மீகொங் நதிவழியே மிதக்கும் சந்தையை பார்த்து விட்டு , நாம் பயணித்த எமது படகு தொடர்ந்து போனபோது , நாங்கள் இறங்கிய சிறியநகரம் ( Cai be). அங்கு அவல் செய்வது , அரிசியில் சாராயம் வடிப்பது போன்ற பல சிறு கைத்தொழில்களைச் செய்யும் மக்களைப்பார்க்க முடிந்தது. நதிக்கரையில் இவற்றைத் தயாரிப்பதனால், இவர்களால் பொருட்களை எளிதாகச் சந்தைப்படுத்த முடிகிறது . இந்த இடங்கள் தற்பொழுது உல்லாசப்பிரயாணிகள் தரிசிக்கும் பகுதிகளாகிவிட்டது .
பாம்பு அடைத்த வடிசாரயங்கள் கொண்ட போத்தல்கள் பல வரிசையாக இருந்தன. அரிசியில் வடிக்கும் அப்படியான வைன்கள் தற்கால வயகராவிற்கு சமனானது என்றார்கள். என்னுடன் வந்த பலர் அந்த வைனை சிறிதளவு வாயில் வைத்தார்கள்.
பாம்பு, இலக்கியங்களில் ஆண்குறியின் படிமமாக மட்டுமல்ல, அதைத் தட்டி எழுப்பவும் சீனர்கள் வியட்நாமியர் பயன்படுத்துகிறார்கள்.
அந்த இடத்தில் இருந்து விலகிச் சென்றபோது பிரான்ஸ் காலனிய காலத்துக் கத்தோலிக்க தேவாலயம் இருந்தது.
நாங்கள் சென்ற படகிற்கும் பெயர் மார்கரிட்டா. வியட்நாமில் வடிவமைக்கப்பட்டது. இந்த உல்லாசப் படகின் பெறுமதி ஐந்து மில்லியன் டொலர்கள் என்பதை எமது பயணத்திற்கு பொறுப்பானவரிடம் கேட்டு அறிந்திருந்தேன். ஆனால், அது அவுஸ்திரேலிய பயண நிறுவனம். எதற்காக பிரான்சிய பெயரில் படகு இருக்க வேண்டும் என எனக்குள் நினைத்தபோது விடை மதியத்தின் பின்பு கிடைத்தது .
நதிக்கரையில் இறங்கிப் பார்த்த மற்றைய இடம் சா டெக் (Sa Dec) அங்கு ஒரு பழைய மாளிகை . அது ஒரு காலத்தில் வியட்நாமில் வாழ்ந்து , நதி வாணிபத்தில் ஈடுபட்ட சீன வியாபாரிக்குச் சொந்தமானது.
பிரான்சிய எழுத்தாளராகிய மார்கரிட்டா டுராஸ் (Margguuerite Duras) எழுதிய த லவ்வர் என்ற நாவல் புகழ் பெற்று சினிமாவாகியது. அந்த நாவலின் கதாநாயகன் வசித்த இந்த மாளிகை தற்பொழுது உல்லாசப்பிரயாணிகளால் பார்க்கப்படும் முக்கிய இடமாகி விட்டது இலக்கியத்திற்குக் கொடுக்கப்படும் மரியாதையாக எனக்கு தெரிந்தது.
இந்த நாவல் ஒரு வித சுயசரிதை பாங்கிலானது . பிரான்சில் உள்ள வயதான ஒரு மூதாட்டி தனது நிறைவேறாத காதலை நினைத்துப் பார்க்கும் வகையில் எழுதப்பட்டது. நிறைவேறாத காதலை நினைத்துப்பார்ப்பது மட்டுமல்ல., ஒரு பெண் எப்படி தனது விலை உயர்ந்த நகை அல்லது திருமண புகைப்பட அல்பத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பது போன்று கதை வருகிறது.
பிரான்சின் காலனி ஆதிக்கத்தின் கீழ் வியட்நாம் இருந்தபோது வறுமையில் வாடும் பிரான்சிய ஆசிரியைக்கு மூன்று பிள்ளைகள். அதில் பதினைந்து வயதான இளம் பெண் படிப்பதற்காக சைகோனுக்கு போகும்போது காரில் வரும் பணக்கார சீன இளைஞனைச் சந்திப்பதில் கதை தொடர்கிறது . இருவரும் தொடர்ந்து வீட்டுக்குத் தெரியாமல் சந்திப்பதும் உடலுறவு கொள்வதுமாக கதை செல்கிறது .
சீன வியாபாரிக்குத் தனது மகன் இந்த பிரான்சிய பெண்ணை மணமுடிக்க விருப்பமில்லை . அதேபோல் பெண்ணின் சகோதரனுக்குத் தனது தங்கை சீன இளைஞனைக் காதலிப்பது வெறுப்பை அளிக்கிறது. இறுதியில் காதலர்கள் பிரிவதாகக் கதை முடிகிறது.
இந்த நாவல் 20 ஆம் நூற்றாண்டில் மிகவும் புகழ்பெற்றது. அதைவிடப் சினிமாப்படம் பல காரணங்களால் பேசப்பட்டது.
இந்த நாவலில் பெண்ணின் பார்வையில் ஒளிவு மறைவின்றி காதல், காமம் பேசப்படுகிறது . அதிலும் முக்கியமாகப் பெண்- பெண் உறவு பற்றி வருகிறது .
இருவர் உடலுறவு கொள்ளும்போது அவர்களின் மனங்களில் மேலும் பலர் இருப்பதால் அந்த உடலுறவில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதாக புரிந்து கொள்ளளலாம். சீன இளைஞனுடன் உடலுறவில் ஒன்றாகும்போது இந்த பிரான்சியப் பெண் தனது சினேகிதி எலேனை நினைப்பதாக வருகிறது. இந்தக் கதையில் சிறுமி வயதாகி பெண்ணாகும்போது தனது உடல் உள, மாற்றங்களை எண்ணுவதும், அந்தக்காலத்தில் ஏற்படும் உடலுறவை ஆராதிக்கும் வகையில் கதை சொல்லப்படுகிறது.
கிழக்கு மற்றும் ஐரோப்பியர் என்ற இரண்டு இனங்கள் ஒன்றை ஒன்று வெறுக்கும் தன்மை நாவலில் வெளிப்படுகிறது. சீன இளைஞனது பணத்தில் விருந்துண்ணும் அந்த பிரான்சிய குடும்பம் அந்தச் சீன இளைஞனுக்கு நன்றி சொல்ல மறுக்கிறது. காதலிக்கும் பெண்கூட இனவேறுபாடுகளைக் கடந்தவளாகக் காட்டப்படவில்லை.
தந்தையற்ற பிரான்சியக் குடும்பம் உறவுகள் நலிவடைந்த நிலையில் தாயால் மகளைக் கட்டுப்படுத்த முடியாதபோது சகோதரன் அந்தப் பெண்ணிடம் மிருகத்தனமாக நடப்பதும் மற்றைய சகோதரன் ஆதரவாக நடப்பதுமான நிலை குடும்பத்தில் தெரிகிறது.
அக்கால சைகோன் மீகோங் நதியைப்பின்புலமாகப் பின்னப்பட்ட கதை. சினிமாப்படத்தை பார்த்தபோது உறுதியனது.
கடோய்மதம்
வியட்நாமில் ஒரு கோயிலைப்பார்த்தேன்- அது கடோய் மதத்திற்க்குரியது( Cao Dai temple)
இதுவரையிலும் நான் அறிந்திராத புதிய மதம் -கன்புசியஸ், தாவோசியம் மற்றும் சீன புத்தசமயம் சேர்ந்து உருவாகிய ஒரு கலவை – கடோய்யிசம் ( Caodaism) என்ற பெயரில் இருக்கிறது . அதற்கான ஒரு கோயில் உள்ளது. அங்கு கண்விழி அதாவது சைவர்களுக்கு லிங்கம்போல் ஆண்டவன் எங்கும் பார்க்கிறார் என்ற ரீதியில் அமைந்திருந்தது. இந்த மதம் வியட்நாமிற்கே உரியது. வியட்நாமியர்கள் வாழும் இடங்களான அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்த மத வழிபாடுகள் நடப்பதாக அறிந்தேன்.
மறுமொழியொன்றை இடுங்கள்