சென்னையில் ஜனவரி 13 ஹீக்கின் போதம்ஸ் ரைட்டர்ஸ் கபேயில் காலை 10 மணிக்கு சந்திப்பு நடந்த நடேசனின் “கானல்தேசம் “ நாவல் வௌியீட்டரங்கில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் தொகுப்பு
எழுத்தாளர் மோகனரங்கன் :
நடந்து முடிந்தது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஈழத்தில் நடந்த போரை நாங்கள் ஒரே பக்கத்தில் உணர்வு பூர்வமாக பார்த்தபடி இருக்கிறோம். ஆனால், வரலாற்றில் இருந்து நாம் ஏதாவது கற்றுக் கொள்ளவேண்டும். போரில் எல்லாத்தரப்புகளும் இழந்துள்ளார்கள் போர் மனிதகுலத்திற்கே இழப்பாகும். ஒரு பகுதியினர் ஜெயித்தவர்கள் என்று சொல்வதில்அர்த்தமில்லை. நடந்து முடிந்த பெரும் துயரத்தில் இருந்து சில உண்மைகளை, அது எங்வளவு கசப்பாக இருந்தாலும் கற்றுக்கொள்ள வேண்டும். அல்லது சொல்லியாக வேண்டும். அல்லது புரிந்தாகவேண்டும். அந்த விதத்தில் நாம் தெரிந்து கொள்ளாத விடயத்தை இந்த நாவல் பேசுகிறது.
புலிகள் பக்கம் – இலங்கைப் பக்கம் பக்கம் என்றில்லாது நடந்த விடயத்தை பார்க்க முடிகிறது. பல தகவல்களை வைத்துக்கொண்டு மிகுதியை புனைவாக பார்க்க முயல்கிறது. ஆனால், இந்தக் குரலை எவரும் பார்க்க மறுப்பார்கள். இந்த நாவல் இந்தியாவில் இராஜஸ்தானில் தொடங்கி இலங்கை – அவுஸ்திரேலியா என முடிகிறது.
இந்த நாவலிலிருந்து கடந்த காலத்தில் நடந்த விடயங்களை பருந்துப் பார்வையில் பார்க்க முடிகிறது. எதிர்தரப்பு எப்படி பார்க்கும்? இந்தியா எப்படி பார்க்கிறது? . அமெரிக்கா எப்படி பார்த்தது என்ற விடயங்கள் இதில் இருக்கின்றன. நான் ஏற்க்கனவே இவருடைய அசோகனின் வைத்தியசாலை படித்திருக்கிறேன். அதைத் தொடராக வாசித்தேன். அதனது எழுத்துமுறை எனக்குப் பிடித்திருந்தது.
அதனால் இவரிடம் இதில் சில விடயங்கள் ஆதென்ரிக்காகவும் பிரிலியன்டாகவும் இல்லையே என இவரிடம் சொன்னேன். அதற்கு அவர், “ இதில் உள்ள ஒவ்வொரு துளியும் எனக்குத் தெரிந்த விடயம். வாழ்வனுபவம் மற்றவை . நான் வெளி நாட்டில் இருப்பதால் உள்ளே என்ன நடந்திருக்கும் என்ற தகவல்களை வைத்து கற்பனையில் எழுத முயற்சித்தேன் “ என்றார்
நாம் ஒரு பக்கத்தில் சேர்ந்துவிட்டால் மறுதரப்பை ஒத்துக்கொள்ள மாட்டோம் . ஆனால், இந்த நாவல் அந்த விடயங்களையும் பேச முயற்சிக்கிறது.
நமக்கு ஈழவிடுதலைக்கு ஆதரவான அபிப்பிராயம் இருந்தது . அதுதான் ஞாயம். அதை செய்தவர்கள் தோற்றுப் போனார்கள் என்ற சித்திரமிருக்கிறது. இவர் இந்த சித்திரத்தின் மறுபக்கத்தை சொல்லியிருக்கிறார் என்பதால் கானல்தேசம் முக்கியமான ஒரு நாவல் ஆகிறது.
கவிஞர் ராஜாத்தி சல்மா :
முதல் முதலாக நடேசனின் வாழும் சுவடுகள் படித்தேன் அதனது நடை என்னைக்கவர்ந்தது. அது எனக்கு புதிசு. உலகத்தில் நாம் மட்டும்தான் வாழ்வது என்ற விதிக்கப்பால், விலங்குகள் பற்றிய விடயம் புதிதாக இருந்தன. அதன் பின்பு அசோகனின் வைத்தியசாலை படித்தேன். ரொம்பவும் பிடித்திருந்தது. வெளிநாட்டு வாழ்க்கை – அதாவது புலம்பெயர்ந்த வாழ்வின் தனிமனித சிக்கல்களை ரொம்பத் தெளிவாக பதிவு செய்துள்ளது இந்த நாவல். அதைவிட வெளிப்படையாகவும் இருந்தது.
புனிதத் தன்மையற்று தனது வாழ்க்கையை அங்குள்ள அனுபவங்களோடு இணைத்து எப்படி போராடுவது என்பது நன்றாக இருந்தது. ஆனால் பெருமளவில் கவனம் பெறாத இரண்டு புத்தகங்கங்கள் என்ற கவலையும் இருக்கிறது. கவனம் பெறவேண்டும். அதை பதிப்பகங்கள் செய்யவேண்டும். கானல் தேசம் நாவலை நான் இன்னமும் படிக்கவில்லை. போரின் இழப்புகளை ஞாயப்படுத்துகிறோம்.
ஈழப்போராட்டத்தை மானசீகமாகவும் உணர்வு பூர்வமாகவும் பார்க்கிறோம் . அதன் இழப்பை எமது இழப்பாக பார்க்கிறோம். இல்லையென்றால் துரோகியாகி விடுவோம். தவறைப் பார்க்கத் தவறிவிடுகிறோம். உண்மையை புரிந்துகொள்ளத் தவறிவிடுவோம் . அந்த விதத்தில் சமூக அக்கறையுடன் தவறுகளை சொல்லும்போது புரிந்துகொள்ள வேண்டும். சமூகத்தை அக்கறையுடன் பார்ப்பவர். நாவலைப்படிக்கவேண்டும் .
கவிஞர் பரமேஸ்வரி :
ஈழம் சார்ந்த விடயம் தொடர்பில் பல காலமாக இருந்தேன் . அக்காலத்தில் தமிழ்நாடும் ஈழமும் ஒன்றாக இருந்த வரைபடத்தைப் பார்த்தேன். நான் உணர்வுபூர்வமாக விடுதலைப்புலி ஆதரவாளர். ஆனால், அறிவுரீதியாக மற்றப் பக்கத்தையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். உண்மையின் பல கோணங்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அதையும் நுட்பமாக தெரிந்து கொள்ளவிரும்பகிறேன். இதற்காக, தமிழினி , குணா கவிழகன் மற்றும் வெற்றிச் செல்வியின் புத்தகங்களை படித்திருக்கிறேன். வாழும் சுவடுகள் நூலின் சில தாள்களை புரட்டிப் பார்த்தபோது வாசிப்புக்குள்ளே இழுக்கும் அதனது நடை பிடித்திருக்கிறது.
எழுத்தாளர் எஸ் . ராமகிருஸ்ணன் :
நான் நடேசனது சகல புத்தங்களையும் வாசித்திருக்கிறேன். அவரது பத்திகளையும் வாசித்திருக்கிறேன். அவரை நண்பராகவும் எழுத்தாளராகவும் அறிவேன். அவர் அவுஸ்திரேலியாவில் உதயம் என்ற பத்திரிகை நடத்தியபோது அதில் எழுதியிருக்கிறேன். போர்க்காலத்திலும், பின்னர் போர் முடிந்தகாலத்திலும் அவரது மீள்கட்டு . ஆனால், அதற்கும் நூலுக்கு தொடர்பில்லை என்பதால் அதைப்பேசவில்லை.
அவர் மிருக வைத்தியர். அதைப்பற்றி புத்தகம் எழுதியிருக்கிறர் . மிகவும் அழகான புத்தகம். அது தமிழுக்கு புதிது. அன்று கூட சொன்னார் அதைபற்றி எவரும் எழுதவில்லை என்று. அது தமிழுக்கு பொதுவான பண்பென்றேன். அதற்கு முதல், பிரசவத்தின் மன இறுக்கமான பெண்ணைப் பற்றி நாவல் எழுதியிருக்கிறார் . அதுபோல் எவரும் தமிழில் எழுதவில்லை
கானல்தேசம் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. ஈழத்தில் இருந்து வருவது இரண்டு வகையானவை. இயக்கத்தோடு இணைந்திருந்து . அதில் பெற்ற அனுபவங்களை உக்கிரமாக எழுதியது. அதாவது குணா கவியழகன்போல, தீபச்செல்வன். மற்றது போரால் அகதியாகி எல்லா நாடுகளிலும் சென்றவர்கள் தங்கள் அனுபவத்தை எழுதுவது. கனடா செல்வம் எழுதியிருக்கிறார். அவ்வளவு வேடிக்கையாக. அவலத்தை எழுதியிருக்கிறார். படித்தால் வேடிக்கை. ஆனால், வாசிப்பது குற்ற உணர்வைக் கொடுக்கும். இப்படியுமா மனிதர்களை நடத்துவார்கள் என நினைக்கத் தோன்றும்.
இந்த நாவல் இரண்டிற்கும் வேறுபட்டது. போரையோ போரின் அவலங்களையோ சொல்லவில்லை. வெளிநாட்டிற்கு போனவர்களது செயல்கள். ஆயுதக் கொள்வனவுக்கு நிதி திரட்டுவது அதை நாட்டுக்கு கொண்டு செல்வது அதன் சிக்கல்கள்- அவர்கள் மேல் நம்பிக்கையீனம் கொண்டு இவர்கள்மீது இயக்கம் எப்படி கண்காணிக்கிறது. இவர்கள் போராளிகள் அல்ல. போராளிகளுக்கு உதவியவர்கள். ஆனால், இவர்கள் சிலர் துரோகியாக்கப் பட்டிருக்கிறார்கள்- கொல்லப்பட்டிருக்கிறார்கள்- பல்வேறு வழக்குகளில் அகப்பட்டுள்ளார்கள்.
இந்தக் கதையின் கதாநாயகன் அசோகன் சந்தோசமாக இருக்க விரும்புகிறான் ஜாலியாக பாலைவனத்தைப் பார்க்க விரும்புகிறான். பாலைவனம் அவுஸ்திரேலியாவில் வரண்டிருப்பதால் இந்தியாவில் பார்ப்போமென நினைக்கிறான். குடி – பாலின்பத்தில் ஈடுபாடுடன் வாழ்பவன். சூழ்நிலையால் உள்ளே இழுக்கப்படுகிறான் – சிக்கிக்கொள்கிறான். அப்பொழுது தனது அடையாளம் குறித்தும் தன்னை இயக்குபவர்கள் பக்கம்போகிறேன் என தடுமாற்றம் கொள்கின்றான்.
குறிப்பாக அவுஸ்திரேலியாவில் இவர்கள் நிதி சேர்க்கிறார்கள். மற்றும் இந்தியாவின் கண்காணிப்பு எப்படியிருக்கிறது என்ற விடயங்கள் எழுதப்பட்டிருக்கின்றன..
நாவலாக அணுகும்போது சம்பவங்களாக செய்திகளாக சொல்லப்படுகிறது. சில இடங்களில் தீவிரமாக வருகிறது . பொதுவான ஈழநாவலில் இருந்து வேறுபடுகிறது. இயக்கம் தொடர்பாக செய்திகளை அவர்களே உறுதிப்படுத்தவேண்டும்.
இந்த நாவலை வாசித்தபோது சிண்ட்லர் லிஸ்ட் என்ற நாவல் மனதில் வந்து போகிறது . சிண்ட்லர் ஜாலியாக வியாபாரம் செய்ய வந்தவன். பிற்காலத்தில் சூழ்நிலையால் பலரைக் காப்பாற்றுகிறான். வாணிகம் காரணமாக செய்த விடயங்களையே மனிதர்களைக் காப்பாற்றவும் பின்பு செய்கிறான். இங்கு அசோகன் அப்படி பெரிதாக செய்யாவிடிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தெரிகிறது.
போரை விவரிக்காத, ஆனால், போரின் விளைவுகளை சொல்லும் நாவல் கானல்தேசம் . போரின் துயரங்களை விவரித்த நாவல்கள் பல வந்தன . இரண்டாவது, போரில் எந்தநாவலும் கிட்லரின் பக்கத்து விடயங்களை இராஜதந்திரம் பற்றி எழுதப்படவில்லை.
இப்பொழுதுதான் யுத்தத்தை வேறு கோணத்தில் பார்க்கும் நூல்கள் வருகின்றன . தனிநபருக்கு ஏற்பட்ட விடயங்களை பேசுகிறது .
போராளிகள் அமைப்பை மட்டும் குறை சொல்லமுடியாது. போராட்ட அமைப்பு குறித்து ஏன் இப்படிச் செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. மேலும் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பது கேள்வி ஆனால், அதன் பாதிப்பு அதிகம்.
அ முத்துலிங்கம் போரின் முன்பகுதியை எழுதுகிறார். ஆனால், போரைப்பற்றி தெரிந்துகொண்டவர்.
தனிநபராக பணம் சேகரித்தல் – கையாடல் என பலவிடயங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இது அதிர்ச்சியாகவும் இருக்கு. அதேவேளையில் இப்படியான இயக்கங்களில் இது நடந்திருக்கிறது.
நாவலின் தொடக்கமும் முடிவும் நன்றாக இருக்கிறது.
இலங்கை எங்களுக்கு பக்கத்தில் இருக்கிறது. எனது அப்பா அடிக்கடி போய் வருவார். இலங்கைப்பொருட்கள் எங்கள் வீட்டில் இருக்கும். ஆனால் இலங்கையில் நடந்த உண்மையில் இருந்து விலகி இருந்திருக்கிறோம் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
கனடாவிற்கு நான்போனபோது அங்கு ஒரு நண்பர் சட்டையைக் கழட்டிக்காட்டியபோது வரிக்குதிரைபோல காயங்கள் இருந்ததை கண்டேன். ஆனால் , எந்த கழிவிரக்கமும் காட்டாது பேசியபடியிருக்கிறார். நான் இலங்கையில் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்றபோது ஒவ்வொரு இடமும் நகரமும் ஒவ்வொரு மாதிரி இருக்கு.
கிராமங்களுக்கு சென்று பார்த்தபோது அங்கு மக்கள் துன்பப்படுவதைப்பார்த்தேன். இயக்கத்தில் இருந்தவர்கள் உடலுறுப்புகள் அற்று இருக்கிறார்கள். உதவிகளற்று வாழ்கிறார்கள். பேரவலமாக தெரிந்தது. இனிமேல் குழந்தைகள் பெண்களது கதைகள் வரவேண்டும்.
பேராசியர் இராமசாமி :
உலகத்தில் 90 இற்குப்பின் அரசுகளிடம் மனிதமற்றுவிட்டது . எதற்காகவும் கொலை செய்யலாம் என்ற நிலை ஏற்படுகிறது. அப்படியான அரசுகள் வந்த பின்பு போராட்டக் காரணங்கள் மாறிவிட்டது. இதன்பின் போராட்டத்தின் வடிவம் மாறியிருக்கவேண்டும். பெரும்பாலான ஈழத்து நாவல்கள் தமிழகத்தவர்களை நோக்கி எழுதப்படுகிறது .
தமிழகத்தவர்கள் தமிழக அரசுகளின் மூலம்தான் நெருக்கடி கொடுக்க முடியும். ஆனால் எமது தமிழர்களால் எமது அரசாங்கத்தோடு பேசமுடியாது. அப்படியான நிலையில் எப்படி இந்தியஅரசிற்கு நெருக்கடி கொடுக்க முடியும்?
தற்போதைய அரசுகள் வித்தியாசமானவை. விடுதலைப்போராட்டமென்பது அர்த்தமற்றுவிட்டது. தற்பொழுது எல்லா நாடுகளும் ஒன்றையொன்று சார்ந்தே உள்ளன. அப்பொழுது ஏன் விடுதலை? இப்படியான நிலையில் எமது எழுத்துகள் மாறவேண்டும். குணா கவிழகன் வெளிநாட்டிற்கு சென்ற பிறகு அவரது எழுத்து மாறிவருகிறது. தேவகாந்தனது எழுத்துக்கள் கொஞ்சம் நகர்ந்தாலும் இன்னமும் சமாந்திரமாக எழுதிவருகிறார்.
நடேசன்: ( ஏற்புரை)
நான் எழுதும் எழுத்துகள் பலரது தோலின் கீழ் சென்று உறைக்கிறது. காரணம் எனது வரலாறு அப்படி!
84-87 காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து மருத்துவ சேவைகளில் ஈடுபட்டேன்.
அப்பொழுது ஈழப்போராட்டத்தின் இருட்டான பக்கத்தைப் பார்க்கமுடிந்தது. இயக்கங்களின் அழிவையும் உட்கொலைகளையும் பார்த்தேன். ஆனால், இயக்கப்போராட்டம் இப்படி அழிந்துபோகும் என அன்று நினைக்காது விட்டாலும் , போகும் பாதை சரியானதல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். அவுஸ்திரேலியாவுக்குச் சென்றாலும் எதிர்ப்புகள் மத்தியில் பத்திரிகைத்துறையில் ஈடுபட்டேன்.
இந்த நாவலின் முக்கிய நோக்கம் என்ன?
இது தமிழ்நாட்டினருக்காக எழுதப்பட்டது.
இந்த இடத்தில் ஒரு சிறிய கதையாகச் சொல்ல விரும்புகிறேன். இரண்டு பிள்ளைகள் உள்ள ஒரு குடும்பத்தினுள் வெளியிலிருந்து ஒருவர் தாக்க வந்தால் தாய் இரண்டு குழந்தைகளையும் கையில் எடுத்தபடி பின்பக்கத்தால் செல்லுவார். தந்தை கதிரை அல்லது கத்தியுடன் வருபவரைத் தாக்குவார். அல்லது அதற்கு முயல்வார். என்னைப் பொறுத்தவரை தாயின் செயல் முக்கியமானது. தாயும் தந்தையும் சமமாகக் குழந்தையை நேசித்தாலும் இருவரது செயல்களும் வேறுபாடானது. நான் தாயின் கோணத்தில் பார்க்கிறேன். ஆனால் , பலர் தந்தையாகப் பார்க்கிறார்கள். இந்தப்போரை இடையில் நிறுத்தியிருந்தால் நாம் பலவற்றைப் பெற்றிருக்கமுடியும். வித்தியாசமான விளைவுகளை நமக்குத் தந்திருக்கும்.
கடைசிப்போர் மிகத்துயரமானது அல்லவா? என்ற கவிஞர் பரமேஸ்வரியின கேள்விக்கு எனது பதில்:
ஆம் அது தெரிந்ததே. பல கிலோமீட்டர் தூரமான மன்னார் மற்றும் செட்டி குளத்திலிருந்து சாதாரண மக்களைப் போர்க்களத்திற்குக் கொண்டு சென்றார்கள் . அதைவிட இலங்கை அரசாங்கம் எப்படிப் போர் செய்யுமென்றது புரிந்திருந்தது. ஆரம்பப் போர் கிழக்கில் நடந்தது. சம்பூரில் பல்குழல் பீரங்கியால் அடித்த படம் எனக்குப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த இடம் முற்றாக எரிந்திருந்தது. அப்பொழுது எனக்குப் போர் எப்படி முடியும் என்பது தெரிந்து விட்டது. பாகிஸ்தானிலிருந்து ஒவ்வொரு கிழமையும் இதற்கான குண்டுகள் கொழும்புக்கு வந்து கொண்டிருந்தன . கைப்பற்றிய பல்குழல் பீரங்கியை இவர்களால் பாவிக்க முடியவில்லை . இதனால் போர் இப்படி முடியும் என்பது இவர்களுக்கு (விடுதலைப்புலிகளுக்கு) தெரிந்திருந்தது. இவர்கள் வெளிநாடுகளையும் தமிழ்நாட்டையும் நம்பியிருந்தார்கள் .
நண்பர் ராமகிருஸ்ணன் சொன்னதுபோல் தகவல்கள் எவ்வளவு உண்மையென்று நான் இங்கு சொல்லவில்லை . ஆனால் , எனக்கு இயக்கத்தவர் மற்றும் இராணுவத்தினர் அரசு இலங்கைஅரசியல்வாதிகள் இந்திய அரசியல்வாதிகளை சந்திக்கும் வாய்ப்பிருந்தது.
இந்திய இரு அரசியல்வாதிகள் தொடர்ந்து சண்டை பிடிக்குமாறு சொன்னதை இலங்கை அரசு ஒட்டுக்கேட்டு அதை எனக்கு அமைச்சர் பசில் இராஜபக்சா ( 20 பேர் உடன் இருந்தனர்) காட்டினார். இதைத் தமிழக எம் பி ஒருவரைச் சந்தித்து உறுதிப்படுத்தினேன். தற்போது விடுதலைப்புலிகள் சார்பாக எழுதியவர்கள் பலருக்குப் பல விடயங்கள் தெரியாது. யானையைப் பார்த்த குருடர்களாக உணர்வுகளைக் கலந்து வீடு கட்டுவார்கள்.
எனது நாவலில் உள்ள மற்ற விடயம் வெளிநாடுகளில் புலிகள் பணம் சேர்ப்பது. பொதுவாக மக்களை அறிந்தவர்களை வைத்து பணம் சேர்த்து , அதன் பின்பு ஆயுதங்களை வாங்குபவர்கள். பணத்தைக்கையாளுபவர்களைப் பணம் திரட்டுபவர்களுக்குத் தெரியாது. ஆனால், இந்த இரண்டு பகுதியினையும் உளவு பார்ப்பதற்குச் சிலர் வேண்டும் . அந்த இடத்தில் எனது கதாநாயகன் அசோகன்போல் சிலர் தேவை . அப்படியானவர்கள் விடுதலைப்புலிகளிலிருந்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களை உச்சிவிட்டு பணத்தைத் தனதாக்கிய பலர் இருக்கிறார்கள். இலங்கைத் தமிழர் மட்டுமல்ல, இந்தியர்- மலேசியர் பலர் இருக்கிறார்கள் .
பழையதை நான் கிளறுவதாகப் பலர் சொல்வார்கள் ஆனால், அந்த தகவல்கள் எமது மக்களுக்குத் தேவை.
உதாரணமாகப் பிரபாகரன் உயிரோடு இருக்கிறர் எனச் சொல்வது சிறிய விடயம். ஆனால், அது பலருக்குப் பல வகையில் உதவுகிறது. தங்களது பணத்தைப் பாதுகாக்க உதவுகிறது .
எனது நண்பர் ஒருவர் கேட்டது மாதிரி பத்து வருடங்கள் ஒளித்து இருப்பவரால் மக்களுக்கு என்ன பிரயோசனம் என்பது சரிதானே? ஆனால், இலங்கை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருக்க முயல்கிறது . இதனால் யார் அல்லல் படுவது?
இந்த நிகழ்வை ஒழுங்கு செய்த காலச்சுவடு பதிப்பகத்தினருக்கும் உரிமையாளர் கண்ணனுக்கும் எனது நன்றிகள். அத்துடன் இந்த நிகழ்விற்கு வந்த எழுத்தாளர் மற்றும் நண்பர்களுக்கு மனமார்ந்த அன்பு.
—0—-
மறுமொழியொன்றை இடுங்கள்