பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் சமூக யதார்த்தமும் இலக்கிய புனைவும்.

புனைவை வாசிக்கும்போது தனிமனிதர்களையும் அபுனைவுகளை வாசிக்கும்போது சமூகத்தையும் புரிந்துகொள்ள முடியும் என்பதாககேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பேராசிரியர் நுஃமானின் அபுனைவு எனக்குப் புனைவுகளைப் புரிய வைத்தது என்று சொல்லலாம்.

நான் இலக்கியத்தை முறையாகப் பயின்றவனில்லை. சுயம்புலிங்கமாகப் புரிந்துகொண்டவன் என்பதால் “சமூக யதார்த்தமும் இலக்கிய புனைவும்” என்ற பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் புத்தகம் தெளிவைக்கொடுத்தது.

தமிழகத்திற்கு 84இல் முதல் முதலாக சென்ற நான், இராமேஸ்வரத்தில் இறங்கி அங்கும், அதன் பின்பு சென்னை சென்ற இரயிலிலும் கோட்டுப் போட்டஆண்களையும் பொன்னிறப் பெண்களையும் தேடி ஏமாற்றமடைந்தேன் என எனது எக்‌ஸைல் புத்தகத்தில் எழுதியிருந்தேன். நான் பார்த்த சினிமா ஊடகம் எனக்கு அவ்விதமான தேடலை உருவாக்கியது. அதேபோல் கவிதாயினி அனாரை சந்தித்தபோது, ” நான் கவிதையை ஊன்றிப் படிப்பவனில்லை “என்றேன். இது உங்களுக்குப் படிக்க இலகுவாக இருக்கும் எனச்சொல்லியவாறு, ‘கிழக்கிலங்கை நாட்டுப் பாடல்கள்’ என்ற நூலை கையில் தந்தார். வாசித்தபோது அதில் உள்ள பெண்களும் ஆண்களும் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடும் பாடல்கள் எனக்கு வியப்பைக் கொடுத்தன . பெண் விடுதலையான சமூகத்தை அந்த நாட்டுப் பாடல்களில் பார்த்தேன்.

புனைவிற்கும் சமூக யதார்த்தத்திற்கும் தூரம் அதிகம் எனத் தெரிந்தாலும் சமூகத்திலிருந்து இலக்கியம் இவ்வளவு தூரம் தள்ளியிருக்குமென்பதை நாட்டார் இலக்கியத்தில் காதல் பாடல்களில் – யதார்த்தத்தையும் புனைவையும் எடுத்து பேராசிரியர் நுஃமான் தெளிவாகக் கூறியுள்ளார். எமது இஸ்லாமியச் சமூகத்தில் இப்படியான விடயங்கள் நடப்பதற்கான சாத்தியமில்லை . அதாவது இவைகள் காதலர்களது படைப்புக்கள் அல்ல.முக்கியமாகக் கிழக்கிலங்கையில் விவசாய வேலைகளில் ஆண்களே ஈடுபடுவதாகவும் இப்படியான சினிமாத்தனமான பாடல்களுக்கு இடமில்லை என்கிறார்.

உதாரணமாக பெண்பாடுவது போல்

“ கச்சான் அடிக்க கயல்மீன் குதி பாய

மச்சானுக்கென்று வளர்த்தேன் குரும்ப முலை “

இப்படியான பாடல் பெண்ணால் பாடியிருக்க முடியாது. ஆண் கவிஞர்களது புனைவு என்கிறார் .

இதே தர்க்கத்தை நாம் வைத்தால்,
நமது அகநானூறு சங்கப் பாடல்கள் எல்லாம் சமூகத்தின் யதார்த்தத்தை விலகி நடந்த புனைவாக வேண்டும் . சங்ககால எழுத்துகளை வைத்து அந்தக் காலத்தை அறிய எத்தனை பேர் ஆய்வுசெய்தார்கள் ?

அகநானுறை விடுங்கள். புறநானுறை உண்மையென நம்பி ஈழத்தில் புதிதாக மீண்டுமொரு சங்க காலத்தைப் படைக்க இரத்தத்தையும் எலும்புகளையும் நிலமெங்கும் வாரியிறைத்தோமே?

புனைவை ஆய்வது பரவாயில்லை. ஆனால், புனைவை நிஜம் எனச்சொல்வதுதானே இங்கே உதைக்கிறது . இந்தியர்கள்,  ராமன் இருந்த இடம், கடந்த இடமென்பதுபோல் நாமும் கானலைத் தேடி தாகத்துடன் அலைந்தோம்.

சுந்தர ராமசாமியின் நாவல்கள் மூன்றையும் சில கதைகளையும் வாசித்திருந்த எனக்கு, அவரது காற்றில் கலந்த பேரோசை என்ற கட்டுரைத் தொகுப்பு பற்றிய கட்டுரை புதிதாக இருந்தது.

இதில் மிகவும் பிடித்த ஒரு விடயம் சு.ரா உட்பட பல அறிஞர்கள் தமிழ்நாட்டு அரசியல், கலாச்சாரம் , சூழல் பற்றி நம்பிக்கையற்ற தீவிர விமர்சனங்களை வைக்கிறார்கள். இங்கு ஒன்றுமே உருப்படாது என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதனால் ஒதுங்கிவிட்டனர் . அதாவது முற்றிலும் வணிகசக்திகளின் கைகளில் வாசகனை ஒப்படைத்துவிட்டு, இந்த இலக்கிய மேதைகள் மகத்தான இலக்கியம் படைக்கும் கற்பனை உலகில் சஞ்சரிக்கின்றனர்.

பல தமிழ்நாட்டு எழுத்தாளர்களைச் சந்தித்த, எனக்கு இது முகத்தில் அறைந்ததுபோல எவ்வளவு ஆணித்தரமான வார்த்தைகள் என்பது புரிந்தது. நுஃமானுடைய இந்தக் கட்டுரையில் மு. தளையசிங்கமும் பாரதியும் அலசப்படுகிறார்கள்.

சமகால இலங்கைத் தமிழ்கவிதையில் இன முரண்பாட்டின் தாக்கம்
என்பதும் ஒரு முக்கியமான கட்டுரை.
“மரணத்துள் வாழ்வோம்” என்ற 31 கவிஞர்களால் தொகுப்பட்டகவிதை நூல் தமிழ்த்தேசியம் மற்றும் இன முரண்பாட்டைப் பேசுகிறது . இந்த 31கவிஞர்களில் மூவர் மட்டுமே கிழக்கிலங்கையை சேர்ந்தவர்கள். ஒருவர் மலையகத்தவர். ஒருவர் முஸ்லீம் சமூகத்தவர் ஏனையர் யாழ்ப்பாணத்தவர். அதாவது கவிதை நூல் உருவாக்கத்திலே வடக்கைச் சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்தினார்கள். ( பக்கம்89-90) இதன் பின்பு 2002 இல் 50இஸ்லாமியக் கவிஞர்கள் தலையைில் “மீசான் கட்டையில் மீள எழும் பாடல்கள்” என்ற 50 கவிஞர்களின் கவிதைத் தொகுதி வந்தது. இதுவிடுதலைப்புலிகளின் ஒடுக்கு முறை, வன் செயல்களால் ஏற்பட்ட கோபத்தைப்பேசியது. இதில் ஐந்து பேர் மட்டுமே யாழ்ப்பாணத்தவர்.

மேற்கண்ட கட்டுரையில் விடுதலைப்புலியில் போராளியாக சேர்க்கப்பட்ட சிறுவனைப் பார்த்து,
“உன்பாதங்களைக் காட்டு
கால்களை முத்தமிட
கவிஞன் விரும்புகிறான் “
எனப் புதுவை இரத்தினதுரையும்

“துப்பாக்கியை கைகளில் தந்து
போ போய் விடு
தேசப் பணிபுரி ,போர் செய் என்றனர்”

என்று சேரனும் சொல்வதாக எழுதுகிறார்.

ஈழத்துக்கவிஞர்களில் முக்கியமான இருவரது சிறுவர்களை ஆயுத இயக்கங்களில் சேர்பது அல்லது சேர்க்கப்படுவது பற்றிய முரண்பாடு தெரிகிறது.

எனக்குப் பிடித்த நாவலாசிரியரான தோப்பில் முகமது மீரான் நாவல் பற்றிய கட்டுரையும் இதில் உள்ளது.

மாப்பசானின் “பியரியும் ஜீனும்” என்ற நாவலையும் ஜானகிராமனது அம்மா வந்தாள் நாவலையும் ஒப்பு நோக்கி ஒரேவிதமாக இருப்பதாகக் மற்றொரு கட்டுரையில் கூறுகிறார்.

சட்டநாதனது சிறுகதைகள் பற்றிய திறனாய்வுக் கட்டுரையுள்ளது. அத்துடன் பலருக்கு எழுதிய முன்னுரைகள் உள்ளன. ஆழமானவை. அவை எழுத்தாளர்களது ஆளுமையை வெளிக்காட்டுகிறது.

இரவீந்திரநாத் தாகூரின் மதச்சார்பற்ற ஆன்மீகம் பற்றியவை ஆழமானது. பலரைப்பற்றி முக்கியமான கட்டுரைகள் இருக்கின்றன. இவற்றைப் படித்து தெரிந்து கொள்ளவேண்டும்.

இறுதியில் எனக்குப் புதிதாக இருந்தது-நவீனத் தமிழ் காப்பியங்கள் பற்றிய கட்டுரை .
நவீன காப்பியங்கள் படைத்தவர்கள் அதிகமில்லை எனக்கூறி ஈழத்தில் முருகையனையும் மஹாகவியையும் நவீன காப்பியத்தைப் படைத்தவர்களாக அடையாளப்படுத்துகிறார்.

பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் ஒரு கட்டுரை மல்லிகைக்கு 1967 இல் எழுதியது. மௌனியுடனான சந்திப்பு- 1985 -ஜானகி ராமனுக்கு அஞ்சலி- 1983, சட்டநாதன்பற்றிய கட்டுரை- 2015இப்படி 50 ஆண்டுகளில் எழுதியவற்றை 2017இல் காலச்சுவடு மூலம் பதிப்பித்துள்ளார். இன்று எழுதியதை நாளை புத்தகமாக்குபவர்கள் உள்ள காலத்தில் சமையல் பாஷையில் சொன்னால், பேராசிரியர் நுஃமான் மிகவும் ஸ்லோ குக்கர் . ஆனால், இறைச்சியை அப்படிச்சமைத்தால் நல்லாயிருக்கும் . எனக்கு புத்தகம் நாவல்போல் வாசிப்பதற்குப் பிடித்திருந்தது .
புத்தகத்தின் பின் அட்டையில் எழுதப்பட்டுள்ள வாசகம் மிகவும் பொருத்தமானது.
“வலுவான கோட்பாட்டு அடிப்படையில் நடுநிலையான கருத்துக்களை முன்வைக்க முயலும் இந்நூல் தமிழ் விமர்சன உலகின் முக்கியமான வரவாகும்”.

“பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் சமூக யதார்த்தமும் இலக்கிய புனைவும்.” மீது ஒரு மறுமொழி

  1. கனிவன்புடன் கரன் Avatar
    கனிவன்புடன் கரன்

    நல்ல பதிவு சேர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: