பல வருடங்களுக்கு முன் எழுதியது.
நடேசன்
நான் சிறுவனாக வளர்ந்த எங்கள் எழுவைதீவில் ஒரு முறை பாட்டனாரின் தோட்டத்தில் வெண்டிக்காய் அமோகமாக விளைந்தது. நீளமான வெண்டிக்காய்கள். ஆனால் வால்ப்பக்கத்தில் சுருண்டு இருக்கும்.. இந்த வெண்டிக்காய் கொட்டைகள் நாற்றாக பல வருடங்களுக்கு பயன் படுத்தப்பட்டது. இதை விட ஊரில் உள்ள மற்றவர்களுக்கும் எனது பாட்டன் வெண்டி விதைகளை கொடுத்து உதவினார் எனது பாட்டன் தலைமை ஆசிரியர் என்பதால் எங்கள் ஊரில் எல்லோரும் வாத்தியார் வீட்டு வெண்டி கொட்டைகள்
ஏன கூறுவார்கள். ‘சிலர் நக்கலாக வாத்தியார் வீட்டு கொட்டைகள்’ என்பார்கள் இதில் கவனிக்கப்படும் விடயம் எங்கள் ஊர் வெண்டிக்காய்கள் எல்லாம் வால் சுருண்டு இருக்கும். காரணம் ஒரே மூலவிதையில் இருந்து உருவாகியது.
யாழ்ப்பாண தமிழர்கள் பேசும் செய்யும் அரசியல் இப்படி. வால் சுருண்ட வெண்டிக்காய் அரசியல் தான். இதற்கு புலி ஆதாரவாளர்கள் மட்டுமல்ல புலி எதிர்ப்பாளர்களும் விதிவிலக்கல்ல.
வட்டுக்கோட்டை தீர்மானத்தில் தொடங்கி எண்பத்தி மூன்று கலவரத்தில் முடிப்பார்கள்.
இடையில் யாழ்ப்பாண நூல் நிலையம் எரிப்பை கூறி சிங்களவனை நம்ப முடியாது என
உறுதியாக கூறுவார்கள்.. இவர்களது ஈழக்கோரிக்கைக்கு இவைகளை மட்டுமே ஆதாரங்களாக வைப்பார்கள்.
இவர்களது எல்லாவாதங்களும் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் கூட்டணியினரின் மூலவிதையில் இருந்துதான் வந்தன. இந்த விதைக்கு இனவாத உரம் போட்டது திருவாளர் அமிர்தலிங்கம் அவர்கள். இந்த உரத்தில் வளர்ந்த இளைஞர்களே பிற்காலத்தில்
ஈழம் என்ற சொல்லை எடுத்துக்கொண்டு ஆயுதம் ஏந்தியவர்கள். இவர்கள் பிரிந்தாலும்
அழிந்தாலும்; கூட்டணி உருவாக்கிய இனவாத
மன நிலையில் இருந்து வெளிவர முடியவில்லை. தங்களைச் சுற்றி கண்ணுக்கு தெரியாத கம்பி வேலியை போட்டுக்கொண்டுள்ளனர்.
மலையகத்தமிழர் இஸ்லாமியத்தமிழர்களை எந்த விதத்திலும் கணக்கில் எடுக்காது வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள் தங்களுக்கு அரசியல் தீர்வு என பேசுவது என்னைப் பொறுத்தவரையில் தாங்கள் மாத்திரமே கொம்பு முளைத்த தமிழர்கள் என நினைக்கும் உயர் குடி மனப்பான்மையாகும்.. தங்கள் பாரம்பரிய தமிழர்கள் என்ற வாதம் தற்காலத்தில ஏற்கமுடியாதது.. உரிமைகள் என்று வரும்போது வந்தேறு குடிகளும் பாரம்பரிய தமிழர்களும் சமமானவார்கள்.
இரு மொழிபேசும் இனத்தவர்கள் வாழும் இலங்கையில் சம உரிமைக்கு நாங்கள் போராடி இருந்தால் முழு உலகமும் மட்டுமல்ல ஏராளமான சிங்கள மக்களும் ஆதரவுக்குரல் கொடுத்திருப்பார்கள். இதைத்தான் நெல்சன் மண்டேலா தென் ஆபிரிக்காவில் செய்தார்
தற்போது இலங்கையில் இருந்து வெளியேறி மேற்கு நாடுகளில் வசிப்பவர்களில் பலர்
யாழ்ப்பாணத்து அதாவது வாத்தியார் வீட்டு வெண்டிக் கொட்டை போண்றவர்கள் இவ்வளவு காலமும் எந்த விமர்சனமும் இல்லாமல் விடுதலைப் புலிகளை ஆதரித்த இவர்களது ஆசை நிராசையாகி விட்டது. இவர்கள் தென் இந்திய படங்களில் காதல் நிறைவேறாமல் இறந்த இளம் பெண்கள் போன்றவர்கள். ஆசை நிறைவேறாத பெண்ணின் ஆவி சுத்தித் திரிவது போன்று ஈழம் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்கள்.
மறுமொழியொன்றை இடுங்கள்