அஞ்சலிக்குறிப்பு: உபாலி லீலாரத்ன !…

அஞ்சலிக்குறிப்பு:
தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனைக்கு பாலமாக விளங்கிய உபாலி லீலாரத்ன !
புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும் ஈழத்து – புகலிட தமிழ் படைப்புகளையும் சிங்களத்திற்கு வரவாக்கிய இலக்கியத் தொண்டன் ! !

முருகபூபதி

புன்னகை தவழும் முகம். தமிழில் பேசினால் குழந்தையின் மழலை உதிரும். ஆழ்ந்த அமைதி. இலக்கிய நண்பர்களை அரவணைக்கும் வார்த்தைகள். இந்த அடையாளங்களுடன் வாழ்ந்த நண்பர் உபாலி லீலாரத்ன அவர்களை இனிமேல் ஒளிப்படங்களில்தான் பார்க்கமுடியும்!
இனிமேல் நிகழும் மொழிபெயர்ப்பு சார்ந்த உரைகளில் பேசுபொருளாவார்.
தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனை முன்னர் ஒருவழிப்பாதையாகத்தான் இருந்தது. அந்தப்பாதையை இருவழிப்பாதையாகவும் இருகை ஓசையாகவும் மாற்றியவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் உபாலி லீலாரத்ன.
அவரது மறைவுச்செய்தி எமக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் மலையகம், உயிர்த்தியாகங்களினால் பசுமையானது மட்டுமல்லாமல், இலங்கைப் பொருளாதாரத்திற்கு அறுபது சதவீதமான அந்நிய செலவாணியையும் ஈட்டித்தந்தது.
ஆனால், அதற்குக் காரணமாக இருந்த மக்கள் அவலமான வாழ்க்கைதான் வாழ்ந்தனர். இன்றும்கூட ஒரு ஐம்பது ரூபாவுக்காகவும் போராடவேண்டி நிலையில் வாழ்கின்றனர்.
1977 இல் பதவியிலிருந்த அம்மையாரின் ஏகபுதல்வனுக்காகவே நுவரேலியா – மஸ்கெலிய என்ற புதிய தேர்தல் தொகுதி சிங்களப்பேரின ரீதியாக உருவாக்கப்பட்டது. அதன் பின்னணியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட தமிழ்மக்கள் வாழ்ந்த மலையகக் காணிகளை அபகரித்து, பெரும்பான்மை இனத்தவருக்கு வழங்கும் சதியை அன்றைய அரசு மேற்கொண்டதால் வெடித்த போராட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானவர்தான் சிவனு லெட்சுமணன் என்ற தொழிலாளி.
அந்த டெவன் தோட்டப்போராட்டம் குறித்து கதைகள் எழுதப்பட்டுள்ளன. தி. ஞானசேகரன் எழுதிய குருதிமலை அந்தப்பின்னணியில் எழுதப்பட்ட குறிப்பிடத்தகுந்த நாவல்.
இனநெருக்கடி உச்சம் பெற்ற அந்தப்பிரதேசத்தில் பிறந்து இலக்கியப்பிரவேசம் செய்தவர்தான் அண்மையில் மறைந்துவிட்ட உபாலி லீலாரத்ன.
ஆனால், அவரிடம் இனக்குரோதம் இருக்கவில்லை. அப்பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் – சிங்கள மக்களிடத்தில் தோன்றிய இனமுறுகளினால் அவருக்குக்கிடைத்த புத்திக்கொள்முதல் இன ஐக்கியம்தான்.
அங்கு நீண்டகாலம் வாழ்ந்தமையால், தமிழை பேசுவதற்கும் வாசிப்பதற்கும் கற்றுக்கொண்டார். ஆனால், தனது தனிப்பட்ட தேவைக்காக அவர் கற்கவில்லை. அவரிடத்தில் சமூகம் சார்ந்த ஆழமான பார்வை இயல்பிலேயே இருந்திருக்கிறது.
மலையக தமிழ்மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டமையால்தான் அவரால் தே கஹட்ட – தேயிலைச்சாயம் என்ற நூலையும் எழுதமுடிந்தது.

தனது தொடக்ககால வேலையை தலவாக்கலையில் ஒரு அச்சகத்தில் ஆரம்பித்திருக்கிறார். இங்கு மலையகத்தமிழ் மக்கள் செறிந்து வாழ்கிறார்கள். இங்கிருந்து நாடாளுமன்றத்திற்கும் பிரதிநிதிகள் தெரிவாகின்றனர். சி.வி. வேலுப்பிள்ளையிலிருந்து சந்திரசேகரனிலிருந்து இன்றைய மல்லியப்பூ திலகர் வரையில் அதனை நாம் அவதானிக்கலாம்.
உபாலி லீலாரத்ன பணியாற்றிய அச்சகத்தில் தமிழ்ப்பிரசுரங்களும் அச்சடிக்கப்பட்டமையால் அவரால், தமிழை எளிதாக புரிந்துகொள்ளவும் முடிந்திருக்கிறது.
அதிர்ந்து பேசத்தெரியாதவர். அதனால் எளிமை அவரது இருப்பிடமாகியது. பின்னாளில் அவரது வாழ்க்கை தலைநகரில் மருதானையில் அமைந்துள்ள கொடகே புத்தகசாலையிலும் அதன்பதிப்பகம் சார்ந்தும் தொடங்கியதும் தென்னிலங்கையில் வசித்த தமிழ் – முஸ்லிம் எழுத்தாளர்களதும் நண்பரானார்.

“நீ சுத்தமாயிட்டே. ஆமா, தெருவிலே நடந்து வரும்போது எத்தனை தடவை அசிங்கத்தைக் காலால மிதிச்சுடுறோம். அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடுறோம்? கழுவிட்டு பூஜை அறைக்குக்கூடப் போறோமே. சாமி, வேண்டாம்னு வெரட்டவா செய்றா? எல்லாம் மனசுதாண்டி.. மனசு சுத்தமா இருக்கணும். உனக்கு அகலிகை கதை தெரியுமோ? ராமரோட பாதத்துளி பட்டு அவ புனிதமாயிட்டாள்னு சொல்லுவா. ஆனா, அவ மனசாலே கெட்டுப்போகலை. அதனால்தான் ராமரோட பாதத்துளி அவ மேலே பட்டுது. கெட்ட கனவு மாதிரி இதை மறந்துடு. உனக்கு ஒண்ணுமே நடக்கலை. எதுக்குச் சொல்றேன்னா, வீணா உன் மனசும்
கெட்டுப்போயிடக் கூடாது பாரு… கெட்ட கனவு மாதிரி இதை மறந்துடு. உனக்கு ஒண்ணுமே நடக்கலை “

இந்த வரிகள் இலக்கியவாசகர்களுக்கு நினைவிருக்கிறதா? நாமெல்லாம் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் நாம் படித்த வைரவரிகள்

1966 ஆம் ஆண்டில் நவீன தமிழ் இலக்கிய உலகையே விழியுயர்த்திப்பார்க்க வைத்த வரிகள்.
அதனை ஆனந்தவிகடனில் ஜெயகாந்தன் தனது அக்கினிப்பிரவேசம் சிறுகதைக்காக எழுதியிருப்பார்.
இந்த வரிகளையும் சிங்களத்தில் மொழிபெயர்த்தவர்தான் உபாலி லீலாரத்ன. ஆம், அவர் ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் உட்பட மேலும் சில கதைகளையும் புதுமைப்பித்தனின் சாபவிமோசனம், நாமக்கல் கு. சின்னப்பபாரதியின் சர்க்கரை, வவுனியூர் உதயணனின் பனி நிலவு, மன்னார் எஸ். ஏ. உதயணின் லோமியா, தெணியானின் மரக்கொக்கு முதலானவற்றையும் சிங்களத்திற்கு வரவாக்கியவர். அத்துடன் டென்மார்க் ஜீவகுமாரன், பிரான்ஸ் வி.ரி. இளங்கோவன், இலங்கை பத்மா சோமகாந்தன் ஆகியோரது படைப்புகளையும் சிங்களத்திற்கு மொழிபெயர்த்துள்ளார்.

முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை அவர் இலங்கை இலக்கிய உலகிற்கு விட்டுச்சென்றவர். அவற்றில் கணிசமானவை தமிழிலிருந்து சிங்களத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டவை. அவ்வாறு செய்வதற்கும் அர்ப்பணிப்பு மனோபாவம் வேண்டும்.
அவரது நாவல் ஒன்றை விடைபெற்ற வசந்தம் என்ற பெயரில் தமிழுக்கு வரவாக்கியவர் திக்குவல்லை கமால்.
உபாலியின் கடின உழைப்பு போற்றுதலுக்குரியது. தனது பெரும்பாலான நேரத்தை மொழிபெயர்ப்புக்காகவே ஒதுக்கியவர். இனமுரண்பாடுகளை இலக்கியத்தின் ஊடாக களைய முடியும் என திடமாக நம்பியவர்.
எனக்கு இவரை அறிமுகப்படுத்தியவர்கள் திக்குவல்லை கமால் மற்றும் மேமன் கவி ஆகிய இலக்கிய நண்பர்கள். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர், கொழும்பு பொது நூலக மண்டபத்தில் ஒரு இனிய மாலைநேரப்பொழுதில் நடந்த தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனை அரங்கில் நாம் சந்தித்துக்கொண்டோம். அச்சந்திப்பில் லண்டனிலிருந்து ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், அவுஸ்திரேலியாவிலிருந்து என்னுடன் நடேசன், மாவை நித்தியானந்தன் ஆகியோரும், மேமன் கவி, மல்லிகை ஜீவா, கொடகே பதிப்பக உரிமையாளர் சுமணஶ்ரீ கொடகே, தெனகம ஶ்ரீவர்தன, மடுளுகிரியே விஜேரத்ன, திக்குவல்லை கமால் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டோம்.
அச்சந்தர்ப்பத்திலும் மல்லிகை ஜீவா, தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனை இன்னமும் ஒருவழிப்பாதையாகத்தான் இருக்கிறது என்று நியாயமான ஆதங்கத்தை வெளியிட்டார்.
பின்னாளில் நிலைமை மாறியது. தமிழ் நூல்களை பதிப்பித்து வெளியிடவும், தமிழ் நூல்களுக்கு பரிசளிக்கவும் தமிழ் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கவும் கொடகே பதிப்பகம் முன்வந்தது.

இந்த மாற்றம் முன்மாதிரியானது. இதுவரையில் எந்தவொரு தமிழ்ப்பதிப்பகமும் இலங்கையில் சிங்கள நூல்களை வெளியிட்டு, சிங்கள எழுத்தாளர்களை கௌரவிக்கவில்லை.
ஆம், அத்தகைய பின்னணியில் கொழும்பு மருதானையில் இலக்கம் 661, பீ.டி.எஸ் குலரத்னா மாவத்தை என்ற முகவரியில் அமைந்த கொடகே பதிப்பகத்தில் பணியாற்றியவர்தான் உபாலி லீலாரத்ன. கொழும்பில் 2011 ஆம் ஆண்டு நாம் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்திய பின்னர், எம்மை தமது பணிமனைக்கு அழைத்து தேநீர்விருந்து வழங்கி உபசரித்தார் கனவான் சுமணஶ்ரீகொடகே.
அந்த ஏற்பாட்டில் உபாலி லீலாரத்னவும் முக்கியமானவர். இச்சந்திப்பில், லண்டன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து மாநாட்டிற்கு வருகை தந்திருந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
அன்றுமுதல் உபாலிலீலாரத்தினவுடன் தொடர்பிலிருந்தேன். தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனையில் முஸ்லிம் எழுத்தாளர்களின் வகிபாகம் என்ற எனது கட்டுரையையும் அவர் சிங்களத்தில் மொழிபெயர்ந்து கொழும்பிலிருந்து வெளியான ஒரு சிங்கள சிறப்பிதழில் வெளியிட்டிருக்கிறார்.
அந்தக்கட்டுரையை வாசுதேவ நாணயக்காரவும் விரும்பிப்படித்திருப்பதாக ஒரு சந்தர்ப்பத்தில் மனநிறைவுடன் சொன்னார்.
அவருக்கு சுகமில்லை என்று நண்பர் திக்குவல்லை கமால் சொன்னதும், தொலைபேசியில் ஒருநாள் தொடர்புகொண்டேன். அது அவர் மருத்துவரிடம் சிகிச்சைக்காக வந்திருந்த நேரம். அதனை அறிந்துகொண்டு, சிரமம் தராமல் மீண்டும் பேசுவோம் என்றேன். அதன்பின்னரும் பலதடவைகள் தொடர்புகொள்ளமுயன்றும் இணைப்பு கிடைக்கவில்லை.

அந்த இலக்கமும் இனிமேல் எனது டயறியில் மௌனத்தவமியற்றும். மனிதநேயமிக்க இலக்கிய சகோதரன் உபாலி லீலாரத்ன எமது நெஞ்சத்தில் ரத்தினமாகவே ஒளிர்ந்துகொண்டிருப்பார்.

எமது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை அவரது ஆத்மாவுக்கு தெரிவிக்கின்றேன்.
—00—

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: