வரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ”

கருணாகரன்—

“வரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ” என்ற எண்ணமே பலரையும் அரசியல் குறித்துச் சிந்திக்க வைக்கிறது. சிந்திக்க மட்டுமல்ல, அரசியலில் செயற்படவும் வைக்கிறது. அது நேரடியான பங்கேற்பாகவும் இருக்கலாம். சற்று இடைவெளி கொண்ட ஆதரவாகவும் இருக்கலாம்.

அதுவும் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் நிகழ்கின்ற காலத்தில் அல்லது இன ரீதியான அரசியல் விவகாரம் என்று வந்து விட்டால் இதைச் சொல்லவே தேவையில்லை. இந்த உணர்வு ஒரு உந்துதலாக அல்லது ஈர்ப்பாக மாறி எங்கெங்கோ கொண்டு சென்று விட்டு விடும். அன்றைய விடுதலைப்போராட்ட காலத்திலும் சரி, அதற்கு முன்பின்னான காலத்திலும் சரி இது ஒரு பொதுக்குணமாகியுள்ளது.

நடேசனும் ஒரு காலத்தில் இப்படித்தான் சிந்தித்திருக்கிறார். அதனால் கஸ்ரப்பட்டுப் படித்துக் கிடைத்த வைத்தியத்தொழிலையும் விட்டு விட்டுக் கடல் கடந்து தமிழ்நாட்டுக்குச் சென்று, அங்கே ஈழப்போராட்டத்துக்குத் தன்னால் முடிந்த எதையாவது செய்யலாம் என்று முயற்சித்திருக்கிறார். நடேசனின் துணைவியும் தன்னுடைய மருத்துவர் தொழிலை விட்டு விட்டுக் கணவனோடு சென்று அங்கே ஈழ ஆதரவுப் பணியாற்றினார்.

அது 1980 களின் முற்பகுதி.

நடேசனையும் அவருடைய மனைவியையும் போலப் பலர் தங்களுடைய தொழில், வாழ்க்கை எல்லாவற்றையும் புறமொதுக்கி விட்டு ஈழப்போராட்டத்துக்காக, இன விடுதலைக்காகச் செயற்பட்டிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் பட்ட சிரமங்கள், ஏற்றுக்கொண்ட துயரங்கள் கொஞ்சமல்ல.

டொக்ரர் ராஜசுந்தரம், டேவிற் ஐயா, டொக்ரர் ஜெயகுலராஜா, டொக்ரர் சிவநாதன், நடேசன், சியாமளா நடேசன், கேதீஸ், மனோ ராஜசிங்கம், சாந்தி சச்சிதானந்தம் என்று ஏராளம் பேர்.

இவர்களெல்லாம் போராளிகளல்ல. ஆனால், போராளிகளுக்குச் சற்றும் குறைவானவர்களுமல்ல. இப்படிச் செயற்பட்டவர்களின் உணர்வுகளையும் அர்ப்பணிப்பான வாழ்க்கையையும் இன்று நாம் திரும்பிப் பார்க்கும்போது இவற்றுக்கு இந்தப் போராட்டம் எத்தகைய பெறுமானத்தை வழங்கியது என்ற கேள்வி எழுகிறது.

டொக்ரர் நடேசன் இதற்குத் தன்னுடைய அனுபவங்களைச் சாட்சியாக வைத்து ஒரு மீள் பார்வையைத் தன்னோக்கில் செய்திருக்கிறார். “எக்ஸைல் – 84” என்ற தலைப்பில் இந்த அனுபவங்களின் தொகுப்பு இப்பொழுது நமக்கு நூலாகவும் கிடைக்கிறது. இதைப் படிக்கும்போது நமக்குப் பல உண்மைகள் புலனாகின்றன. புதிய தரிசனங்கள் கிடைக்கின்றன. அதேவேளை நம்முள் எழுகின்ற கேள்விகளுக்குப் பதிலாகவும் உள்ளன. பதிலாகக் கேள்விகளையுப்புகின்றன.

அனுபவமும் வரலாறும் தருகின்ற கொடை இதுதான். அதிலும் அரசியலுடன் தொடர்புடைய வரலாறு என்பது ஏராளம் சிக்கல்கள், சிடுக்குகள் நிறைந்தது. அதே அளவுக்குச் சுவாரசியமும் துக்கமும் நிரம்பியது.

அரசியல் வரலாற்றுக்கு எப்போதும் மூன்று பக்கமுண்டு. ஒன்று நிகழ்காலம். மற்றைய இரண்டும் எதிர்காலம், கடந்த காலம் என்பதாகும். இந்த மூன்று காலத்திற்கும் இடையில் ஊடாட்டமாக அமைவது நமது படிப்பினைகளே. கடந்த காலப் படிப்பினைகளே (அனுபவங்களே) நிகழ்காலத்தில் செயற்படுவதற்கான பாடங்களையும் புதிய சிந்தனைகளையும் தருகிறது. இதைப் பயன்படுத்தி நிகழ்காலத்தைச் சரியாகச் செயற்படுத்தும்போதே எதிர்காலம் சிறப்பாக உருவாக்கப்படும்.

ஆகவே நடேசனின் “எக்ஸைல் 84” நமது கடந்த காலத்தின் கனவையும் அந்தக் கனவின் யதார்த்தத்தையும் துல்லியப்படுத்திக் காண்பிக்கிறது. நம்பிக்கையளித்த போராட்டம் எப்படி நம்பிக்கையீனமாக மாறியது?. அந்தக் கால கட்டத்திலேயே போராட்ட இயக்களிலும் இயக்கங்களுக்குள்ளும் இருந்த உள் விடயங்கள். வெட்டியோடுதல்கள். முதன்மைப்பாடுகள். இயக்கங்களில் இருந்த முக்கியமான ஆளுமைகள். அவர்களின் குணாதிசயங்கள் எனப் பலதை எக்ஸைல் வெளிப்படுத்துகிறது. தன்வரலாறு அல்லது ஒரு காலப் பதிலாக வரும் எழுத்துகள், திரைப்படங்களில் இத்தகைய சுவாரசியமான அம்சங்கள் இருப்பதுண்டு.

ஏற்கனவே தோழர் சி புஸ்பராசாவின் ”ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்”, செழியனின் “வானத்தைப் பிளந்த நாட்கள்” புஸ்பராணியின் “அகாலம்” கணேசன் ஐயரின் ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்” எனப் பல புத்தகங்கள் வெளி வந்துள்ளன. இதை விட வெவ்வேறு நபர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள், பதிவுகள், நினைவு மீட்டல்கள் எனப் பலவும் உண்டு.

இவை நமக்களித்தவை ஏராளம். முக்கியமாகப் படிக்க வேண்டிய பாடங்கள். மீள் பரிசீலனைக்கும் விவாதத்துக்குமுரிய அடிப்படைகள்.

நடேசனின் “எக்ஸைல்” 1984 – 1987 வரைக்குமான காலப்பகுதியில் நடேசன் ஊடாடிய சூழலை மையமாக வைத்து நம்முடன் உரையாடுகிறது.

முதல் அத்தியாயம் இலங்கையிலிருந்து தமிழ் நாட்டுக்குச் செல்வது, அதற்கான சூழல் பற்றிய விவரிப்பு. இது நிகழ்வது 1984 இல்.

இறுதி அத்தியாயம் தமிழ் நாட்டிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி விமானம் ஏறுவது. இது நிகழ்வது 1987 இல்.

இடைப்பட்ட நான்கு ஆண்டுகால நிகழ்வுகளே இந்தப்பதிவுகள் அல்லது வெளிப்படுத்தல்கள், அல்லது பகிர்வுகள்.

இதை நாங்கள் மூன்று வகையாகவும் பொருள் கொள்வது அவசியம். ஒன்று பதிவு என்ற அடிப்படையில். இதைப் பதிவு என்று கொண்டால், வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த விடுதலைப்போராட்டச் சூழல் எப்படியாக இருந்தது என்பதை அறியலாம். இன்றைய அரசியலுக்கும் அது அவசியமானது.

இதனை இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்தும் குறிப்பொன்று கீழ்வருமாறு துலக்கப்படுத்துகிறது. “ஈழத்துக்கான ஆயுதப்போராட்டம் அதன் ஆரம்ப எத்தனிப்புகளுடன் தீவிரமடைந்த 80 களின் முற்பகுதியில் பிரதானமாகச் செயற்பட்ட ஐந்து இயக்கங்களினதும் தலைவர்கள், தளபதிகளுடன் ஊடாடிய அனுபவங்களின் வழியாக ஆயுதப்போராட்டத்தின் முடிவு வந்தடைந்த விதத்திற்கான காரணங்களை இன்று நாம் உய்த்தறிந்து கொள்வதற்கான வாய்ப்பை இந்தப் பதிவுகள் வழங்குகின்றன” என்பதாகும்.

இதைப்போல இதை நடேசன் வெளிப்படுத்தல்களாகச் செய்திருக்கிறார் என்றால், ஈழப்போராட்டம் என்பதை ஒற்றைப் பரிமாணமாகப் புலிகளோடு சுருக்கிப் பார்க்கும் இன்றைய நிலைக்கு இந்த வெளிப்படுத்தல்கள் முக்கியமானவை. கூடவே சவாலை உருவாக்குபவையாகவும் உள்ளன. இந்த வகையில் நடேசனின் இந்த வெளிப்படுத்தல்கள் மறைக்கப்படுவதற்காக எழுப்பப்படும் சுவரைத் தகர்க்கும் முயற்சி. உண்மையின் ஒளியை அதன் இயல்பான ரூபத்தில் வரலாற்றின் முன்னே வைக்கும் பணியும் எனலாம்.

இது பகிர்வு எனக் கொண்டால், ஒரு குறிப்பிட்ட கால வரலாற்றில் தானும் ஒரு சக பயணியாக இருந்ததன் விளைவாக ஏற்பட்ட பொறுப்பு, தோழமை, சாட்சியம் ஆகியவற்றின் நிமித்தமாக, தன் சாட்சியத்தை – தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதாகும். இது அடுத்தடுத்த தலைமுறைகளிடத்திலும் தன்னைப் பகிர்வதன் மூலமாக அவர்களுக்கும் இந்தக் கால கட்டத்தின் வரலாற்று நிகழ்ச்சிகளை விரித்துக் காட்டுவதாக அமைகிறது. அதன் சாட்சிகளில் ஒருவர் இவற்றை நேர் நின்று பகிர்ந்து கொள்வதாகும்.

இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை அல்லது இலங்கையில் நிலவிய இன ஒடுக்குமுறை ஈழ விடுதலைப் போராட்டமாக மேற்கிளம்பிய 1970 களில் இருந்து தொடங்கும் இந்தப் பதிவானது (பகிர்வு அல்லது வெளிப்படுத்தல்) இன்றைய அரசியல் வரையிலான கால நிகழ்ச்சிகளின் ஊடே தமிழ் அரசியல் சிந்தனையையும் செயற்பாட்டையும் ஒரு குறுக்கு விசாரணைக்குட்படுத்துகிறது.

1983 வன்முறைக்குப் பிறகு உருவான இன நெருக்கடி அரசியற் சூழலில் தென்பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கும் இள வயது மருத்துவரான நடேசனின் மனதில் ஒரு கேள்வி எழுகிறது.

“வரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ” என்ற கேள்வி.

அன்று இயக்கங்களை நோக்கி விடுதலைப்போராட்டத்துக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சென்று கொண்டிருக்கும்போது இந்தக் கேள்வி, நடேசனின் மனதில் எழுந்திருப்பது இயல்பானது. பொது நிலையில் சிந்திக்கும் எவரிடத்திலும் இத்தகைய கேள்விகள் எழுவே செய்யும். அன்று எங்களிடம் எழுந்த கேள்வியும் இதுதான்.

இந்தக் கேள்வியினால் உந்தப்பட்ட பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்ட அரசியலில் கலந்தனர். ஆனால், அந்தப் போராட்ட அரசியலானது பல முதிராத்தன்மைகளையும் தன்னிலை, முன்னிலைகளையும் தனக்குள் கொள்ளத் தொடங்கியதால் போராட்டம் பெரு வீழ்ச்சியைச் சந்தித்தது. இதனை நடேசன் அதனோடிணைந்து பயணித்த சக பயணியாக அப்போதே அவதானித்துணர்ந்திருக்கிறார்.

இத்தகைய உணர்நிலைகள் அந்தக் காலத்தில் இருந்த பலருக்கும் மனதில் ஏற்பட்டதுண்டு. ஆனால், யதார்த்தச் சூழல் அவர்களால் சுயாதீனமாக முடிவெடுக்கவும் முடியாது. சுதந்திரமாகச் செயற்படவும் முடியாது. அப்பச் செயற்பட முயன்றால் அவர்கள் தமது சகபாடிகளால் – இயக்கத்தவர்களால் – சுட்டுக் கொல்லப்படுவர் என்ற அச்சம் இருந்தது.

இந்த நிலையில்தான் பெரும்பாலான இயக்கங்களின் உட்கட்டமைப்புக் காணப்பட்டது. சில இயக்கங்கள் மட்டும் சற்று விலக்கு.

இந்த நிலையில் தன்னுடைய தொழிலையும் விட்டு, குடும்பத்தின் எதிர்காலத்தையும் பொருட்படுத்தாமல் போராட்டத்துக்கு ஆதரவாகச் சென்ற நடேசன் பலருக்கு ஒரு அடையாளம். அவருடைய அனுபவங்களும் வெற்றி தோல்விகளும் ஈழ அரசியலுக்கான முதலீடு.

இன்றைய தமிழ் அரசியல் இன்னும் சுழிக்குள்ளேயே சுழன்று கொண்டிருப்பது. ஓட்டியில்லாத படகைப் போன்றது. அதில் ஒரு சிறிய சுடரை ஏற்றுவதற்கும் சிறிய கை ஒன்றினால் சுக்கானின் கை பிடிக்கவும் தூண்டலை ஏற்படுத்துவதற்கு எக்ஸைல் என்ற இந்த அனுபவப் பகிர்வுகள் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது. சரியான வெளிப்படுத்தல்களே சரியான வழிகாட்கள் என்பது இங்கே மனதில் கொள்ளத் தக்க ஒன்று

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: