அசோகனின் வைத்தியசாலை : நாவல்


டாக்டர் எம்.கே.முருகானந்தன்

இந்தப் பயணம் என்னைச் சலிப்படைய வைக்கவில்லை. மாறாக மகிழ வைத்தது.

வெளிநோயாளர் பிரிவு, வெளிநோயாளரைப் பார்வையிடும்; மருத்துவரின் அறை, சத்திரசிகிச்சைப் பிரிவு, மருந்தகம், பிரேத அறை என அந்த வைத்தியசாலை முழுவதும் சுற்றி வந்தபோதும். சோர்வு, களைப்பு எதுவும் ஏற்படவில்லை.

சுமார் 40 வருடங்கள் மருத்துவனாக பணியாற்றிய, தொடர்ந்தும் பணியாற்றும் எனக்கு மருத்துவமனையை முழுமையாகச் சுற்றுவதில் சலிப்பும் களைப்பும் ஏற்படாதது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உண்மை. முதன் முறையாக ஒன்றைப் பார்ப்பது போன்ற வற்றாத ஆர்வத்திலும், தேடுதலிலும் என்னை முற்றாக மூழ்கடித்திருந்தேன். பல புதுமைகளும் ஆச்சரியங்களும் தங்கள் ரகசிய வாயில்களைத் திறந்து எனக்காகக் காத்திருந்தன.

ஆம் அசோகனின் வைத்தியசாலை விஜயத்தைத்தான் கூறுகிறேன்.

மருத்துவமனைதான் ஆனால் மனிதர்களுக்கானது அல்ல. மிருகங்களுக்கானது. சுமார் 400 பக்கங்கள் கொண்ட நீண்ட நாவல். வண்ணாத்திக்குளம் புகழ் நடேசன் அவர்களது நாவல் இது. 2013ல் வெளியாகி இருக்கிறது. இப்பொழுதுதான் படிக்கக் கிடைத்தது.

இது ஒரு புலம்பெயர் எழுத்தாளரின் படைப்பு. இப்பொழுது புலன்பெயர் எழுத்தாளர்கள் பலரின் படைப்புகளை படிக்க முடிகிறது. அவர்களில் சிலர் நன்றாகவும் எழுதுகிறார்கள். இருந்தபோதும் பெரும்பாலனாவர்கள் தமது தாயக நினைவுகளையே படைப்புகளாகத் தந்து எம்மை அலுப்படைய வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாறாக ஒரு சிலர் தமது புலம் பெயர்ந்த வாழ்வைச் சொல்கிறார்கள். ஆனாலும் அங்கும் தமிழரது வாழ்வு அதுவும் ஈழத்தை தாயகமாகக் கொண்டவர்களின் வாழ்வே படைப்பாகிறது. இருந்தபோதும் தமது புதிய சூழலின் வித்தியாசமான் அனுபவங்களையும், அங்கு அவர்கள் எதிர்நோக்கும் சவால்களையும் படைப்பிலக்கியமாக்கி தரும்போது எங்களுக்கு சில புதிய தரிசனங்களைத் தருகிறார்கள். அவை எமது ஈழத்து தமிழரது வாழ்வின் மற்றொரு அத்தியாத்தை படைப்புலகில் அலங்கரிக்கின்றன.

ஆனால் நடேசனின் அசோகனின் வைத்தியசாலை ஒரு முன்னோடியான புதுமை வரவு. முற்று முழுதாக வேறுபட்ட களத்தில் வேற்று மனிதர்களின் கதையாக அமைகிறது. அவுஸ்திரேலியர்களுடன் ஐரோப்பியா, சீனா, மத்திய கிழக்கு போன்ற பல பகுதியினர்;; கதைமாந்தர்களாக உலாவருகிறார்கள். அவர்களின் மாறுபட்ட வாழ்வையும் மனோஉணர்வுகளையும் அறிந்துகொள்ள முடிகிறது. இங்கு ஈழத் தமிழர் சுந்தரம்பிள்ளை என்ற மிருக வைத்தியர் மட்டும்தான். அவரது மனைவி சாருலதாவும் பிள்ளையும் ஓரிரு இடங்களில் தலையைக் காட்டினாலும் முக்கிய பாத்திரங்கள் அல்ல.

அந்த மருத்துவமனை புகழ் பெற்றதாக இருந்தாலும் அதற்குள் மறைந்து கிடக்கும் உள் அரசியல், குத்துவெட்டுகள், பழிவாங்கல்கள், சிலரின் பொறுப்பற்ற தன்மை, பொறாமை, காமம், யாவும் நாவலில் பேசப்படுகிறது. அதேபோல நல்ல பக்கங்களும் கதையாகிறது. இவை எமக்கு மருந்தாகவில்லை. விருந்தாகிறது.

இலங்கை அரசியல், ஈழத்தமிழர் பிரச்சனை எதுவும் அழுத்தமாகப் பேசப்படவில்லை. இன்றைய ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புலுகப் போக்கில் இது மிகவும் ஆச்சரியமாகப் பார்க்கப்பட வேண்டிய விடயமாகும். தனது படைப்பு பேசும் விடயத்திற்கு தேவையற்றதை வலுக்கட்டாயமாகக் கொண்டுவந்து இணைத்து வாசகனைக் கவர வேண்டிய அவசியம் நாவலாசிரியருக்கு வேண்டியிருக்கவில்லை.

மாற்றாக ஒரு பரந்த உலகை எங்கள் முன் விரித்து வைக்கிறார் நடேசன். தமிழர்கள் என்ற கூட்டிற்குள் முடங்கிக் கிடந்த எங்களை இறக்கை கட்டிப் பறக்கவிட்டு உலகளாவிய மாந்தர்களிடையே சுற்றுலா செல்ல வைத்துள்ளார். புதிய அனுபவங்களைப் பெற முடிந்தது.

தமிழ் படைப்பாக்க சூழலில் பேணப்படும் பண்பாட்டு அம்சங்களும் புனித அடையாளங்களும் சில தருணங்களில் இந்நாவலில் உடைக்கப்படுவது எமது வாசகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். அல்லது நீலப்படத்தை மறைந்திருந்து பார்ப்பது போன்ற கள்ளக் கிளர்ச்சியைக் கொடுக்கவும் கூடும். பெண் தன்னுடலை வீட்டின் தனிமையில் நிர்வாணமாக ரசிப்பது இங்கும் நடக்கக் கூடுமாயினும் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. பெண்ணின் சுயஇன்பத்திற்கு உபயோகிக்கும் கருவியான டில்ரோவை அடலட் சொப்பில் வாங்குவது, அதற்கு அவர்கள் கடை வாசலில் விளம்பரம் வைப்பது போன்றவை தமிழ் வாசகப்பரப்பில் கற்பனையிலும் காண முடியாதவையாகும்.

இனவாதம் இலங்கையில் மட்டுமல்ல எங்கும் இருக்கிறது. ஆனால் இலங்கையில் அது கண்கூசுமளவு அம்மணமாக நிற்கிறது. அவுஸ்திரேலியாவிலும் இருக்கிறது. ஆனால் வெளிப்படையாக இனங்காட்டுவதில்லை. இலங்கையனான சுந்தரம்பிள்ளை மட்டுமல்ல வெள்ளையர்கள் அல்லாத பலரும் பாதிப்படைகிறார்கள்.

ஒரு மாட்டுப் பண்ணையில் மிருக வைத்தியருக்கான வேலை தேடிச் சென்ற போது அவருக்கு கிடைத்த அனுபவம் இது ‘பண்ணை மாடுகள் மத்தியில் வேலை செய்வதற்குரிய தகுந்த அனூவம் உங்களுக்கு இருக்கிறது. எனக்கும் உங்களைப் பிடித்திருக்கிறது. ஆனால் இங்குள்ள விவசாயிகள் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்கிறார் அங்கிருந்த தலைமை மருத்துவர்.
‘அந்தப் பதில் காச நோய் உள்ளவன், கோழையும் இரத்தமும் கலந்து முகத்தில் காறித் துப்பியது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியது. நீ ஒரு வெளிநாட்டவன் என்பதை அந்தப் பதில் உணர்த்தியது.’

வேலை தேடிச் சென்ற அந்தச் சந்தர்ப்பதில் மட்டுமின்றி பின்னர் வேறு வேலையில் இருந்த போதும் கூட மறைமுகமாக தலைநீட்டிய இனவாதம் சுந்தரம்பிள்ளையின் வேலைக்கு வேட்டு வைக்க முனைந்தது. ஆனால் அவரால் அதை மீறி நிலைத்து நிற்க முடிந்தது. இனவாதம் என்ற விடயத்தை முன்னிலைப்படுத்தாமலேயே தக்கவைத்துக் கொண்டார். இனவாதத்தைத் தாண்டிவிட்ட நாடு என்று சொல்லப்பட்ட அவுஸ்திரேலியாவிலேயே இந்த நிலை இருக்கிறது.

இனப்பாகுபாட்டிற்கு எதிரான இனவாதத்தை கையில் எடுத்ததாலேயே எமது சமூகம் அழிவிற்குபப் போனதாக எனக்குப் படுகிறது. மாறாக வெளிக்கோசம் போடாமல் கிடைக்கும் ஒவ்வொரு சிறிய சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி தன்னையும் தன்னை சுற்றியுள்ளவர்களையும் வளப்படுத்தியிருந்தால் தமிழ் சமூகம் அழிவுகளைச் சந்திக்காமல் முன்னேறியிருக்கும் எனத் தோன்றுகிறது.

‘இனவாதம் என்பது எல்லோரிடமும் இருக்கிறது. யாருக்கு இல்லை. வெள்ளையர்கள் ஆசியர்களை வெறுப்பதும், சீனர்கள் கொரியர்களை வெறுப்பதும், இந்தியர்கள் ஆபிரிக்கர்களை கீழானவர்கள் என நினைப்பதும் பரவலான விடயம்’ பக்கம் 274 என்ற வரிகள் கவனத்துக்கு உரியவை. எனவே தாண்டி முன்னேற வேண்டியது எமது செயலாற்றலில் இருக்கிதே ஒழிய வாய்ப் பேச்சில் அல்ல.

சுந்தரம்பிள்ளை வேலை செய்த வைத்தியசாலையானது அவுஸ்திரேலியாவின் மெல்பென் நகரில் உள்ள ஒரு பெரிய மிருகவைத்தியசாலை. அரச மருத்துவமனை அல்ல. சில பணம் படைத்தவர்களின் உதவியால் பெரும்பாலும் இலவசமாக அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எல்லாவிதமான மிருகங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் வளர்ப்பு மிருகங்களான நாய் பூனைகளே பெரும்பாலும் சிகிச்சைக்கு வருகின்றன. அவை எங்களுக்கும் நெருக்கமானவை என்பதால் அவை பற்றிய குறிப்புகள் சுவார்ஸமானவை.

சிகிச்சைக்காக கொண்டு வருப்படும் நாய் பூனைகள் வேறு வேறு இனங்களைச் சார்ந்தவையாக இருக்கும். அவற்றின் பழக்கங்கள் மாறுபட்டிருக்கும். அவற்றிற்கு வரும் நோய்களும் பலதரப்பட்டவை. இவை யாவும் செய்திகளாக அன்றி கதையோடு பின்னிப் பிணைந்து வருவதால் சுவார்ஸம் கெடாமல் படித்ததுடன் பல புதிய தகவல்களையும் அறிய முடிந்தது.

அதீத உடற்பருமனானது மனிதர்களில் நீரிழிவு, பிரஷர் மூட்டுவாதம் உட்பட பல்வேறு நோய்களுக்கு காரணமாக இருப்பதை நாம் அறிவோம். அதேபோல நாய்களும் பாதிப்படைவதை அறிய முடிந்தது. அதற்குக் காரணமாக இருப்பதும் மனிதனே.

‘நாயை பின் வளவில் அடைத்து, உணவைக் கொடுத்து பன்றியைப் போல கொழுக்க வைத்து கொலைக்களத்திற்கு தள்ளியிருக்கிறார்கள். ……உணவு மட்டும் போதும் என நினைத்து உடற்பயிற்சியோ நடக்கவைத்தோ…. இவர்கள் தவறால் இவர்களின் நாய் நாலு வருடங்கள் முன்னதாக மரணத்தை நோக்கி தள்ளப்பட்டிருக்கிறது..’

இது நாய் வளர்ப்பவர்களின் கவனத்திற்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் என்பதை சொல்லாமல் சொல்கிறார்.

இந்த நாவலின் ஒரு முக்கிய பாத்திரம் கொலிங்வூட் ஆகும். அது அந்த வைத்தியசாலையின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று வரும் உரிமை கொண்டது. எல்லா உள்வீட்டு இரகசியங்களையும் தெரிந்து கொள்ளும் ஆற்றலும் கைவரப்பெற்றது. அவற்றையெல்லாம் சுந்தரம்பிள்ளையுடன் பகிர்ந்து கொள்ளும். சுந்தரம்பிள்ளையுடன் சில சமயங்களில் முரண்படவும் செய்யும். ஆலோசனைகளும் வழங்கும். அவரது மனச்சாட்சி போலவும் பேசும்.

கொலிங்வூட் ஒரு பூனை. பேசும் பூனை. இந்த நாவலின் அற்புத கதாபாத்திரம். நாவலுக்கு புதிய பரிமாணத்தைக் கொடுப்பது அதுதான். உண்மையில் இந்த நாவலை சராசரி நாவலுக்கு அப்பால் சிறப்பான படைப்பாக கொள்வதற்கான பாத்திரப் படைப்பு என்று சொன்னால் மிகையில்லை. மற்றொரு புறத்தில் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் இடையேயான நெருக்கமான உறவின், பிணைப்பின் வெளிப்பாடாகவும் கொலிங்வூட்டுடனாக சம்பாசனைகளைக் கொள்ளலாம்.

நாவலில் வரும் சில வித்தியாசமான சொல்லாடல்களும் உவமைகளும் மனதைத் தொடுகி;ன்றன. உதாரணமாக

‘…. என்ற நினைவு இரவு முழுவதும் சப்பாத்திற்குள் விழுந்த சிறுகல்லாக துருத்தியபடியே இருந்ததால் இரவு நித்திரை தொடர்ச்சியாக இருக்கவில்லை.’

‘பனை ஓலைப் பையில் சரசரக்கும் உயிர் நண்டுபோல் எப்போதும் குடைந்து கொண்டே இருக்கும்.’

‘சிவா சுந்தரம்பிள்ளை மனதில் சுய பச்சாதாபம். கடல் அலை தொடர்ச்சியாக கரையில் வந்து குதித்து மெதுவான சத்தத்துடன் பின் வாங்குவதுபோல மனதை அலைக்கழித்தது’

கடுமையான சட்டதிட்டங்கள் உள்ள அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் குடும்ப வன்முறை பெண்களைத் துன்பப்படுத்துவதையும் அதை அவள் தாங்கிக் கொள்ள நேர்வதையும் வாசிக்கும்போது ஆணாதிக்க மனோபாவம் எங்கும் ஒன்றுதான் என்பது புரிகிறது.

நாவலின் ஓட்டம் ஆரம்பத்தில் சற்று குறைவாக இருந்தாலும் பிறகு வேகமாக ஓடுகிறது. களம் பற்றிய பின்னணி சித்தரிப்புகள் ஆரம்பத்தில் வருவதால் அவற்றை மூளையில் பதித்துக்கொள்ள வேண்டியிருப்பது காரணமாகலாம்.

ஜீவமுரளியின் லெனின் சின்னத்தம்பி என்ற நாவலையும் அண்மையில் படிக்கக் கிடைத்தது. அது ஜேர்மனியில் உள்ள ஒரு உணவு வெதுப்பகத்தில் நடக்கும் கதை. அங்கும் லெனின் சின்னத்தம்பி ஒருவரே தமிழர். மற்றவர்கள் அனைவரும் வெள்ளையர்கள்.

இவ்வாறு புதிய புலனில் வேற்று இன மனிதர்களின் கதைகள் வர ஆரம்பித்திருப்பது ஈழத் தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த பெறும் கொடை என்றே சொல்லத் தோன்றுகிறது. எமது வாசிப்பு அனுபவங்கள் இனி உலகளாவியதாக இருக்கப்போகிறது என மகிழலாம்.

வித்தியாசமான படைப்புகளைத் தேடும் வாசகர்கள் தப்பவிடக் கூடாத நாவல் இது.

நானூறு பக்கங்களுக்கு மேல் கனத்தை அட்டையுடனான இந்த நூல் கருப்புப் பிரதிகள் வெளியீடு. இந்திய விலை ரூபா 300.

இலங்கைத் தொடர்புகளுக்கு மகிழ், 754 கனகராசா வீதி, திருநகர் வடக்கு, கிளிநொச்சி.(கருணாகரன் -0770871681)

0.00.0

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: