கடந்த வருடம் ரஷ்யாவுக்கு போனபோது, நான் ஒரு காலத்தில் கேள்விப்பட்ட கோர்க்கி வீதியைத் தேடினேன். காணவில்லை.சோவியத் ரஷ்யா என்ற நாடே காணாமல் போய்விட்டதே என்று ஆறுதலடைந்தேன்.
1990 இல் யாரையாவது சோவியத் யூனியன் விண்வெளிக்குஅனுப்பியிருந்தால் மீண்டும் காசக்தானில் ( Kazakhstan) வந்து இறங்கியபோது பாஸ்போட் தேவைப்பட்டிருக்கும். அல்லது கைதாகயிருக்கலாம் என்ற நகைச்சுவை உணர்வு வந்தது.
பைபிளுக்கு அடுத்ததாக உலகம் முழுவதும் அதிகம் பதிக்கப்பட்ட நூல் மக்சிம் கார்க்கியின் மதர் என்ற நாவலை ( தொ. மு.சி. ரகுநாதனது தமிழ்மொழி பெயர்ப்பான தாய்) இந்த வருட ஆரம்பத்தில் சென்னை புத்தககண்காட்சியில் பாரதி புத்தக நிறுவனத்தில் வாங்கினேன்.
83- 87இல் நான் மார்க்சிய புத்தகங்களை படித்த காலத்தில் ஏதோ காரணத்தால் என்னிடமிருந்து தப்பிவிட்டது. தமிழில் பலஇடதுசாரிகளது எழுத்துக்கு ஆதார சுருதியாக இருந்திருக்க வேண்டுமென வாசிக்கும்போது அதனது நடையில் அறிந்தேன்.
புத்தகத்தைப் பற்றி அதிகமெழுதத் தேவையில்லை. பலர் வாசித்திருப்பார்கள். மொழி பெயர்ப்பில் நாவல் வாசிப்பது எப்பொழுதும் மாங்கொட்டை சூப்புவது போன்ற விடயம்.முக்கியமானவை தப்பித்துவிடும். அதிலும் தமிழில்- தும்பெல்லாம் போய் தனிக் கொட்டையை நக்குவதுபோல். அதற்குக்காரணம் மொழி பெயர்ப்பை மீண்டும் மீண்டும் வாசித்து சீர்படுத்துவதில்லை. மொழி வருடத்திற்கு வருடம் குழந்தைகள் போல் வளர்கிறது.
ஆங்கிலத்தில் பிறமொழி செவ்வியல் நாவலுக்குப் பல மொழிபெயர்ப்புகள் இருக்கும்)
நாவலின் மொழிபெயர்ப்பில் பெரிதாகக் குறை கண்டுபிடிக்க முடியாது. தமிழ்நாட்டு மொழிக்கமைய மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை பிரச்சார நாவலாகத் தெரிந்த போதிலும் பல நல்ல அம்சங்கள்தெரிகிறது .
நாம் கஷ்டப்பட்டு படிக்கவேண்டிய நாவல்.
168ஆம் பக்கத்தில் கிறீஸ்துவுக்கு மகிமை உண்டாவதற்காக ஜனங்கள் தங்கள் உயிர்களை இழக்காதிருந்தால் கிறீஸ்துவே இருந்திருக்கமாட்டார் என்ற வசனம் வருகிறது. அது ஜனங்கள் மத்தியில் கிறீஸ்துவுக்கு மகிமை உண்டாகியதற்குக் காரணம் அவர் உயிர் இழந்ததே. இது மொழி பெயர்ப்பில் உருவாகிய கருத்து மாற்றம் என நினைக்கிறேன் .
மக்சிம் கார்க்கியே ரஷ்ஷிய எழுத்தாளர்களில் சாதாரணமான மத்திய வகுப்பு வர்க்கத்திலிருந்து உருவாகி, சாதாரண மக்களைப்பற்றி முதலாவதாக எழுதியவர் – அதாவது வெறுங்கால் மக்கள் (Barefoot people) என்பார்கள். ஆரம்பத்தில் சிறு கதைளை எழுதியதால் பிரபலமடைந்த இவரை மக்கள் எழுத்தாளர் என டால்ஸ்டாயே கூறினார். ஆனால் அது கார்க்கிக்குப் பிடிக்கவில்லை
இவரது தந்தை காதலித்த பெண்ணுடன் ஊரை விட்டோடி 1000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வோல்கா நதிக்கரையில் வாழ்ந்தபோது வந்த காலராவால் மரணமடைந்தார்.
மகனிலிருந்தே, காலரா தொற்றியதால் தாய் மகனை வெறுத்தபோது பாட்டி பேரனை மீண்டும் கொண்டு வருகிறார் . வொல்காநதியில் கப்பலில் வரும்போது பாட்டி பேரனுக்குப் பல ரஷ்ஷியக் கிராமியக் கதைகளைச் சொல்லியபடி வருகிறார் .
சிறுவயதில் தந்தையின் சடலத்தைப் புதைத்தபோது, அந்தக் குழியில் பாய்ந்த தவளையே பிற்காலத்தில் கார்க்கியின் நினைவில் இருந்தது. தாத்தாவின் கண்டிப்பும் அடிக்கும் தண்டனைகளும் இருந்ததால் இளமையில் வீட்டை விட்டு விலகிச் செல்கிறார்
இளைஞனாகியதும் கார்க்கி, ரஷ்யா முழுவதும் அலைந்து அனுபவத்தைப் பெற்று சாதாரண மக்களின் கதைகளை எழுதுகிறார். அதுவரையும் எவரும் அப்படி எழுதவில்லை. ஆரம்பகால இலக்கியவாதிகள் பிரபுத்துவ வம்சத்திலிருந்தோ அல்லது பணம்படைத்தவர்களிலிருந்தோ தோன்றினார்கள்
கார்க்கியின் ஒரு நாடகம் (The Lower Depths) மாஸ்கோ திரையரங்கில் அரங்கேற்றப்பட்டபோது, அவரது பகழ் ரஷ்யாவில் மட்டுமல்ல ஐரோப்பா,அமெரிக்கா எங்கும் பரவுகிறது. ஒருகாலத்தில் டால்ஸ்டோயின் புகழைவிட உச்சமடைகிறது.
கார்க்கி, ஜார் மன்னனுக்கு எதிரான கிளர்ச்சி சமூகத்தில் ஏற்படும்போது அதில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார் . 1906 இல் புரட்சி தோல்வியடைந்த நிலையில் புரட்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் முகமாக அமெரிக்கா செல்கிறார்.
அங்கு அமெரிக்க புத்திஜீவிகள் அவரை வரவேற்கிறார்கள் . அக்காலத்தில் ரஷ்ஷியாவில் மனைவியை விவாகரத்து செய்வதற்கு சட்டமில்லை. தனது இரண்டாவது மனைவியான மாஸ்கோ நாடக நடிகையுடன் அவர் செல்வதால், அதை ஜாரின் ராஜாங்கஅமெரிக்க பிரதிநிதிகள் ” ஒழுக்கமற்றவர் ஒருவர் வருகிறார். இதனால் நியூயோர்க் நகரின் ஒழுக்கம் கெட்டுவிடும் ” எனப்பிரசாரம் செய்கின்றனர்.
வரவேற்புக்குழுவில் தலைமை வகித்திருந்த பிரபல இலக்கியவாதியான மார்க் ருவைன், இதைக் கேட்டு ஓடிவிடுகிறார்.இதனால் கார்க்கியும் காதலியும் ஹோட்டலில் இருந்து இரவில் வெளியேற்றப்படுகின்றனர். அவர்களுக்கு இளம் மெய்யியல்பேராசிரியர்(John Dewey) ஒருவர் அடைக்கலம் கொடுக்கிறார். அமெரிக்காவில் இருந்து சென்று இத்தாலியத் தீவில் இருந்தே தாய் நாவலைகார்க்கி எழுதுகிறார்.
தாய் நாவலைப் படித்தபோது, அதில் தாயாக உருவகிக்கப்படும் பெண் கார்க்கியின் பாட்டியாக( Akulina) இருக்கவேண்டும். பல இடங்களில் தனது சுயசரிதை எழுத்துகளில் பாட்டியைப் பற்றி புகழ்ந்து எழுதியிருக்கிறார் . அதேபோல் பாட்டி தனதுகவிதையொன்றில், பேரனான கார்க்கியைக் கடவுள் நரகத்திற்கு கொண்டு செல்கிறார் . அங்கு கடவுள், எப்படி இந்த இடமெனக்கேட்டபோது உங்களது இடம் புகையாக இருக்கிறது என கார்க்கி முகத்தைச் சுழிப்பதாக எழுதியிருப்பது பேரனது பிடிவாதத்தை காட்டுவதற்காகவே.
கார்க்கி, டால்ஸ்ரோய் மற்றும் செக்கோவ் பற்றியும் புத்தகங்கள் எழுதியியிருக்றார். டால்ஸ்ரோய், கார்க்கியை விவசாய, தொழிலாளிகள் பிரதிநிதியாகப் பார்ப்பது கார்க்கிக்கு பிடிக்கவில்லை. அதேபோல் செக்கோவ் அவரை ஆராய்ந்து அவதானமாகநடக்கும்படி புத்திமதி சொல்வதும் கார்க்கிக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை.
லெனினுக்கும் கார்க்கிக்கு உள்ள நெருங்கிய நட்பால் ரஷ்ஷிய புரட்சியின் பின்பு பல எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் கார்க்கியால் காப்பாற்றப்படுகிறார்கள். அதேநேரத்தில் போல்ஸ்விக் கட்சியினரது வன்முறைக் கொலைகள் கார்க்கியை அதிர்ச்சியடையச் செய்கிறது. அதைக்கண்டித்து எழுதும் கட்டுரைகளை லெனின் நட்பின் காரணமாக ஆரம்பத்தில் பொறுத்துக்கொள்கிறார். இறுதியில் லெனினால் அந்தப்பத்திரிகை மூடப்படுகிறது .
இதன் பின்பு உலகத்தின் பிரபலமான இலக்கியங்களை மொழி பெயர்த்து மக்களிடம் மலிவு விலையில் கொடுக்கும் முயற்சியால் ஈடுபடுகிறார். ரஷ்ஷியாவின் சிறந்த கவிஞராகிய ஒருவர் போல்ஸ்விக்குகளால் கொலை செய்யப்படுவதை தடுக்கும்படி லெனினிடம் கேட்டு அந்தக் கொலைக்கு பொறுப்பாக இருந்தவர்களுக்கு தந்தியடிக்கும்படி கேட்கிறார். ஆனால், அந்தத் தந்தி உரிய இடத்தையடைய முன்போ அல்லது திட்டமிட்டபடியோ அந்தக் கவிஞர் கொலை செய்யப்படுகிறார். இதனால் மனமுடைந்த கார்க்கி, 1922 இல் மீண்டும் நாட்டைவிட்டு வெளியேறி இத்தாலி செல்கிறார். அக்காலத்தில் அவருக்கு காசநோயும் பீடித்திருந்தது. அவர் செல்வது ஒருவகையில் லெனினுக்கு மகிழ்வைக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.லெனின், ” நீ போல்ஸ்விக் டாக்டர்களிடமும் ரஷ்யாவிலும் இருந்து தூர இருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது” என்று சொல்வதாகஅறியப்படுகிறது.
1927 இல் கார்க்கி, லெனின் இறந்தபின்பு மீண்டும் ஸ்ராலினின் உறுதிமொழிக்கமைய திரும்பி வரும்போது, மிகவும் சிறந்த வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஆனால், ஸ்ராலினின் புதிய அரசால் எழுத்தாளர் ஒன்றியம் உருவாக்கப்பட்டு சோசலிஷ யதார்த்தம் எனும் புதிதான இலக்கிய வடிவத்திற்கு அமைவாக, எல்லா எழுத்தாளர்களும் எழுதப் பணிக்கப்படுகிறார்கள்.
இதன் மூலம் பல எழுத்தாளர்கள் உள்வாங்கப்பட்டு அரசிற்கு ஆதரவான நூல்களை எழுதினார்கள். இதுவரையும் ஏற்ற தாழ்வும், நல்லது கெட்டதுமாக இருந்த சமூகத்தில் இலக்கியம் படைத்தவர்கள் சமதர்ம சமூகத்தில் தடுமாறுகிறார்கள். காதலியை விட ட்ராக்ரர்களை நேசிக்கும் சமூகமாக இருப்பதால் திணறுகிறார்கள் .
1930 களில் ஸ்ராலின், பால்டிக் கடலையும் கருங்கடலையும் இணைக்கும் திட்டத்தில், இலட்சக்கணக்கானோர் கொடுமையான காலநிலையிலும் உணவற்றும் இறக்கிறார்கள். இவைகள் சீர்திருத்த முகாம்கள் என்ற பெயரில் இயங்கி வேலை வாங்கப்படுவதை கார்க்கி பார்த்து அதை ஆதரித்து எழுதுகிறார் . மற்றைய இலக்கியவாதிகள், கார்க்கியை ஸ்ராலினின் கையாளாக பார்க்கிறார்கள்.
பிற்காலத்தில் பேரும் புகழும் கார்க்கிக்குக் கிடைத்தபோதும் கார்க்கி பிற்காலத்தில் மனஅழுத்தமடைகிறார். சந்தேகத்துக்குஇடமளிக்கும் வகையில் மரணமடைகிறார்.
கார்க்கி நகரம் – தெரு என்பன அவரது பெயரில் ஸ்ராலின் காலத்தில் இருந்து பின்பு பழைய பெயர்களுக்கு மாறிவிட்டாலும் சந்தேகத்துக்கிட்டமில்லாத சிறந்த இலக்கியவாதியாக ரஷ்ஷியாவை மிகவும் நேசித்தவர். அதே நேரத்தில் போல்ஸ்விக்கட்சியினருக்கு ஆதரவாக இருந்தவர் . பல எழுத்தாளர்களை உயிர் தப்ப வைத்தும் உணவளித்தும் காப்பாற்றியவர் கார்க்கி.கார்க்கியின் செய்கைகளை அவரது காலமே தீர்மானித்தது.
Tverskaya Street has known between 1935 and 1990 as Gorky Street
Nizhny Novgorod was named Gorky city and now back to the old name.
மறுமொழியொன்றை இடுங்கள்