தமிழ்த்தேசியத் தலைமைக்கு


ரோம இராச்சியம் ஒரு நாளில் கட்டப்படவில்லை என்பார்கள். அதேபோல் ஜனநாயக அரசியலில் சிறிய விடயங்களும் பல காலம் விவாதிக்கப்படும். சில செய்து முடிக்கப்படும். பல செய்வதற்கு மேலும் காலமெடுக்கும். இது ஜனநாயகத்தின் முக்கிய பலம். அதே நேரத்தில் பலவீனமும் கூட . இதை நாம் நினைத்தாலும் மாற்ற முடியாது.

சர்வாதிகாரிகளால் மட்டுமே நினைத்த காரியத்தை விரைவாக முடிக்க முடியும்.அவர்களிடமிருந்து விலகிவிடவே நாம் விரும்புகிறோம்.
இலங்கையில் எந்தச் சிங்கள அரசியல்வாதிகள் பதவிக்கு வந்தாலும் தமிழர் விடயத்தில் சாதகமாக நடக்கமுடியாது. அந்த நிலையில் ரனில் விக்கிரசிங்க, மகிந்த இராஜபக்ச போன்ற அரசியல்வாதிகளால் இந்தியா மற்றும் வெளிநாட்டு அழுத்தத்திற்கு இசைந்து தமிழர்களுக்கு சாதகமாக வாக்குறுதி அளித்தாலும் எதுவும் பெரிதாக செய்ய முடியாது. இது அவர்கள் குற்றமல்ல. அடுத்த தேர்தலில் அவர்களுக்கு எதிராக மற்றவர்கள் பிரசாரம் செய்யக் காத்திருப்பார்கள். பண்டா – செல்வா ஒப்பந்தத்தை ஜே ஆர் ஜெயவர்த்தனா எதிர்த்ததும், சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் தீர்வுப்பொதியை ரனில் விக்கிரமசிங்கா எதிர்த்ததும் மறக்க முடியுமா?

இன்னமும் சிங்கள மக்களிடம் உடலில், உள்ளத்தில் போரின் ரணங்கள் ஆறாமல் இருக்கிறது.

நமக்கு மட்டும் ஆறிவிட்டதா? லட்சம் உயிர்கள் என்பது சும்மாவா?

வட- கிழக்கு இஸ்லாமியர்கள் போர் காலத்தை மறந்துவிட்டார்களா?

இவற்றின் மத்தியில் அரசியல் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். மனிதர்கள் வாழவேண்டும். அதுவும், இப்புவியில் ஒரு முறை வாழத்தான் முடியும். தேர்தல் மாதிரி மீண்டும் சந்தர்ப்பம் வராது. ஐயா சம்பந்தர் பாரளமன்றம் போவது மாதிரியல்ல.

உணவின்றி வைத்திய வசதியின்றி ஒரு நாள் இருந்திருக்கிறீர்களா?

ஏழைக் குழந்தைகள் கல்வி கற்கவேண்டும் . வைத்தியவசதி போக்குவரத்து உத்தியோகம் எல்லாம் வேண்டும்.
இவைகளைத் தருவது இலங்கை அரசே.

இந்த நிலையில் தமிழர்களுக்கு முன் இருக்கும் ஒரே ஆயுதம் இராஜதந்திரமே. அதைப்பாவிக்க மறுக்கிறீர்களே?

இலங்கையில் எந்தச் சிங்கள அரசியல் கட்சியும் இலகுவில் சிறுபான்பையினரது ஆதரவற்று அரசாளமுடியாது என்ற இந்த அரசியல் அமைப்பு சிறுபான்மையினருக்கு கொடுக்கப்பட்ட வரம் . இதை மலையத்தில் மறைந்த தொண்டைமானும், மறைந்த அஷ்ரபும் மிகவும் திறமையாக பாவித்து தாங்கள் சார்ந்த மக்களை முன்னேற்றியிருக்கிறார்கள் அவர்களைப் பின்பற்றி பிற்காலத்தில் வந்தவர்கள் முடிந்த அளவில் செய்திருக்கிறார்கள். இதை,அந்த மக்கள் வாழும் பிரதேசத்தில்ற்கு போய் வரும்போது நாம் புரிந்துகொள்ள முடியும்.

இதற்கப்பால் நமது அரசியல் சமூகத் தலைவர்கள் சிங்கள மற்றும் இஸ்லாமிய மக்களிடம் சென்று ஐக்கிய இலங்கையில் இன மத பேதங்களை மறந்து வாழ்வதற்காக வேலை செய்யவேண்டும். நம்பிக்கையை ஊட்டவேண்டும். முப்பது வருடகாலப் போரில் எல்லா இன மக்களும் காயமடைந்திருக்கிறார்கள். இதை விட முக்கியமாகப் போர் நடந்த காலத்தில் தமிழர் மத்தியில் எப்படி தமிழர் என்ற இனவாதம் வளர்க்ப்பட்டதோ அதேபோல் சிங்கள மக்களிடம் இனவாதமும், இஸ்லாமிய மக்களிடம் மதம் சார்ந்த எதிர்ப்புணரவுகள் வளர்க்கப்பட்டிருக்கிறது. இதில் யாரையும் குறை சொல்லத் தேவையில்லை. இப்படியான உணர்வுகள் போர்க்காலத்தில் கத்தி தீட்டப்படுவதுபோல் மனித மனங்களில் நஞ்சாக ஊட்டப்படும் .

இவற்றைச் சரி செய்யாது போரின் பின்னான ஐந்து வருடங்களும் இராபக்சவுக்கு எதிரான சகல நடவடிக்கைள் மட்டுமல்ல, ஐக்கிய இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் காலம் கழித்தார்கள் தமிழ் அரசியல்வாதிகள்.

1) இராஜபக்சவுக்கு எதிரான அணியில் போர்த் தளபதியை ஜனாதிபதியாக ஆதரித்தது( போரில் இருவருக்கும் பங்கிருக்கு

2)யுத்தத்தின் பின்னர் ஜெனிவாவில் முறையிட்டது

3) அத்துடன் முக்கியமாக அரசியலே தெரியாத ஒரு மனிதரை வட மாகாண முதலமைச்சராகி அவர் மூலம் விடுதலைப்புலிகளின் தலைவர் விட்டுச் சென்ற சிங்கள எதிர்ப்பைப் பேசி இனவாதத்தை மீண்டும் கூராக்கியது

இவை தவறு அல்லது சரியானது என்பதல் முக்கியம். எந்த வகையிலாவது தமிழர்களுக்கு பயனளித்திருந்தால் பரவாயில்லை என ஏற்றுக்கொளள முடியும் .

1)சரத் பொன்சேகா தோற்றார் .

2)ஜெனிவா இரப்பராக இழுபடுகிறது.

3)விக்கினேஸ்வரன் தான்சார்ந்த கட்சிக்கும், தனக்கும் சூனியம் வைத்தபடி இருக்கிறார்.

நிலத்தில் தளை அடித்து கயிற்றில், புல்மேயக் கட்டிய மாடுபோல் ஆரம்பித்த இடத்திலே மீண்டும் வந்து சேர்த்திருப்பதால் உங்கள் அரசியல் அணுகுமுறை, பிரிவினை கோரியது போன்று வெறும் கோசம் மட்டுமே என்பது புரியவில்லையா ? உங்களுக்குத் தொலைநோக்கு இல்லை என்பது புரியவில்லையா?

ஒரு விவசாயியின் அறுவடையே அவனது விவசாயத் திறமையே. வியாபாரியாக இருந்தால் அவனது இலாபமே அவனது வருமானம்.

எவ்வளவு ஆழமாக உழுதீர்களோ ,பயிருக்கு மருந்தடித்தீர்களா? அல்லது இரவுபகலாக வியாபாரத்தில் ஈடுபட்டீர்களா எனக் குடும்பத்தினர் கேட்பதில்லை. உணவும் பொருளுமே அவர்களுக்குத் தேவை.

ஆனால் தமிழ் அரசியலில் மட்டும் ஏமாற்றத்தையும் முட்டாளத்தனத்தையும் அறுவடையாக சந்தோசமடையும் அரசியல்வாதிகளும் அவர்களை மீண்டும் மீண்டும் தேர்தெடுக்கும் மக்களும் நினைக்கிறார்கள்.

என்ன கொடுமையிது?

பின்னே பார்த்தபடி வாகனத்தைச் செலுத்தும் சாரதிகளையே அவர்கள் விரும்புகிறார்கள்.

கடந்த மூன்று வருடங்கள் மைத்திரிபால சிறிசேன – ரனில் விக்கிரமசிங்க என்று தமிழ் மக்களை வாக்குப் போடக் கேட்டீர்கள். மக்கள் உங்கள் சொல் கேட்டு நடந்தார்கள். அவர்கள் அரசியலுக்கு முண்டு கொடுத்து அவர்களது வாக்குறுதியை நம்பினீர்கள். மக்களையும் நம்பவைத்தீர்கள். யேசுநாதர் மீண்டும் பிறப்பார் என நம்பும் சில கிறீத்தவர்களைப் போல் .

தற்பொழுது அந்த அணி பிரிந்து விட்டது. நீங்கள் அம்மணமாகிவிட்டீர்கள் அந்த அம்மணத்தை மறைப்பதற்காக இலங்கையின் ஜனநாயக்தை பாதுகாப்பதாக முழக்கமிடுகிறீர்கள்.

புதுக்கோசம்!

ஆனால் என்ன? உங்களை நம்புவதற்குப் பலர் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.

இலங்கையில் 1971 மக்கள் விடுதலை முன்னணியினது கிளர்ச்சி காலத்திலோ பின்பு முப்பது வருடப்போர்க்காலத்திலோ இலங்கையில், முக்கியமாகத் தென்பகுதியில் ஜனநாயகம் அழியாது இருந்தது. ரொபேட் நொக்ஸ் எழுதியது போல் “உடலில் ஒட்டிய சேற்றை கழுவனால் ஒவ்வொரு சிங்கள விவசாயியும் மன்னராகத் தகுதியானவன்” . என்னைப் பொறுத்தவரையில் சிங்களமக்கள் பெரும்பான்மையாக இருக்குவரை இலங்கையில் ஜனநாயகம் இருக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன்

தற்போது கொழும்பில் நடைபெறுவிடயங்கள் தேநீர்க்கோப்பையில் எழும் சூறாவளி போன்றவை . அவை கடந்து போகும்

எனது கேள்வி போரின் பின்பு தமிழ்த்தலைவராகிய சம்பந்தனால் அவரை தேர்தெடுத்த தமிழர்கள் அடைந்த நன்மை என்ன ? 80 வயதிற்கு மேலான சம்பந்தன் இதுவரையும் தமிழர்களினது சார்பாக நடத்திய அரசியலின் எச்சமென்ன ?

பிரபாகரனது போரின் பயன்பாடுபோல்த்தானா?

கொழும்பில் இருந்து மதியூகி என யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த சுமந்திரன் இறுதியாக டான் ரீவிகலையகத்தில் என்னைச் சந்தித்தபோது இம்முறை தீர்வு எதுவும் கிடைக்காவிட்டால் அரசியலில் இருந்து விலகுவதாகக் கூறினார்.

மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் சிறந்த வக்கீல். மிகவும் திறமையாக பாராளமன்றத்தில் பேசுவார். ஆனால் அவரது தொழிலில் வெற்றி என்பது என்ன என அவருக்குத் தெரியும். கிறிஸ்தவப் போதகராக இருந்த நேர்மையான மனிதர். ஆனால் இவர் இரண்டு வருடங்களில் அரசியலில் இருந்து விலகும்போது தமிழர்களுக்கு எதை விட்டுச் செல்வார்?

மற்றவர்களை நான் குறிப்பிடவில்லை. காரணம் அவர்கள் வேறு நோக்கத்தில் அரசியல் செய்பவர்கள்

செல்வநாயகம் -பொன்னம்பலம் மற்றும் அமிர்தலிஙகம்- சம்பந்தன்- சுமந்திரன் என்று எமது கதைதொடர்கிறது.

சில வேளை நினைக்கிறேன் . தமிழ் அரசியல்வாதிகளில் தவறில்லை அவர்களுக்கு வாக்களிப்பவர்கள் திருந்தாதபோது விக்கிரமாதித்தன் கதையாகத் எமது ஏமாற்றங்கள் தொடர்வது தவிர்க்கமுடியாது.

ஏதோ ஊரில் சொல்வது நிவைில் வருகிறது.

“வயிற்றுக்குள் இருக்கும் மலத்தைக் கொழுப்பென நினைப்பதில் நமக்கு நிகர் எவருமில்லை.”

“தமிழ்த்தேசியத் தலைமைக்கு” அதற்கு 4 மறுமொழிகள்

  1. 1. இலவச கல்வி மருத்துவம் என்பன மக்களின் வரிப்பணத்தில் மீள பங்கீடு செய்யப்படும் ஒரு விடயம். அது சிங்களம் போடும் பிச்சை அல்ல. தனிநாடு இருந்தால் யாரும் சிங்களத்திடம் போய் கை எந்த போவது இல்லை. இலவச கல்வி சேவைகளுக்காக சிங்கள இனவாதிகளிடம் மண்டியிட தமிழர்கள் தயாரில்லை. போன அரசில் அரச கரும மொழி கொள்கையை நடைமுறைப்படுத்த வாசுதேவ நாணயக்கார மிக கடுமையாக உழைத்தார் (நேர்மையாக ). ஆனால் சிங்கள அதிகார வர்க்கம் அதை சகித்து கொள்ளவில்லை. இப்போது என்ன செய்வது? வன்னியில் உள்ள தமிழ் விவசாயி அரச சேவையை பெற சிங்களம் படிக்க வேண்டுமா ? என்ன இது கோமாளித்தனம் ? அரசு என்பதன் உண்மையான அர்த்தம் தெரியாத பெரும்பான்மையிடம் போய் இன நல்லிணக்கம் பேசுவது கோமாளித்தனம்.

    2. போர்குற்றங்கள் விசாரிக்கப்படவேண்டும். தண்டிக்கப்படவேண்டும். இல்லை என்றால் மீண்டும் 83 கலவரம் போல தொடங்க வாய்ப்புண்டு. அவ்வாறு நடக்காது என்பதற்கு நீங்கள் அட்டர்னி பாத்திரம் தர முடியுமா? மேலும் பகை மறுப்பு என்பது சிங்களவர்களிடம் இருந்து வரவேண்டும் . நாம் போய் கெஞ்சும் போது இளக்காரமும் உயர்வு பனப்பான்மையும் இப்போது தாண்டவமாடுகிறது. சுயமரியாதையை இழந்து சிங்கள தேசியத்தை தாங்க வேண்டிய தேவை உங்களுக்கு உண்டு. தமிழர்களுக்கு இல்லை.

    3. தமிழர்களுக்கு புத்தி சொல்ல வர முன் இந்த விடயத்தை சிங்களவனிடம் போய் சொல்ல முடியுமா என்று பாருங்கள் அப்போதுதான் உண்மையான சிங்கள முகம் தெரியும். பேரழிவை சந்தித்த தினமும் வேதனையில் துடிக்கும் மக்களிடம் போய் சிங்கள முஸ்லிம்களிடம் இறங்கி வேலை செய்து தாஜா செய்ய வேண்டும் என்று சொல்ல நீதி குறித்த அறியாமையும், அடிமை திமிரும் இருக்க வேண்டும். மேலும் தோல் தடித்திருக்க வேண்டும்.

    4. மலையகத்திற்கு அவர்களின் தலைவர்கள் நிறைய செய்தார்கள் என்று சொல்லுகிறீர்கள். நாம் இதை லயத்தில் கிடந்தது தவிக்கும் மக்களிடமே இதற்கான பதிலை விட்டுவிடுவோம்.
    முஸ்லீம் தலைவர்கள் தமிழர்களை ஓரம்கட்டி யுத்தத்தை காட்டி தங்கள் சிங்களவனுக்கு தமிழர்களை ஒதுக்கி வைத்து தமக்குரியத்தை சாதித்தார்கள். இப்போதும் செய்கிறாரக்ள். கிழக்கு மாகாணத்துக்கு போய் பார்த்தால் உண்மை துலாம்பரமாக தெரியும். எதிர்காலத்தில் சிங்களவர்கள் அவர்களை சரியாக ‘கவனிப்பார்கள்’ .

  2. நீங்கள் யுத்தகாலத்திலும் இலங்கையில் இருந்தவாரா? இவ்வளவு தெளிவாகப்பேசுகிறீர்களே ?

  3. ஆம் .நிச்சயமாக..இதற்க்கு ஆதாரம் கேட்டால் நல்லூரில் சத்தியம் செய்வதை தவிர வேறு வழி இல்லை. புலம் பெயர் தமிழர்களின் போலி தேசியவாதம் மீதுள்ள உங்களின் வெறுப்பை புரிந்து கொள்ள முடிகிறது. நான் புலம் பெயர் தமிழன் கிடையாது. மேலும் சந்தர்ப்பவாத புலம் பெயர் தமிழர்களின் அரசியல் நிலைப்பாடை காரணம் காட்டி புலத்தில் உள்ள மக்களை வஞ்சிக்க முடியாது.

    நான் யுத்த சூழலில் வளர்ந்தவன். கொழும்பிலோ கண்டியிலோ இருந்துவிட்டு கனவான் அரசியல் செய்யும் புலத்தில் உள்ள தமிழர்களை பற்றி எனக்கு கவலை இல்லை.

    மேலும் இது புலிகளை ஆதரிப்பதாக கொண்டால் விவாதிக்க ஒன்றும் இல்லை. புலிகள் மீது கடும் விமர்சனம் உள்ளது. (முக்கியமாக ‘இருந்தது’). ஆனால் புலிகளின் தோற்றம் என்பது தமிழர் இன சிக்கலின் cause அல்ல. அது வெறும் விளைவு. அதனுடன் தமிழர்களின் இயல்பான பிற்போக்கு தனங்களும் இணைத்து தான் புலிகள் மீது நீங்கள் வைக்கும் விமர்சனங்கள். இங்கே மையமான கேள்வி என்பது புலிகள் மீதான விமர்சனம் என்பது வேறு. ஆனால் தமிழ் தேசியம் மீதான வெறுப்பு என்பது வேறு. (குறுந் தேசியவாதம் மீதான தங்களின் கோபத்தை புரிந்துகொள்கிறேன் ). ஆனால் இவை எல்லாம் மேலும் செழுமைப்படுத்திய தேசியத்தை உருவாக்கி விடுதலையை சாதிக்க உதவவேண்டும். பெரும் தேசிய வாதத்தில் சரணடைய செய்யக்கூடாது. அது வெறும் assimilation . அவ்வாறு செய்வது தமிழர்களை எதிர்காலத்தில் உங்கள் நாட்டின் Aborigins போல மாற்றிவிடும். (நிச்சயமாக ). விடுதலை என்பது மேகி நூடுல்ஸ் என்று தமிழர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள் . ஆனால் அது மிக நீண்ட பயணம். அதை நோக்கி நடை போடா வேண்டும். அது சாத்தியமானது. அதை விடுத்தது தமிழ் அரசியல் வாதிகள் மீதுள்ள கோபத்தை நீங்கள் தமிழர்களின் எதிர்காலத்தில் காட்டக்கூடாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: