நொயல் நடேசனின் ‘’கானல் தேசம்’’— காகிதங்களால் ஆன ஒரு ‘’மல்ரிபரல்’’

ஆர் எம் நௌஸாத்( தீரன்)

சமீபத்திய வரவுகளுள் கானல் தேசம் பெற்ற கவனயீர்ப்பு பெரிது… கர்ப்பிணியை தற்கொடை போராளியாக்கிய சம்பவச் சித்தரிப்பில்தான் பலரதும் கவனம் குவிக்கப்பட்டிருந்தது…இதனால் கானல்தேசம் கொண்டிருந்த மையக் கரு மறைக்கப்பட்டு விட்டது.. நடேசன் தன புதினத்தில் வார்த்திருந்த பாத்திரங்களின் குணவியல்புகளும் சித்தரிப்புகளும் பேசப்படாமல் போய்விட்டன ..

புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் வாழ்வியல் அவலங்களும் … போராளிகளுக்குள்ளேயே உளவு பார்க்கும் சக போராளிகளின் மீதான அச்ச உணர்வுகளும் .. போராளிகளுக்குள் கிளர்ந்த காம உணர்வுகளும்… புலிகளின் உளவு வலைக்குள் தன்னையறியாது விழுகின்ற மானுடரின் கையறு நிலையும் …. சிங்கள படைவீரனும் போராளியும் கொண்ட நட்புணர்வுகளும் …. இவ்வாறு எத்தனையோ விசித்திரங்களை இந்த கானல் தேசத்தில் காணக் கிடைக்கிறது….

இவையெல்லாம் கவனத்தில் கொள்ளப்படவில்லை … காரணம் நடேசனின் தனிப்பட்ட அரசியல் கொள்கை ஒரு காரணமாக இருக்கலாம்..இன்னுமின்னும் படைப்பாளியை பார்ப்பதை விட்டும் அவனது பிரத்தியேக வாழ்வை அவனது படைப்புடன் சேர்த்துக் குழைத்து மெழுகிவிடுகிற போக்கு நம்மை விட்டு இன்னும் மறையவில்லை…

நாவலில் அவர் ஒன்றின் மேலோன்றாக அடுக்கியிருக்கும் சம்பவச்சட்டகங்கள் புதுமையானவை….அத்தனையும் அடுத்தடுத்து ‘’ஓயாத அலைகளாக’’ வாசகனில் நுகர்ச்சியனுபவத்தில் உட்பாவுகிற தன்மைக்கு அவரது எழுத்துநடை மேலும் வலுச் சேர்க்கிறது…

இலங்கை-கண்டி-யாழ்ப்பாணம்-சென்னை-டெல்லி-மெல்பேன் என்று மாறிமாறி விரிகின்ற கதைத் தளங்களும்…..மஹிந்தானந்த தேரர்- அசோகன்-ஜெனி-கார்த்திகா-—நியாஸ்—என்று நான்கு இனக் குழும மனிதர்களின் பாத்திரப் படைப்புகளும் சேர்ந்து நம் மனதில் கட்டமைக்கும் அந்த யதார்த்தமான அனுபவம் நம்மை மீண்டும் அந்த போர்க்காலத்தில் வாழச் செய்கிறது….

துணுக்காய் வதை முகாமில் வீசப்படும் சவுக்கடிகள்…ஒவ்வொன்றும் நம் மனதில் சுளீரென விழுகின்றன… மீண்டும் பிள்ளை குட்டிகள் குமர்பெண்களுடன் கட்டிய ஆடையுடன் முஸ்லிம் மக்கள் சொந்த வாழ்நிலத்தை விட்டும் வெளியேற்றப்படும் கொடுமையில் துடித்துப் போகிறோம்… சக போராளிகள் மீது ‘’பொறுப்பாளர்’’களால் திணிக்கப்படும் கட்டாய போர்ப்பணிகளில் துவண்டு போகிறோம்…தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் நிதி சேகரிப்பும் அதை தம் வேவு வலைக்குள் இலாவகமாக சிக்க வைக்கும் வல்லரசுகளின் மூலோபாயமும்..நடேசனின் எழுத்துக்களில் பிரவாகித்து பயம் கொள்ள வைக்கின்றன…

அசோகன் என்ற பெயர் நொயெல் நடேசனுக்கு மிகவும் பிடித்த பெயர் போலும்…..அசோகனின் வைத்தியசாலையில் இருந்து கானல்தேசம் வரை வாழும் சுவடுகள் அழுத்தமாகப் பதித்து விட்டிருக்கிற டாக்டரின் படைப்பாளுமையை இந்த சிறிய முகநூல் பதிவுக்குள் அடக்க முடியாது…

கானல்தேசம் பற்றி அதன் ஒவ்வொரு அத்தியாயம் பற்றி….விரிவாகச் சொல்ல ஏராளம் விஷயம் உண்டு…கடந்த வாரம் முழுவதும் கானல்தேசம் தந்த வெக்கையிலிருந்து இன்றுதான் மீண்டெழுந்து வர முடிந்திருக்கிறது.. ஒரே வரியில் சொல்வதானால், நொயெல் நடேசன்…கானல் தேசத்திலிருந்து ஏவப்படும் ஒரு எழுத்துப் பீரங்கி….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: