வுதெரிங் கைட்-Emily Bronte- 200 வருடங்கள்

இன்னமும் எமது மொழியில் தனித்துவமான ஒரு நாவலாசிரியையைத் தேடிக்கொண்டு இருக்கிறோம். ஆங்கிலத்தில் காலமெல்லாம் நிலைக்கக்கூடிய ஒரே ஓரு நாவலை மட்டும் தனது நோய் படுக்கையில் இருந்து எழுதிவிட்டு சென்ற இளம் பெண்ணான எமிலி புரண்டியை அவர் பிறந்த 200 வருடத்தில் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்

எமிலி புரண்டியின் 22 வயதில் எழுதப்பட்டு வுதெரிங் ஹைட் 1847 ல் புத்தகமாகியது. அதுவரையிலும் வந்த நாவல்களில் இருந்து வித்தியாசமானது மட்டுமல்ல, தற்பொழுது எடுத்துப் பேசும் பத்து ஆங்கில நாவல்களிலோ அல்லது இருபத்தைந்து மேற்குலக நாவல்களில் ஒன்றாகவோ அமையும் வுதெரிங் ஹைட் என்ற நாவலை எழுதிய எமிலி புரண்டி பிறந்து 200 வருடங்களாகிறது. நான் பல தடவை வாசித்த நாவல்களில் ஒன்று.

ஆரம்பத்தில் ஆங்கில நாவலாக மட்டும் வாசித்த எனக்கு நாவலாசிரியரது பின்னணி, கதையின் இலக்கியத்தரத்தைத் தெரிந்தபோது பல விடயங்கள் வியப்புறவைத்தது. எமிலி புரண்டியின் இளம் வயது மட்டுமல்ல, எந்த ஒரு காதலோ திருமணமோ- என்று வாழ்க்கையின் அனுபவம் அவருக்கு இருக்கவில்லை. காசநோயால் கட்டிலும் படுக்கையுமாகப் பல வருடங்களாக இருந்த ஒரு பெண் என்பதையறிந்துகொண்டேன்.

எமிலி புரண்டியின் சகோதரி சாலட் புரண்டி ‘இப்படி வீட்டில் இருந்தவளுக்கு எப்படி மனிதர்களைப் புரிந்து கொள்ளமுடியும் ? ‘என வியந்தார்

எமிலி புரண்டியின் குடும்பம் ஐரிஸ் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் 1798 நடந்த ஐரிஸ் கிளர்ச்சியின்பின் தந்தையான பற்றிக் புருண்டி(Patrick Prunty) என்ற பெயரை புரண்டி (Patrick Bronte) என மாற்றிக்கொண்டார். அதன் பின் மதபோதகராக வட இங்கிலாந்தின் யோக்சயர் பகுதியில் வேலை கிடைத்தது. குடும்பத்தில் ஆரம்பத்திலே தாய் இறந்துவிட பின்பு சித்தியால் வளர்க்கப்பட்டனர்.

ஆரம்பத்தில் இரண்டு சகோதரிகள் காச நோயால் இறந்தார்கள். அதன்பின் சாலட் என்ற சகோதரியைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் காசநோய்க்குப் பலியானவர்கள். எமிலி – சாலட் மற்றும் ஆன் என்ற சகோதரிகள் மூவரும் கவிதை நாவல் என இலக்கியங்கள் படைத்தவர்கள் .

எமிலி புரண்டி ஒரு வருடம் பெல்ஜியத்தில் சகோதரி சாலட் புரண்டியுடன் வாழ்ந்தார். அப்பொழுது வீடொன்றில் குழந்தை பராமரிப்பாளராக வேலை செய்தார்

எமிலியின் வுதெரிங் ஹைட் நாவல் புனைபெயரில் எழுதப்பட்டது. நாவல் ஆரம்ப காலத்தில் பலருக்குப் புரியவில்லை. ஆனால் சகோதரி சாலட்டின் ஜேன் எயர் என்ற நாவல் அக்காலத்தில் புகழடைந்தது. எமிலி இறந்த பின்பே வுதெரிங் ஹைட் ஆங்கில இலக்கியத்தில் அழியாத இடம் பெற்றது. தற்போது புரண்டி சகோதரிகளது வீடு அருங்காட்சியகமாகவும் கொண்டாடப்படுகிறது.

ஏற்கனவே நடந்த கதையை, புதிதாக வந்தவருக்கு கதை சொல்லி சொல்லுவதாக வுதெர்ங் ஹைட் நாவல் தொடங்குகிறது .

லண்டன் நகரத்தில் இருந்து வந்த லொக்வூட் என்பவர் திறஸ் குறஸ் என்ற வீட்டை வாடகைக்கு எடுத்து தனது விடுமுறை காலத்தில் வசிப்பதற்கு என்று வருகிறார். அவரது வீட்டின் உரிமையாளர் கீத்கிளிவ் வசிக்கும் அயல் வீடான வுதரிங் ஹைட் வீட்டுக்கு வருகிறார். அது ஒரு குளிர் காலம். வுதரிங் ஹைட் வீட்டில் உள்ளவர்களது வரவேற்பும் உபசரிப்பும் அவருக்கு விசித்திரமாகவுள்ளது. அன்றிரவு பனி கொட்டியதால் மீண்டும் அவர் தனது வீடு போகாது வுதெரிங் ஹைட்டில் தங்குகிறார்.

அன்று இரவு அவருக்குப் பயங்கரமான கனவு வருகிறது. இரவு யன்னலுக்கு வெளியில் இருந்து ஒரு குழந்தை தட்டுவதும் அந்தக் குழந்தையின் கை, உள்ளே வருவதற்கு லொக்வூட்டின் கையைப் பிடித்து இழுக்கிறது. அந்தக் குழந்தையின் கையை விடுவிப்பதற்காக, உடைந்த யன்னல் கண்ணாடி துண்டில் உராய்கிறார்.

பயங்கரமான கனவின் காரணத்தால் குளிர் காச்சல் வந்து அந்த வீட்டில் சில நாட்கள் வீட்டில் உள்ள வேலைக்காரி நெல்லியால் லொக்வூட் பராமரிக்கப்படும்போது நெல்லியால் பழைய கதை சொல்லப்படுகிறது.

ஏற்கனவே கத்தரின் – ஹின்லி என்ற இரு குழந்தைகளை கொண்ட வுதெரிங் ஹைட்டின் உரிமையாளர் ஏண்ஷோ அனாதையான ஒரு ஆண் குழந்தையை கண்டெடுத்து வீட்டிற்கு கொண்டு வருகிறார். அந்தக் குழந்தை கீத்கிளிவ் , கத்தரினுடன் நேசமாக வளர்ந்து வருகிறது. இதைக் கண்டு பொறாமையால் ஹின்லி ,கீத்கிளிவ்வை மிகவும் கேவலமாக நடத்துகிறான்.

வளர்ந்த பெண்ணான கத்தரின் திறஸ்குரசில் உள்ள எட்கார் லிண்டனை திருமணம் முடிக்க இருந்ததால் அதை கேள்வியுற்ற கீத்கிளிவ் வீட்டை விட்டு ஓடிவிடுகிறான்.

மூன்று வருடத்தின் பின் பணத்துடன் திரும்பி வந்து, குடியும் சூதாடும் பழக்கமுள்ள ஹின்லியிடமிருந்து வுதறிங் ஹைட் வீட்டைத் தன்வயமாக்கி எட்கார் லிண்டனின் தங்கை இசபெலாவை மணம் செய்து ஒரு மகனைப் பெறுகிறான்.

கத்தரினை பல தடவை ‘நீ எட்காரை மணந்திருக்கக் கூடாது. உனது திருமணம் ஓக் மரச் செடியை பூச்சாடியில் வைத்தது போன்றது’ என்கிறான் கீத்கிளிவ். தனது மனைவியான இசபெலாவை கொடுமைப்படுத்துகிறான். முகத்தில் இரத்தம் நீலமாகக் கண்ட அடிப்பதே தனது ஆசை என்கிறான். கத்தரீன் மரணமடைகிறாள் . கத்தரீன் மரணம் ஒருவிதத்தில் உணவை ஒறுத்து தற்கொலை செய்வது போன்றது

பிற்காலத்தில் வுதறிங் ஹைட் மற்றும் திறிஸ்குறஸ் என்ற இரண்டு வீட்டிற்கும் சொந்தக்காரனாகிறான். கத்தரீனின் மகளை தனது மகனான லிண்டனுக்கு மணம் செய்ய திட்டமிட்டிருந்தான்
நெல்லியின் இந்தக் கதையை கேட்டு விட்டு இந்த இடத்தில் இருபது நல்லதல்ல என லொக்வூட் மீண்டும் லண்டன் செல்கிறார்.

சில மாதங்களில் திரும்பி வந்தபோது கீத்கிளிவ் இறந்ததுடன் அவனது மகன் லிண்டனும் இறந்துவிடுகிறான் .

கதையின் இறுதியில் கத்தரீனது மகளும் ஹின்லியின் மகனும் மணமுடிக்கிறார்கள்.

இந்தக் கதையின் பல விடயங்கள் முக்கியமானவை .
கதை ஆரம்பமாகும் முன்பே பெரும்பாலான பாத்திரங்கள் இறந்து விட்டார்கள்.

கதை சொல்லி நெல்லி சாதாரணமான வீட்டு வேலைக்காரி மட்டுமல்ல அந்த நாவலில் ஒரு சிறிய பாத்திரமே.

கதையின் ஆரம்பம் யன்னலை தட்டும் குழந்தையில் இருந்து தொடங்குகிறது. இரகசியத்தைக் கதைக்குள் மறைத்தும், கதைக்குள் பல இடுக்குகளில் பல விடயங்கள் இருப்பதாக உணர்த்துகிறது கதையின் ஆரம்பம். வாசிப்பவர்கள் தலையை கதைக்குள் இழுக்கிறது

இறந்த கத்தரின் இறுதிவரையும் கீத்கிளிவ்வை காதலிக்கிறாள் . என்றும் அவனை மறக்கவில்லை. அத்துடன் அவனை மிகவும் நேசிப்பதாகக் கூறுகிறாள். ஒரு இடத்தில் ‘கீத்கிளிவ்வும் நானும் வேறில்லை. இருவரும் ஒன்றே.’ என்கிறாள். அதே நேரத்தில் கீத்கிளிவ் தொடர்ச்சியாக பல தந்திரங்கள் செய்தாலும் கத்தரினை அடையமுடியவில்லை. இறுதியில் இருவரும் அருகருகே புதைக்கப்படவேண்டுமென்கிறார்கள். ஒரு தலைமுறை அழிந்த பின்னர் வரும் அமைதிக்காக அடுத்த தலைமுறை காத்திருக்கிறது.

தாஸ்தாவெஸ்கியின் கரம்சோவ் சகோதரர்களில் தகப்பன் (Fyodor Pavlovich Karamazov) பேசும்போது எச்சிலைத் துப்புவது எப்படி மறக்க முடியாத எதிர்மறையான பாத்திரமோ, அதேபோல கீதகிளிவ் வாயில் நுரையைத் தள்ளியபடி பேசுவதைக் கண்டு ‘நான் மனிதசாதியில் இல்லாத ஒருவரைக் கண்டேன் ‘என நெல்லி சொல்வது என்னால் மறக்கமுடியாது .

ஒரு நாவலை மட்டும் எழுதிவிட்டு சென்ற எமிலி புரண்டி 22 வருடங்கள் மட்டும் வாழ்ந்தாலும் அவரது நாவல் பல நூற்றாண்டுகள் இலக்கியத்தை நேசிப்பவர்களது நெஞசில் வாழும்.

நன்றி ஞானம் மார்கழி இதழ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: