அறுபத்து மூன்று வயதில் இளைப்பாறினேன்.இனிமேல் செய்வதற்கு பெரிதாக எதுவுமில்லையே! கடந்தகால விடயங்ளை மட்டும் இரை மீட்க முடியும். அதற்கு மேல் என்ன செய்ய முடியும் ? பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் முகநூல் பொழுதுபோக்கு என்ற விடயங்கள் மட்டுமே முடிந்தவை.
மெல்பனின் குளிர் நாளொன்றில் ஓய்வுபெற்றேன். வெளியே உள்ள குளிரும் போர்வைக்குள் சூடும் உடலைத் தழுவியதால் சோம்பலாக படுக்கையில் இருந்து எழும்ப முடியவில்லை. விலகிய யன்னல் திரையூடாக வந்த பொன்னிற சூரியஒளி விடிந்து அதிக நேரமாகிவிட்டதை செய்தியாகச் சொல்லியது. வீட்டின் எதிரில் இருந்த மரத்தில் பறவைகள் வந்திருந்து ஒன்றோடு ஓன்று மூக்கைத் தேய்த்தபடி பாட்டிசைத்தன.
இதுவரையும் பார்க்காத கேட்காத விடயங்களல்ல. ஆனால் அவை இன்று மனத்திற்கு இதமான சங்கீதமாக இருந்தது. அப்பொழுது பார்த்து மனைவி கொண்டுவரும் காலைக் கோப்பி கொண்ட கப் கண்ணுக்குத் தெரிய முன்பு வாசனை காற்றில் கலந்து சுவாசத்தூடாக இரத்தத்தில் கலந்து நாக்கை ஈரமாக்கியது
எந்தவித அவசரமுமில்லை என எனக்குள்ளே முணுமுணுத்தபடி கோப்பியை குடிப்பதற்கு தயாராக மெதுவாக முதுகை உயர்த்தி கட்டிலில் அமர்ந்தேன் .
கால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலத்தில் இதுதான் முதல் சனிக்கிழமை காலை அரக்கப் பரக்க ஓடாமல் மனைவியின் பெட் காப்பியை குடிப்பது.
மனைவியைப் பின் தொடர்ந்தபடி அவுஸ்திரேலிய பினான்சியல் ரிவியூ பத்திரிகையை எனது லாபிரடோர் சிண்டி கவ்வியபடி மேலே வந்தது. இலகுவில் தனது வாயிலிருந்து எடுக்க விடாது. ஏதோ தனது வெகுமதியென அடம் பிடித்து கட்டிலை சுற்றி வரும். பின்புதான் நிலத்தில் போடும்.
அதனது வாயில் இருந்து எடுத்து விரித்தபோது முதல் பக்க செய்தியாக நூற்றுக்கணக்கான கத்தோலிக்க மதகுருக்களின் பாலியல் குற்றங்களையிட்டு பாப்பாண்டவர் மனம் வருந்திய செய்தி நெஞ்சில் ஆழமாக உறைத்தது. அதற்குமேல் படிக்க முடியவில்லை. பத்திரிகையை மடித்து வைத்துவிட்டேன்.
துக்கமான செய்திகள் எங்கு நடந்தாலும் காலையில் தெரியும்போது நெஞ்சில் கீறல் விழுந்துவிடுகிறது . மீண்டு ஆறுதலடைய சில மணி நேரம் ஏன் நாட்கள் செல்லுகிறது. இலங்கையில் யுத்தம் நடந்த காலத்தில் திட்டமிட்டு காலையில் செய்திகளைப் படிப்பதை தவிர்ப்பேன். ஆனாலும் இருபத்தி நாலு மணிநேர செய்தி யுகத்தில் எவரும் தப்பியோடமுடியாது.
மீண்டும் பாப்பாண்டவரின் செய்தியை, மனம் நாய் எலும்பைக் கவ்வியதுபோல் கவ்வியது
பிரம்மச்சாரியாக இருப்பது மதத்திற்கு அவசியமா என்ற கேள்வியும் என்னுள் எழுந்தது.கத்தோலிக்க மதத்தில் மட்டுமல்ல புத்த மதத்திலும் இறைவன் சேவைக்கு பிரமச்சாரியம் தேவையென வைத்திருப்பதால் இந்த முறைகேடு நடக்கிறதா ? அப்படியானால் மணமானவர்கள் முறைகேடாக நடக்கவில்லையா? மற்ற மதங்களில், திருமணத்தின் பின் இறைசேவை செய்பவர்கள் நேர்மையாக நடக்கிறார்களா? தெளிவான,ஆனால் விடையற்ற வினாக்கள் ஆனாலும் பிரமச்சாரியம் இயற்கைக்கு எதிரானது என்பதை எனது வாழ்வில் உணர்ந்துள்ளேன்
பிரமச்சாரியம் என்றால் என்ன?
மகாபாரதத்தில் வாழ்நாள் முழுவதும் பிரமச்சாரியாக பீஷ்மர் வாழ்ந்தார் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. திருமணத்திற்கு வற்புறுத்திய அம்பையை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். குருஷேத்திரப்போரில் மரணமடையும்வரை பிரமச்சாரிய விரதமிருந்தார் என்கிறது மகாபாரதம். அந்தப் பிரமச்சாரியம் இறுதியில் அவரது மரணத்திற்குக் காரணமானது .
ஆனால் எப்படி அவரால் முடிந்தது என்பது எனது கேள்வி.
என் போன்ற சாதாரணமானவனுக்கு ஆறு மாதத்தில் வந்த சோதனைகளை நான் நினைத்துப் பார்க்கும்போது பாவம் வாழ்க்கை முழுவதும் எங்வளவு துன்பங்களைத் தாங்கியிருப்பார்! அவரது பிரமச்சாரியமே இறுதியில் அம்பு முனைகளாகத் தாக்கியதா?
என்னை அறியாமல் முப்பது வருடங்களுக்கு முன்பாக அவுஸ்திரேலியாவுக்கு வந்த போது நடந்த விடயங்களைப் படுக்கையில் இருந்தபடியே அசை போட்டேன்.
அவுஸ்திரேலியாவிற்கு முப்பது வயதில் குடி வந்தேன் . ஆரம்ப வருடங்கள் வாழ்க்கையின் கொதிமணலில் பாதங்கள் புதைத்து நடந்த காலங்கள். அதில் ஆறு மாதங்கள் மனைவியைப் பிரிந்து மேல்படிப்பு படிப்பதற்காக இருந்த நாட்கள். பிரமச்சாரியம் பேணப்படவேண்டும் என நினைத்து கிரகஸ்தன் வனவாசம் சென்று பல சோதனைகளைத் தாண்டியது போன்ற நாட்கள்.
பீஷ்மர் மாதிரி விரதமோ வாக்குறுதியோ இல்லை. சாமானியனான எனக்கு கையில் தொழிலோ,பணமோ இல்லை. மனைவி குழந்தைகளோடு ஒரு இடத்தில் வீட்டு வாடகையெடுத்து ஒன்றாக இருப்பதற்குத் துப்பரவாக பணமில்லையென்றும் சொல்லமுடியாது. மட்டுமட்டாக சீவிப்பதற்கு அவுஸ்திரேலியா வந்தபோது டோல் எனப்படும் அரசாங்க பணம் கிடைத்தது. ஆனால் பெற்றோரோடும் சகோதரனோடும் இருந்தால் கையில் பணம் மிஞ்சும் என்ற பொருளாதார அறிவுரை வீட்டின் நிதியமைச்சரால் சமர்ப்பிக்கபட்டது.
வேலையில்லாதவர்களுக்கு எவரும் அறிவுரை அருளுவார்கள். ஐந்து வயது, மூன்று வயதென இரண்டு பிள்ளைகளினது பள்ளித்தேவைகளுக்கு பணம் தேவையென பிள்ளைகளின் பெயரால் சொல்லும்போது விமான ஓட்டியின் தலையில் துப்பாக்கியை வைத்துப் பேசுவது போன்ற விடயமாக இருந்தது. எனக்கும் அக்காலத்தில் அறிவுரைகளை மீறமுடியாது. வேறு பதில் என்ன சொல்வது? வெளிநாட்டிற்கு வந்தால் வழமையாக உடன் இருந்த, படிப்பு, தைரியம் எல்லாம் குறைந்து விட்டது போன்ற காலங்கள்.
தங்கியிருந்த இடம் சிட்னியின் புறநகர். சிட்னியின் மேற்குப்பக்கத்தில் முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் மனைவியின் சகோதரன் வீட்டில் குடும்பமாக தங்கியிருந்தோம். இரண்டு அறைகள் கொண்ட மாடி பிளட்டில் ஒரு அறை எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. இரண்டு குழந்தைகளுடன் சில மாதங்கள் தங்கியிருந்தபோது எனக்குப் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது.
அந்த இடத்தில் இருந்து நான் படிக்கும் பல்கலைக்கழகத்திற்கு, இரயிலிலும் பின்பு பஸ் என ஒரு மணி நேரத்துக்கு மேல் பிரயாணம் செய்யவேண்டும்.மாலையில் ஆராச்சிக்கூடத்தில் வேலை இருப்பதால் இரவே மீண்டும் வீடு வரமுடியும்.
நாங்கள் தங்கியிருந்த அந்தப் பிளட்டில் ஏற்கனவே ஏழு பேர் கூட்டமாக இரயிலுக்குக் காத்திருப்பது போன்ற உணர்வு. ஒருவருக்கு ஒருவர் நெருங்கி அதிக காலமிருந்தால் ஏதாவது சண்டைகள் வந்துவிடுமோ என்ற பயம். நாமெல்லாம் இலங்கையர்கள் அல்லவா? எமது கலாச்சாரம் சின்ன கதைகளை பெரிதாக்கி சண்டையாக்கும் உபாயங்களைக் கற்றுத்தந்திருக்கிறதே! அப்படியான சூழ்நிலையில் இருந்து வந்தவர்கள் என்பதால் அன்னியனான நான் மட்டுமாவது விலகி இருப்போம் என நினைத்து வெளியேறினேன். என் மனைவியும் அதை ஆட்சேபிக்கவில்லை. பெற்றோர்கள், சகோதரன் என்ற உறவுகள் அருகில் இருப்பது சந்தோசத்தைக் கொடுக்கலாமல்லவா?
தெரிந்தவர்கள் மூலமாகப் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் நடந்து போகும் தூரத்தில் உள்ள இரட்டை மாடி வீட்டில் மேல் மாடியில் ஒரு அறை கிடைத்தது. அங்கு என்னைப்போல் நான்கு இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் இருந்தார்கள். எல்லோரும் முதுமாணிப்படிப்பு படிப்பவர்கள் ஆனாலும் என்னிலும் ஐந்து வயது குறைந்தவர்கள்; அத்துடன் திருமணமாகாதவர்கள்.அந்தக் கட்டிடத்தின் மாடியில் நாங்கள் அதன் கீழ்ப்பகுதியில் ஆண்களும்,பெண்களும் என அவுஸ்திரேலிய மாணவர்கள் இருந்தார்கள்.
இரவில் மட்டும் வீட்டில் உண்போம். அறை வாடகையைத்தவிர ஒரு சிறு தொகையை போட்டுவிட்டு தினம் ஒருவர் மாறி முறைவைத்து சமைப்போம். பல்கலைக்கழகத்தில் இருந்து வந்தால் தொலைக்காட்சியைப் பார்த்துவிட்டு சாப்பாட்டை முடித்துவிட்டு அவர்கள் பிளேபோய் மகசினைப் பார்த்துத் திருப்தியடையும் நல்லவர்கள்.அவர்களுக்குப் பெண்களது உறவு இருந்ததில்லை . படிப்பை முடித்து வாழ்க்கையைத் தொடங்குவோம் என்ற மனநிலையில் திருப்தியாக இருந்தார்கள்.
எனது நிலை வித்தியாசம். காதலித்து மணந்த மனைவி, குழந்தைகள் என வாழ்ந்து வந்தேன். ஆனால் இப்பொழுது, உணவைத் தந்துவிட்டு பாதியில் தட்டிப்பறித்ததுபோல், திருமணமாகி ஆறு வருடங்கள் பின்பு வாழும் அந்த பிரமச்சாரி வாழ்வு என்ற சாம்பலின் கீழ் ஆசை, காமம் கனலாக இருந்தது. ஒழுக்கம் விழுப்பந்தரும் என்பதை விட அவஸ்திரேலியாவிற்கு வந்து ஆறு மாதமுமில்லாத நிலையில் கையில் பணமில்லை. மனைவி குடும்பத்தை நேசித்தவன். புதிய நாட்டில் கால் புதைத்து வேர்விட ஆசை கொண்டவன். சந்தர்ப்ப சூழ்நிலைகள் சதி செய்ததால் பிரமச்சாரியம் காக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்.
சில மாதங்கள் எனது நண்பர்கள்போல் என் வாழ்வும்- தொலைக்காட்சி, பிளேபோய் மகசீன் எனச் சமவெளியில் செல்லும் ஆறாக ஓடியது. அந்த அமைதி யாருக்குப் பிடிக்கவில்லையோ!
சுனாமி, சூறாவளி,பெருமழை எல்லாம் அமைதியான சமுத்திரத்தில்தானே உருவாகிறது?
அப்படித்தான் வந்தாள் சூன் – என்னுடன் படித்த சூன் என்ற சீன மலேசியப் பெண் எனது ஆராச்சி பயிற்சி வகுப்புகளில் பாட்னர். இருவருக்கும் மைக்கிரஸ்கோப், கணணி என்பன பொதுவானது. மைக்கிரஸ்கோப்பை பார்க்க என் முதுகில் ஏறியபடி பார்ப்பதும் தோளில் தொங்குவதுமாக இருப்பாள். சின்ன உடல். பாரம் அதிகமில்லை. இலங்கையில் கணணிக் காணாத எனக்கு அவளே எனக்கு கணணி ஆசிரியை ஆகினாள். சரஸ்வதிபோல் கல்வியில் மட்டுமல்ல, பொருளாதாரத்தில் லட்சுமியாக மாறினாள் . தான் வேலை செய்யும் சைனீஸ் கடையில் என்னைப் பாத்திரம் கழுவுவனாகினாள்.வாரநாட்களில் படித்தும் விடுமுறை நாட்களிலும் இணைந்து வேலை செய்தோம். அவளது செயல்கள் என்னைக் குறுகுறுக்கவைத்தாலும் எதையும் மறுக்க முடியவில்லை. அவளது நட்பை உதறவே முடியாது இருந்தேன்.
ஒரு நாள் மாலை நான் மட்டும் தனிமையாக இருந்து மைக்கிரஸ்கோப்புக்கு உள்ளே பக்டீரியாவை கைகளில் வைத்துள்ள கவுண்டரிங் கருவியால் எண்ணியபடி இருந்தபோது என் கழுத்தில் ஏதே சூடாக ஒத்தடமிடுவது போன்ற போன்ற உணர்வு ஏற்பட்டது . மைக்கிஸ்கோதிரப்பிலிருந்து கண்ணை எடுத்தாலோ இல்லை, கழுத்தைத் திருப்பினாலோ எண்ணிக்கை பிழைத்துவிடுமென கையால் எனது பின் கழுத்துப்பகுதியை தடவினேன். ஏதோ மென்மையாக எனது கையில் பட்டது.
‘ஏய் என்னைத் திருமணம் செய்தால் மட்டுமே அதில் தொடலாம் ‘ என்ற குரல் வந்தது.
திடுக்கிட்டுத் திரும்பியபோது சூன்னின் மார்பில் தொட்டது தெரிந்தது. எழுந்து மன்னிப்புக் கேட்டபின் அவளுக்குச் சொன்னேன் ‘ஆறு வருடங்கள் தாமதமாகி விட்டாய். எனக்குத் திருமணமாகி விட்டது’ அன்றிலிருந்து அவள் என்னைக் கண்டதும் அவளது மஞ்சள் கன்னக்கதுப்புகள் கோபத்தில் செம்பருத்தியாகும் . அவளது ஆமண்ட் விழிகள் மக்கடேமியாவாகும். சில காலம் சென்றது இருவரும் சமாதானமாக. அது சமாதானமில்லை- இலங்கையில் மாதிரி போரற்றகாலம்.
——
நான் படித்த நாட்களில் பிஜியில் இராணுவப்புரட்சி நடந்ததால் இந்தியர்கள் பலர் அவுஸ்திரேலியாவுக்கு ஓடிவந்துவிட்டார்கள் அப்படி ஓடிவந்த அழகான பெண் ஒருத்தி பல்கலைக்கழகக் கன்ரீனில் வேலை செய்தாள் .அவளுக்கு இடது பக்கத்தில் மேல் பல் வரிசையில் ஒரு தெத்திப்பல். அவுஸ்திரேலியாவில் தெத்திப்பல்லைக் காணமுடியாது.பல் வைத்தியர்களுக்கு இப்படிப் பற்கள் தங்கச்சுரங்கம்போல் -விடமாட்டார்கள். இந்த தெத்திப்பல் எனக்கும் அதிசயமாக இருந்தது. அடிக்கடி என்னைப் பார்த்து சிரிப்பாள். அந்த சிரிப்புகள் எனக்கு தந்தையிடம் வாங்கிய அடிக்கு தாயார் எண்ணை தடவியது போலிருக்கும். இரு தடவைகள் நான் உண்ட உணவிற்குக் குறைவாக பணமெடுத்ததுபோல் இருந்தது.ஒரே நிறத்தோலால் ஏற்படும் கரிசனை என நினைத்தேன்
ஒரு நாள் மதியம் சிட்னியில் இருளாகியது. பசிபிக் சமுத்திரம் தன்னிடமிருந்த கடல் நீரையெல்லாம் மழை நீராக்கி பல்கலைக்கழக வளாகத்தில் கொட்டியதுபோல் இரண்டு மணி நேரம் இடையறாது பெய்தது. வழக்கத்தை விட அதிக நேரம் கன்ரீனில் கழித்ததேன். ஒரு மணிநேரப் பாடத்தையும் தவறவிட்டு விட்டேன். அந்த நேரத்தில் பல தடவைகள் என்னைப் பார்த்து அந்த தெத்திப்பல் ஒளிர்ந்தது.
எனது மேசையை சுத்தம் பண்ணியபடி தனிமையாக இருந்த என்னிடம் குனிந்து குரலில் தேனைத் தடவி ‘ஒரு பிசினஸ் புரப்போசல் உள்ளது. அதனால் உனக்கு ஐந்தாயிரம் டாலர் கிடைக்கும். என்றபோது நானும் நிமிர்ந்து உட்கார்ந்து ஆவலுடன் கேட்டேன். ‘சட்டபூர்வமாக என்னைத் திருமணம் செய்து எனது பிளட்டில் இருக்கவேண்டும். இரண்டு வருடங்கள் பின்பு நீ விலகலாம்’ என்றாள்.
வாகனமொன்று மோதி தூக்கி எறிந்ததுபோல அதிர்ச்சியில் பதில் பேசாது பார்த்தேன்.
எனது பார்வையில் அவள் மனம் கரைந்திருக்கவேண்டும்.
அவள் மீண்டும் குனிந்து குழைந்த குரலில் ‘யாரையும் காதலித்தால் கவலைப்படாதே. எனக்கு ஒரு காதலன் இருக்கிறான்.இது ஒரு அறேன்ஜ்மென்ட் மாத்திரமே ‘ என்றாள் .
குருடன் இருப்பதற்கு கையால் இடத்தை தடவுவதுபோல் வார்த்தைகளை தடவிச் சேர்த்து‘நன்றி எனக்குச் சம்மதமில்லை. எனது நண்பர்கள் யாராவது தயாரென்றால் சொல்கிறேன்’ என மழையில் நனைந்தபடி வெளியேறினேன்.
சில வாரங்கள் பின் இந்த இரண்டு விடயங்களையும் எனது நண்பர்களுக்குச் சொல்லி சிரித்தபோது தங்களுக்கு இப்படி ஒரு சந்தர்ப்பமும் வரவில்லையென்று கவலைப்பட்டார்கள்.
எனது முகத்தில் ஏதோ பெண்ணுக்காக அலைபவன் என எழுதியிருக்கிறதோ- அந்தப் பாஷை இந்தப் பெண்களுக்கு புரிந்துவிடுகிறதோ!
குறைந்தபட்சம் மேற்கூறிய இரு சம்பவங்கள் சொல்லி மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளமுடியும். ஆனால் இனி வரும் சம்பவம்?
எனது வீட்டில் கீழ்ப்பகுதியில் இருக்கும் மாணவர்களில் ஒரு அவுஸ்திரேலியன் அடிக்கடி நண்பா என்பான் நானும் அவனுக்குத் தவறாது வணக்கம் சொல்லி கைகொடுப்பேன்.இருவரும் பெயர்களை அறிமுகப்படுத்தியபோது அவனது பெயர் அன்ரனி அதைச் சுருக்கி ரோனியாக சொல்வேன்.
அயலவர்களிடம் நட்பாக இருப்பது நல்லதுதானே ?
ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் வீடு திரும்பியபோது மென்மையான சிவப்பு நிறத்தில் ஒரு கடிதம் நான்கு பக்கங்களும் மடிக்கப்பட்டு இருந்தது அதில் என் பெயர் இருந்தது. உள்ளே ஒரு கடுதாசியில் “ இன்று ரன்வீக் மதுச்சாலைக்கு வரமுடியுமா” என்றிருந்தது
இதை நண்பர்களுக்கு காட்டியபோது எனது நண்பர்கள் பார்த்து விட்டு சிரித்தார்கள்.
‘உங்களை கே( GAY)என நினைத்து அழைத்திருக்கிறான்’ என்றபோது எனது வெட்கம் தாளமுடியவில்லை.பின்பு அவன் மீது கோபமாக வந்தது.இயல்பு நிலை வரமுடியாதபோது என்னையெல்லாம் ராமாயண ஜானகியைப்போல் புவி பிளந்து உள்ளே விழுங்காது குறைந்தபட்சம் எங்காவது ஒளிந்து கொண்டால் நல்லது என நினைத்தேன்.
மறு நாள் சனிக்கிழமை விடுமுறை. வீட்டிற்குச் சென்று மனைவியை அழைத்து நேரடியாக கூஜி கடற்கரைக்குஅழைத்துச் சென்று சில மணிநேரம் அங்கிருந்து விட்டு மாலையில் வீட்டுக்கு வந்தேன்.வீட்டில் நண்பர்கள் எவருமில்லை.ஆனால் கீழே இருந்த அவுஸ்திரேலிய மாணவர்கள் நெருப்பில் வாட்டிய இறைச்சியுடன் மது அருந்திக்கொண்டிருந்தார்கள் . அவர்களில் ரோனியைக் காணவில்லை ஆனாலும் மற்றவர்களிடம் சென்று எனது மனைவி என அறிமுகப்படுத்தினேன்.குறைந்த பட்சம் திருமணமானவன் என்ற செய்தி ரோனிக்கு போகவேண்டும் என்பதே எனது நோக்கம்.
மேல் மாடிக்கு மனைவியுடன் சென்றேன். நான் ஏற்கனவே மனைவியுடன் சனிக்கிழமை மாலை வருவேன் எனச் சொல்லியிருந்தேன் . நண்பர்கள் இல்லாத போதும் வீட்டை ஓரளவு சுத்தமாக்கி விட்டுத்தான் சென்றிருப்பார்கள் என்ற நம்பிக்கை.
வீட்டில் வந்திருந்த மனைவி எங்கே உங்கள் நண்பர்கள் என்று கேட்டபோது நாங்கள் வருவதால் அவர்கள் எங்காவது போயிருக்கலாம் என்றபோது ஓரக்கண்ணால் என்னைப் பார்த்தாள். நான் அதைக் கவனிகாததுபோல் தொலைக்காட்சியைப் போட்டுவிட்டு அதன் முன் அமர்ந்தேன்.சில விடயங்களில் என்னில் நம்பிக்கை குறைவு. ஏற்கனவே என்னை நம்பாமல் இரண்டு குழந்தைகள் போதுமென கருத்தடை செய்தவள்.
“எப்படி உங்கள் அறையைப் பார்ப்போம். எப்படி சுத்தமாக வைத்திருக்கிறீர்களா அல்லது வீட்டில்போலா “ என்றபடி எனது அறையைக் காட்டும்படி எனக் கேட்டாள் .
அந்த வீட்டின் நடு அறை எனதானது. அதை நான் ஓரளவு சுத்தமாக வைத்திருந்தேன். ஆனாலும் இன்று படுக்கை அழகாக விரிக்கப்பட்டிருந்தது
அந்தப் படுக்கையில் ‘நான் நினைத்ததைவிட நன்றாக இருக்கிறதே’ என்று என்ற படி எனது மனைவி அமர்ந்தாள். தலையணையருகே ஒரு மஞ்சள் கடிதம் இருந்தது. எடுத்தபோது குட் லக் என்றும் அதன் உள்ளே ஒரு ஆணுறை உடைக்கப்படாது இருந்தது
ஆணுறையைப் பார்த்துவிட்டு முகம் மாறிய மனைவி ‘ இது எங்வளவு காலமாக நடக்கிறது ?உங்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆணுறை வைத்திருக்கிறார்களே. வழக்கமாக யாரை எல்லாம் இங்கு கூட்டிவருவீர்களா ‘ எனக் கேள்விகளை சரமாக தொடுத்தாள்.
எதிர்பாராமல் பின்னால் யாரோ தலையில் அடித்த நிலையில் சில கணங்கள் வார்த்தைகள் தேடி அலைந்துவிட்டு ‘இன்றுதான் இங்கு ஒரு பெண் வருவது அறிந்து அதை வைத்திருக்கிறார்கள். அவர்களுக்குக் காதலியோ பெண்கள் பற்றிய அனுபவமோ கிடையாது. எனக்கு ஏதோ உதவி செய்வதாக நினைத்து படுக்கையை விரித்து இப்படிச் செய்து விட்டு போய்விட்டார்கள். இது நூற்றுக்கு நூறு உண்மை, எனச் சொன்னபோது நம்பாதது முகத்தில் தெரிந்தது. ஆனாலும் பழைய நிலைமை மாறி முகத்தில் புன்னகை ஒளிர்ந்தது.
“ஆனாலும் நான் பிள்ளைகளைத் தனியே விட்டு விட்டு வந்ததற்கு இப்படி வேணும் “என சொல்லியபடி நின்றாள்.
அப்படிப் பேசினாலும் ஆறு வருடத் தாம்பத்தியத்தில் நம்பிக்கையிருக்கும் என்று நினைத்தேன். ஆனாலும் அறையின் உள்ளே வரும்போது முகத்தில் இருந்த சிரிப்பும் மாறி விட்டது.
அறுந்தவங்கள் குட் லக் என மட்டும் வைத்திருக்கலாம் ஏன் ஆணுறை வைக்கவேண்டும் இதுவரையிலும் இருவரும் பாவிக்காதது மட்டுமல்ல ஏற்கனவே கருத்தடை செய்த மனைவிக்கு அது எப்படியிருக்குமென்று எனக்குப் புரிந்தது
ஆனால் இந்த மாதிரியான நுட்பங்கள் புரியாதது அவர்களது தவறல்ல .
அன்று இரவே வீட்டுக்கு சென்றது மட்டுமல்லாது இனிமேல் பிரிந்திருப்பது முடியாத காரியம் என நினைத்து சிட்னியில் ரியல் எஸ்டேட் ஏஜன்டிடம் சென்று வீடு பார்ப்பதற்கு முடிவு செய்தேன்.
ஆறுமாத பிரமச்சாரியத்தில் எனக்கு வந்தசோதனைகளை எண்ணிப் பார்த்தபோது வாழ்நாள் முழுவதும் பிரமச்சாரியாக இருப்பவர்கள் மீது அனுதாபமா இல்லை அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் மீது அனுதாபம் கொள்வதா ?
சரி பாப்பண்டவர் என்ன சொல்கிறார் என்று வாசித்தபோது அருவருக்கத்தக்க விடயத்தை செய்திருக்கிறார்கள் எனச் சொல்லிவிட்டு மற்றவர்களைப் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக பிரார்த்திக்கும்படி சொல்கிறார்.
பாப்பாண்டவராலும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை போலும். யேசுவின் சீடன் பீட்டரால் உருவான மதம் அழிய அவரது வாரிசுவான இவர் எப்படிக் காரணமாவார்? பாவங்களை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று மட்டுமே கேட்க முடியும் என்றபடி எழுந்தபோது நண்பகலாகியிருந்தது.
மறுமொழியொன்றை இடுங்கள்