சாந்தி சிவகுமார்
மெல்பேர்ன் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் எழுத்தாளர் விழாவில், இந்த நாவலை மெல்பேர்ன் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதற்க்காக எந்தவிதமான முன்னுமானமுமின்றி நாவலை வாசிக்க தொடங்கினேன்.
ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல் ”புற உலகம் அறியாத பெண்களின் உள் உலகத்தை விரிக்கும் எழுத்து”. எனக்கு அறிமுகமில்லாத புது வெளியை, புது வாழ்க்கையை என் முன் நிறுத்தியது.
இயல்பான் ஒரு சின்ன கிராமம். பெரும்பான்மையானவர்கள் இசுலாமியர்கள். அந்த கிராமாத்தில் உள்ள ஒரு குடும்பத்தின் கதை.
ஹசன் மெஹர் கணவன், மனைவி. அவர்களுக்கு சாஜிதா, அஷ்ரப் என இரண்டு குழந்தைகள். சராசரியாக எல்லோரையும்போல் இருக்கும் ஹசன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு போய்வந்தபின் முற்றிலும் மாறிவிடுகிறான். காலத்திற்கு சிறிதும் ஒவ்வாத, பெண்களை அடிமைபடுத்தும் மதகோட்பாடுகளுக்குள் தன்னை ஒப்புவிக்கிறான். அவனுடையே குடும்ப பெண்களாலேயே ஏற்றுகொள்ளமுடியாமல் போவதும் அதனால் அவன் குடும்பம் சிதறுவதும் அதன் பின்விளைவுகளும்தான் கதை.
பர்வீனின் கதாபாத்திரத்தை வடிவமைத்த விதத்தில் சல்மா அவர்களின் துணிச்சலையும், நேர்மையையும் பாராட்டுகிறேன். ஆமினா நன்னியின் வாழ்க்கை ஒரு சோக சித்திரம்போல் மனதில் உறைந்துள்ளது.
மன அழுத்தம் தரும் படைப்பு. சுவாரசியமாக இருக்கவேண்டும் என்று எதையும் கூட்டாமல், உள்ளதை உள்ளபடி எழுதியுள்ளார். வாசிப்பு இவ்வளவு அழுத்தத்தை தருமென்றால் அவ்வாழ்க்கையை வாழும் பெண்களின் மனநிலை என் அறிதல், உணர்தல் எல்லைக்கு வெகுதூரத்தில் உள்ளதாகவே நினைக்கிறேன். .
புர்கா அணியும் பெண்களுக்கு கோடைகாலத்தில் புழுக்கமாக இருக்காதா?
அவர்களுக்கு வெளியே செல்லும்போது அலங்காரம் செய்துகொள்ள ஆசை இருக்குமா? போன்ற என் மனதில் தோன்றும் பல கேள்விகளுக்கு இந்த நாவலில் வரும் பெண் கதாபாத்திரங்கள் மூலம் பதிலுரைத்துள்ளார்.
எந்த மதமாக இருந்தாலும், அது தரும் சுதந்திரத்தை அதை கையிலெடுக்கும் ஆண், பெண்களுக்கு தர மறுப்பதும், பண்பாட்டிற்கும் மத்த்திற்கும் உள்ள இடைவெளி என பல நுணுக்கமான விஷயங்களை இதில் கையாண்டுள்ளார்.
”தானாக விட்டுவிட்டு வந்திருக்கவேண்டிய வாழ்க்கையை யாரோ திருப்பி அனுப்பிவிட்டதின் வேறுபாட்டை நினைத்து வேதனை உண்டாயிற்று.”
”மறுமையையும் சொர்க்கத்தையும் பற்றிய கனவுகளால், இந்த வாழ்க்கையின் எந்த விஷயங்களிலும் கவனம் இல்லாதவர்கள்” போன்ற பல வரிகள் நம்மை கேள்விகள் கேட்கவும், யோசிக்கவும் வைக்கின்றன.
எவ்வளவு சோகமான, மன அழுத்தம் தரும் படைப்பானாலும், மரபான விஷயங்களை உடைத்து வெளிவர துடிக்கும் கதாபாத்திரங்கள் இருந்தும் கதையில் ஜீவனாடி இல்லாததுபோல் ஒரு உணர்வு வருவது குறையாகவே உள்ளது.
தமிழ்நாட்டு இசுலாமிய சமுகத்தினை பற்றிய முக்கியமான பதிவு சல்மா அவர்களின் ”மனாமியங்கள்”. எளிய மனிதர்களை கொண்டு, எளிமையான நடையில் பொதுவெளியில் அதிகம் பேசப்படாத விஷயங்களை பதிவு செய்தவிதத்தில் இது ஒரு முக்கியமான ஆவணமாகவும் கருதலாம்.
வாழ்த்துகள் சல்மா!
மெல்பேர்ன் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் எழுத்தாளர் விழாவில் பேசியது.
மறுமொழியொன்றை இடுங்கள்