அறச்சீற்றமா? ஆற்றாமையா?


ஜெயமோகனுக்கு எதிராக ஈழத்தமிழர்கள் முக்கியமாக கவிஞர்களின் அறச்சீற்றம் ஆழிப் பேரலையென பொங்கியெழுந்ததைக் கண்டு பயந்து போய்விட்டேன் . 2004 மார்கழியை நினைவு படுத்தியது. ஐரோப்பாவில் இருந்து பெருந்தலை எனது பெயரையும் இழுத்து விட்டது. இது அடுக்குமா? ஒருவரின் நண்பனாக இருப்பது குற்றமா ? வேறொருவர் அல்லக்கை என ஒரு நக்கல்.

ஜெயமோகனது நண்பனாக இருப்பது மட்டும் நல்ல நாவல் எழுதுவதற்கு போதுமா என இலக்கியப் பெரும்தலை என்னை இழுத்துவிட்டிருந்தார். அதாவது கம்பன் வீட்டு கைத்தறி கணக்கில்.எனது நாவல்கள் நல்லதல்ல என்பதா அல்லது ஜெயமோகனோடு நான் நண்பராக இருக்கக்கூடாது என்பதா என்று எனக்குப் புரியவில்லை. பேராசிரியர் சிவத்தம்பியின் எழுத்து மாதிரி சிக்கலாக இருந்தது.

விடயத்திற்கு வருவோம்.

இரவு மெயில் வண்டியில் நித்திரைபோல் பாசாங்கு செய்தபடி முன்சீட்டில் கால் போட்டபடி இருக்கும் தமிழர்களை தட்டி “நகப்பாங்” என அநூராதபுரத்தில் எழுப்புவது சிங்களவர்கள்தான். அதுபோல் ஜெயமோகன் தனது வார்த்தையால் தட்டி எழுப்பிவிட்டார் .

இப்படி காயடைந்த பாம்பாகிய காரணமென்ன?

நமது முழங்கையில் சிறிது தட்டினால் கை விறைப்பது போன்றது.

இதுவும் முக்கியமாக 200 கவிஞர்கள் இலங்கைக்கு அதிகம். அதைவிட நகரத்திற்கு அதிக தொகை என்றிருக்கிறார் . கவிஞர்கள் அதிகமானால் மகளிர் கற்புக்கு பாதிப்பு என்றும் கூறிவிட்டார்.எந்தக் கவிஞரை நினைத்து கூறினாலும் வார்த்தைகள் சிக்கலாகிவிட்டது- உண்மைதான் .

எல்லோரும் பொங்கிவிட்டார்கள் . ஈழத்தேசியவாதிகள் – ஏற்கனவே இந்தியாவோடு கோபத்தில் இருந்தவர்கள் அறம் பாடினார்கள் . தலித் ஆதரவினர் மீசை துடித்தனர் . இஸ்லாமிய கவிஞர்கள் நல்ல வேளை அறம் பாடியதோடு நிறுத்திவிட்டார்கள்: எனக்குள்ளே பயம் சல்மான் ருஸ்டி லெவலுக்கு பிரச்சனை எகிறி விடுமோ என . இடதுசாரிகளும் எகிறினார்கள். முகநூல் எங்கும் இரத்தம் தசை வாடையடித்தது . இறந்த குதிரைகள் யானைகளின் உடல்கள் அகற்றப்படாத போர்க்களமாக சில நாட்கள் இருந்தது.

விடயத்தை நிதானமாக புரிந்துகொள்ள பல நாட்கள் எடுத்தது.

எழுத்தாளர்கள் அரசியல்வாதிகள்போல் அல்ல. மேடைக்குப் புதியவர்கள். சுவைக்காக சில வார்த்தைகளை சேர்ப்பார்கள்.

இதேமாதிரி எஸ்பொ சொன்னதை கேட்டபோது அது கள்ளுக்கு கருவாடு மாதிரி என்று சிரித்தார்.

அன்ரன் பாலசிங்கம் ஒரு தடவை “ சந்திரிகா ஏதோ பொத்திப் பொத்தி வைச்சிருக்கிறாவாம். அதைப்பீரிஸூக்கு மட்டும்தான் காட்டுவாராம்” என்றார். அந்தப் பேச்சுக்கும் விசிலடித்தவர்கள்தான் நமது மக்கள்.

இப்படி பலரது பேச்சுகளை பல தடவைகள் கேட்டப் புல்லரித்த சமூகம் நாம்.

அதை விடுங்கள். அது அரசியலில்.

2009 இல் 400000 மக்களை ஆட்டு மந்தையை வளைப்பதுபோல வளைத்துக்கொண்டு யுத்த பூமிக்கு கொண்டு சென்றபோது – நாம் அறம் பாடவில்லை. எதிர்ப்புக்குரல் எழுப்பவில்லை.

பல நூறு வருடங்களாக வடக்கில் இருந்த இஸ்லாமியரை இருப்பிடத்தை விட்டு துரத்தியபோது வராத அறச்சீற்றம் இப்போது மட்டும் எப்படிவந்தது?

இலங்கை அரசின்மீது எத்தனை கவிஞர்கள் அறம் பாடிக் கொண்டிருக்கிறார்கள்?

ஆனால் ஜெயமோகன் மீது, அதுவும் சாதாரணமாக எழுதுகோலை மட்டும் நம்பியிருக்கும் இந்தியாவின் ஒரு கோடியில் இருக்கும் ஒரு தனிமனிதன் மேல் ஏன் இந்தச் சீற்றமெல்லாம் வந்தது?

இங்கேதான் எமது சமூகத்தின் பலவீனத்தை பார்க்க வேண்டும்.

அதற்கு முன் ஜெயமோகன் தன்னை மட்டும் கொண்டாடும் எழுத்தளரல்ல .

இணையத்தில் வந்த கட்டுரை ஒன்றை உதயத்தில் பிரசுரித்தபின் பத்திரிகையை அவருக்கு அனுப்பினேன் . ‘என்ன அதிகம் ஆங்கிலமாக இருக்கு?” என்று ஒரு சன்மானமும் பெறாது எட்டு வருடங்கள் தொடர்ச்சியாக எழுதினார் .பின்பு நேரமில்லாதபோது எஸ். ராமகிருஸ்ணன், சாரு நிவேதிதா போன்றவர்களை அவரே இனம்காட்டினார் . எனக்கு இலக்கியத்தில் யாரையும் தெரியாத காலம். அப்பொழுதுதெல்லாம் நான் அவரது அரசியலிலும் இல்லை இலக்கியத்திலும் அக்கறையற்றவன் .

இலக்கியம் என்பது தனியாக வளரும் ஆலமரமல்ல. ஏன் ஒரே மரங்கள் பல வளர்ந்த தோப்புமல்ல. பல மரங்கள் வளரும் தோட்டம். அங்கு பலர் விதம் விதமான முறையில், மொழியில், உத்திகளில் எழுதுவதே என்பதை அறிந்தவர், அறிவர்.

அஸ்திரேலியாவிற்கு வந்தபோது தெளிவத்தை ஜோசப் எங்கள் மூலம் ஜெயமோகனுக்கு நேரில் அறிமுகமானார். பிற்காலத்தில் அவரை விஷ்ணுபுர விருது வழங்கி கவுரவித்தபோது நான் கேட்டேன். “இலங்கையின் தலைசிறந்த எழுத்தாளர் எனவா அவரைப்பார்ர்கிறீர்கள்?” என

“அவர் மலையக மக்களின் குலப்பாடகன் போன்றவர். அதாவது அந்த மக்களை பாடும் பாணனாகப் பார்க்கிறேன்” என்றபோது அதை எனது மனது ஏற்றுக்கொண்டது .

இதேபோல் அ. முத்துலிங்கத்தின் கதைகளில் என்னால் ஆழத்தை பார்க்க முடியவில்லை. வார்த்தைகளின் விளையாட்டே என்றேன் –
அதற்கு ‘அதற்கு மேல் யார் ஈழத்தவர்கள் எழுதுகிறார்கள்” என்றார்-

அவரைப் பொறுத்தவரை ஒரு விளக்கம் வைத்திருந்தார் .

இதிலிருந்து தெரிவது; ஓவியம் கலை, இலக்கியங்கள் பக்க மூளையில் இருந்து உருவாகுபவை. ஒருவரது பார்வை சம்பந்தப்பட்டவை. பகுத்தறிவுப் பார்வையில் போர்முலாவுக்குள் அடங்க விஞ்ஞானமோ கணிதமோ அல்ல -மேலும் தனிமனிதரது பார்வைகள் அவர்கள் வாழ்ந்த, வாழும் சமூகத்திற்கு ஏற்ப, அனுபவத்திற்கும் அறிவிற்கும் ஏற்ப வித்தியாசப்படுகிறது.

தனியே விடுதலைப்புலிகளை பற்றி எழுதிய சயந்தனது ஆதிரையும் தமிழ்நதியின் புத்தகமும் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. அவை சிறந்த நாவல்கள் என்பதற்காகவா? ஏன் நாவல் கட்டுமானத்துக்குள் வரக்கூடவில்லை. நினைவில் வரும் பாத்திரங்கள் கூட இல்லை.

ஆனால் தமிழரின் வீரத்தையும் தமிழ்மக்களது அழிவையும் இராணுவத்தின் கொடுமையையும்அவை தெரிவிப்பதால் தமிழகத்தவர்கள் இதயத்திற்கு அருகில் செல்கின்றன .இதனால் அவை கொண்டாடப்படுகின்றன.

ஜெயமோகன், ஈழ எழுத்தார்களில் எஸ்.பொ, க.சட்டநாதன், அ. முத்துலிங்கம், சோபாசக்தி, மு.தளையசிங்கம், சு.வில்வரத்தினம், சேரன், அனோஜன் பாலகிருஸ்ணன், தெளிவத்தை யோசப், கா. சிவத்தம்பி எனக் குறைந்தது 25 பேர் பற்றியாவது எழுத்து வடிவத்தில் தனது கருத்தை சொல்லியிருப்பார். அதில் இறந்தவர்கள், இருப்பவர்கள் எனப் பலர் உள்ளார்கள் .எனது அசோகனின் வைத்தியசாலை, வாழும்சுவடுகளுக்கு முன்னுரை மற்றும் அறிமுகம் எழுதினார். எனது உன்னையே மயல்கொண்டு தனக்குப் பிடிக்கவில்லை என்றார் .
அதேபோல் அனோஜன் போன்ற இளம் எழுத்தாளர்கள் அவரோடு இயங்குகிறார்கள். எனக்கு பல தென்னிந்திய எழுத்தாளர்கள் நண்பர்கள் உண்டு. ஆனால் ஜெயமோகன் மற்றும் பேராசிரியர் அ.ராமசாமி மட்டுமே நட்புக்கு அப்பால் ஈழ எழுத்தை பொதுவாகக் கவனிக்கிறார்கள் . நான் சொல்வது உண்மையானவை என்பது இலக்கியத்தில் கவனிப்பவர்களுக்குப்புரியும்.

இப்படியான நிலையில் நம்மவர்கள் அறசீற்றமடைய அவர் கருத்து சொன்ன விதமோ வார்த்தையில் தெரிந்த கருத்தோ காரணமல்ல.
வார்தைகளுக்கு இடையில் சொல்லாத விடயமே அம்பின் கூர்முனையாகத் தைத்துள்ளது.

இலங்கையர்கள் தங்களிடையே செய்யாத விடயத்தை அவர் சொல்லிக் காட்டுகிறார்.

கிராமங்களில் முதலிரவின் பின்பு மாப்பிள்ளையின் அக்கா படுக்கைத் துணி தோய்க்கும்போது இரவு தம்பதிகளிடையே நடந்ததை, நடக்காததை கண்டுகொள்வார் என்பது போல் ஈழ இலக்கிய சமூகத்தில் நடக்காத விடயத்தை ஜெயமோகன் சுட்டுகிறார்.

60 களில் பேராசிரியர்கள் கா. சிவத்தம்பி மற்றும் க. கைலாசபதி போன்றவர்கள் எழுத்தாளர்களை வகைப்படுத்தினார்கள். பட்டியற்படுத்தினார்கள். அப்பொழுதும் அங்கும் சர்ச்சை எழுந்தது. தனக்கு வேண்டியவர்களை எழுதுதுகிறார்கள் என்று பல குரல்கள் கத்தின. அங்கும் ஒரு தரவரிசையிருந்தது.

போர்காலத்திலோ அதன் பின்னோ அப்படியான எதுவும் நடக்கவில்லை. வாழ்வதற்கான போராட்டம் தொடங்கியதால்.முக்கியமாகப் பலர் வெளிநாடுகள் சென்று விட்டார்கள் இதனால் வடமாகாணத்தில் இலக்கியம் திண்ணையில் விடப்பட்டது. கிழக்கு மாகாணம், மலையகம், கொழும்பு என இலக்கியம் இயங்கியது. அங்கேதான் பேசப்படுகிறது.ஆனாலும் இலக்கியமென்ற மதயானை, மாலை மேடை மற்றும் பொன்னாடை எனச் சிறிய கூட்டில் அடைபட்டுள்ளது. பரிசுகள் விருதுகளை சிறு கைத்தொழில் வியாபாரமாக்கிவிட்டார்கள்.

இலங்கையில் ஒரு நல்ல புத்தகம் வந்தால் அதற்கு வருடக்கணக்கில் விமர்சனம் செய்யப்படுவதில்லை. அவரை எழுதிவிட்டால் அவர் பெரியவராகி விடுவார் அல்லவா? ஆர். எம். நௌசாத்தின் “கொல்வதெழுதல் முபொவின் சங்கிலியன்தரை இரண்டும் வெளியாகி வருடங்கள் கடந்த பின்பு அவைபற்றித் தற்செயலாக நான் எழுதினேன் .

இலங்கையில் எட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பகுதியுள்ளது. பல நூற்றுக்கணக்கானவர்கள் தமிழிலக்கியம் பயில்கிறார்கள். ஆய்வுகளைச் செய்கிறார்கள். அரசாங்கம் பணத்தை செலவழிக்கிறது. அங்கு நடக்கும் இலக்கிய வெளிப்பாடுகளோ மிகவும் மந்தமானவை.
.
நான் எழுதியது நாவல்கள் பற்றியது மட்டுமே. இதற்கப்பால் கவிதை சிறுகதை மிகவும் கவனிக்கப்படுவதில்லை. அவற்றிற்கு அங்கீகாரமில்லை. எல்லோரும் மாங்காயும் தேங்காயும் சுண்டங்காய் எனச் சேர்த்து கடை விரித்து வியாபாரம் செய்யும் இடமாக முகநூல் மட்டுமே தற்போது உள்ளது.

ஈழ இலக்கியவாதிகள் மத்தியில் தற்பொழுது இலக்கியத்தைவிட ஈகோ, பொறாமை, சோம்பேறித்தனம் என்பது அதிகமாக உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள நேர்மையில்லை. இதை மறைப்பதற்கு தான் தற்போது ஒற்றுமையாக ஜெயமோகன் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.

இவர்கள் எதிர்க்கும் காரணிகளான இந்திய இலக்கிய எஜமானத்தன்மை, இந்து மதவிசுவாசம் இவை எல்லாம் நான் எதிர்ப்பவையே. இந்திய தமிழ் இலக்கிய கோட்பாட்டில் இருந்து நாம் விலகி புதிதாக சிங்கள மக்கள் போல் பிரத்தியேகமான இலக்கியம் படைக்வேண்டுமென 2011 கொழும்பில் நடந்த சர்வதேசிய இலக்கிய மகாநாட்டில் சொன்னேன். அதற்கு காரணம் உண்டு. மத இன ஜாதி மற்றும் வட்டாரதன்மையில் இருந்து தமிழகத்தில் ஒரு சிலரே வெளிவந்து இலக்கியம் படைத்திருக்கிறார்கள். மேலும் புலம்பெயர்ந்தவர்களது செயற்பாட்டை நல்லவகையில் பயன் படுத்தும்போது மேலும் நன்மையைக் கொடுக்கும்

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? பிணத்துடன் குடும்பம் நடத்தும் நமது அரசியல்போல் இலக்கியத்திலும் செய்ய விளைகிறோம். யாராவது புதிதாகச் செய்பவர்களைத் தாக்குகிறோம். கனடாவில் இலக்கியத்தோட்டம் சரியோ பிழையோ ஏதோ செய்கிறார்கள். அது சரியில்லையென்றால் அதைவிடத் திறமாக செய்யுங்கள். அதை விடச் சரியாகச் செய்து காட்டுங்கள். இங்கே உள்ள போலி முகங்கள், பாவனைகள் நல்லதல்ல. குறை சொல்வதற்கு ஆயிரம் பேர் வரலாம். நிறைவாகச் செய்வதற்கே ஆட்கள் தேவை.

நேரடியாக வருகிறேன்.

ஜெயமோகனின் மீது முகநூலில் தாக்குதல் தொடுத்த கோ .நாதன் பின்பு எழுதிய கற்சுறா போன்றவர்களிடம்கேட்கிறேன் . கடந்த

இரண்டு வருடத்தில் உங்களது சக இலக்கியவாதி ஒருவரது கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை நூல்களை நீங்கள் விமர்சித்திருக்கிறீர்களா? யாராவது ஒரு படைப்பாளுமையைப் பற்றிய மதிப்பீட்டைச் செய்திருக்கிறீர்களா? இலக்கிய இயக்கமொன்றை உருவாக்க வேண்டும் என்று சிந்தித்துச் செயற்படுத்தியிருக்கிறீர்களா? இல்லை குறைந்த பட்சம் முகநூலில் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் விதமாக எழுதிப் பதிர்ந்திருக்கிறீர்களா? சக எழுத்தாளரது உயர்வில், வளர்ச்சியில் உங்கள் பங்கென்ன?

கிழக்கு மாகாண பெண் கவிஞர்களான ஆழியாள், அனார் போன்றவர்களை பற்றி ஜெயமோகன் எழுதியிருக்கிறார். அவர் மூலமாகவே நான் இவர்களைத் தெரிந்து கொண்டேன். ஜெயமோகன் தனிமனிதன் ஒரு இயக்கமாக இயங்குகிறார்.

முன்பு கவிதையைப் பற்றி அவ்வளவாகத் தெரியாமலிருந்த நான் கடந்த வருடங்களில் மூன்று கவிஞர்களதுகவிதைகளைப் பற்றி எழுதியும் ஒரு கவிஞருக்கு முன்னுரையும் எழுதியிருக்கிறேன். அதேபோல் முகமே தெரியாதவர்களது சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள் என்பவற்றுக்கும் மதிப்புரைகள், விமர்சனங்கள் எழுதியிருக்கிறேன்.பெருமையாக இதைச்சொல்லவில்லை. கடந்த சில வருடங்களாக நான் அங்கத்துவராக இருக்கும் அவுஸ்திரேலிய தமிழ்ச் சங்கத்தில் பலரது படைப்புகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறோம். இதற்கு நண்பர் முருகபூபதி இயக்கமாக தொழில் படுகிறார்.

தொடர்ச்சியாக கசப்புகளையும் வெறுப்புகளையும் மற்றவர்கள் மீது கக்குவதை விட்டு சக எழுத்தாளர்களை பாராட்டுகள். படைப்புகள் தரமற்றதானால் விமர்சியுங்கள் . முக்கியமாக முகநூலை காசநோய் வந்தவனது துப்பும் கலயமாக மாற்றாதீர்கள்.இதற்குமேல் சொல்ல எதுவுமில்லை.

இறுதியில் இந்தக் கட்டுரை ஜெயமோகனுக்கு ஆதரவாக எழுதவில்ல; ஈழ இலக்கியத்திற்காகவே எழுதினேன்.

“அறச்சீற்றமா? ஆற்றாமையா?” அதற்கு 2 மறுமொழிகள்

 1. Thanks for sharing
  I know Mr Jayamohan from 2013
  USA friend introduced me about Mr J & I read Aram Vishnupuram etc at
  Sanfrancisco durig 2013-2016
  Best Wishes

  வான்
  VAAN
  ஜிமெயில் இணைய தளம் :——- velayuthamavudaiappan

  248 Chinthamathar Pallivasal St Kadayanallur627751
  India

  புத., 20 பிப்., 2019, முற்பகல் 11:37 அன்று, Noelnadesan’s Blog எழுதியது:

  > noelnadesan posted: ” ஜெயமோகனுக்கு எதிராக ஈழத்தமிழர்கள் முக்கியமாக
  > கவிஞர்களின் அறச்சீற்றம் ஆழிப் பேரலையென பொங்கியெழுந்ததைக் கண்டு பயந்து
  > போய்விட்டேன் . 2004 மார்கழியை நினைவு படுத்தியது. ஐரோப்பாவில் இருந்து
  > பெருந்தலை எனது பெயரையும் இழுத்து விட்டது. இது அடுக்குமா? ஒரு”
  >

 2. ஜெயமோகன் தளத்தில் இன்று கண்ட சுட்டி மூலம் தங்கள்
  வலைப்பூவுக்கு வந்தேன்.தூங்குபவர்களையோ,அவ்வாறு
  பாவனை செய்பவர்களையோ எழுப்புவது எரிச்சலூட்டும்,
  மறுநாள் அக்கா கண்டறியும் உண்மை போன்ற பல இடங்களை
  ரசித்தேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: