மீகொங் நதி

தென் சீனப்பகுதியில் உற்பத்தியாகி பர்மா, தாய்லாந்து, லாவோஸ் , கம்போடியா இறுதியாக தென்வியlட்நாமில் கடலில் சங்கமிக்கும் மீகொங் நதியில் படகுகில் பயணிப்பது உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் முக்கிய பயணமாகிவிட்டது.

ஆஸ்திரேலியாவில் அருகிலும், சிறியதுமான பயணமாகச் செல்வதால் பிரபலமான நதிப்பயணமாகியுள்ளது. எனக்கு வியட்நாமியரின் கடலுணவைச் சுவைப்பதற்காக எத்தனை முறைசென்றாலும் வியட்நாம் அலுக்காது. சைகோனுக்கு அருகில் இருந்து அங்கோவாட் அமைந்த நகரமான சியாம் ரீப் வரை 60 பேர் கொண்ட படகில் எட்டு நாட்கள் பயணம் செய்த போது என் மனத்தில் பதிந்த காட்சி, நதியின் நடுவிலும் கரையிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த மனிதர்களே.

உலகின் பல நதிகளைப் பார்த்திருந்த எனக்கு இமயமலைப்பகுதியின் வண்டலை சுமந்தபடி மண்ணிறமாக இருந்த இந்த மீகொங் நதி வியப்பை அளித்தது. ஒரு மைல் அகலத்தில் இரண்டாகப் பிரிந்து நதி இறுதியாகக் கலக்கும் மீகொங் கின் வியட்நாமிய பகுதி- அதாவது டெல்டா மாநிலங்களில் சகல பொருளாதார மட்டத்து மக்களும் இந்த நதியைப் தங்கள் வளத்திற்காகப் பாவிக்கிறார்கள். நதி உண்மையில் பொது உடைமையாகத் தெரிந்தது

விவசாயம், மீன்பிடி, மற்றும் உல்லாசப் பயணிகளின் படகுகள் நதியில் செல்வது என்ற வழமையான விடயங்கள் நடக்கின்றன. அதற்கப்பால் ஏழை மீனவர்கள், ஆற்றின் கரையில் தங்களது வள்ளங்களைக் வாழும் குடியிருப்புகளாக மாற்றி இருக்கிறார்கள். நதியெங்கும் வள்ளங்களில் வாழ்பவர்களுக்குப் பாடசாலைகள் கோயில்கள், கடைகள் எனக் கரையோரத்தில் உள்ளன. இவர்களுக்காக மிதக்கும் சந்தைகள் இயங்குகின்றன. மற்றவர்கள் இதை நீராலான பெருஞ்சாலையாக பெரிய வள்ளங்களில் பண்டங்களைப் பல இடங்களுக்குக் கொண்டு செல்கிறார்கள். நதித் தண்ணீர் விவசாயம் மற்றும் மீன்வளர்ப்பு எனப் பல தேவைகளுக்குப் பயன்படுகிறது. புகழ்பெற்ற பாசா மீன் இந்தத் தண்ணீரிலே வளர்க்கப்படுகிறது.

மீகொங்கில் எடுக்கப்பட்ட வண்டல் மண் விசாயத்தின்போது உரமாகிறது. மணல் சிங்கப்பூருக்கு ஏற்றுமதியாகி அங்கு கடலை நிரப்பி புதிய நிலத்தை உருவாக்கப் பயன்படுகிறது. நதியில் மிதக்கும் நீர்த்தாவரங்கள் தென்னமரிக்காவில் இருந்து வந்தவை. பல நதிகளில் நதியை அடைக்கும் நீர் அல்லி ( water Hyacinth) வியட்நாமிய மக்களால் பாவனைக்கு உள்ளாகிறது.அதன் தண்டில் இருந்து எடுக்கப்பட்ட நாரில் கூடைகள் பின்னுகிறார்கள். இலைகள் விவசாயத்தின்போது உரமாகிறது.

வியட்நாமியப்பகுதியில் மக்கள் எந்தளவு இயங்குகிறார்களோ அதற்கு மாறாக கம்போடியாவின் பகுதியில் ஆறு அமைதியாக இருந்தது.
இரண்டு நாடுகள் அயல் நாடுகளாக இருந்த போதிலும் வியட்நாமியரை, கம்போடியர்கள் தங்கள் நாட்டின் வளத்தைச் சுரண்டுபவர்கள் . சத்தமாகப் பேசுபவர்கள் என வெறுப்பாகப் பார்க்கிறார்கள். இதன் காரணமாகவே பொல்பொட் ஆட்சியில் அதிகமாக வியட்நாமியரை வெறுத்து கொலை செய்தார்கள். கம்போடியர்கள் தாம் கலாச்சாரத்தில் உயர்ந்தவர்கள் என நினைக்கிறார்கள். கம்போடிய வாடகைச்சாரதி பொல்பொட்டை, வியட்நாமியர் என்றார். அப்பொழுது எனது மனைவி அதை “ எப்படி? “ எனக் கேட்க வாயெடுத்தபோது, மக்கள் மத்தியில் காலங்காலமாக வந்த வெறுப்புணர்வுகள் உள்ளன. எமது வாதம் அதைப் போக்காது மேலும் அந்த வாடகைச்சாரதி எங்களுக்கு முக்கியமான மனிதர் என்பதால் நான் தடுத்தேன்.

சரித்திரத்தில் வியடநாமின் வடபகுதி பத்தாம் நூற்றாண்டுவரை சீனாவிடமிருந்து. மத்தியபகுதி இந்துமதத்தவர்களைக்கொண்ட சம்பா (Champa) இராட்சியமாக இருந்தது. மற்றைய தென்பகுதி பகுதிகள் அதாவது மீகொங்கின் வண்டல் நிலங்கள் கமர் சாம்ராச்சியத்தின் பகுதியாக இருந்தது. வட வியட்னாம், சீனாவிடமிருந்து விடுதலையாகி சம்பா இராட்சியத்தை அழித்து, கமர் இராச்சியத்தில் தென் பகுதி பகுதியை 15ம் நூற்றாண்டில் இணைத்து தற்போதய வியட்நாம் உருவாகியது.

இரண்டு நூற்றாண்டுகளில் பிரான்சியர், இந்தோ சீனா என்ற லாவோஸ் கம்போடியா வியட்நாமை காலனி ஆதிகத்தில் வைத்திருந்தார்கள். அதன் பின் அமரிக்கர்களது ஆக்கிரமிப்பு தெரிந்ததே . இப்படியாக அன்னியர்களைத் தொடர்ந்து எதிர்த்து நாட்டை மட்டுமல்ல தங்களையும் பாதுகாக்கும் நிரந்தரமான போராட்ட நிலையில் வரலாறு தொடங்கிய காலத்தில் இருந்தவர்கள் வியட்நாமிய மக்கள். இப்படியான வரலாறு வியடநாமியருக்கு வாழ்வோடு போராடும் தன்மையைக் கொடுத்துள்ளது. சைகோன் நகர மத்தியில் தேவாலயம், அதற்குப் பக்கத்தில் தபால் நிலயம் மற்றும் அருங்காட்சியகம் என்பவை பிரான்சிய கட்டிடக்கலையை எடுத்துக்கூறும் அழகான கட்டிடங்கள் . சைகோன் விசாலமான சாலைகள் மற்றும் அருகே நடைபாதைகள் அமைந்துள்ள நகரம்.

நாங்கள் ஆற்றினில் பயணம் செய்தபோது கரையோரத்தில் பிரான்சியர் அமைத்த தேவாலயங்களைக் காணமுடிந்தது. நகரத்தினுடாகச் சென்று ஹோட்டேல்களில் தங்கி இடங்களை பார்ப்பதிலும் பார்க்க நதிக் கரையோரத்தின் சாதாரண மக்களது வாழ்க்கை முறையையைம் அவர்களது வசிப்பிடங்களையும் பார்க்க முடிந்ததுடன் பலருடன் பேச முடிந்த பயணமாக அமைந்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: