இரண்டு தடவைகள் கம்போடியா சென்றபோதும் படிக்காமல் பரீட்சைக்குச் சென்ற மாணவனின் மனதில் எழுவதுபோல் ஒரே கேள்வி விடைதேடி என் மனதில் அங்கலாய்க்கும்.
உலகத்தில் பல இன அழிப்புகள் நடந்திருக்கின்றன அங்கெல்லாம் வேறு இனம், மதம் என வெறுப்பேற்றப்பட்டு கொலைகள் நடந்தன .
( துருக்கி- முஸ்லீம்கள் – ஆர்மேனியர்கள்- கிறிஸ்தவர்கள், ஜெர்மனி- யூதர்கள், ஹொரு – (hutu)- ருட்சி (tutsi _- என ருவாண்டாவில் இரு இனக் குழுக்கள்)
இந்த இன அழிப்புகளின் கருத்தியலை ஏற்காத போதிலும் புரிந்து கொள்ள முடியும். ஆனால், கம்போடியாவில் ஒரே இனத்தவரை, மூன்று வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட பத்து இலட்சம் மனிதர்களை அழித்தது எப்படிச் சாத்தியமானது?
கம்போடியர்கள் புத்த சமயத்தை தீவிரமாகக் கடைப்பிடிப்பவர்கள். கம்போடியாவில் பெரும்பாலானவர்கள் மழைக்காலத்தில் விவசாயம் செய்யமுடியாது என்பதால் பெரும்பாலும் பவுத்த மடங்களுக்குச் சென்று பிக்குகளாவார்கள்
இவர்களால் எப்படி ஒரு இன அழிப்பில் ஈடுபட முடிந்தது ?
எந்த மதங்களும் மனிதரைத் திருத்தவில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் புத்தமத போதனைகள் எந்த மதத்திலும் பார்க்கச் சாத்வீகத்தை அதிகம் வலியுறுத்துவது.
எப்படி இந்த முரண்பாடு ஏற்படுகிறது?
பெனாம்பொன் அருகே ஐந்து வருடங்கள் முன்பு பல புதைகுழிகள் இருந்த இடத்தைப் பார்த்தேன்- மண்டையோடுகள் அடுக்கி வைத்திருந்த இடம், ஆழமற்ற புதைகுழிகள் மற்றும் மனித எச்சங்களான- எலும்புகள், பல்லுகளை கண்டேன் . இம்முறை அவை ஒழுங்காகச் சுத்தப்படுத்தப்பட்டிருந்தது.
இம்முறை சென்றபோது, மனித குல அழிப்பு மியுசியம் மனதில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்கு இரண்டு காரணங்கள்: மியுசியத்தில் வைக்கப்பட்ட படங்கள் மற்றும் பொருட்கள் தத்துரூபமாக மனக்கண்ணில் காட்சியாகின என்பதுடன் எமக்கு வழிகாட்டியாக வந்தவர், அந்தக் காலத்தில் அன்று சிறைச்சாலையாக இருந்த இன்றைய அருங்காட்சியகத்தில் கைதியாக இருந்தவர்களுக்கு சிறுவனாக இருந்த காலத்தில் எடுபிடியாக வேலை செய்தவன்- அந்தக்காலத்தில் தனக்கு பத்து வயதாக இருந்ததாகவும் சொன்ன அவர், அங்கு நடந்த விடயங்களை நேரடியாக விமர்சித்தார் .
அதில் முக்கியமானதொன்று:
கட்டிலில் கட்டப்பட்டவர்களுக்கு உணவு கொடுப்பதும், அவர்களது மலத்தை எடுப்பதும் அவனது பிரதான தொழில். ஒரு நாள் மலமிருந்த பாத்திரத்தை கொண்டு சென்றபோது அது தரையில் சிந்திவிட்டது . அவன் அதைச் சுத்தப்படுத்த முயற்சித்தபோது அங்கிருந்த காவலாளி, கைதியின் விலங்கை அவிழ்த்துவிட்டு மலத்தை நாவால் சுத்தப்படுத்த கட்டளை இட்டதாகச் சொன்னான்.
கிட்டத்தட்ட மூன்று வருடங்களிருந்த ஆட்சியில் கொலை செய்யப்பட்டவர்கள் பத்து இலட்சமென்கிறார்கள். கொலைகள், பட்டினி, மற்றும் வைத்திய வசதிகளற்று ஏற்பட்ட மரணங்களின் கூட்டாக இருக்கவேண்டும். இரண்டாவது வருடத்தில் கமியூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவால் வியடநாமிற்கு ஆதரவான பிரிவினர் எனக் கட்சியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். பின்பு வியட்நாமிய வம்சாவளி பொதுமக்கள் அழிக்கப்பட்டார்கள். இறுதியில் வியட்நாமிய மனமும் கம்போடியஉடலும் கொண்டவர்கள் என்ற சந்தேகத்தில் பல்லாயிரக்கணக்கானோரை கொலை செய்தார்கள். சிஐஏ, கே ஜி பி மற்றும் வியட்நாமிய ஆதரவு இல்லையேல் பூர்ஸ்வா என்ற குற்றச்சாட்டின் பேரால் கிட்டத்தட்ட நான்கு பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் கம்போடியாவில் மேலும் பலர் கொல்லப்பட்டதாக தெரிகிறது.
பெனாம்பென் நகரத்திலிருந்த டாக்சி சாரதிகள் மற்றும் சில தொழிலாளர்கள் தவிர்ந்த இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் கிராமங்களுக்குஅனுப்பப்பட்டு, நெல் விளைச்சலில் ஈடுபடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டபோது பஞ்சமும் மரணமும் ஏற்பட்டது .
பணநோட்டுகள், புத்தகோயில்கள், புத்த மடங்கள், வைத்தியசாலைகள் , பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் எனச் சகல நிறுவனங்களும் அழிக்கப்பட்டன .
பொல்பொட் தலைமை தாங்கியிருந்த கிராமம் மீகொங் நதிக் கரையில் இருந்தது . அங்கு எதுவும் அழிக்கப்படவில்லை.
பொல் பொட் என்ற தனி மனிதன்மீது ஸ்ராலின், ஹிட்லர் மீதுள்ள பழியைப்போன்று விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், உண்மையில் இந்தக் கொலை விடயத்தில் கம்போடிய கிராமமக்களின் ஆதரவு கம்மியுனிஸ்ட் கட்சிக்கு இருந்தது. தலைமை தவிர்ந்த மற்றையவர்கள் கிராமிய பின்னணி கொண்டவர்கள். அதற்குக் காரணம் அவர்கள் கமர் எனப்படும் இனத்தின் 2600 வருடகால வரலாற்றின் மகிமையைப் பேசினார்கள் .
தென் வியட்நாமின் மீகொங் கழிமுகப்பகுதிகள் கம்போடியாவைச் சேர்ந்தது. பிற்காலத்தில் ஏராளமான வியட்நாமியர்கள் அங்கு குடியேறியதாலும், வியட்நாம் பலமாக இருந்ததாலும் 19ஆம்நூற்றாண்டுகளில் வியட்நாமுடன் இணைக்கப்பட்டது.
வரலாறு போதையை மட்டுமல்ல வெறியைம் உருவாக்குவது.
எட்டாம் நூற்றாண்டுகள் வரையுமான கமர் சரித்திரம் சீனர்களது பதிவூடாகவே பார்க்கப்படுகிறது.
கம்போடியாவின் வரலாறு மீகொங் கரையில் தொடங்குகிறது. சீனர்களது வரலாற்றில் தென்சீனக் கடலில் பியூனன் (Funan)எனப்படும் இராச்சியமிருந்தது . அங்கு யானையில் சவாரி செய்யும் கறுத்த அரசர்கள் இருந்தார்கள். அங்கு மக்கள் உடையற்றும், காலில் செருப்பற்றும் வாழ்ந்ததுடன், நிலத்தில் நெல்லைப் பயிரிட்டார்கள் என்று சீனர்களின் குறிப்புச் சொல்கிறது.
ஒரு விதத்தில் கம்போடியா இந்தியாவின் மறுபதிப்பு . இன்னமும் கைகளால் உணவுண்பது தலைப்பாகை கட்டுவது மற்றும் கறுப்பான தோற்றமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
ஆரம்பக் காலத்திலே அங்கு லிங்க வழிபாடு இருந்தது. பிராமண மயமான சடங்குகள் நடந்தன. பிராமண இளவரசன் றாகனது(Dragon) மகளைத் திருமணம் செய்ததால்தோன்றிய வழித்தோன்றல்கள் கம்போடியர்கள் என்ற தொன்மையான கதையுள்ளது. பிற்காலத்தில் இராமாயணம் கம்போடிய மயப்படுத்தப்பட்டது. அது தெருக்கூத்து, நடனம், பாவைக்கூத்து, மற்றும் நாடகமாக இன்னமும் நடக்கிறது . இந்தியா, சீனா இரண்டினதும் முக்கிய வர்த்தகமையமாக பியூனன் இருந்தது. எட்டாம் நூற்றாண்டு வரையும் குறுநில அரசர்கள் பலர் ஆண்ட நிலம் .
எட்டாம் நூற்றாண்டில் இருந்து பதினான்காவது நூற்றாண்டுவரையுள்ள 600 வருடங்களை சரித்திர ஆசிரியர்கள் ஆங்கோர் காலம் என்பார்கள்( ஆங்கோர் என்பது நகரம் என்ற சமஸ்கிருதத்தை ஒட்டியது) இதன் உருவாக்கம் ஜெயவரமன் 11 இருந்து தொடங்குகிது. இந்த ஜெயவர்மன் யாவாவிலிருந்து வந்த இளவரசனாக நம்பப்படுகிறான். 600 வருடங்கள் மலேசியா, பர்மா, தாய்லாந்து முதலான பகுதிகளைக் கொண்ட சாம்ராச்சியமாக இருந்தது.
ஆரம்பத்தில் சிவ வழிபாடு இருந்த சமூகத்தில் விஷ்ணு கோவில்(ஆங்கோர் வாட்) கட்டப்படுகிறது . பிற்காலத்தில் மன்னன் மகாயான பவுத்தனாகிறதும் இறுதியில் சயாம் பர்மா போன்ற இடங்களில் இருந்து கம்போடியா எங்கும் தேரவாத பவுத்தமாகியது.
ஆங்கோர் காலம்- அதாவது 600 வருடங்களின் பின்பு தற்போதைய மத்திய வியட்நாமில் இருந்த சம்பா அரசு இரண்டு முறை படையெடுக்கிறது. இறுதியில் சியாமியர்கள் படையெடுத்ததால் புதிய தலைநகர் பெனாம்பென் மீகொங் நதிக்கரையில் உருவாகிறது.அதன் பின்பு அவுடொங்(Ouong) என்ற தலைகர் முக்கியத்துவம் பெறுகிறது. புத்தர் சிலைகளைக் கொண்ட பூங்கா இருந்தது.
19 ஆம் நூற்றாண்டுகளில் மீகொங் கழிமுகம் பகுதி வியட்நாமிடம் போனதால், கடல் வழிபகுதி அடைபடுவதால் கம்போடியா தனது கடல் வாணிபத்தை இழப்பதுடன் பொருட்கள் வருவதற்கு வியட்நாமில் தங்கியிருக்கிறது. இந்த வரலாற்று நிகழ்வு வியட்நாமியர் மீது கசப்பை உருவாகியது. பொல்பொட் அமைப்பின் தலைமையில் இருந்தவர்கள் இந்த தென்பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களது கசப்பும் விரோதமும் அக்காலத்தில் கொலைகளாக வெளிப்பட்டன.
நான் பேசிய டாக்சி சாரதி ” வியட்நாமியர் நாய் தின்பவர்கள். சத்தமாகப் பேசுபவர்கள் ” எனச்சொன்னதிலிருந்து அந்த வெறுப்பு இன்றும் தொடர்கிறது என்பது தெரிந்தது. வெறுப்புணர்வை இலகுவாக சாதாரண மனிதர்களிடத்தில் வளர்க்கமுடியும் என்பதை இலங்கையில் பிறந்த என்னால் அங்கும் காணமுடிந்தது.
மறுமொழியொன்றை இடுங்கள்