் வருவது நீலவானத்தின் பின்னணியில் விரிந்த வெண்மணல் திட்டுகளும் அதில் மெதுவாக கால் புதைத்தபடி வரிசையாக ஏதோ ஒன்றைத் தேடி செல்லும் ஒட்டகங்களும் அவற்றின் மூக்கணாங் கயிற்றை பிடித்தபடி அருகில் செல்லும் தலைப்பாகை அணிந்த உயர்ந்த மனிதர்களும்தான். இதுதான் பலரதும் மனதில் உருவாக்கப்பட்ட படிமம்.
இதையேதான் அசோகனது மனதில் ஹொலிவூட் படங்களும் இந்திப்படங்களும் பதிவாக்கி இருந்தன.
மெல்பேர்னிலுள்ள வங்கியில் தன்னுடன் ஒன்றாக வேலை பார்க்கும் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு விடுமுறைக் காலத்தின்போது, அவுஸ்திரேலியாவின் சாம்சன் பாலைவனத்திற்கு சென்றிருந்தான். அங்கே மணல் திட்டுகளைக் காணவில்லை. சிவந்த கரடுமுரடான தரை அமைப்புடன் சிறிதும் பெரிதுமான பாறைகள்தான் எங்கும் காணப்பட்டன. சில நாட்களின் முன்பு விழுந்திருந்த சிறிதளவு மழைத்தூறல் அந்தப் பாறைகளின் இடைவெளியை அதிகாலையில் யாரோ ஒரு இளம் பெண் போட்ட ஒழுங்கற்ற வண்ணக்கோலம்போல் காட்சியளிக்க வைத்திருந்தது. பல வர்ண பூக்கள், கொத்துக் கொத்தாகப் பூத்து சிவந்த தரைப் பகுதிக்கு கண்களை அள்ளும் அழகைக் கொடுத்திருந்தது.
பாலைவனத்தில் மணல் திட்டியை காணவந்த அசோகனுக்கு இந்த அழகான காட்சி ஏமாற்றத்தை அளித்தது. இதனால் அடுத்த விடுமுறையில் இந்தியப் படங்களில் வந்த தார்பாலைவனத்தை பார்ப்பது என முடிவு செய்து அதன் விளைவாகத்தான் உதயப்பூர் என்ற நகரத்துக்கு விமானத்தில் பறந்து வந்து அங்கிருந்து பாலைவன நகரமான ஜெய்சல்மிர் செல்வதற்கு உல்லாச பஸ்சில் ஏறி அமர்ந்து கொண்டான்.
பஸ்ஸில் எல்லோரும் வெள்ளை நிறத்தவர்கள். பெரும்பாலானவர்கள் பிரெஞ்ச் மொழி பேசினார்கள். கையில் இருந்த புத்தகத்தை வாசித்தபடி இருந்தவனை, புரியாத பிரெஞ்ச் மொழி நித்திரைக்கு அழைத்தது.
ஜெய்சல்மீர் வந்து சேர இரவு ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டது. ஏற்கனவே அறை ஒதுக்கியிருந்த ஹோட்டலில் வந்து பஸ் நின்றது. இறங்கியபோது அவன் வாயில் மணல் கடிபட்டது. போட்டிருந்த உடை முழுவதும் பாலைவன மணல் படிந்து இருந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.
சூடான குழாய்த் தண்ணீரில் முதலில் போட்டிருந்த உடையுடன் குளித்து விட்டு, இரண்டாம் முறையாக உடையற்று நீராடிய பின்புதான் உடலெங்கும் ஒட்டியிருந்த பாலைவன மண் நீங்கியது போன்ற ஒரு திருப்தி மனதில் ஏற்பட்டது.
உணவை வரவழைத்து அருந்தியதும் பிரயாண அலுப்பும் உண்ட களைப்பும் சேர்ந்து அசோகனை ஆழமான நித்திரைக்கு கொண்டு சென்றன. ஹோட்டல் சிப்பந்தி கதவைத் தட்டியதும் எழுந்தபோது கடிகாரம் காட்டிய நேரம் காலை ஒன்பது மணியாயிருந்தது.
“சார்.. கைடு வந்திருக்கிறார்”
ஒரு வழிகாட்டியை முகவர் மூலம் ஒழுங்கு பண்ணியிருந்தது அப்பொழுதுதான் அவன் நினைவுக்கு வந்தது. அவசரமாக குளித்து உடைகளை மாற்றிவிட்டு அறைக்கு வெளியே சென்ற போது வெள்ளையர் கூட்டமே இவனுக்காக காத்திருந்தது. அவர்களில் பலரும் அந்த பஸ்ஸில் வந்த பிரான்சுக்காரர்கள். ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். பலரதும் பார்வைகள் கூர்மையாக அவனைத் துளைத்தன. நாங்கள் உன்னால் காத்திருந்தோம். அந்தப் பார்வைகள் ஊசிகளாக அவன் நெஞ்சில் இறங்கின.
கைடு “கோட்டைக்கு நடந்து போகலாமா?” என்றதும் எல்லோரும் பின்தொடர்ந்தனர்.
காலை நேரம் நடப்பதற்கு சுகமாகவும் உற்சாகமாகவும் இருந்தது. கோட்டை அதிக தூரம் இருக்கவில்லை. பொடி நடையாக அனைவரும் கோட்டைக்கு வந்து சேர்ந்தனர்.
இந்த இடத்தில் தான் அந்தப் பெண்ணின் குறுக்கீடு நடந்தது.
—
அவுஸ்திரேலிய பெண்ணினால் குழுவில் இருந்து தொலைந்ததை எண்ணி அசோகன் தன்னை நொந்துகொண்டான். மதியம் ஹோட்டலில் உணவு அருந்திவிட்டு மாலையில் பாலைவனத்தை நோக்கிப் புறப்பட்டான்.
ஒட்டகச்சவாரி கிடைத்தது. ஒரு சிந்தி முஸ்லீம், தான் மற்றவர்கள்போல் மது அருந்துவதில்லை என்று கூறி தனது ஒட்டகச்சவாரி பாதுகாப்பானது என உறுதியளித்தான். அவனது ஒட்டகத்தில் அசோகன் ஏறி பாலைவனத்தை அடைந்தான்.
அசோகன் தேடிய பாலைவனம் இங்கே இருந்தது. கடைசியில் பாலைவனத்தைக் கண்டுகொண்டேன் என்று மனம் துள்ளியது. மண் மேடுகளின் மடிப்புக்கள் சந்தோசத்தைக் கொடுக்க வேகமாக காலணிகள் மணலில் புதைய சிறு பிள்ளையாக எதிரில் தெரிந்த பாரிய மேட்டின் உச்சிக்கு ஏறினான்.
மணல் மேட்டில் ஏறி அமர்ந்து பார்த்தபோது மேற்கு திசையில் உள்ள சூரியன் மறைவதற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்தன.
சுற்றி இருந்த மண் மடிப்புகளில் உல்லாச பிரயாணிகள் அமர்ந்திருந்தார்கள். இடைக்கிடையே பிரயாணிகள் அமர்ந்திருக்க ஒட்டகங்களை நடத்திச் செல்லும் ஒட்டகக் காப்பாளர்கள் நிஜமாகவும் அவர்களின் நிழல் மாலை நேரத்து சூரிய வெளிச்சத்தில் பல மடங்கு பெரிதாகவும் அந்த மணல் பிரதேசத்தை நிறைத்திருந்தன.
பாலைவனத்தில் சூரிய அஸ்த்தமனம் பார்ப்பது உல்லாச பிரயாணிகளுக்கு ஒரு சடங்காகி விட்டது. இதை சடங்காக்கியவர்கள் உல்லாசப்பிரயாணிகளா அல்லது ஒட்டகச்சாரதிகளா இல்லாவிடில் உல்லாச பிரயாணத்துறையா என்ற கேள்வி அசோகனுக்குள் எழுந்தது. யார் இதற்குப் பொறுப்பாக இருந்தாலும் மிகவும் புத்திசாலித்தனமான தீர்மானம் என நினைத்துக்கொண்டே சூரிய அஸ்த்தமனத்தை கமராவால் எடுப்பதற்காக மண்ணில் சாய்ந்து படுத்தான்.
மாலைச்சூரியன் பூப்பந்தை அணைப்பதை ஒரு கிளிக் செய்து விட்டு அடுத்தபடி வேறு கோணத்தில் மீண்டும் ஒரு கிளிக் எடுப்போம் என தயாராகினான். அப்போது தூரத்தில் ஒரு ஒட்டகமும் தெரிந்தது. சூரிய அஸ்த்தமனத்தையும் ஒட்டகத்தையும் ஒன்றாக படம் பிடிப்போம் என மணல் மேட்டில் சிறிது கீழ்நோக்கி வழுக்கியபடி நகர்ந்த போது எதிரே இராஜஸ்தானி ஹாக்கரா உடையில், தலையை மறைத்து துப்பட்டா அணிந்தபடி ஒரு பெண் தோன்றினாள்.
சூரியனையும் ஒட்டகத்தையும் கமராவின் நேர்கோட்டில் கொண்டுவந்த போது இந்தப் பெண்ணின் பின்பகுதி இடையில் வந்து மறைத்தது. எரிச்சலுடன் மணல் மேட்டில் இருந்து விலகி அமர்ந்தபோது, காலையில் வழிகாட்டியுடன் கொதிதண்ணீராக தகித்த அந்த அவுஸ்திரேலிய அழகியின் கவர்ச்சியான பிருஸ்டம்தான் என தெரிந்ததும் அசோகனின் கோபம் பாலைவனத்தில் பெய்த மழை போல் காணாமல் போய்விட்டது. மணல் மேட்டின் சரிவில் நடுப்பகுதியில் நின்றவள் தனது துப்பட்டாவை இரு கைகளாலும் உயர்த்தி தூக்கி பிடித்தபடி ஆடத் தொடங்கினாள்.
ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கி பின்பு வேகமாக அவளது பாலைவன நாட்டியம் நடந்தது. காட்டில் அதிகாலையில் ஆண் மயிலின் தோகை விரித்தலை அவள் நினைவுக்கு கொண்டு வந்தாள். அசோகனால் படப்பிடிப்பை தொடர முடியவில்லை. சிறிது விலகி நின்று எடுத்தாலும் அவளது உடல் படத்தில் விழுவதற்கு வாய்ப்புள்ளது. அவளது பின்பகுதியை அவளுக்கு தெரியாமல் படம் எடுப்பது நாகரிகம் இல்லை என நினைத்தான். அதே வேளை இவ்வளவு அழகை நிறைத்து இருந்த அவளின் பின் பகுதியை தவற விடவும் அசோகனின் உள்ளத்து அழகுணர்வு இடம் கொடுக்கவில்லை.
சூரிய அஸ்த்தமனத்தை மட்டும் எடுக்க தயாராக வைத்திருந்த கமராவால் சிறிது நகர்ந்து சூரியனோடு அவளது பிருஸ்டத்தையும் போட்டோ எடுத்தான். கமராவை ரீவைண்ட் பண்ணி பார்த்த போது ஒரு படத்தின் வலதுபக்க விளிம்பில் சிவப்பு துப்பட்டா உடலின் மேல்பகுதியை மறைத்தது. பூக்களும் இலைகளும் முறையே சிவப்பும் பச்சையுமாக அவளது ஹாக்கராவை நிறைத்திருந்தன.
சூரியன் முற்றாக மறையும்வரை கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் இந்த தோகை விரிப்பு நடனம் நடந்தது. இந்த நடனம் பலர் கவனத்தை ஈர்த்தது. அதற்குள் அவளைச் சுற்றி ஒரு சிறு கூட்டம் கூடிவிட்டது. இதில் உல்லாசப் பயணிகளோடு பாட்டுப்பாடி காசு சேர்க்கும் குடும்பமும் வந்து, அதில் இரு சிறுமிகள் பாடத் தொடங்கினார்கள். ஓரு இளைஞர் கூட்டம் சிறிது துரத்தில் நின்று நடனத்தை இரசித்தது. தன்னைப் பலர் இப்படி பார்ப்பது இவளுக்கு நிச்சயமாக உற்சாகத்தை ஊட்டி இருக்க வேண்டும் என்பது அவளது ஆட்டத்தின் வேகம் அதிகரிப்பதிலிருந்து தெரிந்தது. சூரியன் முற்றாக மறைந்த பின்னர்தான் இவளது நடனம் நின்றது. நடனத்துக்கு தானாக வந்து இசை அமைத்துப் பாடிய இரண்டு இராஜஸ்தானிய பெண் குழந்தைகள் அசோகனிடம் வந்து காசுக்காக கையை நீட்டினார்கள்.
அசோகனுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. ஆடிய அந்த ஆஸ்திரேலிய அழகியிடம் காசு கேட்கும்படி ஆங்கிலத்தில் கூறியது மட்டுமல்லாது சைகையிலும் காட்டினான். ஆனால், அந்த குழந்தைகள் இவனை விட்டு போக மறுத்து சிரித்தபடியே முன்னால் நின்றன. குழந்தைகள் கை ஏந்தும்போது எப்படி மறுப்பது? இனித் தவிர்க்க முடியாது என்று நினைத்து நூறு ரூபாயை எடுத்து அந்த குழந்தைகளிடம் கொடுத்தான். துப்பட்டாவை எடுத்து தோளில் போட்டு மணலில் புதைந்து கிடந்த சிவப்பு பிளாஸ்டிக் காலணியை குனிந்து எடுத்துக்கொண்டு அசோகனிடம் நேரே வந்தாள் அந்த அழகி. மங்கிய மாலை நேரத்தில் பாலைவனத்து பின்னணியில் வானத்தில் இருந்து ஒரு தேவதை இறங்கி வருவது போல் இருந்தது.
காலையில் அவளது கோபத்தைக் கண்டவன். இப்பொழுது அவள் அறியாமல் அவளது பின்பகுதியையும் சேர்த்து தான் போட்டோ எடுத்ததைத் தெரிந்தால் எப்படிக் குதிப்பாள்? என்ற நினைப்பு எழுந்தது. பொலிசை அழைப்பாளா? ஊரைக் கூட்டுவாளா?
அசோகனுக்கு இதயத்துடிப்பு அதிகரித்தது. விழிகள் பிதுங்கியது.
இவளை நேரடியாக சந்திக்காமல் தவிர்க்க வேண்டும் போல் இருந்தது. எழுந்து போவோமா என நினைத்து பம்மினான்.
கவ்வியிழுக்கும் அந்தப் பெரிய கண்களிடமிருந்து தப்பமுடியாது. புலியின் வேட்டைக்கு இரையாகப்போகும் ஒரு சிறு ஆட்டுக்குட்டி போல் தனது உடல் அந்த இடத்தில் உறைந்ததை அவன் உணர்ந்தான்.
அவளது முகத்தில் கோபத்திற்குப் பதிலாக சாந்தம் தெரிந்தது.
“சங்கீதத்திற்கு காசு கொடுத்து விட்டாய். இனி நாட்டியத்துக்குத் தரவேண்டும்” என கையை நீட்டி அவுஸ்திரேலிய தொனியில் அவளது கீழ் உதட்டால் மட்டும் புன்முறுவல் பூத்தது அசோகனுக்கு தைரியத்தை அளித்தது.
“பாலைவனத்தில் இவ்வளவு அழகான நாட்டியத்தை எதிர்பார்க்கவில்லை. இந்த நடனத்திற்கான சன்மானத்தை கோட்டையில் இருந்த மன்னன் கொடுக்கலாம். நான் சாதாரணமானவன். இந்த அழகிய நடனத்துக்கு ஏற்பப் பணம் கொடுக்குமளவுக்கு நான் பணக்காரன் இல்லை.”
“அளவுக்கு மேல் புகழாதே. எனது பிருஸ்டத்தை எத்தனை தடவை போட்டோ எடுத்தாய்?”
இப்படி அவள் நேரடியாகக் கேட்டதும் இதயத்தின் துடிப்பு மீண்டும் அதிகரித்ததுடன் நாக்கும் புரள மறுத்துவிட்டது.
அசோகன் தன்னை சுதாரித்து கொண்டே “ஒன்றே ஒன்று மட்டும் தான், அதுவும் சூரியனுக்கு அருகில் வந்து விட்டாய். என்னை நம்பாவிடில் நீயே பார்த்துக்கொள்” எனக் கூறிய அசோகன் தனது கமராவை நீட்டினான்.
“ஒன்றுதானா” என போலியாக கவலைப்படுவது போல் உதட்டை குவித்து தோளைக் குலுக்கி பாவனை காட்டினாள்.
இவள் நட்பாகத்தான் கேட்கிறாள் என்பது உறுதியாகியதால் துணிவை நெஞ்சில் தேக்கியபடி “நீ ஆவுஸ்திரேலியாவில் எந்த இடம்?” என ஆவலை அடக்கமுடியாமல் கேட்டான்.
“உனக்கு எப்படித் தெரியும் நான் அவுஸ்திரேலியாவென? எனது பின்பகுதியில் எழுதப்பட்டிருந்ததா?”
குறும்புடன் சிறிது ஆச்சரியத்தையும் முகத்தில் காட்டியபடி இவ்வளவு நேரமும் நின்று கொண்டிருந்தவள் அசோகனுக்கு அருகில் இருந்தாள்.
இவளைக் கொஞ்சம் சீண்டலாமோ என்று நினைத்தபடி, ‘உனது பின்பகுதியை பற்றிய நம்பிக்கை யார் கொடுத்தது?” என்றான்.
உடனே “எனது பழைய போய் ஃபிரண்ட்” என சிரித்தபடி தயக்கமின்றி கூறினாள் அவள்.
“உனது இடம்?” மீண்டும் அசோகன்.
“நான் மெல்பேர்ன். நீ…”
“நானும்” எனப் பக்கத்தில் நெருங்கியபடி அமர்ந்தாள்.
“நான் இவ்வளவு நேரமும் நீ ஒரு இந்தியன் என்று நினைத்தேன்” என போலி ஏமாற்றத்தை முகத்தில் வழியவிட்டபடி கால்களை மணலில் புதைத்தாள்.
இவளது பாதங்கள் அம்மாவின் பாதங்கள்போல் இரண்டாவது விரல் பெரிதாகி அமைந்திருக்கிறது என நினைத்தான்.
“நான் ஐந்து வருடங்கள் முன்பு இலங்கையில் இருந்து மாணவனாக மெல்பேர்னுக்கு வந்து எங்கள் தேசத்து யுத்தத்தை காரணமாகக் காட்டி தங்கிவிட்டேன்.”
“அப்ப… நீ ஒரு அகதியா?” சிரித்தபடி அவள் கேட்டது, அசோகனுக்குப் பிடிக்கவில்லை. அந்த இடத்தை விட்டு எழ முயற்சித்தான்.
அசோகனது உணர்வை புரிந்து கொண்டு ‘எனது கேள்வியை தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ளாதே. எனது மூதாதையரும் அகதிகள்தான்.” தோளில் இறுக்கமாக அழுத்தி இருத்தினாள்.
அவளது கையில் இருந்து மெதுவாக விலகி சுதாரித்துக்கொண்டு பேச்சை தொடர வேண்டிய கட்டாயத்தில், ‘அது என்ன வகை நடனம்?” என்று கேட்டான். இவ்வளவு அழகிய பெண்ணின் பேச்சுத் துணையை கத்தரித்துக்கொண்டு எந்த இளைஞனால் போக முடியும்?
“காலையில் ரூர் கைட்டின் வார்த்தைகள் தாக்கிவிட்டன. அவனது அந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாமல் விலகி வெளியேறிவிட்டேன். அதுவும் பின்பு மனதுக்கு உளைச்சலாக இருந்தது. இந்தப் பாலைவனமும் மணல் மேடுகளும் என்னை வசீகரித்து விட்டன. ஒரு கனவுப் பிரதேசத்துள் பிரவேசித்தது போல் இருந்தது. இந்த மணல் பிரதேசத்திற்கு வந்தபோது காதில் ஏதோ ஒரு சங்கீதம் காற்றில் மிதந்து வந்து என் ஆத்மாவுடன் கலந்து என்னையறியாமல் ஆடவைத்தது.”
“காலையில் நீ கைட்டோடு பிணங்கியதை நான் பார்த்தேன். நீ ஒரு சண்டைக் கோழியாக சிலிர்த்தபடி சென்றாய். உன்னைப் பார்த்துக் கொண்டிருந்த போது அந்தக் குழு என்னை விட்டு வெகு தூரத்தில் போய் விட்டதால் நான் மட்டும் தனியாக அந்தக் கோட்டையை சுற்றிப்பார்த்தேன்”
“உண்மையாகவா? என்னை மன்னித்துக் கொள். எனது நடத்தை நல்லது அல்ல. யாருடனோ இருந்த கோபத்தை அந்த கைட்டிடம் காட்டிவிட்டேன். இவ்வளவு நேரமாகியும் உன் பெயரை நான் இன்னும் கேட்கவில்லை. ஹாய்… எனது பெயர் ஜெனி… ஜெனிபர்”
“அசோகன்” எனச்சொல்லிக் கொண்டே கையை நீட்டினான்.
“மெல்பேர்னில் என்ன செய்கிறாய்?”
“பாங்கில் இன்போ”
“ரிப்பிக்கல்”
“என்ன அலுத்துக்கொள்கிறாய்?”
“என் பழைய போய் ஃபிரண்டும் ஐ.ரி.தான். எந்த கலை ரசனையும் இல்லாதவன்.”
“இவ்வளவு அழகான உன்னை இரசிக்கவில்லையா?” எனக் குறும்புத்தனமாக கேட்டபோது, ‘அதுதான் சொன்னேனே.. எனது பின்புறத்தை அவனும் இரசித்தான்” என்றாள்.
“உனது அழகை அவன் ரசிக்கவில்லை என்று எப்படி உன்னால் சொல்ல முடியும்?” அசோகன் சிரித்தபடி கேட்டான்.
“ஷட் அப். இந்த ஆண் வர்க்கமே இப்படித்தான். பெண்களின் முலைகளையும் பிருஷ்டத்தையும் விட வேறு எதனையும் இரசிக்கத் தெரியாத பாவப்பட்ட ஜென்மங்கள்” என்று கூறியவாறு அவள் எழுந்தாள்.
“மீண்டும் யார் மீதோ உள்ள ஆத்திரத்தை என்னிடம் காட்டுகிறாய். அதுசரி… எந்த இடத்தில் இங்கு தங்கியிருக்கிறாய்..? சொல்லு”
“றியால் என்ற பக்கத்தில் உள்ள கூடாரங்கள் ஒன்றில்”
இரவாகி நிலவு வந்துவிட்டது. உல்லாசப் பிரயாணிகளால் நிரம்பி இருந்த பாலைவனம் காலியாகி விட்டது. இருவரும் தனித்து விடப்பட்டிருந்தனர்.
“நானும் அங்குதான் தங்குகிறேன். இருவரும் ஒன்றாக நடக்கலாமா?”
சிறிது தூரத்தில் உள்ள பாதையில் வாகனங்கள் லைட்டுகளை போட்டபடி கிளம்பிக் கொண்டிருந்தன. இருவரும் மணலில் கால் புதைய மெதுவாக நடந்து ரோட்டை அடைந்த போது எந்த வாகனமும் இல்லை. ஒட்டகங்கள் சில காப்பாளர்களுடன் நடந்து கொண்டிருந்தன.
அமைதியாக நடந்து வந்தவளிடம் “என்ன வேலை செய்கிறாய்?” எனக் கேட்டான்.
சில கணங்கள் தாமதித்து விட்டு “ட்ரவல்ஸ் ஒன்றில் பிரயாண முகவராக வேலை செய்தேன். மெல்பேர்ன் திரும்பியதும் மீண்டும் வேறு வேலை தேடவேண்டியிருக்கும்”
கூடாரங்களை நெருங்கியபோது அங்கிருந்த இரு பரிசாரகர்கள் இருவரையும் முன்வாசலால் வரும்படி சொன்னார்கள்.
அந்த பரந்த பாலைவனத்தில் கூடாரங்கள் வட்டமாக அமைக்கப்பட்டிருந்தன. எந்தப் பக்கத்துக்கூடாகச் சென்றாலும் ஒவ்வொரு கூடாரத்துக்கும் போகமுடிவதோடு, நடுவே இருக்கும் உணவுக் கூடத்துக்கும் சென்றுவிடலாமே. இவர்கள் ஏன் இப்படிச் சொல்கிறார்கள்…?
லொஜிக்கை புறத்தே தள்ளிவிட்டு பரிசாரகர்கள் காட்டிய பாதையில் சென்ற போது, உணவுக்கூடத்திற்கு மேற்கில் முன்வாசலில் மின்குமிழ்களால் சோடிக்கப்பட்ட தலைவாசல் இருந்தது. அதன் கீழ் இரண்டு இராஜஸ்தானிய பெண்கள் இருவருக்கும் மலர் தூவி வரவேற்றார்கள். உணவுக்கூடத்தின் முன்றல் ஏற்கனவே மக்களால் நிரம்பி இருந்தது.
உணவுக் கூடாரத்துக்கு செல்ல இருந்த ஜெனிபரிடம் “ஜெனி… நான் எனது கூடாரத்துக்கு சென்று குளித்து விட்டுவருகிறேன்.” என்று சொன்னதும் “நானும் குளிக்கப் போகிறேன்” எனச் சொன்ன ஜெனியும் சிறிது தொலைவில் இருந்த தனது கூடாரத்தை நோக்கிச் சென்றாள்.
“ஏன் இவளிடம் நெருங்கிப் பழகுகின்றேன்? அதுவும் வெள்ளைக்காரி. நேரடியாகவும் பேசுகிறாள். அனலாகவும் புனலாகவும் அடிக்கடி மாறும் சுபாவம் உள்ளவளாக இருக்கிறாள். இவளை தாமதிக்காமல் கழற்றி விடவேண்டும்.” என நினைத்தான். குளித்து விட்டு அளவுக்கு அதிகமாகவே வாசனை திரவியத்தை உடலில் பூசிக்கொண்டான். பெட்டியில் இருந்த சிவப்பு நிற குர்தா உடையை எடுத்து அணிந்தான். இந்த உடை அவனிடத்தில் பலகாலம் இருந்தாலும் அவுஸ்திரேலியாவில் இருந்தவரை உடுத்தியதில்லை.
பெட்டியை மூடியவனுக்கு அந்தப் பெட்டியின் மூலையில் இருந்த ரெட் வைன் மனதில் சபலத்தை ஊட்டியது. மெல்பேர்னில் விமானம் ஏறுவதற்கு முன்பு அவசர அவசரமாக டியூட்டி ஃபிறீ ஷொப்பில் வாங்கியது. வைனை எடுத்துக்கொண்டு ஏதாவது கிளாஸ் இருக்குமா எனப்பார்க்க கண்களைச் சுழற்றியபோது கூடார வாசலில் நிழல் தெரிந்தது.
“உள்ளே வரலாமா?”
ஜெனி நின்றாள். வெள்ளை பருத்தியில் கறுத்த பொத்தான்கள் போட்ட கால்வரை நீளமான கவுனை அணிந்திருந்தாள். தேவாலயத்தில் மணமகளின் திருமண உடைபோல் இருந்தது. தலைமயிரை ஈரத்துடன் தொங்கவிட்டிருந்தாள்.
இந்த உடையில் அழகாக இருக்கிறாய் என்று சொல்வோமா என நினைத்துவிட்டு நாக்கை கடித்தபடி ‘வரவு நல்வரவாகுக” என்று மட்டும் சொன்னான்.
“வைன் வைத்திருக்கிறாய்” எனக் கூறி அகல விழித்து வியப்படைந்தாள்.
“கிளாஸ் அல்லது கப் ஏதாவது இருக்குமா எனப் பார்க்கிறேன்”
“இப்படித்தா” எனக் கூறி அப்படியே அதை வாங்கி, போத்தலோடு குடித்தாள்.
அசோகனும் அவ்வாறே குடித்தான். இருவருமாக மாறி மாறி அரைப்போத்தலை குடித்து முடித்ததும் உணவுக் கூடத்துக்குச் சென்றார்கள்.
அசோகன் மனதில் பயம் எட்டிப்பார்த்தது. இவள் பலகாலம் பழகியவள் போல் நடந்து கொள்கிறாளே! பிரமச்சாரிய விரதத்தில் இருப்பது போல் எந்த பெண்களிடமும் நெருங்கிப் பழகாமல் இருக்கும் எனக்கு இவளால் பிரச்சினை வருமோ? விலகி நடக்க முயற்சிக்கவேண்டும். இலையை நோக்கி நகரும் புழுவாக மெதுவாக இதயத்தை நோக்கி கவலை நகர்ந்தது.
கூடாரத்து முன்றலில் நீள் வட்டமாக சிறிய கதிரைகளில் கூடியிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட உல்லாசப்பிரயாணிகளுக்காக, மீசையும் வண்ணத் தலைப்பாகையும் கட்டியிருந்த இரண்டு ஆண்களில் ஒருவர் பாட்டுப்பாட மற்றவர் டோலாக்கு அடித்துக்கொண்டிருந்தார். இந்த இசைக்கு இரு இளம் பெண்கள் பாரம்பரிய நடனம் ஆடிக்கொண்டிருந்தார்கள். இரண்டு பெண்களும் அழகிகள். பதினாறு, பதினெட்டு வயதில் சகோதரிகள் போல் தோற்றமளித்தார்கள்.
இருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்ததும் ஜெனி நெருங்கிவந்து காதருகில் “இராஜஸ்தானில் இருந்துதான் இந்த ஜிப்சிகள் ஐரோப்பாவுக்கு வந்தார்கள்” என அசோகனின் காதில் முணுமுணுத்தாள்.
அவளது வரலாற்று அறிவை உடனே ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் வைன் தந்த போதையில் இருவரும் இருப்பதால் விவாதத்தை தவிர்ப்பதற்காக ~~அப்படியா” என்று கேட்டுவைத்தான்.
இப்பொழுது அந்த நாட்டிய சகோதரிகள் நெருப்பு சட்டியைத் தலையில் வைத்து ஆடினார்கள். அசோகனுக்கு இந்த நாட்டியம் மனதைக் கவரவில்லை. ஆனால், சகோதரிகளின் இடுப்பு மற்றும் பின்புற ஏற்ற இறக்கங்கள் இரசிக்கக் கூடியதாக இருந்தன.
ஜெனி பாடுபவர்களுக்கு எதிரில் இருந்த தட்டத்தில் ஐநூறு ரூபாவை போட்டாள். இவளைத் தவிர மற்றவர்கள் எவரும் பணம் போடவில்லை.
“என்ன மனிதர்கள்? எவரும் பணம் கொடுக்கவில்லை. நான் தட்டத்தை எடுத்துக் கொண்டு எல்லோரிடமும் செல்லப்போகிறேன்.” என்றாள்.
“இவர்கள் மத்தியதர இந்திய மக்கள். மிகவும் நெருக்கடியின் மத்தியில் வெளிநாடு சென்று பணம் சேர்த்து தங்கள் நாட்டுக்கு அந்தப் பணத்தை சிக்கனமாக செலவு செய்ய எண்ணி வந்திருப்பவர்கள். இங்கு இருப்பவர்கள் முதலாம் தலைமுறை குஜராத்தி மக்கள். பணத்தின் அருமை நன்கு தெரிந்தவர்கள். மேலும் இந்த நடனம் கிராமத்து கலை வடிவம். இதை இவர்கள் பல தடவை பார்த்திருக்கலாம்.”
“கலையை இரசிக்கத் தெரியவில்லை” என்றவள் அசோகனை முறைத்தாள்.
இவள் யாரை சொல்கிறாள்? என்னையா அவர்களையா?
நெருப்பாட்டம் முடிந்ததும் நொருங்கிய கண்ணாடி துண்டுகள் மேல் ஆடினார்கள். அதைப் பார்க்க முடியாமல் முகத்தை திருப்பிய ஜெனி அசோகனின் தோளில் தலை புதைத்தாள். அசோகனுக்கு அந்தரமாக இருந்தது. தாங்கள் இருவரும் ஜோடிகளாக நடந்து கொள்வது போன்று தோன்றியது. ஆனால், அவளது முகத்தை விலக்க துணிவு இல்லை. கண்ணாடித் துண்டுகளின் மேல் ஆடிய ஆட்டம் முடிந்ததும் நான்கு இளம் இந்தியப் பெண்கள் தங்களோடு பொலிவூட் நாட்டியம் ஆட வருமாறு நாட்டியம் ஆடும் சகோதரிகளிடம் வற்புறுத்தினர்கள். அந்த நான்கு பெண்களும் பார்ப்பதற்கு மேல்நாட்டில் வளர்ந்தவர்கள் போலத் தோற்றமளித்தார்கள். பாட்டு பாடிக்கொண்டிருந்த ஆணிடம் கண்களால் அனுமதி கேட்டுப் பெற்றுக்கொண்டனர் சகோதரிகள். பிரபலமான பொலிவூட் படத்தின் பாடல் ஒன்றுக்கு அந்த நாலு பெண்களுடன் அவர்கள் ஆடத்துவங்க மேலும் பல பெண்களும் சேர்ந்து கொண்டார்கள்.
அங்கிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குஜராத்தியர், மற்றவர்கள் பஞ்சாபிய குடும்பத்தினர். ஏற்கனவே பிரபலமான பாடல் என்பதால், மொத்த கூட்டமும் கலந்து கொண்டது. இளைஞர் கூட்டமும் நடனத்தில் ஈடுபட்டது. சபையில் நாட்டியத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தவர்களின் கமராக்கள் தொடர்ச்சியாக பளிச்சிட்டன. நாட்டியம் ஆடிய சகோதரிகள் பொலிவூட் நர்த்தகிகளை விட அழகாக ஆடினார்கள்.
“பார்த்தாயா… பொலிவூட் பாடல்கள்தான் தற்கால இந்தியாவின் ஆதார சுருதியாக எல்லா மொழி பேசுபவர்களையும் இணைக்கிறது. மேலும் சகலராலும் புரிந்து கொண்டு இரசிக்க முடிகிறது.”
எதுவித பதிலும் வராததால் தான் கூறியதை ஜெனி இரசிக்கவில்லை என்பது அசோகனுக்கு புரிந்தது.
தட்டத்தில் பணம் போடுவதை நாட்டியம் ஆட அழைத்த நான்கு பெண்களும் ஆரம்பித்து வைக்க பலர் வந்து பணம் போட்டனர்.
“இப்பொழுது பார்த்தாயா… மக்கள் தங்களுக்கு பிடித்ததைச் செய்ததால் பணம் போடுகிறார்கள்.”
மீண்டும் பதில் இல்லை.
ஒவ்வொரு நடனத்தின் தொடக்கத்திலும் ஒரு உயரமான மனிதர் வந்து நடக்கவிருந்த நடனத்தை பற்றிய ஒரு குறிப்பை ஹிந்தியில் சொல்லி விட்டுப் போவார். அசோகன் இம்முறை பொறுக்காமல் அவரை அழைத்து தயவு செய்து ஆங்கிலத்திலும் சொல்லும்படி கேட்டான்.
உயர்ந்த மனிதர் தட்டுத்தடுமாறி உடைந்த ஆங்கிலத்தில் சிறிய விளக்கம் கொடுத்தார். ‘பாலைவனத்து மக்கள் மழையை வேண்டி ஆடும் நடனம் இது. இதை மயில் நடனம் என்பார்கள்.”
மயில் நடனம் தொடங்குவதற்கு முன்பாக அதற்கான பாட்டு உச்ச நிலையில் பாடப்பட்டது. பாட்டைக் கேட்டதும் ஜெனி எழுந்து நின்றாள். அவளது கண்களில் போதை மயக்கம் தெரிந்தது.
“இந்தப்பாட்டை நான் முன்பு கேட்டிருக்கிறேன். நான் ஆடப்போகிறேன்” எனக்கூறிவிட்டு எந்த பதிலும் எதிர்பாராமல் சபையின் மத்தியில் சென்றாள். வைனைக் குடித்து ஒருமணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டதே. இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்தாளே என அசோகன் நினைத்தான். இவளைக் கண்டதும் நாட்டியம் ஆடத் தயாராக இருந்த இரு சகோதரிகளும் இவளுடன் சேர்ந்து கொண்டனர்.
நாட்டியத்தில் அவர்களது அசைவுகளை அப்படியே பிரதிபலித்து ஆடினாள். இவளது கை, கால், கண் எல்லாம் ஒன்றையொன்று போட்டி போட்டபடி அசைந்தன. அந்தப் பெண்களிலும் பார்க்க ஜெனி சிறப்பாக ஆடியதாக அசோகனுக்குத் தெரிந்தது. இவளது இராஜஸ்த்தானிய உடையும் ஆவுஸ்திரேலிய உணவில் வளர்ந்த செழித்த தேகமும் கூட்டத்தில் இருந்த சகலரையும் இரசிக்க வைத்தன. பலர், குறிப்பாக இளைஞர்கள் இவளுக்கு நெருக்கமாக வந்து படம் எடுத்தனர்.
இவளால் எப்படி அழகாக நடனம் ஆடமுடிகிறது? இராஜஸ்த்தானியப் பகுதியில் நாடோடியாக இசைபாடும் மக்களுக்கே உரிய இசைக்கு இவ்வளவு அழகாக ஆடமுடிந்தது? முதல்முறையாக அசோகனுக்கு மனதில் ஒரு பெருமிதம் உருவாகியது. மெல்பேர்னில் இந்திய நடனம் பயின்றாளா? பரதநாட்டியமும் பொலிவூட் நாட்டியமும் சில அவுஸ்திரேலிய பெண்கள் பழகுவதாக கேள்விப்பட்டுள்ளான்.
வியந்து கொண்டிருக்கும் போது நடனம் முடிவடைந்தது. சுற்றியிருந்து பார்த்த மக்கள் எழுந்து நின்று ஒரு சிறந்த கலைஞருக்கு கைதட்டுவது போல் ஒரு நிமிடம் கைதட்டிப் பாராட்டினார்கள். இந்தப் பாராட்டு ஜெனிக்கு என்பது தெரிந்ததால் அந்த நாட்டிய சகோதரிகள் விலகிச்சென்றனர். கைதட்டல் தொடர்ந்தது. இவள் அந்த இடத்தில் அப்படியே நின்றாள். ஒரு நிமிடத்துக்கு மேல் பொறுத்துக் கொள்ளாமல் அசோகன் சபையின் மத்திக்குச் சென்று ஜெனியை இழுத்து வந்து நாற்காலியில் இருத்தினான்.
“என்ன நடந்தது?” அவளது தோளில் தட்டியபடி கேட்டான். பதில் சொல்லுமளவிற்கு அவள் பழைய நினைவுக்கு வரவில்லை. போத்தலில் இருந்த தண்ணீரை கையில் ஊற்றி அவளது முகத்தில் தடவினான்.
சிரித்தபடி ‘நான் ஓகே.” என்றாள்.
“உன் நாட்டியம் அழகாக இருந்தது. எங்கே பழகினாய்?”
“நான் நாட்டியமே பழகவில்லை.. நம்புவாயா?”
“இல்லை. இந்தா உனது நாட்டியத்துக்கு” என இரண்டு ஐநாறு ரூபாயை எடுத்து அவன் கொடுக்க அதை வாங்கி அந்த இரண்டு நாட்டிய பெண்களிடமும் கொடுத்தாள்.
உள்ளே சாப்பாடு பரிமாறத் தொடங்கியதால் கூட்டம் கலைந்து உள்ளே சென்றது. அசோகன் எழுந்து நின்றபோது ‘நான் டொய்லெட் போகவேண்டும்” என எழுந்தாள்.
“உணவுக்கூடப்பகுதியுள் ஒன்று இருக்கிறது. அதைப் பாவித்துக் கொள்” என்று கூறிவிட்டு அவன் வெளியே நின்றான்.
போனவள் போனதைவிட வேகமாக திரும்பிவந்து ‘பாஸ்ரட், அது மரக்கறி உணவு சாப்பிடுபவர்கள் இருக்கும் இடம் என்கிறான். என்னை டொய்லெட்டுக்குள் செல்ல விடவில்லை. நான் சாப்பிடப் போனதாக நினைத்துவிட்டான்” என்று கோபத்தில் கத்தினாள்.
“இவனுகளுக்கு விளக்கமளிப்பதிலும் பார்க்க எமது கூடாரத்துக்கு போவோம்” எனக் கூறி அவளது கூடாரத்தை நோக்கி நடந்தான்.
“அவனுக்கு தெரியாது நான் வீகன் என்று…”
“அப்ப நீ பால் சாப்பிடுவதும் இல்லையா?”
“இல்லை”
“அப்போ பட்டினிதான்.. இந்த ஊர்ப்பகுதியில் பால் இல்லாமல் எந்த சாப்பாடும் இவர்கள் தயாரிப்பது இல்லை”
கூடாரத்தின் உள்ளே சென்றவள் வெளியே வந்ததும் ‘அந்த வைன் போத்தலில் கொஞ்சம் மிச்சம் இருக்கிறதுதானே?” எனக் கேட்டாள்.
இருவருமாக அசோகனின் கூடாரத்துக்குள் சென்று எஞ்சியிருந்த வைனை காலி பண்ணினார்கள்.
உணவுக்கூடத்துக்கும் கூடாரத்திற்குமிடையில் நூறு மீட்டர் தொலைவு இருக்கும். பாலைவனத்து நிலவின் ஒளி வாரி இறைக்கப்பட்டு கண்ணுக்கெட்டும் வரையும் நிர்மலமான பொன்னிற தோற்றத்தை கொடுத்தது. அவன் மெதுவான போதையை உணர்ந்தான். திரும்பிப் பார்த்தபோது மணலில் பாதங்கள் இழுபட சிறிது தூரம் தள்ளாடி நடந்து வந்த ஜெனி ஒரு மணல் குன்று வந்ததும் உட்கார்ந்து விட்டாள்.
‘இந்த இடத்தில் கொஞ்சம் இருந்துவிட்டு வருகிறேன். ஏதோ பழக்கமான இடம்போல் தெரிகிறது.” என்றாள்.
“இரவு பத்து மணியாகிவிட்டது. நாங்கள் இருப்பது பாலைவனத்தில். அதிலும் நீ வீகன்… இப்போதாவது போகாவிட்டால் சாப்பாடு பிறகு இருக்காது. ஏற்கனவே உணவு முடிந்திருக்கும். எனக்கும் பசிக்கிறது” எனக் கூறி அழைத்தபோதும் மனதில் இவளோடு சேர்ந்து நான் தவறு செய்கிறேன். இவளை ஏன் சந்தித்தேன்? என்றும் தோன்றியது.
ஏற்கனவே பெரியம்மா வவுனியாவில் பெண்பார்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். நானோ நடக்கும் யுத்தத்தைக் காரணமாக்கி பின் தள்ளிக்கொண்டு போகிறேன். முக்கியமாக நான் ஈடுபட்டிருக்கும் விடயங்கள் என்ன ஆவது என மனம் குமைந்து கொண்டிருந்தது.
இருவரும் உணவருந்தும் இடத்துக்குச் சென்றபோது ஆட்கள் இல்லாமல் காலியாக இருந்தது. உணவும் முடிந்துவிட்டது. ஜெனியை கண்டவுடன் சமையல்காரர்கள் வந்து உபசரித்தார்கள். அரைமணி நேரத்தில் திரும்பவும் உணவைத் தயாரித்தார்கள். ஜெனியால் போதையில் உணவை உண்ணமுடியவில்லை. சமையல்காரர்கள் அசோகனிடம் ‘உங்கள் மனைவி உணவை உண்ணவில்லை” என கவலைப்பட்டார்கள்.
ஜெனி உணவை உண்ணாமல் விட்டதற்காகவா அல்லது மனைவி எனக் கூறியதற்காகவா கவலைப்படுவது? என அசோகன் யோசித்தான். விரைவாக இவளைக் கூடாரத்தில் கொண்டுபோய் விடாவிட்டால் இங்கே காட்சிப் பொருளாகி விடுவாள் என நினைத்தவாறு அவளது கையைப் பிடித்தடி அவளது கூடாரத்துக்கு இழுத்துச் சென்றான். ஜெனி அசோகனின் தோளில் சாய்ந்தபடி நடந்தாள் என்பதைவிட இழுபட்டாள்.
“இதோ உனது கூடாரம். இனி நான் போகிறேன்.”
“நீ எங்கே போகிறாய்? எனக்கு போதை தெளியும்வரை என்னோடு இருந்து விட்டுப் போ. போதையில் இருக்கும் என்னை நீ ரேப் பண்ணமாட்டாய் என்ற நம்பிக்கை உன்மீது இருக்கிறது. ஆனால் மற்றவர்களின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. சமீபத்தில் ஐரோப்பிய பெண் இந்தப்பகுதியில் ரேப் பண்ணப்பட்டாள் என பத்திரிகையில் படித்தேன்”
போதையிலிருந்தாலும் எச்சரிக்ககையாக இருக்கிறாள் என்று மனதில் நினைத்துக்கொண்டு “சரி வா, எனது கூடாரத்திற்கு. குளித்தால் உனக்கு போதை குறையும்.”
உள்ளே வந்ததும் அசோகனது கட்டிலில் அமர்ந்தபடி ‘உனது கூடாரம் பெரிதாக இருக்கிறது’ சொல்லியவாறு கட்டிலில் படுத்தாள். அசோகன் தனது காலணிகளை கழற்றிவிட்டு குளியலறைக்குள் சென்றான்.
குளிர்ந்த தண்ணீர் சீறிக்கொண்டுவந்து தலையில் விழும்போது போதையால் ஏற்பட்ட உடல் களைப்பும் பாலைவனச் சூடும் எங்கோ பறந்து சென்றது. குளித்து உடையை அணிந்து கொண்டு படுக்கை அறைக்கு சென்ற போது மெதுவாக, ஆனால் சீராக மூச்சு விட்டபடி ஜெனி ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.
நல்லவேளையாக கட்டிலின் ஒரு முனையில் அவள் படுத்திருந்தாள். போர்வையையும் இழுத்து அவளின் மீது போர்த்திவிட்டு நுளம்பு வலைக்கு வெளியே மறுபாதியில் அருகில் படுத்துக்கொண்டான்.
நித்திரை அவனை அணைத்துக்கொள்ள மறுத்தது. எந்தப் பெண்ணோடும் அருகில் படுக்காது இளமைக்காலத்தை கழித்தவனுக்கு, அதுவும் இவ்வளவு அழகிய பெண்ணுக்கு பக்கத்தில் படுப்பது ஒரு சத்திய சோதனையாக இருந்தது. ஐந்து நிமிடம் தொடர்ந்து படுக்க முடியவில்லை.
கூடாரத்தின் பிரதான விளக்கை அணைத்துவிட்டு கட்டில் அருகே உள்ள விளக்கை ஏற்றிவிட்டு சிறிய கதிரை ஒன்றில் அமர்ந்து கொண்டு ஜெய்சல்மீர் பற்றிய புத்தகத்தை படித்தான். அதிலும் மனம் செல்லவில்லை. கூடாரத்துக்கு வெளியே வந்தான். நிலவொளியில் பார்த்தபோது பதினைந்துக்கு மேற்பட்ட கூடாரங்கள் சுற்றி இருந்தன. எல்லா கூடாரங்களிலும் விளக்குகள் அணைந்துவிட்டன. அந்தப்பிரதேசம் அமைதியாக இருந்ததால் அங்கு வீசிய காற்று மணல்மீது மோதி எழுப்பிய ஒலி சங்கீதமாக ஏறி இறங்கி கேட்டுக்கொண்டிருந்தது.
அந்தக் காற்றின் ஒலியை சில நிமிடங்கள் கிரகித்துக்கொண்டிருந்த அசோகனுக்கு அந்த சங்கீத ஒலியை மீறி சில ஆங்கில வார்த்தைகள் காதருகே தவழ்ந்து வந்தன.
கூடாரத்தின் வாசலில் நின்றவன் சுற்றிப் பார்த்தும் ஒன்றும் புலப்படாததால் உள்ளே வந்தான்.
ஜெனியிடம் இருந்துதான் அயர்லாந்து தொனியில் அந்த வார்த்தைகள் வந்தன. அவளது கண்கள் மூடியிருந்தன. ஆனால், உதடுகள் அசைந்து வார்த்தைகள் தொடர்ச்சியாக வந்தன.
“பாலைவனப் பிரதேசத்தில் பஞ்சம் வந்துவிட்டது. பல காலமாக மழை இல்லை. கோட்டைக்குள் இருந்த இராசாவும் படை எடுப்பைக் கண்டு ஓடிவிட்டார். தண்ணீருக்கும் உணவுக்கும் தட்டுப்பாடு என்பதால் கோட்டைக்கு வெளியே இருந்த கலைஞர்கள், கைத்தொழிலாளர்கள் அனைவரும் பஞ்சம் பிழைக்க மேற்குத் திசையில் செல்கிறார்கள். நான் வரமாட்டேன். நான் வரமாட்டேன்”
ஜெனி திரும்பிப் படுத்தபோது வார்த்தைகள் நின்றுவிட்டன. இப்பொழுது மெதுவான விசும்பல் வந்தது. அத்துடன் இரண்டு கண்களிலுமிருந்து கண்ணீர் வந்து தலையணையை ஈரமாக்கியது.
சில நிமிடத்தில் மீண்டும் திரும்பிய போது, அகலமான கருவிழிகளை திறந்தபடி “ஏன் இன்னும் படுக்கவில்லை “என சாதாரணமாக கேட்டாள்.
குடிவெறியில் இருக்கும் என்னை ரேப் பண்ணமாட்டாய் என நம்புகிறேன் எனச் சொல்லிவிட்ட நீ என் படுக்கையை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கும் போது, நான் எங்கே படுக்க முடியும்? என சொல்ல நினைத்தாலும் நாகரீகமாக ‘நீ பேசுவதை இரசித்துக் கொண்டிருக்கிறேன்” எனக் கூறினான்.
“நான் பேசினேனா?”
“நான் ஒலிப்பதிவு பண்ண நினைத்தேன்”
‘நான் ஒரு கனாக் கண்டேன். அதில் இந்த ஊரில் மணல் புயல் அடிக்கிறது. தாயும் தந்தையும் தலைகளில் சுமைகளோடு முன்னே நடந்து ஊரை விட்டு வெளியேறும்போது அவர்களது மகளான இளம் பெண், இரண்டு ஆண் சிறுவர்களை இழுத்தபடி பின் செல்கிறாள். அந்தப்பெண்ணிடம் இராஜாவின் சேவகர்கள் ‘இராஜாவோடு வந்துவிடு. காலம் முழுவதும் இராஜா வைத்துக்கொள்வார்’ என்கிறார்கள். அதற்கு மறுத்த அவள் குழந்தைகளை இழுத்துக் கொண்டு தாய் தந்தையரை பின் தொடர மொத்த குடும்பத்தையும் மணல் மூடுகிறது. அதோடு என் கனவு முடிந்து விட்டது.”
“காலையில் நீ அந்த ரூர் கைட்டிடம் ஜிப்சிகள் இந்த பகுதியில் இருந்து ஆயிரம் வருடங்களுக்கு முன்பு விலகி சென்றவர்கள் என்றாய். அந்த நினைப்பில் உனக்கு வந்த கனவாக இருக்கும்”
‘நான் கனவு காண்பது வழக்கமானது. நீ பயப்படாமல் வந்து படு” அருகில் அழைத்தாள்
“குடிபோதையிலிருக்கும் உன்னைக் கெடுத்து விடுவேன் என்ற பயத்தில் ஒதுங்கி நிற்கிறேன்” என்றபடி கட்டிலில் அமர்ந்தான்.
“உன்னைப்பார்த்தால் அந்தளவு துணிவுள்ள ஆளாக தெரியவில்லை. அருகில் படு. என்னைப் பற்றிய ஒரு இரகசியத்தை சொல்லவேண்டும்.”
“”அது என்ன இரகசியம்?”
“நான் ஒரு ஜிப்சி தெரியுமா? ‘நீ போதையில் பேசுகிறாய்”
“உண்மையாக! எனது பாட்டியின் தாய் அயர்லாந்தில் இருந்து வந்த விபச்சாரி. வீடொன்றில் திருடிய குற்றத்திற்காக டோவர் துறைமுகத்தில் ஒரு கப்பலில் பிரித்தானிய பொலிசால் அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றி அனுப்பப்பட்டவள். அவளது தாய் ஒரு ஜிப்சி. இந்தக் கதையை பாட்டி சாவதற்கு சிலகாலம் முன்புதான் சொன்னாள்”
“உண்மையாகவா?”
‘என் பாட்டி நோர்த் விக்ரோரியாவில் ஒரு குடும்பத்தில் முடக்குவாதம் வந்து நடக்க முடியாத விவசாயியை பராமரிக்க வேலைக்காரியாகி, பின்னர் அந்த விவசாயிக்கு என் அம்மா பிறந்தாள். பாட்டாவின் மனைவியின் இரண்டு ஆண்களுக்கு விவசாயக்காணிகள் போய்ச் சேர்ந்ததால் அம்மாவும் பாட்டியும் மெல்பேர்ன் நகரத்துக்கு வந்துவிட்டார்கள். அம்மாவுக்கு ஒரு சகோதரியும் இருக்கிறாள். இப்போது என் கதையை நம்புகிறாயா?” என அவள் கேட்டபோது பச்சாதாபம் அவள் குரலில் இருந்தது. அசோகனின் நம்பிக்கையை இரந்து கேட்பவளாக அவளது குரல் ஒலித்தது.
‘கொஞ்சம் நம்புகிறேன்.”
‘இதைவிட ஒரு ஆதாரம் காட்டுகிறேன். பார்..” என்று சொல்லிவிட்டு மேல்சட்டையை தளர்த்தி தனது முலைகளைக் காட்டினாள்.
அசோகனுக்கு தலை விறைத்தது. அதை பார்க்காமல் முகத்தைத் திருப்பினான்.
‘இந்த கருப்பான முலைக்காம்புகள் பாட்டியிடமிருந்து எனக்கு வந்தன. ஐரோப்பிய பெண்களுக்கு இளம் சிவப்பில் இருக்கும்.” என்று சொல்லியபடி படுக்கையிலிருந்து எழுந்து சட்டையின் கறுத்த பொத்தான்களை கழட்டி மார்பை முற்றாக துகில் நீக்கினாள்.
‘இன்னமும் நீ நம்பமாட்டாயா?” என்றபடி அருகில் வந்தபோது அவளது சுவாசம் சூடாக முகத்தைத் தாக்கியது.”
இதற்குமேல் பொறுக்கமுடியாது. இவளது நோக்கம் என்னவாக இருந்தாலும் பரவாயில்லை என அசோகன் அவளது மார்பின் மிக அருகே வந்து ‘இனியும் உன்னை நான் நம்ப மறுத்தால், நீ வேறு பல ஆதாரங்களைக்காட்ட முயற்சிப்பாய்” எனக்கூறி அவளது மார்பில் முகம் புதைத்தான்.
மறுமொழியொன்றை இடுங்கள்