இந்தியாவில் வாழ்ந்தபோது ஏற்பட்ட ( 84-87) எனது அனுபவங்களையும் எண்ணங்களையும் இங்கு நான் எழுதியதன் நோக்கம் என்னைப் பெரிதாக்கவோ இல்லை மற்றவர்கள் தவறுகளை சுட்டிக்காட்டவோ அல்ல . எனது பார்வைகள் உண்மையானவை என வாதிடவுமில்லை. நான் சொல்லுவதால் எதுவித லாபம் யாருக்குமில்லை என்பதையும் தெரிந்தவன். சில சம்பவங்களைப் பார்த்தேன். சில மனிதர்களையும் சந்தித்தேன். அவைகள் -அவர்கள் எனக்கு எப்படித் தெரிந்தன என்ற எனது பார்வையே இங்கே தரப்படுகிறது.
83 களில் ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்காத தமிழர்களை விரல்களில் எண்ணிவிடலாம். வடக்கு கிழக்கு மலையகம் ஏன் கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் பலர் போராட்ட இயக்கங்களில் இருந்தார்கள். ஆனால், சகோதர யுத்தம் தொடங்கிய பின்பு இலங்கை இராணுவத்திலும் பார்க்க எம்மவர்களே எதிரிகளாக எனக்குத் தெரிந்தார்கள் என்பதைக் கூறுவதில் எந்தத் தயக்கமும் இல்லை. இலங்கை அரசை ஏற்கனவே எதிரியாக நினைத்து போராடியவர்களுக்கு எம்மினத்தில் இருந்து எதிரி உருவாகும்போது மனரீதியாக ஆத்திரமும் கோபமும் உடன்பிறந்த எதிரிகளை நோக்கியே வேகமாகத் திரும்பும். இது மனித சுபாவம்.
அதன் பின்பாக நடந்த ஆயுத அரசியல் நோய் மேலும் தமிழர்களை கொல்லும் என்பதில் தெளிவாக இருந்தேன் . பத்துப் பேர் உயிரிழந்து ஆயிரம் பேர் நன்மை பெற்றால் பல்லைக் கடித்தபடி ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் , இலட்சக்கணக்கானோர் சடலமாகி பத்துப்பேர் நன்மையடையும் போராட்டமாக மாறியது தெரிந்தபோது எப்படியாவது இந்தப் போராட்டம் நிறுத்தப்படவேண்டுமென விரும்பினேன்.
மிருகவைத்தியரான எனது கற்கையில் பெற்ற பாடம் – தொற்று நோய் ஏற்பட்டால் நோயுள்ள இடத்தைத் தனிமைப்படுத்தி நோய் கண்ட மிருகங்களை அழித்துவிடுவோம். நோயற்ற மிருகங்களை தடுப்பூசியினால் பாதுகாப்போம் . இந்த மருத்துவமுறையை தற்காலத்தில் மனிதர்களுக்குப் பாவிக்க முடியாது என மற்றவர்கள் சொல்லலாம். ஆனால், தற்போதைய அழிவுகளில் இருந்து அதுவே பாடமாகிறது என்ற என் கருத்தில் வேறுபடுபவர்களும் மறுக்கமுடியாது.
87இன் ஆரம்பக் காலத்தில் ஈழம் என்பது ஒரு சடலமாகவே எனக்குத் தெரிந்தது. அதைப் பார்க்கக் கூடிய இடத்தில் நான் இருந்தேன். அந்தச் சடலத்தை எப்பொழுது யார் வெளியே எடுத்துப் புதைப்பார்கள் என்பதே அடுத்த கால் நூற்றாண்டுகள் எனது வினாவாக இருந்தது. உருவாக்கிய இந்தியாவே செய்திருந்தால் கூட ஆனந்தப்பட்டிருப்பேன்.
விடுதலைப்புலிகள் மட்டுமல்ல மற்றவர்களும் தவறு செய்தார்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்வதோடு, அவர்களையும் விமர்சித்து இந்த நூலில் எழுதியிருக்கிறேன். அவர்களை அழித்த பின்பு விடுதலைப்புலிகளுக்கு முழு ஈழமக்களுக்கும் தலைமை தாங்கும் சந்தர்ப்பம் , இலங்கை- இந்திய ஒப்பந்தத்திலும் பின்பு இலங்கை அரசின் கீழும் பல தடவைகள் கிடைத்தது . அவர்களது தவறுகளை திருத்தி தமிழர்களுக்கு நியாயமான தீர்வு பெறுவதற்கான எதனையும் அவர்கள் இறுதிவரையும் செய்யவில்லை.
மற்றவர்களை அழித்தும் மீண்டும் எந்த நன்மையையும் தராமல் விடுதலைப்புலிகள் அழிந்தபோது அவர்கள் செய்த அதர்மம் இரு மடங்காகிறது.
பாவத்தின் சம்பளம் மரணம் என்பதுபோல் ஈழத்திற்கான நியாயமான போராட்டத்தை அழித்ததில் பலருக்கும் பங்கிருந்தாலும் முதற் குற்றவாளியாக தண்டனை கொடுக்கப்படவேண்டியவர் பிரபாகரனே என்பதால், நான் அதற்காகப் பலகாலங்கள் காத்திருந்தேன்.
22 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
77 ஆம் ஆண்டு தமிழர்கள் முன்னெடுத்த ஆயுதமற்ற அரசியல் ஆயுதத்தோடு அழிவில் முடிந்திருக்கிறது என வரலாறு சொல்கிறது. அதை அனுபவித்திருக்கிறோம். ஆனால், தற்பொழுது அதே குருக்குத்தி பிடித்த மரத்தில் இருந்தே புதிய கிளைகளை உருவாக்கி விவசாயம் செய்ய முயலும் நாடகம் அரங்கேறுகிறது. இதனை ஒருவர் இருவரல்ல, பலரும் செய்கிறார்கள். நாம் வரலாற்றில் இருந்து பாடத்தை கற்கவில்லை என்பதையே இந்த நடவடிக்கை காட்டுகிறது.
முப்பது வருடமாக அழிந்த சமூகத்தில் இருந்த ஒருவனாக இதை எழுதும்போது மனதில் சந்தோசமில்லை . நான் பிறந்த இனத்தையும் எமது தலைவர்களையும் குறைசொல்லுவது இலகுவானதல்ல. சொந்த குடும்பத்தைக் குறைசொல்வது போன்ற விடயம். ஆனால், எதிர்கால ஈழத்தமிழ் சந்ததியினரை நினைத்து இதைச் செய்யவேண்டியுள்ளது. புண்ணுக்கு புனுகு தடவுபன் நல்ல வைத்தியனாக முடியாது. சீரழிவுகளை மூடிமறைக்க முடியாது
மாற்றங்களைச் சந்திக்கவேண்டும். செயல்படுத்தவேண்டும் . விடுதலைப்புலிகளைக் குறை கூறும் நாம் இப்போதுள்ள தலைவர்களை குறை சொல்லும் நாள் வெகு தூரமில்லை.
இந்தப்புத்தகத்தில் மற்றைய இயக்கங்களைச் சாடும் நான், ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியை மென்மையான கோணத்தில் பார்க்கிறேன். அதற்கு இரண்டு காரணங்கள். அவர்களும் தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தினரும் எக்காலத்திலும் சிங்கள மக்கள் மீது இனத்துவேசமான கருத்தை வைக்கவில்லை. முடிந்தவரை சிங்கள இடதுசாரிகளுடன் சேர்ந்து வேலை செய்தார்கள். இரண்டாவது இலங்கை – இந்திய ஒப்பந்தமே தமிழ்மக்களின் 30 வருட போராட்டத்தில் கிடைத்த ஒரே நன்மை. அதில் முக்கியமாக நான் கருதும் விடயம் பிரஜா உரிமையற்ற பெரும் தொகையான மலையக மக்கள் இலங்கைப் பிரஜைகளாகியது . மலையகமக்களின் இந்த விடயத்தில் பெரிதளவு கரிசனையாக இருந்தவர்கள் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியினரும் மற்றும் ஈரோஸ் அமைப்பினரும் என்பதால் இந்த மூன்று இயக்கங்களையும் வெவ்வேறு அளவில் எனக்குப் பிடித்திருந்தது.
இறுதிவரையிலும் தங்களது உள்வேறுபாடுகளைத் தீர்ப்பதற்காக வன்முறையைப் பாவிக்காததால், 87 ஜுலைக்கு முற்பட்ட ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியை அவர்களது தவறுகளை பொருத்தமற்ற கோட்பாடுகளுக்கு அப்பால் நான் பார்க்கிறேன். அரசியலில் பல பகுதிகளாகப் பிரிந்து நின்றாலும் அவர்களது இந்தன்மையே அரசியலில் அவர்களைத் தக்க வைத்தது.
அதேவேளையில் விடுதலைப்புலிகளும் ரெலோ அமைப்பினரும் சுத்தமான இராணுவ அமைப்பினர். அவர்களால் எக்காலத்திலும் மக்களுக்கு நன்மை வராது என்பது எனது நினைப்பு. உண்மையில் விடுதலைப்புலிகள், ரெலோ அமைப்பினரை கொலை செய்யாமல் அப்படியே உள்வாங்கியிருக்கலாம் என்று கூட நான் நினைப்பதுண்டு.
எல்லா அமைப்பிலும் நண்பர்கள் இருந்தார்கள் . அவர்களது இறப்புகள் என்னைப் பாதித்தது. எல்லா இயக்கத்திலும் இருந்தவர்கள் எமது சமூகத்தின் மேலானவர்கள். ஆனால், அவர்களே தேயிலைக் கொழுந்துமாதிரி கடந்த 30 வருடப் போரில் கிள்ளியெடுக்கப்பட்டவர்கள். அவர்களில் பலரை நினைவு கூர்வதுடன், இந்தத் தென்னிந்திய நினைவுகளை எனது தமிழர் மருத்துவ நிறுவனத்திற்குள் கைபிடித்து அனுப்பியவரும் தொடர்ந்தும் நான் தோழர் எனச் சொல்லுபவருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
மறுமொழியொன்றை இடுங்கள்