இரண்டு தடவைகள் கம்போடியா சென்றபோதும் படிக்காமல் பரீட்சைக்குச் சென்ற மாணவனின் மனதில் எழுவதுபோல் ஒரே கேள்வி விடைதேடி என் மனதில் அங்கலாய்க்கும்.
உலகத்தில் பல இன அழிப்புகள் நடந்திருக்கின்றன அங்கெல்லாம் வேறு இனம், மதம் என வெறுப்பேற்றப்பட்டு கொலைகள் நடந்தன .
( துருக்கி- முஸ்லீம்கள் – ஆர்மேனியர்கள்- கிறிஸ்தவர்கள், ஜெர்மனி- யூதர்கள், ஹொரு – (hutu)- ருட்சி (tutsi _- என ருவாண்டாவில் இரு இனக் குழுக்கள்)
இந்த இன அழிப்புகளின் கருத்தியலை ஏற்காத போதிலும் புரிந்து கொள்ள முடியும். ஆனால், கம்போடியாவில் ஒரே இனத்தவரை, மூன்று வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட பத்து இலட்சம் மனிதர்களை அழித்தது எப்படிச் சாத்தியமானது?
கம்போடியர்கள் புத்த சமயத்தை தீவிரமாகக் கடைப்பிடிப்பவர்கள். கம்போடியாவில் பெரும்பாலானவர்கள் மழைக்காலத்தில் விவசாயம் செய்யமுடியாது என்பதால் பெரும்பாலும் பவுத்த மடங்களுக்குச் சென்று பிக்குகளாவார்கள்
இவர்களால் எப்படி ஒரு இன அழிப்பில் ஈடுபட முடிந்தது ?
எந்த மதங்களும் மனிதரைத் திருத்தவில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் புத்தமத போதனைகள் எந்த மதத்திலும் பார்க்கச் சாத்வீகத்தை அதிகம் வலியுறுத்துவது.
எப்படி இந்த முரண்பாடு ஏற்படுகிறது?
பெனாம்பொன் அருகே ஐந்து வருடங்கள் முன்பு பல புதைகுழிகள் இருந்த இடத்தைப் பார்த்தேன்- மண்டையோடுகள் அடுக்கி வைத்திருந்த இடம், ஆழமற்ற புதைகுழிகள் மற்றும் மனித எச்சங்களான- எலும்புகள், பல்லுகளை கண்டேன் . இம்முறை அவை ஒழுங்காகச் சுத்தப்படுத்தப்பட்டிருந்தது.
இம்முறை சென்றபோது, மனித குல அழிப்பு மியுசியம் மனதில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்கு இரண்டு காரணங்கள்: மியுசியத்தில் வைக்கப்பட்ட படங்கள் மற்றும் பொருட்கள் தத்துரூபமாக மனக்கண்ணில் காட்சியாகின என்பதுடன் எமக்கு வழிகாட்டியாக வந்தவர், அந்தக் காலத்தில் அன்று சிறைச்சாலையாக இருந்த இன்றைய அருங்காட்சியகத்தில் கைதியாக இருந்தவர்களுக்கு சிறுவனாக இருந்த காலத்தில் எடுபிடியாக வேலை செய்தவன்- அந்தக்காலத்தில் தனக்கு பத்து வயதாக இருந்ததாகவும் சொன்ன அவர், அங்கு நடந்த விடயங்களை நேரடியாக விமர்சித்தார் .
அதில் முக்கியமானதொன்று:
கட்டிலில் கட்டப்பட்டவர்களுக்கு உணவு கொடுப்பதும், அவர்களது மலத்தை எடுப்பதும் அவனது பிரதான தொழில். ஒரு நாள் மலமிருந்த பாத்திரத்தை கொண்டு சென்றபோது அது தரையில் சிந்திவிட்டது . அவன் அதைச் சுத்தப்படுத்த முயற்சித்தபோது அங்கிருந்த காவலாளி, கைதியின் விலங்கை அவிழ்த்துவிட்டு மலத்தை நாவால் சுத்தப்படுத்த கட்டளை இட்டதாகச் சொன்னான்.
கிட்டத்தட்ட மூன்று வருடங்களிருந்த ஆட்சியில் கொலை செய்யப்பட்டவர்கள் பத்து இலட்சமென்கிறார்கள். கொலைகள், பட்டினி, மற்றும் வைத்திய வசதிகளற்று ஏற்பட்ட மரணங்களின் கூட்டாக இருக்கவேண்டும். இரண்டாவது வருடத்தில் கமியூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவால் வியடநாமிற்கு ஆதரவான பிரிவினர் எனக் கட்சியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். பின்பு வியட்நாமிய வம்சாவளி பொதுமக்கள் அழிக்கப்பட்டார்கள். இறுதியில் வியட்நாமிய மனமும் கம்போடியஉடலும் கொண்டவர்கள் என்ற சந்தேகத்தில் பல்லாயிரக்கணக்கானோரை கொலை செய்தார்கள். சிஐஏ, கே ஜி பி மற்றும் வியட்நாமிய ஆதரவு இல்லையேல் பூர்ஸ்வா என்ற குற்றச்சாட்டின் பேரால் கிட்டத்தட்ட நான்கு பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் கம்போடியாவில் மேலும் பலர் கொல்லப்பட்டதாக தெரிகிறது.
பெனாம்பென் நகரத்திலிருந்த டாக்சி சாரதிகள் மற்றும் சில தொழிலாளர்கள் தவிர்ந்த இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் கிராமங்களுக்குஅனுப்பப்பட்டு, நெல் விளைச்சலில் ஈடுபடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டபோது பஞ்சமும் மரணமும் ஏற்பட்டது .
பணநோட்டுகள், புத்தகோயில்கள், புத்த மடங்கள், வைத்தியசாலைகள் , பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் எனச் சகல நிறுவனங்களும் அழிக்கப்பட்டன .
பொல்பொட் தலைமை தாங்கியிருந்த கிராமம் மீகொங் நதிக் கரையில் இருந்தது . அங்கு எதுவும் அழிக்கப்படவில்லை.
பொல் பொட் என்ற தனி மனிதன்மீது ஸ்ராலின், ஹிட்லர் மீதுள்ள பழியைப்போன்று விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், உண்மையில் இந்தக் கொலை விடயத்தில் கம்போடிய கிராமமக்களின் ஆதரவு கம்மியுனிஸ்ட் கட்சிக்கு இருந்தது. தலைமை தவிர்ந்த மற்றையவர்கள் கிராமிய பின்னணி கொண்டவர்கள். அதற்குக் காரணம் அவர்கள் கமர் எனப்படும் இனத்தின் 2600 வருடகால வரலாற்றின் மகிமையைப் பேசினார்கள் .
தென் வியட்நாமின் மீகொங் கழிமுகப்பகுதிகள் கம்போடியாவைச் சேர்ந்தது. பிற்காலத்தில் ஏராளமான வியட்நாமியர்கள் அங்கு குடியேறியதாலும், வியட்நாம் பலமாக இருந்ததாலும் 19ஆம்நூற்றாண்டுகளில் வியட்நாமுடன் இணைக்கப்பட்டது.
வரலாறு போதையை மட்டுமல்ல வெறியைம் உருவாக்குவது.
எட்டாம் நூற்றாண்டுகள் வரையுமான கமர் சரித்திரம் சீனர்களது பதிவூடாகவே பார்க்கப்படுகிறது.
கம்போடியாவின் வரலாறு மீகொங் கரையில் தொடங்குகிறது. சீனர்களது வரலாற்றில் தென்சீனக் கடலில் பியூனன் (Funan)எனப்படும் இராச்சியமிருந்தது . அங்கு யானையில் சவாரி செய்யும் கறுத்த அரசர்கள் இருந்தார்கள். அங்கு மக்கள் உடையற்றும், காலில் செருப்பற்றும் வாழ்ந்ததுடன், நிலத்தில் நெல்லைப் பயிரிட்டார்கள் என்று சீனர்களின் குறிப்புச் சொல்கிறது.
ஒரு விதத்தில் கம்போடியா இந்தியாவின் மறுபதிப்பு . இன்னமும் கைகளால் உணவுண்பது தலைப்பாகை கட்டுவது மற்றும் கறுப்பான தோற்றமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
ஆரம்பக் காலத்திலே அங்கு லிங்க வழிபாடு இருந்தது. பிராமண மயமான சடங்குகள் நடந்தன. பிராமண இளவரசன் றாகனது(Dragon) மகளைத் திருமணம் செய்ததால்தோன்றிய வழித்தோன்றல்கள் கம்போடியர்கள் என்ற தொன்மையான கதையுள்ளது. பிற்காலத்தில் இராமாயணம் கம்போடிய மயப்படுத்தப்பட்டது. அது தெருக்கூத்து, நடனம், பாவைக்கூத்து, மற்றும் நாடகமாக இன்னமும் நடக்கிறது . இந்தியா, சீனா இரண்டினதும் முக்கிய வர்த்தகமையமாக பியூனன் இருந்தது. எட்டாம் நூற்றாண்டு வரையும் குறுநில அரசர்கள் பலர் ஆண்ட நிலம் .
எட்டாம் நூற்றாண்டில் இருந்து பதினான்காவது நூற்றாண்டுவரையுள்ள 600 வருடங்களை சரித்திர ஆசிரியர்கள் ஆங்கோர் காலம் என்பார்கள்( ஆங்கோர் என்பது நகரம் என்ற சமஸ்கிருதத்தை ஒட்டியது) இதன் உருவாக்கம் ஜெயவரமன் 11 இருந்து தொடங்குகிது. இந்த ஜெயவர்மன் யாவாவிலிருந்து வந்த இளவரசனாக நம்பப்படுகிறான். 600 வருடங்கள் மலேசியா, பர்மா, தாய்லாந்து முதலான பகுதிகளைக் கொண்ட சாம்ராச்சியமாக இருந்தது.
ஆரம்பத்தில் சிவ வழிபாடு இருந்த சமூகத்தில் விஷ்ணு கோவில்(ஆங்கோர் வாட்) கட்டப்படுகிறது . பிற்காலத்தில் மன்னன் மகாயான பவுத்தனாகிறதும் இறுதியில் சயாம் பர்மா போன்ற இடங்களில் இருந்து கம்போடியா எங்கும் தேரவாத பவுத்தமாகியது.
ஆங்கோர் காலம்- அதாவது 600 வருடங்களின் பின்பு தற்போதைய மத்திய வியட்நாமில் இருந்த சம்பா அரசு இரண்டு முறை படையெடுக்கிறது. இறுதியில் சியாமியர்கள் படையெடுத்ததால் புதிய தலைநகர் பெனாம்பென் மீகொங் நதிக்கரையில் உருவாகிறது.அதன் பின்பு அவுடொங்(Ouong) என்ற தலைகர் முக்கியத்துவம் பெறுகிறது. புத்தர் சிலைகளைக் கொண்ட பூங்கா இருந்தது.
19 ஆம் நூற்றாண்டுகளில் மீகொங் கழிமுகம் பகுதி வியட்நாமிடம் போனதால், கடல் வழிபகுதி அடைபடுவதால் கம்போடியா தனது கடல் வாணிபத்தை இழப்பதுடன் பொருட்கள் வருவதற்கு வியட்நாமில் தங்கியிருக்கிறது. இந்த வரலாற்று நிகழ்வு வியட்நாமியர் மீது கசப்பை உருவாகியது. பொல்பொட் அமைப்பின் தலைமையில் இருந்தவர்கள் இந்த தென்பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களது கசப்பும் விரோதமும் அக்காலத்தில் கொலைகளாக வெளிப்பட்டன.
நான் பேசிய டாக்சி சாரதி ” வியட்நாமியர் நாய் தின்பவர்கள். சத்தமாகப் பேசுபவர்கள் ” எனச்சொன்னதிலிருந்து அந்த வெறுப்பு இன்றும் தொடர்கிறது என்பது தெரிந்தது. வெறுப்புணர்வை இலகுவாக சாதாரண மனிதர்களிடத்தில் வளர்க்கமுடியும் என்பதை இலங்கையில் பிறந்த என்னால் அங்கும் காணமுடிந்தது.
“மனித குல அழிப்பு அருங்காட்சியகம் – கம்போடியா” அதற்கு 4 மறுமொழிகள்
//வெறுப்புணர்வை இலகுவாக சாதாரண மனிதர்களிடத்தில் வளர்க்கமுடியும் என்பதை இலங்கையில் பிறந்த என்னால் அங்கும் காணமுடிந்தது.// உண்மைதான். ஆனால் இலங்கையில் இந்த வெறுப்பை துவக்கியவர்கள் தமிழர்கள் அல்ல. அண்மையில் சிங்கப்பூர் அரசு சிங்கையின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பை போற்றும் விதமாக தமிழ் தொடர்ந்து சிங்கையின் அரச மொழிகளில் ஒன்றாக இருக்கும் என்றும் தமிழர்கள் அதன் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டது. லீகுவான் யு ஒரு தீர்க்கதரிசி. சரியான தேசப்பற்று மிகுந்த குடிமக்களை பயன்படுத்தி கொண்டார். அவர் சீனம் மட்டும் கொள்கையை அமுல்படுத்தவில்லை. அதுதான் யுத்தம் முடிந்ததும் லீ குவான் யு சுதந்திரத்துக்கு பின் எல்லா இலங்கை அரசுகளும் சந்தர்ப்பங்களை தவறவிட்டு விட்டன என்றும் பேட்டி அளித்துள்ளார். லீக்கு தெரிந்தது எம்மவர்களுக்கு தெரியவில்லை. எங்கோ புலம் பெயர்த்து பிழைக்கப்போன இடத்தை அபிவிருத்தி செய்த தமிழர்கள் சொந்த மண்ணை விட்டு விடுவார்களா. சிங்களத்திடம் இருந்த முழுப்பொறாமையும் வெற்று எரிச்சலும் தான் தமிழர்களை இரண்டாம் குடிமக்களாக நடத்த செய்தது. இன்று இலங்கை தமிழர்களுக்கு அபிவிருத்தி பற்றி நாட்டை சீரழித்த ஆட்ச்சியாளர்கள் பாடம் நடத்துகிறார்கள்.
ஆனால் உங்களை போன்றவர்கள் இதை ஏற்று கொள்ள போவதில்லை .இதற்கு பல காரணங்கள் இருக்கலாம் (தனிப்பட்ட வாழ்வியல் காரணங்கள் )
1 . நீங்கள் பிறந்த தீவக பிரதேசம். : தீவுப்பகுதி எப்போதும் தமிழ் தேசிய அரசியலுக்கு அப்பாற்படட ஒன்று. தொன்னூறுகளில் என்று நினைக்கிறன் . தீவகத்தை கைவிட்டு புலிகள் பின் வாங்கி சென்று விட்டார்கள். மக்கள் சுற்றிவைளைப்புக்குள் பட்டினி சாவை எதிர்நோக்க வேண்டி இருந்தது. அப்போது வராது வந்த மாமணியாக வந்தார் தேவானந்தா. கப்பலில் இருந்து கோதுமை மாவை தானும் சேர்ந்து சுமந்து இறக்கி மக்களுக்கு விநியோகித்தார். அன்றில் இருந்து தீவகம் முழுவதும் தோழர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. (இயக்க உறுப்பினர்களை தோழர்கள் என்றும் தேவானந்தாவை பெரிய தோழர் என்றும் மக்கள் அன்புடன் அழைப்பர்). அவர்கள் ஒரு சிவில் நிர்வாகத்தை தீவுப்பகுதிக்குள் நிகழ்த்தினார். கடற்படை ஊருக்குள் வராமல் கரையோரமாக நின்று கொண்டது. அதன் பின் நடந்த தேர்தலில் ஒன்றிலே என்று நினைக்கிறன் நடந்த நிகழ்ச்சி இது. எனது தந்தையார் அப்போது தீவுப்பகுதியில் ஒரு வாக்கு சாவடிக்கு சிரேஷ்ட தலைமைதாங்கும் அலுவலராக (SPO) பணி ஆற்றிக்கொண்டு இருந்தார். (நானும் தீவுப்பகுதியை சேர்ந்தவன் ). அப்போது வாக்கு போட இயலாத முதியவர் வாக்கு சாவடிக்கு வந்த போது தேர்தல் விதிப்படி SPO ம் இன்னொரு அலுவலரும் அவருக்கு உதவ முடியும். அப்போது முதியவர் உடல் நடுங்கிய படி அப்பாவிடம் சொன்னாராம் ” தம்பி வீணைக்கு கீறி விடுங்கோ ” என்று. (வீணை அப்போது ஈபிடிபியின் சின்னம்). அப்போது புலிகள் உச்சத்தில் இருந்த காலம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு தீவக மக்கள் ஈபிடிபி மீது அபிமானம் கொண்டிருந்தார்கள். பிற்காலங்களில் தேசிய கூட்டமைப்பு உச்சம் பெற்ற காலப்பகுதிலும் ஒரு கலந்துரையாடலில் மாவை சேனாதி ராஜா சொன்னாராம். ஊர்காவற்றுறை தொகுதியை தவிர மிச்ச எல்லாத்தையும் வெல்ல முடியும் என்று. அந்த பின்புலம் காரணமாக உங்களுக்கு தமிழ் தேசியத்தின் மீது பற்று இல்லாமல் இருக்கலாம்.
2 . எம்மிடையே காணப்படும் ஒரு சீரழிவான பிரதேச வாதம். எனது பெரியப்பா சொன்ன நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது. அக்காலங்களில் யாழ்ப்பாணத்துக்கு படிக்க வரும் தீவுப்பகுதி மாணவர்களை யாழ்ப்பாணத்தில் பிறந்த மாணவர்கள் தீவான் என்று ஏளனமாக நடத்துவார்களாம். (ஒரே சாதியாக இருந்தாலும் என்பது கவனிக்க தக்கது). அதை காரணமாக வைத்து தீவு மாணவர்கள் கடுமையாக உழைத்து படிப்பார்களாம். ஒரு சிலர் மனதளவில் உடைந்து போய்விட்டதும் உண்டு. இந்த கதைகளை ஏராளமாக கேள்விப்பட்டு இருக்கிறேன். இது யாழ்ப்பாண மேட்டு குடி கலாச்சாரத்தில் சீரழிவான அங்கம். அது போன்ற சில நிகழ்ச்சிகளால் உங்களுக்கு யாழ்ப்பாணம் மேட்டிமைவாதிகளால் தலைமை தாங்கி வழிநடத்தப்பட்ட தமிழ் தேசியம் மீது வெறுப்பு உண்டாகி இருக்கலாம்.
ஆனால் தனிப்பட்ட இழப்புகளை காரணம் காட்டி ஒரு தேசியத்தின் சுய நிர்ணய உரிமை கோரிக்கையின் நியாயத்தை நிராகரிக்க முடியுமா என்பதே எம் முன்னுள்ள ஆதாரமான கேள்வி.
எனக்கே தெரியாத விடங்கள்தெரிந்த ஞானியாக இருப்பது வியப்பளித்தாலும் உண்மை ஒன்றிருக்கிறது. தீவுகளைச்சேர்ந்தவர்கள் பலர் ஆரம்பகாலத்தில் உயிர், உடமைகளை, உழைப்பை கொடுத்தார். நான்கூட ஆயுதப்போராளிகளுக்கு உதவினேன். எனது புத்தகம் எக்ஸைல் என்று இம்மாதம் வரவிருக்கிறது. ஆனால் தமிழ்தேசியம் காய்ந்து கருவாடாகக்போகுமென தெரிந்த பின்பு நாங்கள் விலகினோம். காரணம் நாங்கள் விவசாயிகள் அல்ல ஒரு வருடம் அழிந்தால் பட்டினியோடு காத்திருக்க . ஏதாவது தொழில் செய்து வாழவேணடும் என நினைப்பவர்கள் . கருவாட்டை மணக்க தலையிலோ அல்லது பிணத்தை காவத் தயாரில்லை. இப்பொழுது கருவாட்டு வியாபாரிகளிடமும் பிணஊர்தி நடத்தினரிடமும் தமிழ்த்தேசியம் உள்ளது. விரைவாகப் புதைக்கவோ எரிக்கவோ பட்டால் நல்லது
எரியூட்டப்பட்ட யாழ் நூலகத்தை அரசு பாய்ந்தடித்துப் புனரமைத்ததுகூட அது சிங்களத்தின் அராஜகங்களின் அருஞ்சுவடாக மாறிவிடக்கூடாதே என்கிற அச்சத்தில்த்தான், தமிழ்மக்கள் அறிவொளி பெற்றிடவேண்டும் என்கிற அக்கறையினாலல்ல!
நடேசனுக்கு தமிழ் தேசிய நியாயத்தை சொல்லி விளங்கப்படுத்துவது கல்லிலே நார் உரிக்கும் வேலை என்றாலும் உரையாடல்கள் மூலம் சமூகத்தை முன் நகர்தல் என்ற முக்கிய கோட்ப்பாட்டாளர் கேபமாஸிடம் பழியை போட்டு விட்டு தொடர்கிறேன். நான் எழுதிய பின்னூட்டம் பிரதேச வாதத்தை தூண்டுகிறது என்று ஒரு நண்பர் இன்று காலை போனில் எடுத்து சொன்னார். நான் பிரதேச வாதத்தை விமர்சித்தே எழுதியிருக்கிறேன். அதுபோக தமிழர்களுக்கு சம உரிமையை சிங்களம் வழங்கினால் ஒழிய தமிழ் தேசியம் ஒழிக்கப்பட முடியாதது. இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அதுதான் உண்மை. சம உரிமை என்பது தமிழனை சிங்களம் படி என்று சொல்வதோ நான் தமிழ் படிக்க கஷ்டம் என்று சொல்வதோ அல்ல. போன ஆண்டு ஒரு சிங்கள பெண் எனது நிறுவனத்தில் பயிற்சி பெற வந்து இருந்தார். கொழும்பு பல்கலையில் படித்தவர். மொழியியல் துறை. என்னனென்ன மொழிகள் படிக்கிறீர்கள் (Sub Unit ) என்று கேட்டேன். ஆங்கிலம், பாளி, சீனம் (மாண்டரின் ) என்கிறார். தமிழ் படிக்கவில்லையா என்று கேட்டேன். இல்லை என்கிறார் . எனக்கு வந்ததே கோபம். ஏன் அம்மா நாங்கள் 250 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கிறோம் . தமிழ் படிக்க முடியாது. பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிற சீன மொழி மட்டும் படிக்க முடியுமா என்று ஏசினேன். இது தான் திமிர் என்பது. எனக்கு சிங்கள மொழி ஓரளவு பேச முடியும் என்றாலும் ஆதன் பின்னர் நான் அவருடன் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடினேன். இந்த லட்ஷணத்தில் இருக்கும் சிங்களத்துடன் தான் இணைத்து போக வேண்டும் என்கிறார் ஐயா நடேசன்.
இப்போதும் முடிந்தால் யாழ்பாணத்தில் வேண்டாம் யுத்தத்தால் பாதிக்கப்ப்ட்ட வன்னியில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி பார்க்கட்டும் . தில் இருந்தால். தமிழனின் சுய உரிமைக்கு எதிராக மக்கள் வாக்களித்தால் (தமிழர்கள் தமிழ் பேசுவோர் அல்ல ) நாம் அத்துடன் தமிழ் தேசியத்தை மூடைகட்டி விடுகிறோம்.
வட அயர்லாந்து போல 200 வருடம் கழித்தாவது தமிழர்களுக்கு உரிய நியாயமான உரிமை கிடைக்க வேண்டும். IRA ஒரு பயங்கரவாத இயக்கம் என்றது உலகம். ஆனால் அதன் ஆதார கோரிக்கை புறக்கணிக்க முடியாமல் போனது. தனி நாடு இல்லை என்றாலும் ஓரளவு திருப்ப்திகரமான தீர்வு கிடைத்தது. இப்போது பாருங்கள் இங்கே ஒரு சின்ன அரசியல் அமைப்பு திருத்தம் வந்தாலும் தென்பகுதி கொந்தளிக்கிறது. நாடு இனொரு இன கலவரத்தை எதிர்நோக்குகிறது. உடனே ஐயா நடேசன் சொல்வது என்ன.. இனக்கலவரத்தை தமிழர்கள் பயன்படுத்தி வெளி நாடு செல்ல முயற்சிப்பார்கள் என்று. ஐயா, இன கலவரம் வந்த பின்னர் தான் அதை பயன்படுத்த முடியும். கலவரத்தை தொடங்கியது யார் ? சிங்களவர்கள் மட்டுமே. நாம் அல்ல.