விமர்சனம் -வாழும் சுவடுகள்

விஜி ராம்

ஒரு கார்காலத்து சனிக்கிழமை மதியம் உங்கள் ஓய்வு நேரத்தில் இலக்கியம் பேசவும் கேட்கவும் சிந்திக்கவும் வந்திருக்கும் உங்களனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். இந்த வாய்ப்பினை எனக்கு நல்கிய திரு நோயல் நடேசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும் வணக்கங்களும். எனக்கு கொடுக்கப்பட்ட “வாழும் சுவடுகள்” எனும் இந்த புத்தகம். 2015 காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்திற்கு எழுத்தாளர் S. ராமகிருஷ்ணன் அவர்கள் பின்னுரை எழுதி இருக்கிறார்.
ஒரு மிருக வைத்தியராக தன் தொழில்சார் அனுபவங்கள், மற்றும் சம்பவங்களின் தொகுப்பு தான் இந்த புத்தகம். . மிக எளிய நடையில், அற்புதமாக ஒரு மருத்துவராக தன் அனுபவங்களை நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார். 56 தலைப்புகளில் வெவ்வேறு சம்பவங்களை பதிவிட்டிருக்கிறார். ஜீவகாருண்யத்தை தொழிலோடு தொண்டாக செய்து வருகிறார் என்பது தெளிவாக விளங்குகிறது. மருத்துவத் தொழிலே தொண்டு தான்.

ஜீவகாருண்யத்தை ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய முக்கிய குணம் என்று நமது சமயங்களும், இலக்கியங்களும் வலியுறுத்துகிறது. சங்க இலக்கியம் கடையேழு வள்ளல்கள் முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி, மயிலுக்கு போர்வை தந்த பேகன், மனு நீதி சோழன், சிபிச்சக்கரவர்த்தி எனும் வரிசை.

காக்கை குருவி எங்கள் ஜாதி என்றான் பாரதி. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்றார் வள்ளுவன். இன்னும் ஒரு படி மேலே போய் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிறார் வள்ளலார்.
நம் வீட்டில் வளர்த்த ஆடு, மாடு மற்றும் கோழிகள் நல்ல முறையில் பாசத்தோடு பராமரிக்கப்பட்டது என்றாலும் அதன் பின் ஒரு சுயநலம் கட்டாயம் இருக்கத்தான் செய்கிறது. எனக்குத் தெரிந்து எங்கள் ஊர்களில் வீட்டில் நாய் பூனை வளர்ப்பது மிக அபூர்வம். திரைப்படங்களில் செல்வந்தராக இருக்கும் கதாநாயகன் மற்றும் கதாநாயகியின் வீட்டில் தான் பார்த்திருக்கிறேன். அதிகாரத்தின் குறியீடாகவே காண்பிக்கப்பட்டது. தெருநாய்களுக்கு தவறாமல் உணவிடுவோம். பூனை அபசகுனத்தின் அடையாளமாகவே கருதப்பட்டதால் பாவம் திருடித்தான் வயிறை வளர்க்கும்.
மேற்கத்திய நாடுகளில் செல்லப் பிராணிகளாக இவை நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்க்கப்படுவதை எண்ணி வியந்திருக்கிறேன் இது பிரதிபலன் பாரா அன்பின் உயர்ந்த நிலை என்றே தோன்றுகிறது.

நூற்றுக்கு நூறு வீதம் ஆஸ்திரேலிய குடிமக்களையே நுகர்வோராகக் கொண்டது இந்த தொழில் என்று குறிப்பிடும் போது செல்லப்பிராணிகளை வைத்திருப்பதும் அது சம்மந்தமாக செலவழிப்பதும் இந்த நாட்டின் பண்பாட்டு, விழுமியம் சம்மந்தமான விடயம் என்றும் சொல்கிறார்.

தான் அன்றாடம் பார்த்து பரவசப்பட்ட மிருகங்களைப் பற்றிய ஒரு நல்ல புரிதலை தரும் விதமாகவும், இவற்றை வளர்ப்போரின் மனநிலை, அவர்கள் இந்த உயிர்களின் பால் வைத்திருக்கும் அபரிமிதமான அன்பு, அவர்கள் வாழ்வின் சிக்கல்கள், சில விசித்திர குணமுள்ள மனிதர்கள், மிருகங்களுக்கு தோன்றும் நோய் அதன் பராமரிப்பு,நோய்த்தன்மை, அறிகுறிகள், மருத்துவ குறிப்புகள் என்று அங்கங்கு விவரணை செய்துள்ளார்.

அதனூடாக ஆஸ்திரேலிய மண்ணின் வரலாறு, பூகோள அமைப்பு, பண்பாடு கலாச்சாரம், பருவநிலை என்று சுவையாக கலந்து கொடுத்திருப்பது மிக சிறப்பு. இந்த மண்ணிற்கே உரிய வாழ்க்கை முறையை அங்கங்கு கூறியவண்ணம் வருகிறார்.
சாலை விபத்தில் அடிப்பட்ட ஒரு மிருகத்தை எவ்வளவு சிரமம் எடுத்து பொதுமக்கள், காவலர்கள் மருத்துவர்களுமாகக் கூடி காப்பாற்றுகிறார்கள் என்பதை முதல் கட்டுரையில் “கோடையில் ஒரு விபத்து” தலைப்பில் கூறுகிறார்.கடமையும் காருண்யமும் இணைந்தால் உலகம் எங்கோ சென்றுவிடும் என்கிறார்.
மேற்கத்திய நாடுகளில் விஞ்ஞானம் இவ்வளவு வளர்ந்துள்ள போதிலும்,2500 ஆண்டுகளுக்கு முன்னமே புத்தனின் கோட்பாடுகளால் கவரப்பட்ட அசோக சக்கரவர்த்தி இந்திய முழுவதிலுமாக மிருகங்களுக்கு வைத்திய சாலை உருவாக்கினான் எனும் வரலாற்றை நினைவு கூர்கிறார்.
பட்டப்படிப்பு, பல வருட தொழில் அனுபவம் எல்லாம் இருப்பினும் கற்றல் நடந்துகொண்டே இருப்பதை “கற்றது கையளவு ” எனும் தலைப்பில் சொல்கிறார்.
“கலவியில் காயம்” எனும் தலைப்பில் ஒரு காயம் பட்ட கோயில் மயிலுக்கும் தனுக்குமான ஒரு சுவையான கற்பனை உரையாடலை நிகழ்த்தி இருக்கிறார்.
“மிஸ்கா எனைத் தொடர்ந்து வரும்” என்ற கட்டுரையில் இந்த செல்லப் பிராணிகள் மரணத்திற்கு பின்னும் மரியாதையோடு அடக்கம் செய்யப்படுகிறது என்பது புரிகிறது.
“பொய் சொல்லிக் கசிப்பு” என்று ஒரு தலைப்பில் பிரசவ வேதனையால் துடி துடித்துக் கொண்டிருக்கிற ஒரு எருமை மாட்டை அறுவைசிகிச்சை செய்யப்போய் உணர்ச்சிவயப்பட்டதால் இடப்புறம் அறுப்பதற்கு பதிலாக வலப்புறம் அறுத்துவிட்ட வேதனை நடந்துவிடுகிறது. உதவியாளர் அமரசிங்க ஒரு பொய் சொல்லி சமாளிக்க, முடிவு சுமுகமாக அமைகிறது. அந்த

விவசாயிக்கு இவர்கள் தேவா தூதர்களாகத் தெரிகிறார்கள். முடிவில் அவர்கள் கொடுத்த விருந்தில் கசிப்பு மட்டும் எரிவாக இல்லை சொன்ன பொய்யும் சேர்ந்து எரிவாக இருந்ததாக முடித்திருந்தார்.
சட்டம் ஒரு இருட்டறை எனும் தலைப்பில் செய்யும் தொழிலில் எவ்வளவு தான் நியாயமும் நேர்மையும் இருந்தாலும் சட்டத்தில் இருக்கும் ஓட்டை அநீதியின் பக்கம் நின்று வழக்கை வென்றுவிடும் பரிதாபத்தை எடுத்துச் சொல்கிறார்.
புத்தனுக்கு போதி மரம் எனும் கட்டுரையில் ஒரு முதியோர் இல்லத்தில் ஒரு பூனைக்கு கருணை கொலை செய்ய செல்கிறார். உணர்வுகளை இழந்து உயிரை மட்டுமே வைத்துக்கொண்டிருக்கும் அங்குள்ள மனிதர்களைப் பார்த்து அமைதியாக மரணத்தை தழுவ இருக்கும் இந்த பூனை அதிஷ்டசாலி என நினைக்கிறார்.
அது அவற்றுக்கு வரம் என்று தோன்றினாலும் அவை வாயில்லாப் பிராணிகள். அவற்றின் உள்ளுணர்வை நாம் புரிந்து கொள்ள இயலாது என்றே நான் நினைக்கிறன். ஒரு மருத்துவராக அவர் தன் கடமையை செய்கிறார். அதுவும் தான் வளர்த்த நாய் சாண்டிக்கு அப்படி ஒரு முடிவை தன் கையாலே செய்யும் கொடுமையை உணர்வுபூர்வமாக “நினைவுத் தடத்தில்” எனும் தலைப்பில் பதிவுட்டுளார்.
“மெல்பேர்னில் குதிரைப் பந்தயம்” எனும் தலைப்பில் இந்த நாட்டில் குரைப்பந்தயத்திற்கு தரப்படும் முக்கியத்துவம், அதற்காக தேர்ந்தெடுக்கப்படும் குதிரைகள், அவற்றின் இனவிருத்திக்கு கையாளப்படும் உத்திகள், மற்றும் போரில் வெற்றிக்கு குதிரைகளின் பங்களிப்பு என்று அடுக்கடுக்காக விடயங்களை பதிவிட்டுள்ளார்.

என்னை சிந்திக்க வைத்த தலைப்பு என்னவென்றால் “போசங்களின் வாழ்வு” எனும் கட்டுரை. இந்த கட்டுரையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த மசூபியல் வகையை சார்ந்த விலங்கு தான் இந்த போஸம் என்றும் பரிணாம வளர்ச்சியில் முலையூட்டிகளுக்கு முந்தியது என்றும் கூறுகையில் அதனை இந்த நாட்டின் ஆதிவாசி என்று குறிப்பிடுகிறார்.
இந்த கட்டுரையில் இந்த தேசத்தில் வீடு கட்டும் கலாச்சாரம், வீடு மாறுவது, அதற்கான காரணங்கள், இதனால் லாபமடையும் அரசாங்கம், வங்கி , மற்றும் தரகு நிர்வாகங்கள் என்று அழகான பொருளாதார கூற்றை விவரிக்கிறார். புனருத்தாரனம் எனும் அழகான சமஸ்க்ரித சொல்லை கை ஆளுகிறார். அப்படி புதுப்பித்துக் கொண்டிருக்கும் தன் வீட்டில் நுழைந்துவிட்ட இந்த போசங்களை விரட்டி அடிக்க இவர் எத்தனிக்கையில் இவருக்கு இந்த நாட்டின் பூர்வக் குடிகளை விரட்டி அடித்த வரலாறு நினைவிற்கு வருகிறது. அத்துடன் தன் மனதில் எழும் அறச்சிந்தனைகளையும், மனக்குமுறலையும் பதிவிடுகிறார்.

சில வார்த்தைப் பிரயோகங்கள் எனக்கு பிடிபட கொஞ்சம் கடினமாக இருந்தது. உதாரணமாக சில ஆங்கில வார்த்தைகளை தமிழில் யாழ்ப்பாணத்து உச்சரணையில் கையாண்டிருப்பது. அன்றி பெயரிக், ரெனிஸ் பந்து, ரியூனா மீன் போன்ற வார்த்தைகள். நான் மிகவும் தடுமாறிய வார்த்தை ரீரி எண்ணெய் (Tea Tree oil). சத்திர சிகிச்சை எனும் புதிய தமிழ் வார்த்தையை நான் கற்றுக்கொண்டேன். கலவியில் காயம் எனும் கட்டுரையில்” படைக்கும் தொழில் செய்யும் சிவன்” என்று குறிப்பிடுகிறார். அந்த தத்துவம் எனக்கு விளங்கவில்லை.

மொத்தத்தில் எளிமையான சொல்லாடல், வேடிக்கையான சில சம்பவங்கள், வியப்பூட்டும் தகவல்கள், சிந்தனையைத் தூண்டும் செய்திகள், என்று சுவாரஸ்யத்துடன் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த புத்தகம். படித்து முடித்த பிறகு சில பல நாய்களும் பூனைகளும் என்னை சுற்றிச் சுற்றி வந்தவண்ணமே இருந்ததாய் உணர்ந்தேன். ஒரு நல்ல புத்தகத்தை படிக்கும் வாய்ப்பினைத் தந்த நோயல் நடேசன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டுகளும் கூறி அமைகிறேன்.

“விமர்சனம் -வாழும் சுவடுகள்” அதற்கு 2 மறுமொழிகள்

  1. Great review by a Great reviewer! We shd learn from her! Thanks to Dr. Nadesan for his Great service to Tamil World!

  2. Thanks for sharing
    Aye one

    புத., 19 ஜூன், 2019, முற்பகல் 4:33 அன்று, Noelnadesan’s Blog எழுதியது:

    > noelnadesan posted: ” விஜி ராம் ஒரு கார்காலத்து சனிக்கிழமை மதியம் உங்கள்
    > ஓய்வு நேரத்தில் இலக்கியம் பேசவும் கேட்கவும் சிந்திக்கவும் வந்திருக்கும்
    > உங்களனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். இந்த வாய்ப்பினை எனக்கு நல்கிய திரு
    > நோயல் நடேசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும”
    >

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: