நடேசன்
சமீபத்தில் நியூசிலாந்து கிரைசேர்ச்சில்(Chiristchurch) ஐம்பது பேரை பள்ளிவாசலில் கொலை செய்த பிரன்ரன் ராறன்ட் (Brenton Tarrant) என்பவனின் அவுஸ்திரேலியரான தந்தை தனது சிறுவயதில் அஸ்பஸ்ரஸ்(Asbestos) தொழிற்சாலையில் வேலை செய்ததால் நோய் வந்து இறந்தார். தாய் பாடசாலை ஆசிரியை. இவர்கள் நியூ சவுத் வேல்ஸ்ஸை சேர்ந்த சிறு நகரமான கிராவ்ரன்(Grafton) என்ற ஊரில் வசித்தவர்கள். கிராவ்ரன், கிளரன்ஸ் ஆற்றருகே உள்ளது . இங்கு ஜக்கரண்டா மரம் பூக்கும் காலத்தில் திருவிழா நடக்கும்.
இந்த நகரத்தில் பிறந்து வளர்ந்த பிரன்ரன் ராறன்ட் எந்தவொரு தொழிற் கல்வியோ அல்லது பல்கலைக்கழக படிப்புமோ அற்று, உடற்பயிற்சியாளராக வேலை கிடைத்த போதும், இருபது வயதில் அவுஸ்திரேலியாவை விட்டு, நியூ சிலாந்து சென்றான். அவனையோ அவனது செயல்களையோ எந்தவொரு நியாயப்படுத்தலும் நான் செய்யவில்லை . ஆனால் வேலையற்ற வெள்ளை இனத்தின் பிரதிநிதியாகவே நாட்டை விட்டு வெளியேறுகிறான். இப்படியானவர்கள் தற்பொழுது அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அதிகமாக இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தற்பொழுது ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் ஆதரவாளர்கள். பிரித்தானியா, ஐரோப்பாவில் இருந்து வெளியேறுவதற்கு வாக்களித்தவர்கள். பிரான்சில் மஞ்சள் உடையணிந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடுபவர்கள்.
மற்றைய ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரிகளை ஆதரிப்பவர்களும் இவர்களே. தற்பொழுது இவர்கள் தங்களது எதிர்ச் சக்தியாக நினைப்பது இஸ்லாமியத் தீவிரவாதத்தையும் தற்போது ஐரோப்பாவினுள் இஸ்லாமிய அகதிகளையுமே . தங்களது நாடுகளில் தாம் ஏழ்மையாக வேலையற்று இருப்பதை ஒரு தனிப்பட்ட அவமானமாக( Humilation) நினைக்கிறார்கள்.
ஆனால் , இவர்களது நிலைக்கு உண்மையான காரணம் இவர்களுக்குத் தெரியவில்லை.
தற்போதைய உலகப் பொருளாதார நிலை, இயந்திர மயமாக்கலால் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் தேவை குறைந்துவிட்டது. நான் வசிக்கும் மெல்பனில் கார் , துணி வகைகள் மற்றும் காலணிகள் உற்பத்தி தொழிற்சாலைகள் நான் இங்கு வந்த காலத்தில் இருந்தன. ஆனால், இப்பொழுது அவைகள் கிடையாது. அத்துடன் மிகவும் விசேடமான தொழிற் திறன் இல்லாதபோது வேலை எடுப்பதும் கடினம் .
பயங்கரவாதம், இலங்கையில் தலைதூக்கியதை நாம் பார்த்தது மட்டுமல்லாது அதை ஒவ்வொருவரும் ஏதோவொருகாலத்தில் மனதளவிலாவது ஆதரித்தோம். அதேபோல் தற்போதைய இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதலுக்கும் அவர்களின் தரப்பில் ஆதரவுண்டு. தமிழர்கள் ஒருகாலத்தில் கப்பல் கட்டி வாணிபம் செய்தது மட்டுமல்லாமல், தென்கிழக்காசியாவில் பல இடங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆண்டார்கள்.
சோழர்கள் வரலாறு நமக்குத் தெரியும் . இதற்கப்பால் நமது மொழி கலாச்சாரம் என்பன மிகவும் பழமையானது . அப்படியான வரலாற்றுப் பெருமை வாய்ந்த நாம் சிங்கள ஆட்சியாளர்களால் அவமானமும் அழிவும் அடைந்தோம். இப்படியான அவமானத்தைத் தாங்கமுடியாது ஆயுதமெடுத்து போராடினோம்.
சிறிய தொகையான தமிழர்களை ஒடுக்குவதற்கு இலங்கை அரசிற்கு எவ்வளவு காலம் தேவைப்பட்டது? எத்தனை நாடுகளின் உதவி தேவையாக இருந்தது?
இந்த அரபிய இஸ்லாமியர், முகமது நபிகளின் காலத்தில் அத்திலாந்திக் சமுத்திரத்திலிருந்து இந்தியாவரையும் மிகவும் பரந்த பேரரசை ஆண்டவர்கள். நிலப்பரப்பில் மட்டுமல்ல தென்கிழக்காசியாவிற்கு தங்கள் மதத்தையும் கொண்டு சென்றவர்கள். மத்தியகாலத்தில் ஐரோப்பியர் குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டிருந்த காலத்தில் மிகவும் உன்னதமான கலாச்சாரத்துடன் விஞ்ஞானம் , கணிதம், கட்டிடக்கலை என்பவற்றை வளர்த்தவர்கள்.
இப்படியான சாம்ராச்சியம்ஜெங்கிஸ்கானால் அழிக்கப்பட்ட பின்பும், மீண்டும் பரந்த இந்திய நிலப்பரப்பையும் தற்போதைய ஸ்பெயின் – போர்த்துகல் என்ற ஐபிரிய குடாநாட்டை ஆண்டார்கள். இறுதியில் துருக்கியர்கள் வட ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பாவின் பல பகுதிகளை ஓட்டமான் அரசாக முதலாவது மகாயுத்தம்வரை ஆண்டார்கள் . இப்படி ஆண்ட சமூகம் வாழ்ந்த பிரதேசங்கள் 1920 ஆண்டின் பின்பு பிரித்தானியர் மற்றும் பிரான்சியர்களால் சிறு சிறு நாடுகளாகப் பிரிக்கப்பட்டன.
தற்போதைய ஜோர்தான் ,லெபனான் மற்றும் வளைகுடா நாடுகள், வரலாற்றின் வரைபடத்தில் இல்லாத நாடுகள். அதைவிட சிரியா, ஈராக் இரண்டும் லாவன்ட் என்ற ஒரே பிரதேசம். இதையே ஐசில்(ISIL) தீவிரவாதிகள் தங்களது பெயரில் வைத்திருக்கிறார்கள். இப்படி மேற்கத்தையரால் நாடுகள் பிரிக்கப்பட்டதன் காரணம் தங்களுக்கு உதவியவர்களுக்கு அரசுரிமையைக் கொடுத்து கைப்பாவையாக வைத்திருப்பதுடன், உலகத்தை இயக்கும் எண்ணெய் அரபு நாடுகளிலிருந்ததால் அதை நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கே ஆகும். இதற்கப்பால் பல நூற்றாண்டுகளாக ஜெருசலேமை கைப்பற்றச் சிலுவை யுத்தம் நடத்தி, இறுதியில் தோற்ற ஐரோப்பியர், இரண்டாம் உலகப்போரின் பின்பு அதை யூதர்களது நாடாக்கியது மட்டுமல்லாமல், அங்கிருந்த பாலஸ்தீனியர்களையும் வெளியேற்றினர்.
இந்த நடவடிக்கைகளால் ஏற்பட்ட அவமானம் இஸ்லாமியர்களது மனதிலும் புகைகிறது . இதன் விளைவே தற்போது நாம் பார்க்கும் இஸ்லாமிய பயங்கரவாதம். இதை மேலும் குறிப்பாகச் சொல்வதென்றால் சுன்னி இஸ்லாமியப் பயங்கரவாதம். இடத்திற்கு காலத்திற்கு வேறுபட்டாலும் அல்கைடா தலிபான் இப்பொழுது ஐசில் பல பெயர்களில் காணலாம்.
சில நாட்களுக்கு முன்பு நியூசிலாந்தில் பார்த்த வலதுசாரி வெள்ளையர்களினது பயங்கரவாதத்தின் ஊற்றுவாய், தற்பொழுது சிரியாவில் ஏற்பட்ட யுத்தத்தால் ஐரோப்பாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமிய அகதிகளால் உருவாகியது. இது உடனடிக்காரணமாக இருந்தாலும், ஐரோப்பிய அமெரிக்க வெள்ளையினத்தினரது வெறுப்பு நிலையின் உண்மைக்காரணம் வேறு.
பல ஆண்டுகளாக அமெரிக்காவில் பொருளாதாரம், முக்கியமாகக் கைத்தொழில் நகரங்களிலிருந்து வெளியேறிவிட்டது. கைத்தொழில் புரட்சிக்கு முக்கியமான இரும்புத் தொழில் அமெரிக்காவை விட்டு மற்றைய நாடுகளுக்குச் சென்று விட்டது. அமெரிக்காவின் இரும்பு வெளிநாடுகளில் இருந்து வருகிறது. அதேவேளையில் அமெரிக்காவின் தொழில் நுட்ப நிறுவனங்கள் அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மேற்கு கரை மாநிலங்களுக்குப் போய்விட்டது. இந்தக் காரணங்களால் வெள்ளை இன மக்களிடையே வறுமை, வேலையின்மை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை அமெரிக்காவில் மட்டுமல்ல ஐரோப்பா, அவுஸ்திரேலியாவிலும் உள்ளது . ஆனால், அவுஸ்திரேலியாவில் உள்ள பலமான சமூக பாதுகாப்பு திட்டமும் இலவச மருத்துவமும் சமூக கட்டுமானத்தை பாதுகாக்கிறது.
இத்தகைய நெருக்கடியான காலத்தில், தமது நாடுகளில் வெள்ளை இனத்தவர்கள் அந்நியப்படுவதாக உணர்கிறார்கள். தங்களது வேலைகள் வெளியிலிருந்து வந்தவர்களிடம் பறிபோகிறது என நினைக்கிறார்கள்.
இங்கே ஒரு கேள்வி – மற்றைய சீன – இந்திய வந்தேறியவர்களிலும் இஸ்லாமியர் ஏன் தாக்கப்படுகிறார்கள்?
இந்தியர்கள் – சீனர்கள் மீதும் இனவாதம் உள்ளது. ஆங்காங்கு தாக்குதல்களும் நடைபெறுகிறது. ஆனால் , சீனா – இந்தியா தற்பொழுது பெரிய நாடுகள். சகல நாடுகளும் அவர்களுடன் வியாபாரம் செய்ய விரும்புகின்றன. அதற்கப்பால் இஸ்லாமியர்கள் தங்களை உடை கலாச்சாரம் என முற்றிலும் வேறுபடுத்தி தனிமையாகிறார்கள்.
இஸ்லாமியத் தீவிரவாதம் என்பது எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிகிறது. அத்துடன் சில வலதுசாரி அரசியல்வாதிகள் இஸ்லாமிய வெறுப்பை தங்களது அரசியலுக்காக விதைக்கிறார்கள். இவற்றால் இங்கே சாதாரண அப்பாவி முஸ்லீம் மக்கள் வெறுக்கப்படுகிறார்கள். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது . அதாவது எமது நாட்டில் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளுக்கான விளைவை நம் சாதாரண தமிழர்கள் எதிர்கொண்டதுபோல் ! அத்துடன் எந்த தீவிரவாதிகளும் எங்கோ நடக்கும் ஐசில் தீவிரவாதத்திற்கும் இங்கள்ள அப்பாவி இஸ்லாமிய மக்களுக்கும் என்ன தொடர்பு எனத் தர்க்க ரீதியாக செயல் படுவதில்லை. அவர்களுக்கு சாதாரண மக்கள் இலகுவான குறி என்பதுடன் பல மடங்கு விளம்பரமும் கிடைக்கிறது.
இங்கே நான் முக்கியமாக எடுத்த விடயம், வலது சாரி வெள்ளையின தீவிரவாதிக்கும் இஸ்லாமியத் தீவிரவாதியினதும் மனநிலையொன்றே. இரண்டு பகுதியினரும் அவமானப்படுத்தப்பட்டதால் மற்றவர்களை பழிவாங்கும் உணர்வால் தொழில் படுகிறார்கள். ஆனால் , இவர்களால் பாதிப்படைவது சாதாரண மக்களே. மேலும் இவர்களது செயல்கள் இவர்கள் சார்ந்த எவருக்கும் நன்மை தரப்போவதில்லை.
இந்த இரண்டு தீவிரவாதமும் தொடர்ந்திருக்கும். சம்பவங்களும் பாதிப்பும் தொடரும். அரசாங்கங்கள் முன்கூட்டியே தடுக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு குழுக்களிடம் ஊடுருவிச் செயல்பட்டால், துப்பாக்கிகளை தடைசெய்யமுடியாவிட்டாலும் , கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் பாதிப்பைக் குறைக்கமுடியும் . ஆனால் தீவிரவாதம் தொடரும்.
இந்தக் கட்டுரையில் ஒன்றை சொல்லாது முடிக்க முடியாது. தற்போதைய நியூ சிலாந்து பிரதமர் நடந்துகொண்ட முறை மிகவும் உன்னதமானது. மற்றய நாட்டின் தலைவர்களுக்கு வருங்காலத்தில் இந்த இளவயதான பிரதமர் உதாரணமாகும்.
மறுமொழியொன்றை இடுங்கள்