இடப்பெயர்வு .

அந்த மழை நாள் நன்றாக நினைவிருக்கிறது. 1995 ஒக்ரோபர் 16ஆம் திகதி. கொக்குவிலில் இருந்து அதிகாலை இருட்டில் ‘தம்பி எழும்படா. சனமெல்லாம் யாழ்ப்பாணத்தை விட்டு ஓடுது. ஆமிக்காரன் கிட்ட வந்திற்றான் எண்டு பொடியள் சொன்னவையெண்டு ஊர்சனம் ஊரைவிட்டு ஓடுது. உங்காத்தை சாகமுதல் ஆச்சி இவனைப் பாத்துக்கொள்ளு என்று சொல்லி என்ர கையில் கொடுத்து விட்டுப் போயிட்டாள். உன்னைக் காப்பாத்தத்தான் நான் உயிர் வாழுறன். எழும்படா பாவி” என அழுது கொண்டே என்னை எழுப்பியது.

சண்டை நடப்பதால் பாடசாலை மூடப்பட்டிருந்தது. சக மாணவர்களோடு சேரந்து நாங்கள் ஒழுங்கைகள், மதகுகள் என சுற்றி விட்டு வருவதுதான் எமது அப்போது தினசரி வேலையாக இருந்தது.

அச்சுவேலியில் சண்டை நடக்குது. கோப்பாயில் சண்டை நடக்குது என்று பெரிசுகள் கதைப்பது எங்களுக்கும் கேட்கும். அதோடு வெடிச் சத்தங்களும் இடைக்கிடை கேட்டுக்கொண்டு இருக்கும். தூரத்தில் ஹெலி குண்டு போடுது எனச்சொல்வார்கள். இரவிலை லைட் இல்லாததால் பகல் சுத்த வேண்டிய இடமெல்லாம் சுத்திவிட்டு, போட்ட காற்சட்டையையும் கழற்றாமல் அம்மாச்சி கோப்பையில் வைத்திருந்த சோற்றை அரை இருட்டில் தின்றுவிட்டு வந்து படுப்பதுதான் வழக்கம்.

அம்மாச்சி எழுப்பிய போது, கண்களை திறக்காமல் பாயில் இருந்தபடி உடம்பு உளைவை முறித்தேன்.

“அட அறுந்தவனே. ஆமி வந்து கொல்லப் போறான் எண்டு சனமெல்லாம் ஓடுது. நீ உடம்பு உளைவு முறிக்கிறாய்” என்று சொல்லி முதுகில் ஒரு அறை விழுந்தது. அம்மா செத்த எட்டு வருசத்தில் ஒருக்காலும் அம்மாச்சி அடித்ததில்லை என்ற ஆத்திரத்தில் “இந்தக் கிழவி படுக்க விடுகுதில்லை. இந்தக் கிழவியால பெரிய பிரச்சினையா இருக்கு. இது எப்ப சாகும்” எனச் சொல்லிக் கொண்டு கதவின் உட்பக்க குமிழியில் தொங்கவிட்டிருந்த சேர்ட்டை எடுத்து போட்டேன்.

இதற்குள் அம்மாச்சி ஒரு சூட்கேசுக்குள் எனது உடைகளை மாத்திரம் அடைந்து, எனது ஒன்பதாம் வகுப்பு ரிப்போர்ட் கார்ட்டையும் உடைகளுக்கு மேலே வைத்து இறுக்கி மூடினார். கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்தார்.

அதிகாலை, இன்னமும் விடியவில்லை.

காலையில் முகங்கள் தெரியாத ஈரலிப்பான நேரத்தில் கொக்குவிலில் இருந்து பெரிய தெருவான காங்கேசன்துறை ரோட்டைத் தவிர்த்து சிறு ஒழுங்கைகள் வழியாக கஸ்தூரியார் ரோட்டால் யாழ்ப்பாணம் செல்வது என்பதுதான் அம்மாச்சியின் உத்தேசம்.

வரும் வழியில் எங்கள் அருகே ஒருவர் சொல்கிறார்: ‘நல்லூர்க் கந்தனை கும்பிட்டுவிட்டுத்தான் ஊரைவிட்டு வெளிக்கிடுவோம் என இவ சொல்கிறா” சொன்னவரது முகம் இருட்டில் தெரியவில்லை. மெல்லிதாக உயரமாக இருந்தார். சைக்கிளை உருட்டியபடி வந்து கொண்டிருந்தார். சைக்கிளின் பின்புறக்கரியரில் நாலு சூட்கேசுகள் கட்டப்பட்டிருந்தன. அவருக்குப் பின்னால் பருமனான அவரது மனைவியும் அவரின் கையைப்பிடித்தபடி எனது தோள் உயரத்தில் ஒரு பெட்டையும் வந்து கொண்டிருந்தனர். பெட்டையின் கண்கள் இரண்டும் அந்த இருட்டில் கண்ணாடிபோல் மினுங்கின.

இதை அம்மாச்சி கேட்டதும் ‘இந்தப் பயல என்னிட்ட விட்டு விட்டு தாயும் தகப்பனும் மேல போயிட்டினம். இவன்ரை உயிரை பாதுகாக்கத்தான் நான் உயிர் வாழுறன். நானும் கந்தனிட்டை வாறன்” எனக்கூறிக் கொண்டு நல்லூர் செல்லும் பாதையில் இறங்கினார்.

“அப்பு.. நீங்கள் எந்த இடம்?” அம்மாச்சி கேட்டார்.

‘நாங்கள் நல்லூர்தான். கொக்குவில்ல தங்கச்சி வீடு. கலியாணம் முடிச்சு அவள் லண்டன் போனதால் வீடு சும்மா கிடக்குது. பொடியள் போய் இருந்திருவாங்க. அதைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி அவள் கடிதம் போட்டிருந்தாள். அதுக்காக இடைக்கிடை வந்து தங்கிறது. அப்படித்தான் நேற்று வந்த போது இங்கே அமந்திட்டம்”

“அது சரி சதாசிவண்ணே… நல்லூரில் இருந்தா மட்டும் வித்தியாசமாயிருக்குமே? இந்தா நான் சண்டிலிப்பாயில் இருந்து வாறன்” என்ற குரல் கேட்டது.

திரும்பிப் பார்த்தபோது சொன்னவரும் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்தார். கரியரில் சூட்கேசுகளும் சைக்கிளில் பாரில் ஒரு குழந்தையும் இருந்தன. அவரது இளம் மனைவி இடுப்பில் கைக்குழந்தையை சுமந்து கொண்டு வந்தாள். மேலும் இரண்டு குடும்பத்தின் சுமையுடன் நானும் ஆச்சியுடன் மெதுவாக நல்லூரை நோக்கி முன்னேறினோம்.

‘தம்பி… தங்கச்சியை வேணுமெண்டா பாக்கியம் அக்காவிடம் குழந்தைய குடுத்துட்டு கொஞ்சநேரம் கையாறச் சொல்லு.”

‘பரவாயில்லை. அரைமணி நடையில கோயில் வந்திடும்தானே. எங்கட விதி இப்படி கிடக்கு. ஆமிக்காரனுக்கு பயந்து ஊர் விட்டு ஊர் ஓடவேண்டிக்கிடக்கு.”

‘ஏன் பொய் சொல்லுறாய்? நாங்க ஆமிக்காரனுக்கும் பயமெண்டு சொல்லு”

“அண்ணை இதுதான் விண்ணானம் வேணாம் எண்டிறது. இப்ப ஆருக்கு பயந்து நாம் ஓடுறம்?.”

‘நாங்க இந்திய இராணுவத்துக்கு பயந்து ஓடேல்லயா?.. புலியளுக்குப் பயந்து ஒளியிறேல்லயே? அதுக்கு முந்தி மற்ற இயக்கங்கள் இருக்கேக்க அவையளுக்கும் பயந்தனாங்கதானே? மொத்தத்தில ஆர் ஆயுதம் வைச்சிருந்தாலும் அது எங்களுக்கு ஒண்டுதான். எங்களைப் போன்றவை பயப்பட மட்டுத்தான் வேணும் எண்டதுதான் விதியாக்கும்”

‘சீ.. சீ… எங்கட பொடியளிட்ட ஆயுதம் இருந்தாத்தான் அது எங்களுக்கு பாதுகாப்பு எண்டு ஆதரவு கொடுத்தம். அவங்களிட்ட ஆயுதங்கள் இல்லாவிட்டால் சிங்களவர் எங்களை நாய்க்கும் மதிக்கமாட்டார்கள்.”

‘அப்பிடியெண்டுறாய்… உதுகளைத்தான் நீ மட்டுமல்ல எங்கட பல தமிழ்ச்சனமும் நம்பிக்கொண்டு இருக்குது. உது உங்கடை நம்பிக்கை. அதை நான் குறை கூறேல்லை. உங்கட உந்த நம்பிக்கை, கடவுளில வாற நம்பிக்கை மாதிரி. ஆனா கடவுளில நம்பிக்கை வைச்சாலும் நாங்க கஷ்டப்பட்டு உழைக்கிறனாங்கள்தானே.. அதாவது கடவுள் காப்பாத்துவார் எண்டுகொண்டு, நாங்கள் எங்களில நம்பிக்கை வைச்சுத்தானே வேர்வை சிந்திறம். அதைத்தான் நான் சொல்லுறன்.”

‘பேசாம வாங்கோ.. எந்த நேரத்திலும் அரசியல்… உதைப் பேசி எங்களுக்கு என்ன இலாபம்?” என்றார் பாக்கியம் – சதாசிவத்தாரின் மனைவி.

‘நீ சொல்லுறது சரிதான் பிள்ளை. பிறந்த ஊரையும் வாழ்ந்து வளர்ந்த வீட்டையும் விட்டுட்டு இந்த வயதில ஈரல் குலையை கையில பிடித்துக்கொண்டு குஞ்சு குருமானோடு தலை தெறிக்க ஓடுறம். உயிர்தப்பி வாழ ஓடுற நாங்கள் அரசியல் கதைச்சு என்ன புண்ணியம்? இராத்திரி வறுத்த அரைக்கிலோ கடலையும் ஒரு போத்தல் தண்ணியும், இந்தப் பயலுக்கு ஒரு சோடி சேர்ட்டு, காற்சட்டை, எனக்கு மாத்திகட்ட ஒரு சீலை. இதுதான் என்ர கையில இருக்கிற என்ர சொத்து. இதற்கு மேல என்னாலோ இவனாலோ எதையும் காவ ஏலாது.”

அம்மாச்சியின் வார்த்தைகள் நறுக்கிப் போட்ட கம்பித் துண்டுகளாக அந்தக்காலை வேளையில் அங்குள்ளவர்கள் இதயத்தில் கூர்மையாக தைத்தன.

சில நிமிட நிசப்தம் அங்கே படர்ந்தது.

‘நாங்க பேச விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அரசியல் எங்களை விடாது. சங்கக் கடையில் அரிசி நிறுக்கும் போது ஒவ்வொரு அரிசிமணியிலும் எனக்கு அரசியல் தெரிந்தது. இந்தியப்படைகள் இலச்சக்கணக்கில வந்து இறங்கிய போது நாங்கள் வரவேற்றதும் அரசியல்தான். அவங்கள் புலியளோட அடிபட்டுக்கொண்டதும் அரசியல்தான். இராஜீவ் காந்தியை நம்முடைய ஆட்கள் கொண்டது, அதுக்குப் பிறகு பிரேமதாசா கொல்லப்பட்டது, சந்திரிக்கா பண்டாரநாயக்கா நீல சீலை கட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் வந்தது… இப்படி எல்லாமே இந்த அரசியல்தான்.”

பேச்சை கொஞ்சம் நிறுத்திவிட்டு இரண்டு நிமிடம் சென்றதும் மீண்டும் ‘ஏன் இப்ப கூடை, பெட்டிகளோடு, பிள்ளைகளை தூக்கிக் கொண்டு பெட்டைநாய், குட்டிகளை இடத்துக்கிடம் காவினது மாதிரி திரிகிறமே… இதை என்னண்டு சொல்லுகிறது.. இதுவும் அரசியல்தான்” என்றார் சதாசிவம். தொடர்ந்து கதைத்ததில் அவருக்கு மூச்சுவாங்கியது.

‘’அண்ணை எங்கட ஊரில இருந்த கம்யூனிஸ்ட் வாத்தியார் மாதிரி கதைக்கிறியள். அவரை பொடியள் இனத்துரோகி எண்டு எப்பவோ சுட்டுப்போட்டாங்கள்.”

“அது தெரியும். செய்த தவறுகளை புரிந்து கொள்ளவோ அல்லது அறிந்து கொள்ளவோ நாங்கள் விரும்புவதில்லை. சில வேளைகளில் சொற்ப சிலர் தவறுகளைப் பற்றிப் பேசப் போகும்போது, அவர்களும் சமூக விரோதிகளாகவும், துரோகிகளாகவும் பெயர் சூட்டப்பட்டு அழிக்கப்படுகிறார்கள். இதுவும்தான் இந்த சமுதாயத்தின்ரை தலைவிதி. இதை மாற்றமுடியாது எண்டு நினைச்சுத்தான் கோவிலுக்குப் போய் நல்லூர் கந்தனிடம் பாரத்தை போட்டு விட்டு ஊரை விட்டு நானும் ஓட முயற்சிக்கிறன்.”

நல்லூர் கோவில் துலக்கமாக எதிரே தெரிந்தது. கோவிலருகே அதிக கூட்டமில்லை. வயதானவர்கள் மட்டும் அன்று கோவிலருகே தென்பட்டார்கள். கறுப்புத் தலைகளைக் காணவில்லை. எல்லாம் வெண்ணிறமாகத் தெரிந்தன.

மரணம் அருகில் இருக்கிறதென உணர்ந்து கொண்டபின்னர், மரணம் எப்படி வந்தால் என்ன என்ற தீர்மானத்தில் அவர்கள் இருக்க வேண்டும். நோய் வந்தால் சாவது போல் இப்பொழுது ஆயுததாரிகள் வந்திருக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம் என ஆயுதங்கள் ஏந்தியவர்களை துச்சமாக நினைத்திருக்கவேண்டும். பயம் தெளிந்திருந்ததால் அவர்களிடம் எந்தவித அவசரமும் தென்படவில்லை.

கோவிலின் வாசலருகே எழுபது வயது மதிக்கத்தக்க ஆச்சி ஒருவர் ‘என்ன சனமெல்லாம் ஊரை விட்டு ஓடுதுகள். நீங்க கோயில் கும்பிட வாரீங்கள்” என சிரித்தபடி கேட்டார். அவரது மூக்குக் கண்ணாடியூடாக கண்ணின் குறும்பு தெளிவாகத் தெரிந்தது. ஆச்சி தலையில் துணியை சேர்த்து கொண்டையாக கட்டியிருந்தார். அதில் ஈரம் தெரிந்தது. கையிலிருந்த தட்டத்தில் செம்பருத்தி மலர்கள்.

‘இருந்த இடத்தில நிம்மதியாக இருக்க முடியேல்லை. போற இடமாவது அமைதியாக இருக்கும் எண்டு யாராவது உறுதியளிக்க முடியுமா? நல்லூர்க் கந்தனைத் தவிர யார் எங்களுக்குச் செவிசாய்ப்பார்கள்? வேற யாரையும் நம்மால நெருங்கத்தான் முடியுமா?” மீண்டும் சதாசிவம்.

“அது சரிதான். சாவுதான் எனக்கு நிம்மதி” என ஆச்சி விலகிச் செல்ல முயன்ற போது, ‘ஆச்சி… நீங்கள் ஏன் இருக்கிறியள்? பயமாயில்லயே..??” என்றார் அந்த சண்டிலிப்பாய்க்காரர்.

‘இரண்டு வருடத்துக்கு முன்னால அவர் மோசம் போய்விட்டார். என்ர ஆம்பிளப் பிள்ளைகள் இரண்டும் கனடாவில. நான் ஆமிக்கு ஏன் பயப்பிடோணும்?” என்று சொல்லிக்கொண்டே கோவில் முகப்பு மணலில் இறங்கி மெதுவாக தேர் முட்டியை நோக்கி ஆச்சி சென்றார்.

சைக்கிள்களை வெளியில் நிறுத்திவிட்டு எல்லாரும் உள்ளே செல்ல, ‘நான் வெளியில இருந்து கும்பிட்டு விட்டு சாமானை பார்த்துக் கொள்கிறன். நீங்கள் நிம்மதியாக சாமி கும்பிட்டு விட்டு வாருங்கள்.” என்றார் சதாசிவம்

“அண்ணர்.. நீங்க போங்க. நான் நிக்கிறன்” என்றார் சண்டிலிப்பாய்க்காரர்.

‘தம்பி, அவர் நிற்கட்டும். நாங்கள் கெதியா போகவேணும். ஆச்சி, தம்பியை கூட்டிக் கொண்டு போங்கோ” என்றார் பாக்கியம்.

ஏன் எதற்கென காரணம் கேட்க விரும்பவில்லை. கோயிலை கும்பிட்டபடி அம்மாச்சியின் பின்னால் சுற்றி வந்தேன். நெற்றியில் திருநீற்றைப் பூசியபோது அம்மாவைப் போன்று அம்மாச்சியும் கண்களின் இமைகளுக்கு கீழே மறுகையை வைத்து கண்ணுள் திருநீறு உதிர்வதைத் தடுத்து பூசியது ஆச்சரியத்தைக் கொடுத்தது. அள்ளி நெற்றியில் பூசும்போது பாதி திருநீறு நிலத்திலும் கொஞ்சம் கண்ணிலும் விழும். அதனால் அம்மாச்சி திருநீற்றைக் கையில் எடுத்தாலே ஓட்டம்தான்.

கோவிலை விட்டு வெளியே வந்தபோது காலைச் சூரியன் தனது முகம் காட்டியது. சீதளக்காற்று மெதுவாக விலகத் தொடங்கியது. கூட்டம் சிறிது அதிகரித்திருந்தது.

“நாங்கள் யாழ்ப்பாணம் போய் மெயின் ரோட்டால் போறதே? இல்லாட்டி நல்லூரின் பின்பகுதியால போய் செம்மணி வெளிக்கு போறது தூரம் குறைவா..? அண்ணை என்ன நினைக்கிறியள்”

சதாசிவண்ணை சைக்கிளை தள்ளியபடி பேசாமல் வந்தார். அவரது மௌனத்தை சகிக்க முடியாதவர்கள் போல அவரது முகத்தை பார்த்தனர் மற்றவர்கள். அவ்வளவு நேரமும் பேசிக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தவரது அவரது அமைதி பிடிக்கவில்லை.

“அண்ணே என்ன யோசிக்கிறியள்?” மீண்டும் சண்டிலிப்பாய்காரர்.

“இந்தாளுக்கு என்ன வந்திட்டுது? எல்லாருக்கும் லெக்சர் அடித்தபடி இருக்கும். ஏனப்பா என்ன நடந்திட்டுது?” புருவத்தை நெரித்தபடி அவரது மனைவியார்.

‘நாங்க பின்பகுதியால் போக வேண்டாம். அது பொடியள் போற வழி. ஹெலியால குண்டு போடுறதோ ஆமிக்காம்பில் இருந்து ஷெல் அடியோ நடக்க வாய்ப்புண்டு. கண்டி வீதியால மக்களோட மக்களாப் போனா ஷெல் அடிக்கிற சாத்தியம் குறைவு” முகத்தை தூக்கி எவரையும் பார்க்காமல் சொன்ன அவரது தலை மெதுவாக ஆடியது.

“அது சரி ஏன் மூஞ்சை இப்பிடி இருக்கு. கோயிலுக்கு வரும்வரையிலும் நல்லாத்தானே இருந்தீங்கள்” ஆராய முயற்சித்தார் பாக்கியம்.

‘இல்லை. கோயிலை சேர்ந்தவர்கள் சொன்னார்கள். விடுதலைப்புலிகள் இரண்டு நாட்களுக்கு முன்பாக கோயில் நகைகளையும் பணத்தையும் வந்து பாரம் எடுத்தவங்களாம்..”

‘சரி அவங்கள் எடுத்தா நாம என்னத்தச் செய்யிறது? கோயில்களை மற்ற இயக்கங்களும் கொள்ளை அடிச்சாங்க. இப்ப இவங்கள் தங்கட பங்குக்கு செய்திருக்கிறாங்கள்..” என்றார் சண்டிலிப்பாய்காரர்.

“என்ர கவலை கோயில் நகைகளை இவங்கள் பாரம் எடுத்தது இல்லை. ஆமி வந்து கொள்ளை அடிக்கும் என்று சொல்லித்தான் பாரம் எடுத்தவங்களாம். அப்படியெண்டால் இவங்களுக்கு ஆமி யாழ்பாணத்தை பிடிக்கப்போகுது எண்டது முன்னமே தெரிந்திருக்கு. ஆனால் நேற்று வரையில் அதை மக்களுக்குச் சொல்லவில்லை. சொல்லி இருந்தால் இப்படி அவசரப்பட்டு மக்கள் அள்ளுப்படத் தேவை இல்லைத்தானே…?”

இப்படிப் பட்டவங்களை நம்பி எப்படி வன்னிப்பிரதேசத்திற்கு நாங்கள் போக முடியும்? என்று அவர் மனதுள் நினைத்திருப்பாரோ… மழை பெய்யத் தொடங்கியது. மழையும் அவரது நினைப்பைச் சரியென வழிமொழிந்ததோ!

எவரும் பேசவில்லை. பருத்தித்துறை வீதியால் யாழ்ப்பாண நகரை வந்து சேர்ந்தனர். அங்கே இருந்த பாரிய கூட்டம் நல்லூர் திருவிழாவை நினைவுபடுத்தியது. கலகலத்தபடி கலர் கலராக பல்வேறு வர்ணத்தில் உடையணிந்த பெண்களும் திறந்த மேனியுடன் வெள்ளை வேட்டியுடன் ஆண்களும் திருவிழாவுக்கு மகிழ்ச்சியாகச் செல்வார்கள்.

ஆனால், இங்கே துக்கத்தை தங்களுடன் கட்டி எடுத்துக்கொண்டு மூட்டை முடிச்சுகளுடன் அனைவரும் நகர்ந்தனர். ஆண்கள் இடைக்கிடை பேசினாலும் பெண்களின் சத்தம் அதிகம் இல்லாமலே இருந்தது. இனிவரும் காலங்களின் சுமைகளை அறிந்து அவர்கள் சாதித்த மௌனமாக அந்த அமைதி இருந்தது. போர், இடப்பெயர்வு, வறுமை, பஞ்சம் எல்லாம் பெண்களின் மேலேயே அதிக பாரத்தைச் சுமத்துகிறது. பிரம்மாவாகவும் விஷ்ணுவாகவும் பெண்கள் மாறிவிடுகிறார்கள். ஆச்சிகூட வீட்டை விட்டு வெளிக்கிட்ட பின்பு ஓரிரு வார்த்தைகளுடன் நிறுத்திக்கொண்டார்.

பலவகை மோட்டார் வாகனங்கள், ட்ரக்டர்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களுடன் வளர்ப்பு மிருகங்களான ஆடு, மாடுகளுடன் நாய்களும் அந்த ஊர்வலத்தில் பங்கு கொண்டன. மக்களோடு சேர்ந்து கால்நடைகளும் நகரும் இந்த இடப்பெயர்வை இருபதாம் நூற்றாண்டில் நடக்கும் மக்கள் இடப்பெயர்வாக மோட்டார் வாகனங்கள்தான் இனம் காட்டின.

மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. வெக்கையாயின் பலரால் நடக்க முடியாமல் இருந்திருக்கும்.

அம்மாச்சி சூட்கேசை எனது தலையில் வைத்து பிடித்தபடி நடந்தா. அம்மாச்சியை சில மாட்டு வண்டிக்காரர்கள் வண்டியில் ஏற்ற முன்வந்தபோதும், என்னை விட்டு போக மறுத்துவிட்டா.

மழையில் நனைந்தாலும் ஆகாயத்தைப் அடிக்கடி பார்த்துக்கொண்டு வந்தார்கள். ஹெலிகொப்டர் வந்து குண்டு போடுமா என்ற பயத்தில்தான் ஆகாயத்தை பார்க்கிறார்களோ என நினைத்தேன். நல்ல வேளையாக அப்படியான அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. தூரத்தில் இடிமுழக்கமாக ஷெல் வெடிக்கும் சத்தம் மட்டும் விடாமல் கேட்டுக்கொண்டிருந்தது. வயதானவர்கள் சிலரை சாய்மனைக் கதிரையில் வைத்துக் காவிக் கொண்டு வந்தவர்களைப் பார்க்க பாவமாக இருந்தது. சதாசிவத்தார் இரண்டு தடவை விஸ்கோத்து தந்தார்.

அன்று செய்த ஒரு விடயத்தை நினைத்தால் இப்பவும் சிரிப்பு வரும். ஆம். நான் ஒண்டுக்கடித்தபடியே நடந்து வந்தேன். பெய்த மழை எனது வியர்வையை மட்டும் கழுவவில்லை. மழை அன்றைக்கு பெய்தது ஒரு விதத்தில் எனக்கு கடவுள் செயலாகத்தான் இருந்தது.

அம்மாச்சி வறுத்த கடலையை கையில் எடுத்து இடைக்கிடை தந்து சாப்பிடச் சொன்னா. அம்மாச்சியைப் பார்க்க எனக்குப் பெருமையாக இருந்தது. அம்மாச்சி வழக்கத்தில் கொஞ்சம் வேலை செய்து விட்டு நெஞ்சு சுளகுபோல் படக்கு படக்கு என்று அடிக்குது எனச் சொல்லி விட்டு படுத்துவிடும். இப்ப ஒரு வன்மம் தான் இப்படி நடக்க வைத்திருக்கு.

இரவுக் கருக்கலுக்கு முதல் சாவகச்சேரி வந்துவிட்டோம். ஒரு கொட்டிலில் என்னோடும் அம்மாச்சியோடும் சதாசிவத்தார் குடும்பமும் சண்டிலிப்பாய் குடும்பமும் தங்கின. பத்துக்கு பத்தடியான அந்த இடத்தில் இரண்டு பக்கமும் விறகு அடுக்கப்பட்டிருந்தது. சதாசிவத்தார் குடும்பத்தில் அந்த சின்னப் பெட்டை கார்த்திகா தாயின்ர கையை பிடித்துக்கொண்டு திரு திருவென்று என்னைப் பார்த்து முழித்தவாறு இருந்தாள்.

கொட்டிலில் இரவு தங்கிய அம்மாச்சியால் மறுநாள் எழும்ப முடியவில்லை. அந்த சின்னப் பெட்டையின் தாய் பாக்கியம் ஆச்சிக்கு இரண்டு பனடோலைத் தந்தார். குடித்த பின்பு ஆச்சிக்கு வியர்த்தது. எழும்பிக் குந்திய ஆச்சி, அந்த பாக்கியம் மனிசியிடம் மார்பில் இருந்த துணியாலான மடிசஞ்சியில் இருந்து கொஞ்சம் காசை எடுத்துக் கொடுத்தா. “இராசாத்தி, இந்த அனாதைப் பொடியை எட்டு வருசமாக நான் பார்த்து வருகிறேன். இந்த மழையில நனைஞ்சதால எனக்கு குளிரும் சன்னியும் வந்திருக்கு எண்டு நினைக்கிறேன். இதில் பிழைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அப்படி உயிர் பிழைத்தாலும் என்னால் மேலும் நடக்க முடியாது. சத்திரம் சாவடி எனப்போவது என நினைத்திருக்கிறேன். தயவு செய்து வழியில் ஏதாவதொரு அனாதை ஆசிரமத்தில் இவனைக் கொண்டு போய்விட்டிடு” என்று கெஞ்சினா.

“இல்லை ஆச்சி நீ பயப்பிடதே நாங்கள் இருக்கிறம்” என்றார் பாக்கியம்.

அம்மாச்சி சொன்னபடிதான் நடந்தது. அன்றிரவு என்னை கட்டிப்பிடித்தபடி படுத்திருந்தா. அடுத்த நாள் விடிய அம்மாச்சியின் பிடியில் இருந்து எழும்ப முடியவில்லை. அம்மாச்சியின் கைகள் சில்லென்றிருந்தன. அசைக்க முயன்றபோது விறைத்து இரும்புச்சட்டங்கள் போலிருந்தன. முழுப்பலத்தையும் பாவித்து கைகளைப் பிரித்து திமிறிக்கொண்டு காலை கருக்கல் வெளிச்சத்தில் அம்மாச்சியின் முகத்தைப் பார்த்தபோது கண்கள் விழித்திருந்தன. சுவாசம் நின்றிருந்தது. எழும்பி நின்று பார்த்துக் கொண்டிருந்த என்னருகே வந்த பாக்கியம் மனிசி மூக்கருகே கையை வைத்து விட்டுச் சொன்னா “தம்பி இராத்திரியே ஆச்சி போயிருக்க வேணும்.”

பலமணி நேரமாக அம்மாச்சியுடன் படுத்திருந்தது மனதில் முள்ளாக உறுத்தியது.

சதாசிவத்தாரும் சண்டிலிப்பாய்காரரும் அம்மாச்சியை தூக்கிப் போய் அந்த கொட்டிலில் இருந்த விறகைப் பாவித்து சிறிது தூரத்தில் எரிக்க முடிவு செய்தார்கள். அந்த கொட்டிலின் தாழ்வாரத்தில் தொங்கிய தென்னோலைகளை இணைத்து பந்தமாக கட்டினார்கள். விறகுகளை அடுக்கி அதில் அம்மாச்சியை வளர்த்திவிட்டு, அந்த தென்னோலை பந்தத்தை கொளுத்தி என்னிடம் தந்து அம்மாச்சி படுத்திருந்த விறகை கொளுத்தச் சொன்னார்கள். தயங்கித் தயங்கி கொள்ளிவைத்தேன்

சில வருடங்களுக்கு முன் அம்மா அப்பா இருவரையும் ஒரே விறகடுக்கில் வைத்து கொள்ளி போடும் போது தயக்கமில்லை. அம்மாச்சி இருந்த காரணமா அல்லது அப்போது விபரம் தெரியாததா என்பது இன்றுவரை எனக்குப் புரியவில்லை.

எனக்கு கடைசியாக இருந்த ஒரு உறவுக்கும் நெருப்பு வைத்தேன். எரியும் அம்மாச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மாச்சியின் பூர்வீக அடி சாவகச்சேரி என்று என் அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன். அந்த விதத்தில் அம்மாச்சி ஒருவிதத்தில் அதிர்ஸ்டம் செய்தவர் என்ற நினைப்பும் வந்தது.

சதாசிவம் குடும்பத்தினருடனும் சண்டிலிப்பாய்க்காரருடனும் பலநாட்கள் அந்த மரத்தடியில் தங்கினோம். சதாசிவத்தை பெரியப்பாவாகவும் சண்டிலிப்பாய்காரரை மாமாவாகவும் உறவு வைத்து அழைக்கப் பழகிக்கொண்டேன். பிறகு, கிளாலிக்கடல் மார்க்கமாக இரவு நேரத்தில் வள்ளம் ஒன்றில் அக்கரையை அடைந்தோம். அதுதான் எனது முதல் வள்ளப்பயணம். முழிப்பெட்டை கார்த்திகா அண்ணை அண்ணை என அந்த பயண காலத்தில் என்னுடன் ஒட்டி விட்டது.

வள்ளத்தில் எங்களைப்போல் பல குடும்பங்கள் இருந்தன. இயக்கத்தினரது வள்ளங்கள் அவை என சண்டிலிப்பாய் மாமா ரகசியமாகச் சொன்னார். இயக்கப்பொடியங்களோடு பெரியப்பா எந்தக் கதையும் வைத்துக்கொள்ளவில்லை. மாமா ‘தம்பிமாரே இவங்களை இந்த ஆனையிறவில இருந்து எப்ப அடித்து கலைக்கப்போறிங்க” எனக் கேட்டார். அவர்கள் இவரைப் பொருட்டாக மதித்து உடனடியாகப் பதில் சொல்லவில்லை. அவர்கள் சாக்கு மூடைகளை வள்ளத்தில் பத்திரமாக வைப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். அவர்களது மூட்டைகளுக்கு இடையில் நான் படுத்திருந்தேன். சாக்குகள் சில இடங்களில் இறுக்கமாக கட்டாதபடியால் மூடைகள் வாய் பிதுங்கி உள்ளிருந்தவைகளைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுக்கள் அவற்றுக்குள் நிரப்பப்பட்டிருந்தன. இரவு நேரத்தில் நேவியை பார்த்து எச்சரிக்கையாக ஒட்டுவதிலும் அவர்களது கவனம் இருந்தது.

கரையில் இறங்கியதும் மீண்டும் பல நாட்கள் மரங்களின் நிழலும் சிறு கொட்டில்களும் வசிப்பிடமாகின. இந்த இடங்களில் சனங்கள் சிலர் வந்து அரிசி பருப்பு என கொடுத்தனர். எல்லோரும் மரங்களுக்கு கீழ் அடுப்பு வைத்து உணவு சமைத்தார்கள். ட்ரக்ரர் வைத்துக்கொண்டு முல்லைத்தீவு, கிளிநொச்சி என்று பெரும்பாலானவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். பெரியப்பா மட்டும் வவுனியா போகவேண்டும் என்று பிடிவாதமாக நின்றார். மாமாவையும் வரும்படி அழைத்தார். மாமா சம்மதித்தார். ட்ரக்ரர், கிளிநொச்சி, மாங்குளம் என இரண்டு நாட்கள் தங்கித்தான் வந்தது. பல இடங்களில் இயக்கம் மறிச்சு வழிகளை மாத்தி மாத்தி விட்டது. மாமா சொன்னார் “குண்டு போடுவாங்கள் எண்டுதான் இயக்கம் இப்படி செய்கிறது”

ஓமந்தை செக்பொயின்டில் இயக்கத்தின் அனுமதிக்காக இரண்டு நாட்கள் காத்திருந்தோம். எங்களுடன் வந்த பலர் கிளிநொச்சி, முல்லைத்தீவு என இறங்கிப் போய்விட்டார்கள். கொழும்புக்கு போக இருப்பவர்கள்தான் பெரும்பாலும் அனுமதிக்கு காத்திருந்தார்கள்.

பெரியப்பா இருதய வருத்தம் இருக்கு என்றும் தனது ஒன்றுவிட்ட சகோதரன் வவுனியாவில் இருக்கிறார் எனவும் கூறியபோது செக்போஸ்ட்ல் இருந்தவர்கள் நம்ப மறுத்தனர். அவர் பிடிவாதமாக அங்குள்ள புலிப் பெரியவர்களிடம் தனது மருத்துவத்திற்கான கடிதங்களை காட்டிய பின்பே சம்மதித்தனர். என்னை தங்கள் மூத்த பிள்ளை என வயதையும் குறைத்து சொன்னதால் நம்பாமல் சேர்ட்டிபிக்கட்டை கேட்ட போது அது பள்ளிக்கூடத்தில் இருக்கு என பெரியம்மா சொன்னதை நம்பி விட்டார்கள். எனது சூட்கேசுக்குள் ஆச்சி வைத்தது எனக்கு நினைவுக்கு வந்தது. ஆனால் மாமாவை அவர்கள் விடவில்லை. ஓமந்தையில் மாமாவும் பெரியப்பாவும் கட்டிப்பிடித்து விடைபெற்றார்கள்.

வவுனியா பெரிய பாடசாலையில் கார்த்திகாவும் நானும் சேர்ந்தோம். கார்த்திகா அண்ணா அண்ணா என பாடங்கள் கேட்பது, உணவைத் தருவது என்று நெருங்கிவந்து ஒட்டிக்கொண்டாள். பெரியப்பா பெரியம்மாவுடன் அவளும் சொந்தமாகியது எனது இதயத்திற்கு மருந்தாகியது. பத்தாம் வகுப்பில் யாழ்ப்பாணத்தில் படித்திருந்த எனக்கு பாடங்கள் இலேசாக இருந்தன. அதிலும் கணக்கு பாடங்களில் எப்போதும் அதிக புள்ளிகள் எடுப்பதனால் ஆசிரியர்களுக்கு நான் ஒரு செல்லப்பிள்ளை.

ஒரு நாள் எங்கள் பாடசாலை வருடாந்த விளையாட்டு நிகழ்வுக்கு எங்களது ஊர் தேவாலயத்து பாதிரியார் விருந்தினராக வந்திருந்தபோது கணக்கு வாத்தியார் என்னைக் காட்டினார். ‘இவன்தான் இந்த பள்ளியிலே கணக்கில் புலி” என அறிமுகப்படுத்தினார். உயரமாக சிறிது முன் வழுக்கை விழுந்த அந்த பாதிரியார் நீண்ட வெள்ளை அங்கியின் நடுவில் இடுப்பில் கறுத்தப்பட்டி அணிந்திருந்தார். ‘தம்பி எங்கை இருக்கிறாய்?” என ஆர்வமாக கேட்டு முதுகைத் தடவினார்.

“நான் பெரியப்பா வீட்டில் இருக்கிறேன்” என்றேன். கார்த்திகா எழுந்து நின்று “என்ர அண்ணா” என்றாள். பாதிரியார், ‘அப்பா என்ன செய்கிறார்?” எனத் திரும்பிக் கேட்டார். கார்த்திகா, “எனக்குத் தெரியாது” எனக்கூறித் தலையை ஆட்டினாள். பாதிரியார் “தம்பி, அப்பாவும் நீயும் சேர்ச்சில் என்னை வந்து பாருங்கள்” என்று சொல்லிச் சென்றார்.

அன்று மாலை பாடசாலை முடிந்ததும் நாங்கள் இருவருமாக பெரியம்மாவிடம் சென்று, “அப்பா என்ன செய்கிறார்” எனக் கேட்ட போது “கடைகளுக்கு கணக்கு எழுதுகிறார்” என்றார். பெரியப்பாவிடம், பாதிரியார் பாடசாலைக்கு வந்ததையும் கணக்கு வாத்தியார் என்னை அறிமுகப்படுத்தியதையும் தன்னை வந்து சந்திக்கச் சொன்னதையும் கூறியதும் “சரி அடுத்த ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் தேவாலயத்திற்குச் சென்று சந்திப்போம்” எனச் சொல்லிவிட்டு பெரியம்மாவோடு பேசிக்கொண்டிருந்தார். நான் பார்த்தவரை பெரியப்பாவோ பெரியம்மாவோ கோயிலுக்குப் போனது இல்லை. பெரியம்மா மட்டும் எங்களது வீட்டின் வாசல் அருகே முருகன் படத்தை வைத்து காலையில் வணங்குவதை பார்த்திருக்கிறேன்.

அன்றுதான் பெரியப்பாவின் சரித்திரத்தை – அவர் வவுனியா வந்த காரணத்தை அறிந்தேன். பெரியப்பா சுன்னாகத்தில் கூட்டுறவு சங்கக் கடையில் வேலைசெய்து கொண்டிருந்தவர். இடப்பெயர்வு வந்ததும் அவரது தொழில் திறமையை பாவிக்கக் கூடிய ஒரே ஒரு இடமாகத் தமிழ் பகுதிகளில் வவுனியா மட்டும் தான் இருந்தது. மொத்த வியாபாரிகள் பலரும் வவுனியாவில் உணவுப்பொருட்களை வாங்கி விற்பவர்களாக இருந்தார்கள். யுத்தத்தால் பெருமளவு தமிழர்கள் இடம் பெயர்ந்து வந்து வவுனியாவில் வாழ்வதாலும் பணப் புழக்கம் கூடியுள்ளது. இந்தக் காரணத்தை அறிந்தே முல்லைத்தீவு, கிளிநொச்சி எனப் போகாமல் வவுனியாவுக்கு வந்தார் என்பதை பெரியம்மாவால்கூட பின்புதான் புரிந்து கொள்ளமுடிந்தது.

ஞாயிற்றுக்கிழமை வந்தது. தேவாலயத்தில் வழிபாடு முடித்த மக்கள் தெருவில் போவதைப் பார்த்த பெரியப்பா, ‘தம்பி வாடா” என கூட்டிக்கொண்டு தெருவில் இறங்கினார். தேவாலய வாசலில் எங்களை கண்டதும் பாதிரியார் வந்து “வாங்கோ” என வரவேற்று எனது தலையில் கைவைத்து ஆசீர்வதித்து விட்டு உள்ளே அழைத்துச் சென்றார். தேவாலயத்தின் முன் வரிசை வாங்கிலில் எங்களை இருத்திவிட்டு தான் மாத்திரம் நின்று கொண்டிருந்தார். மரியாதை காரணமாக நான் எழுந்தபோது “இல்லை இரும் தம்பி” என தோளில் அழுத்தினார்.

‘மிஸ்டர் சதாசிவம், நான் பாடசாலைக்கு போனபோது தம்பிதான் கணக்கில கெட்டிக்காரன் என்று வாத்தியார் சொன்னார். தம்பி போல கெட்டிக்காரரை இந்த சூழ்நிலையில் வைத்திருந்தால் படிக்க வைக்க முடியாது. வெளிநாட்டில போய் படிச்சுப்போட்டு வந்தால் எங்கட நாட்டுக்கும் நல்லது. தம்பிக்கும் நல்லது.”

“சாமி, நாங்கள் ஊரைவிட்டு இடம் பெயர்ந்து வந்திருக்கிறம். எப்படி வெளிநாட்டுக்கு அனுப்பிறது?” கவலை தோய்ந்த முகத்துடன் பெரியப்பா கேட்டார்.

‘நீங்க ஓமெண்டால் மலேசியாவில் ஒரு நண்பர் இருக்கிறார். அவர் உதவியுடன் அவுஸ்திரேலியா போனால், மெல்பேர்னில் ஒரு டாக்டர் இப்படியான எங்கட கெட்டிக்காறப் பிள்ளைகளை படிக்க உதவி செய்வார்” என்றார் மிகுந்த உற்சாகத்துடன் கையை ஆட்டியபடி பாதிரியார்.

“தம்பி வெளிநாடு போறது எனக்கு சந்தோசம். என்ரை அவவிட்டயும் ஒருக்காக் கேட்டுவிட்டு பதில் சொல்கிறேன்” என்றார் பெரியப்பா.

அன்று இரவு எங்கள் வீட்டில் எவரும் சாப்பிடவில்லை. பெரியம்மா இரவு தொடர்ச்சியாக அழுதார். பெரியப்பா மௌனமாக இருந்தார். கார்த்திகா பாதிரியாரைத் திட்டினாள். இவர்கள் எல்லோரையும் பிரிவதையிட்டு எனக்குக் கவலையாக இருந்தாலும் வெளிநாட்டுக்குச் செல்வது என்பது என் மனதில் ஆவலைத் தூண்டியிருந்தது. கார்த்திகா, ‘அண்ணை.. எங்களை விட்டு போகப்போகிறாயா?” என இருமுறை வாயாலும் பலமுறை அவளது கண்களாலும் கேட்டாள். அவளது கைகளைப் பிடித்தபடி மௌனமாக நிற்பதைவிட எதுவும் சொல்ல முடியவில்லை.

தனி ஒருவனாக வளர்ந்தபோது என்னைச் சுற்றி இருந்தவர்களின் அன்பையும் பாசத்தை பெற்றுக்கொண்டு இருந்த நான் இப்பொழுது அன்பை மற்றவர்களுடன் பரிமாறும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தேன். அதுவும் எதுவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஒரு புதிய குடும்பம், சொந்தம் என்ற நிலையில் அதை எப்படி கையாள்வது என ஒருவரும் சொல்லவில்லை. நீச்சல் தெரியாதவன் கடலில் தள்ளப்பட்டது போல் அன்பைக் காட்டும் கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டேன். மனதிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது.

வெளிநாட்டுக்கு போகும்வரை கார்த்திகாவுடன் விளையாடுவதிலும் பேசுவதிலும் ஈடுபடலாம் என நினைத்த போது ஒருநாள் பெரியவளாகி விட்டாள் என சொல்லி, அந்தச் சிறிய வீட்டின் மூலையில் இருத்தி அவளை சுற்றி தனது சீலையால் மறைப்பை உருவாக்கிவிட்டாள் பெரியம்மா. அந்த நாட்கள் வினேதமாக இருந்தன. வீட்டின்பின் பகுதியில் தாழ்வாரத்தோடு சேர்த்து வெளிப்புறமாக ஒரு கொட்டில் தென்னோலை கிடுகால் அமைக்கப்பட்டது. நிலத்தில் பாய் விரித்து அங்கே கார்த்திகா குடிவைக்கப்பட்டாள். அவள் ஒரு கிழமைக்கு ஆண்களைப் பார்க்கக்கூடாது என பள்ளிக்கூடம் செல்லாமல் தடுத்தது உண்மையில் எனக்கு புதிராக இருந்தது. அவளது குடிசைக்குள் எங்கள் வீட்டு உலக்கை பேய்களுக்கு எதிராக வைக்கப்பட்டது. நல்லெண்ணையை அவளுக்கு பருக்குவதில் பெரியம்மா தீவிரமாக இருந்தார். அந்தப்பகுதி நான் போக முடியாத பிரதேசம் ஆகிவிட்டது. நான் தூரத்தில் நின்று பார்தேன். இந்த நாட்களில் கார்த்திகாவின் கண்களை மட்டும் என்னால் சந்திக்க முடிந்தது.

அவள் அந்தக் குடிசையை விட்டு வெளியே வருவதற்கு முன்பு நான் வவுனியாவில் இருந்து வெளியேறவேண்டி வந்துவிட்டது. கார்த்திகா குளிப்பதற்கு இரண்டு நாட்களின் முன் பெரியம்மாவின் அழுகையையும் மீறி தேவாலயத்திற்க்கு அழைத்து வரப்பட்டபோது, ஞாயிறு காலைப் பூசை முடிந்திருந்தது. பாதிரியார் யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசி முடிக்கும் வரையில் காத்திருந்த பெரியப்பா, ‘ஃபாதர்… உங்களை நம்பித்தான் இவனை ஒப்படைக்கிறேன்” எனக்கூறி அவர் கையில் ஒப்படைக்கிறார்.

‘கவலைப்படாதீர்கள். ஒருகாலத்தில் இவன் மிகப் பெரியவனாக திரும்பி வருவான். நீங்களும் பார்க்கப் போகிறீர்கள்” எனக்கூறி சமாதானப்படுத்தினார். பெரியப்பாவின் கண்களில் கண்ணீர் உதிர்ந்தது.

சில மணித்தியாலத்தின் பின்னர் கொழும்பில் இருந்து வந்த பெண் அதிகாரியின் ஜீப்பில் நான் ஏற்றப்பட்டேன். வழியில் விசாரித்தவர்களிடமெல்லாம் பைபிள் படிப்பதற்காக ரோமாபுரிக்கு போவதாகக் கூறினார்கள். அந்தப் பெண் அதிகாரி சொல்லிய விதம் விசாரித்தவர்களை அடுத்த கேள்வி கேட்க வைக்கவில்லை. கொழும்புக்கு வந்து சில நாட்களில் மீண்டும் ஒரு பாதரின் உதவியுடன் மலேசியாவுக்கு விமானம் ஏறினேன்.

படிக்கவேண்டும் என்பதில் அக்கறையாயிருந்த எனக்கு வெளிநாடு செல்வது விருப்பமாக இருந்தது என்பது பெரியப்பாவிடமோ பெரியம்மாவிடமோ சொல்லமுடியாத ஒன்று. இரண்டு வருடகாலத்தில் மீண்டும் இடம் பெயர்கிறேன். யாழ்ப்பாணத்தில் இருந்து அம்மாச்சியோடு வந்த நான் இப்பொழுது தனிமையாக – ஆனால் சிறிது துணிவுடன் – வெளியேறுகிறேன்.

கடந்த இரு வருடங்களில் பெரியப்பா பெரியம்மா என் மீது பொழிந்த அன்பை அளவிடமுடியாது. மூத்த பிள்ளையாக என்னை நடத்தியதோடு படிப்பித்து முன்னேற்றுவதில் மிகவும் அக்கறையாக இருந்தார்கள். ஒருவருக்கொருவர்; இவன் வெளிநாடு போனால் படிப்பது மட்டுமன்றி உயிர் வாழவும் முடியும் என்று பேசியிருக்கிறார்கள். தங்களது சொந்த பிள்ளையில்லை என்பதால் பிரித்து அனுப்பவில்லை என்பதைப்புரிய வைக்க ஒருவரை ஒருவர் வெல்லுவதுபோல அவர்கள் முயற்சி செய்திருந்தார்கள். இயக்கத்தில் சேர்ந்த இளைஞர்கள் பலரைப்பற்றி எனக்கு முன்பாக வேண்டுமென்றே பேசினார்கள். வெளிநாடு செல்லும் முடிவு சரியானது என நான் நினைக்க வேண்டுமென அவர்கள் எண்ணினார்கள் என்பதாகவே இப்போது அதை நான் புரிந்து கொள்கிறேன்.
நன்றி கானல் தேசம்

“இடப்பெயர்வு .” அதற்கு 2 மறுமொழிகள்

  1. Oh! Great expression! Great story! Thanks to Great service to Tamil World!

  2. Very true and it was our life experience. Similar incidents were happenned all over North & East. We had to run and displace in Mannar at the same time.

Shan Nalliah க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: